0,00 INR

No products in the cart.

குடியின் உச்சமும்; குடும்பத்தின் மிச்சமும்!

சிங்கப்பெண் காவலர்கள்
குற்றம் – வழக்கு – விசாரணை – 3

 – பெ.மாடசாமி
ஓவியம் : தமிழ்

பெ. மாடசாமி   (முன்னாள் காவல்துறை உதவி ஆணையாளர்)

ண்ருட்டி சரக டி.எஸ்.பி. முத்தரசி. 2004ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு 11.30 மணிக்கு அவர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குப் புறப்படலாம் என்று நினைத்தபோது, கைபேசி ஒலித்தது.

“அம்மா, நெல்லிக்குப்பம் எஸ்.ஐ. சம்பத்குமார் பேசறேம்மா. வெளிசெம்மண்டலம் கிராமத்தில் குடிசை ஒன்றில் தீப்பிடிச்சு எரியறதா தகவல் வந்துச்சு. பயர் இன்ஜின் அனுப்பியாச்சு. இன்ஸ்பெக்டருக்கு போன் பண்ணினா, சுவிட்ஜ் ஆப்புன்னு வர்றதால உங்களுக்குத் தகவல் சொல்றேன்ம்மா” என்றார்.

“வெரிகுட் சம்பத்குமார், நீங்க போங்க.. நான் பின்னாடியே வர்றேன்” என்று சொல்லிவிட்டு புறப்படத் தயாரானார் முத்தரசி.

இரவு நேரம் என்பதால் கோஷ்டி தகராறாகவும் இருக்கலாம். தீ பரவலாம். உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் உடனடியாகப் புறப்பட்டு விட்டார்.

“அம்மா, நெருப்பை அணைச்சாச்சு. நெருப்பு வேகமா எரிந்ததால உள்ளே யாரும் போக முடியல. வீட்டிற்குள் மூணு பேர் இருந்ததா தெரியுது” என்று போகும்போதே எஸ்.ஐ. பேசினார்.

இரவு சுமார் ஒரு மணிக்கு கிராமத்தைச் சென்றடையவும், தகவல் கொடுத்தபடி Scientific Assistantம் வந்து சேர்ந்தார்.

“பதினோரு மணி சுமாருக்கு இரண்டு வீடு தள்ளி, திண்ணையில் படுத்திருந்தவர் குடிசை எரிவதைப் பார்த்து சத்தம் போட, அக்கம் பக்கமிருந்து ஓடி வந்து நெருப்பு பரவாம தடுத்துட்டாங்கம்மா” என்று எஸ்.ஐ. சொன்னார். தீ அணைப்பு வண்டி வந்து நெருப்பை முழமையாக அணைத்துவிட்டது தெரிந்தது.

“அம்மா, வீட்டுக்குள்ள சேகரோட மனைவி, இரண்டு பையன்கள் இருந்ததா சேகர் கத்திக்கிட்டிருக்கான். இப்பத்தான் நெருப்பு அணைஞ்சது. வீட்ட பாக்கலாம்” என்று சம்பத் சொன்னார்.

டி.எஸ்.பி. டார்ச் லைட்டை அடிச்சு பார்த்தபோது பாதி எரிஞ்சிருந்த கதவின் முன்பக்க தாழ்பாளில் ஒரு கம்பி சொருகப்பட்டிருந்தது. உள்ளிருந்த யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தார். வழக்கின் துருப்புச் சீட்டே அந்தக் கம்பிதான்.

“அம்மா… என்னோட பொண்டாட்டி, புள்ளையெல்லாம் உள்ளே படுத்திருந்தாங்கம்மா. அவங்களெல்லாம் போயிட்டாங்களேம்மா” என்று டி.எஸ்.பி.யிடம் அழுதான் சேகர். தீயை அணைக்கும்போது அவன் ஸ்கூல் பக்கமிருந்து ஓடி வந்தான் என்று சிலர் கூறியதாக எஸ்.ஐ. தெரிவித்தார்.
இறப்பு மூன்றாக இருப்பதாலும், ஆய்வாளரை தொடர்பு கொள்ள முடியாததாலும் தானே விசாரணையை எடுத்துக்கொள்வதாக மாவட்டக் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தார் டி.எஸ்.பி.
டி.எஸ்.பி.க்கு இது முதல் வழக்கு என்பதால், சரியாக விசாரணை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மனதிற்குள் ஏற்பட்டது.

மேற்கூரை எரிந்து நான்கு அடி உயர சுவர் மட்டுமே நின்றிருந்த நிலையில் பாதி எரிந்த கதவிலிருந்த கம்பியை நீக்கி உள்ளே சென்றபோது முழுமையாக எரிந்து சாம்பலான நிலையில் ஒரு பிரேதம், அதனை ஒட்டி மற்றொன்று, கதவோரமாக ஒன்றென மூன்று பிரேதங்கள் இருந்தன.

பிரேதம் எரிந்திருந்த நிலையைப் பார்த்த உடனே, பெட்ரோல் பயன்படுத்தியிருக்க வேண்டுமென சயின்டிபிக் அஸிஸ்டென்ட் சொன்னார். வீட்டின் உள்புறம் அலுமினியப் பாத்திரங்கள், சின்ன இரும்பு பீரோ, ஒரு தகர டப்பா தவிர மற்றவை எரிந்து சாம்பலாகி இருந்தன.

சேகருக்கு வேலை ஏதும் கிடையாது என்றும் அவனுடைய மனைவி கனகவல்லி, காவல் துறையில் உதவி ஆய்வாளராக ஓய்வு பெற்றவரின் மகள் என்றும், அவர்களுக்குப் பள்ளியில் படிக்கும் கணேஷ், சுரேஷ் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்றும், வீட்டை ஒட்டியே கனகவள்ளி நடத்திய பெட்டிக்கடை வருமானத்தில்தான் குடும்பம் நடந்தது என்றும், தினமும் கனகவல்லியை அடித்துத் தகராறு செய்வதுதான் சேகர் வேலை என்றும் தெரிந்தது.

வெளியே வந்த டி.எஸ்.பி., சேகரின் அருகே சென்றபோது அவனிடமிருந்து பெட்ரோல் வாடை வர, அவனை விசாரிக்கும் வரை கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படி ஒரு காவலரை நியமித்தார்.

விடிய ஆரம்பித்துவிட்டது. ஐந்து மணிக்கு கனகவல்லியின் தகப்பனார் வந்து சேர்ந்தார். அவரை விசாரித்ததில் மருமகன் சேகருக்கு வேலை ஏதும் இல்லை. மகள் நடத்திய பெட்டிக்கடை வருமானத்தில்தான் குடும்பம் நடந்தது என்றும், ‘நிலத்தை எழுதி வாங்கி வா’ என குடித்துவிட்டு வந்து சதா அடிப்பார் என்றும், புகார் கொடுத்து பஞ்சாயத்து பேசியதில் பலன் இல்லை என்றும், ‘இடத்தை எழுதித் தந்து விடுகிறேன்’ என்று மகளிடம் சொன்னபோது, ‘அதையும் விற்று குடித்து விடுவார்… வேண்டாம்பா’ என்று அவள் சொன்னதாகவும் தெரிவித்தார். மருமகன் சேகர்தான் தகராறு செய்து இந்தக் கொடுமையை செய்திருக்க வேண்டும் என்று கூறி, விக்கி விக்கி அழுதார். அவர் கொடுத்த புகாரில் சேகர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கனகவள்ளி பெட்டிக்கடையில் (சில கிராமங்களில் நடப்பது போல்) கேனில் பெட்ரோல் வியாபாரம் செய்து வந்தார் என்று காவலர் ஒருவரின் விசாரணையில் தெரிந்தது. பிரேதத்தை எடுத்துச் செல்ல எதுவும் இல்லாததால் டாக்டர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடந்தது.

போலீசாரின் நடவடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்த சேகர், அப்பாவியாகவே நடந்துகொண்டான். அந்தப் பாவத்தை அவனைத் தவிர யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை என்பது விசாரணையில் தெரிய, கைது செய்யப்பட்டான்.

ஆர்.டி.ஓ.க்கு வேண்டுதல் கொடுத்து, அவர் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்ததில், இரவு கனகவள்ளியிடம் ‘உங்க அப்பங்கிட்ட போய் சொத்த எழுதி வாங்கி வருவியா மாட்டியா?’ன்னு கேட்டு அடித்ததாகவும், கனகவள்ளி ‘முதல்ல சாப்பிடுங்க’ என்று சோறு போட்டு மீன் குழம்பு விட, தட்டைத் தூக்கி எறிந்து அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாகவும், அவள் மயக்கமாகி கீழே விழுந்துவிட்டாள் என்றும், விற்பனைக்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அவள் மீது தெளித்து, நெருப்புக் குச்சியை கொளுத்தி போட்டதாகவும், சின்னவன் தூங்கிக் கொண்டிருக்க, பெரியவன் அழுதுகொண்டே தன்னைப் பார்க்கவே, வெளியே போய் உண்மையைச் சொல்லிவிடக் கூடாது என கதவை மூடி கதவில் கம்பியை மாட்டிவிட்டு வேகமாக ஸ்கூல் பக்கமாக ஓடிவிட்டதாகவும், பின்பு எல்லோரும் தீயை அணைக்கும் போது, எதுவும் தெரியாத மாதிரி வந்து கத்தியதாகச் சொன்னான். ‘பொல்லாத குடியினால் எல்லோரையும் இழந்திட்டேன் சார்’ என்று சொன்னான்.

சேகர் கைது செய்யப்பட்டான். அவன் பயன்படுத்திய பெட்ரோல் கேன், வத்திப்பெட்டி, பெட்ரோல் வாசனை கொண்ட சட்டை, கதவில் இருந்த இரும்பு கம்பி கைப்பற்றப்பட்டது. சாம்பல் மாதிரிகள் எடுக்கப்பட்டது. அவனின் வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. சேகர் காவலுக்கு அனுப்பப்பட்டான்.

கொலையை கண்ணால் பார்த்த மூத்த மகனும் எரிந்து சாம்பலாகி விட்டதால் இவ்வழக்கை circumstancial சாட்சியங்களே தீர்மானிக்கும். எனவே, போலீஸில் கொடுத்த புகார், பஞ்சாயத்து செய்தவர்களின் சாட்சி, கதவில் இருந்த கம்பி, பெட்ரோல் உபயோகப்படுத்தியதற்கான ரசாயன பரிசோதனை அறிக்கை, ஒப்புதல் வாக்குமூலத்தின் வீடியோ ஆகியவற்றை வரிசைப்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற விசாரணை முடிந்ததில் சேகருக்கு மூன்று ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.

ஆணாதிக்கம் கொண்டவரின் குடிப்பழக்க உச்சத்தால் குடும்பத்தில் மிஞ்சியது சந்தோஷம் இல்லை; சாம்பலே என்பதுதான் இச்சம்பவத்தின் வெளிப்பாடு.

கொலை செய்யப்படுவதற்கு முன்பு கொலையாளி சாதமிட்டு, மீன் குழம்பு விட்டு சாப்பிடச் சொன்னது கனவில்கூட காண முடியாத ஒரு காட்சி.
(அடுத்தது…)

1 COMMENT

  1. ஆணாதிக்கத்தாலும், குடிப்பழக்கத்தாலும் ஒரு குடும்பமே அழிந்து போனது கொடுமை. கணவன் தன்னை தீ வைத்து கொல்வதற்கு முன்பு மனைவி அவனுக்கு மீன் குழம்பு விட்டு சாப்பிட வைத்தது நெஞ்சைப் பிழிகிறது.

    ஆ . மாடக்கண்ணு
    பாப்பான்குளம்

பெ. மாடசாமி
பெ. மாடசாமி நெல்லையில் சிங்கம்பட்டி சொந்த ஊர். 34 ஆண்டுகள் தமிழக காவல் துறைப் பணி. மனைவி பகவதி. “காக்கியின் கதிர் வீச்சு”, காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள், “வீடு தேடி வரும் ஆபத்து, பெண்கள் பாதுகாப்பு”. ரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்”. “ மாணவச் செல்வங்களே மாற்றி யோசியுங்கள்”... இவை படைப்புகள்.பள்ளி கல்லூரி நாட்களில் தமிழில் மேடைப் பேச்சு அனுபவம். ‘வாழும் வரை தமிழுக்காக வாழ்வது’ இவரது பணி.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...