0,00 INR

No products in the cart.

மனித நேயம் மலரட்டும்!

நேர்காணல் : ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

“அரசு வேலைக்குப் போகணும். அதுவே, பொதுமக்களுக்கு நேரடியாக சேவை செய்கிற வேலையாக இருக்கணும். அது, சவால் மிகுந்ததாகவும் இருக்கணும்… இப்படியெல்லாம் தீர்மானித்து தேர்வு செய்த வேலைதான் இது. மனமார ஏற்றுக்கொண்ட பணி” என்கிறார் அனுசுயா. இருபத்தியொன்பது வயதாகும் இவர், திருச்சிராப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் ஆவார்.

உங்கள் குடும்பம் குறித்து…
ஜெயங்கொண்டம் எங்கள் பூர்விகம். அப்பா குருநாதன் விவசாயி. அம்மா ஆதிலெட்சுமி இல்லத்தரசி. வீட்டுக்கு நான் ஒரே பெண். ரொம்ப செல்லம். மயிலாடுதுறை தனியார் பள்ளியில் பிளஸ் டூ வரை படித்தேன். பள்ளி நாட்களில் கொக்கோ, பேட்மின்டன் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் மிக அதிகம். பின்னர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணினி இயலில் பி.டெக்., எம்.டெக்., என்று ஆறு ஆண்டுகள் பயின்றேன். அப்போதே என் அப்பாவுக்கு ஒரு கனவு… மகளை கல்லூரிப் பேராசிரியையாகப் பார்க்க வேண்டும் என்று. ஆனால், என்னோட கனவு வேறு விதமாக இருந்தது.

ஏன்… என்ன ஆச்சு? என்ன நடந்தது?
பாரதிதாசன் பல்கலையில் கல்வி தேர்ச்சி பெற்ற பின், சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள்ளே வந்து விட்டது. சென்னை, ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யில் சேர்ந்தேன். முதலில் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அதன் பின்னர், “மகளே உன் இஷ்டம்” என்று விட்டு விட்டார். டிஎன்பிசி குரூப் ஒன் தேர்வுகள் எழுதத் தொடங்கினேன். அந்தத் தேர்வில் ஒரு ரேங்க் பின்தங்கி விட்டதால், எனக்குப் பணி கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்தேன். அது எனக்குப் பெரிய ஏமாற்றமாகப் போய் விட்டது. தொடர்ந்து அடுத்த ஆண்டிலும் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றேன். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் மாவட்ட அலுவலராகப் பணியில் சேர்ந்தேன். மனம் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

முதன்முதலாக எங்கு பணியில் சேர்ந்தீர்கள்?
2019 செப்டம்பர் மாதம் தாம்பரத்தில் எட்டு மாதங்கள் பயிற்சி. பின் அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலராகப் பணியில் சேர்ந்தேன். அதனையடுத்து தற்போது இந்தத் துறையின் திருச்சிராப்பள்ளி மாவட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறேன். இப்போது இந்தத் துறையில் என்னையும் சேர்த்து தமிழ்நாடு அளவில் மொத்தம் ஐந்து பெண்கள் மாவட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறோம்.

தீயணைப்புத் துறையில் ஒரு பெண்ணாக இதனை எப்படி, எவ்விதம் உணர்கிறீர்கள்?
ஒரு காலத்தில் இந்தத் துறைப் பணிகளுக்குப் பெண்கள் வந்து சேர்வதற்கு அச்சப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பெண் கல்வி மற்றும் பெண்கள் வேலைவாய்ப்பில் நமது சமூகம் மெல்ல மெல்ல மேலேறி வந்த பின்னரே, அரசும் இந்தத் துறையில் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கத் தொடங்கியது. அடிப்படையில் பயம் மற்றும் அச்ச உணர்வு காரணமாக பெண்கள் இதற்கு, ‘சரிப்பட்டு’ வர மாட்டார்கள். எத்தனைப் பெரிய அபாயமாக இருந்தாலும் அதனுள்ளே நுழைந்து, ‘என்னவென்று’ பார்த்திடத் துடிக்கும் மனது இருக்க வேண்டும். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில்தான், பதினைந்து நிலையங்களில் பெண்கள் நிலைய அதிகாரிகளாகப் பணி ஆற்றி வருகின்றனர்.


குறிப்பிடத்தக்க தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பற்றிச் சொல்லுங்களேன்…
நூற்றியொன்று என்கிற எண்ணுக்குத் தகவல் வந்து சேர்ந்த அடுத்த வினாடியே நாங்கள் துரிதமாகச் செயல்படத் தொடங்கி விடுவோம். திருவாரூரில் ஒரு கிராமத்தில் கீற்றுக் குடிசைகளில் தீப்பற்றிக் கொண்டது. நான்கைந்து வீடுகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சமயங்களில் நான்கைந்து வகைகளில் துரிதமாகச் செயல்படுவோம். பற்றி எரியும் தீயை அணைத்துக்கொண்டே, அதன் சுற்றுப்புற வீட்டுக் கூரைகள் மேலே தண்ணீர் பாய்ச்சி அடிப்போம். அப்போதுதான் அதன் அருகில் உள்ள வீட்டுக் கூரைகளுக்குத் தீ பரவினாலும் தீ பிடிக்காது. முதலில் கேஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்துவோம். அதுவே பேராபத்தாக அமைந்து விடும். இதையெல்லாம் நேரம் கடத்தாமல் உடனுக்குடன் செய்வதற்கு துணிச்சல் மட்டும் இருந்தால் போதாது; சமயோசித அறிவும் இருக்கணும்.

எரிந்து கொண்டிருக்கிற ஒரு குடிசையில் ஐம்பது அறுபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாட்டிக் கொண்டார். ஒரே புகை மூட்டம். தீ ஜுவாலை. ஒரு அம்மா உள்ளே உயிருடன் மாட்டிக் கொண்டதாக எல்லோரும் கத்துகிறார்கள்… கதறுகிறார்கள். எங்கள் குழுவில் இரண்டு வீரர்கள் துணிந்து உள்ளே சென்று அந்தப் பெண்மணியைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டார்கள். அவர் உயிர் பிழைத்திருந்தார். அதற்குள் தீயையும் அணைத்து விட்டோம். எரிந்து கொண்டிருந்த குடிசைக்குள் இருந்து ஒரு அம்மாவை மீட்டு வரவும், அந்தக் கிராம மக்களே எங்கள் குழுவினர் அனைவரையும் வாழ்த்தினார்கள். அப்போது கிட்டிய ஆத்ம திருப்திக்கு அளவே இல்லை.


துவரங்குறிச்சி ஏரியாவில் நூறடி கிணறு ஒன்றில் இரண்டு காட்டெருமைகள் உள்ளே விழுந்து விட்டன. மேலேறி வர முடியாமல் குரல் தந்துகொண்டே இருந்துள்ளன. அந்தப் பக்கமாகப் போனவர்கள் பார்த்து விட்டு, எங்களுக்குத் தகவல் தந்தார்கள். எங்கள் குழுவினருடன் உடனே கிளம்பி விட்டோம். கிணற்றில் விழுந்து இருப்பது காட்டெருமைகள். சற்று மூர்க்கத் தனமானவை. அதனால் உடனே வனத்துறைக்குத் தகவல் தந்தோம். அவர்கள் வந்து கிணற்று மேட்டில் இருந்தபடியே கிணற்றின் உள்ளே இருந்த இரண்டு காட்டெருமைகளுக்கும் மயக்க ஊசிகள் செலுத்தினர். பின்னரே எங்கள் குழுவினர் கயிறுகள் கட்டி கிணற்றின் உள்ளே இறங்கினார்கள். அந்த இரண்டு காட்டெருமைகளையும் கீழிருந்து அவர்கள் தூக்கி விட, மேலிருந்து எங்கள் குழுவினரும் பொது மக்களும் இழுத்து, தரைப் பகுதிக்குக் கொண்டு வந்தனர். கட்டுக்களைப் பிரித்தவுடன் மயக்கம் தெளிந்து காட்டுக்குள் அவை ஓடி விட்டன.

சமீபத்திய தொடர் மழையினால் திருச்சி அருகே அரியாற்றில் மிகப்பெரும் வெள்ளம். கரை உடைப்பெடுத்து குழுமணி ஏரியாவில் செல்வா நகர் மற்றும் ஜேகே நகர் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. மாலை ஆறு மணிக்குச் சென்றோம். நள்ளிரவு கடந்து அதிகாலை மூன்று மணி வரைக்கும் தொடர்ந்து மீட்புப் பணிகளில் இயங்கிக் கொண்டிருந்தோம். இரண்டு படகுகளில் ஒரே நாளில் குழந்தைகள் உட்பட, தொண்ணூற்றி எட்டு நபர்களை மீட்டு, பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு வந்து சேர்த்தோம். அதன் குடியிருப்புப் பகுதிகளில் ஐந்தடி உயரத்துக்குத் தண்ணீர் வெள்ளம். மீன் வளத்துறையில் இருந்து இரண்டு படகுகள் கிடைக்கவும், ரொம்பவே உபயோகமாக இருந்தது. ஒரு வீட்டுக்குள் இரண்டு நாட்களாக வெளியே வர இயலாமல் தவித்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரை மீட்டுக் காப்பாற்றிக் கொண்டு வந்தோம். இதை விட வேறென்ன வேண்டும் எங்களுக்கு?


2022 ஆங்கிலப் புத்தாண்டின் செய்தியாக…
ர் ஆபத்து… ஓர் இடர்ப்பாடு என்றால் உடனே உதவுங்கள். விலகிச் சென்று விடாதீர்கள். ஒரு விபத்தாக இருக்கலாம்; பேரிடராக இருக்கலாம்; தீ விபத்தாக இருக்கலாம். அங்கெல்லாம் விரைந்து சென்று உதவுங்கள். நேர்மறை எண்ணங்களை, நேர்மறைக் கருத்துக்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அவைதான் மனித நேயத்தை உங்கள் மனங்களில் விதைக்கும். மனித சமூகத்துக்கு மனித நேயம்தான் நிரம்பத் தேவை.

நேர்மறை எண்ணங்கள் நிலைக்கட்டும்; மனித நேயம் மலரட்டும். இதுவே எனது 2022 ஆங்கிலப் புத்தாண்டு தினச் செய்தி.

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. பள்ளி நாட்களில் இருந்தே கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் தீராத ஆர்வம். வானொலி நாடகங்கள் எழுதுவதிலும் கால் பதித்தது உண்டு. சமூகப் பார்வையுடனான கட்டுரைகள், நேர்காணல்கள் படைப்பதிலும் வல்லுனர். கல்கி, மங்கையர் மலர், தீபம் போன்ற கல்கி குழும இதழ்களின் நடைபாதைதனில் பயணிக்கும் நிரந்தரப் பார்வையாளன்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...

சகுனியும் நானே…  பாஞ்சாலியும் நானே…  நாகக் கன்னியும் நானே…   திரௌபதியும் நானே…  

- ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு         லால்குடியில் வசித்து வரும் பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம். அவருக்கு வயது ஐம்பத்தி நான்கு. நாடகம், இசைச் சொற்பொழிவு, ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து எனப் பல்துறைகளிலும்...

கந்து வட்டியிலிருந்து மீட்போம் பெண்களின் சுயம் காப்போம்!

-சேலம் சுபா  தாங்கள் நடத்தும் என் ஜி ஓ மூலம் பெண்கள் சுயதொழில் செய்து பொருள் ஈட்டவும், தவறு செய்யும் கணவனை தட்டிக்கேட்டுத் திருத்தவும் தேவையானத் துணிவை பெண்களுக்கிடையே மூட்டி வருகின்றனர் கொடைக்கானலைச் சேர்ந்த டேவிட்...

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்...     - சேலம் சுபா நல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப...