0,00 INR

No products in the cart.

உயிர் ஸ்பரிசம்!

கதைசீதா ரவி
ஓவியம்தமிழ்

யன் மாளிகைக்குள் நுழைந்ததுபோல் இருந்தது சரஸ்வதிக்கு. எங்கிருந்து வருகிறதென்று தெரியாத வகையில் செயற்கை வெளிச்சமும் குளிரூட்டலும் பளிச் சுவர்களும்… அரக்கும் பச்சையும் கலந்த அழகான சீருடைப் புடைவைகள் அணிந்த பெண்களும்… என்ன?
மயன் மாளிகையில் எல்லோரும் இன்பக் கேளிக்கைகளில் ஈடுபட்டபடி மகிழ்ந்திருப்பார்களாயிருக்கும். இங்கோ, அனைவருமே டாக்டரின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். சரஸ்வதியும்தான். சக்கர நாற்காலியை விட்டு எழக்கூடாது என்பது அவளுக்கு இடப்பட்ட கட்டளை.

குமார் சொல்லி எதையும் செய்யாமல் இருக்க முடிந்ததில்லை, இதுவரையில். போதாக்குறைக்கு ஆனந்தியும் அவனுடன் கட்சி சேர்ந்துகொள்வாள். இருவரும் ஒரே நேரத்தில் ஃப்ளாரிடாவிலிருந்தும் சிகாகோவிலிருந்தும் அழைத்து விடுவார்கள். கம்ப்யூட்டர் திரையில் ஸ்கைப் காமிரா காட்டும் சற்றே சப்பட்டை முகங்களில் கவலை கொப்பளிக்கும். அதோடு, குற்ற உணர்வும் விரவியிருப்பதாகத் தோன்றும் சரஸ்வதிக்கு. இவை போதும் அவளை அவர்கள் விரும்பும் திசை நோக்கிச் செலுத்த. ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் உட்கார்ந்து கொண்டு அம்மாவைப் பற்றி அனாவசியமாக அவர்கள் கவலைப்படக்கூடாது. ஏற்கெனவே சவால்களும் சச்சரவுகளும் நிறைந்த அன்னிய தேச வாழ்வில், இந்த அநாவசிய கவலையைத் தவிர்க்கும் விசை தன் வசமிருப்பதை உணர்ந்தாள் சரஸ்வதி.

பெற்றவளின் பொறுப்புகள் மட்டும் தீருவதேயில்லை. முதியோர் இல்ல வாழ்க்கையை முகம் சுளிக்காமல் ஏற்ற பிறகும் தீருவதில்லை. சொல்லப் போனால், இந்த மூன்று வருடங்களில் பொறுப்புச் சுமை அதிகரித்துள்ளது. தனது மகிழ்ச்சியையும் மன திருப்தியையும் சதா நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது…

“மிஸஸ் சரஸ்வதி!” சீருடை அணிந்த பெண்மணி ஒருத்தி உரத்த குரலில் அழைத்தாள். சரஸ்வதி கையுயர்த்தியதை கவனிக்காமல், நிரம்பிய இருக்கைகளை நோக்கி மீண்டும் குரல் எழுப்பினாள்.

சரஸ்வதி மெதுவாக சக்கர நாற்காலியிலிருந்து எழுந்து அவளருகில் போய் நின்று சொன்னாள்:

“நான்தான் சரஸ்வதி.”

“எங்கே இருந்தீங்க?”

“அதோ…” சக்கர நாற்காலியைச் சுட்டிக் காட்டினாள் சரஸ்வதி.

“வீல் சேர் பேஷன்டா? ஏன் எழுந்து வந்தீங்க? உங்க அட்டென்டர் எங்கே?”

“தெரியலை…” என்றாள் சரஸ்வதி. உண்மையில், மூன்று கேள்விகளுக்குமே அவளுக்கு விடை தெரியவில்லை. தான் ஒரு பேஷன்டா! அதுவும் வீல் சேர் பேஷன்டா…?

’சாந்தி சதனம் முதியோர் இல்லத்’திலிருந்து அவளுடன் அனுப்பப்பட்ட காசி, என்கொயரி கவுன்டரிலிருந்து வேகமாக வருவதைப் பார்த்தாள்.

“நான்தாங்க அட்டென்டர்…”

“ஏன்பா அவங்களை விட்டுட்டுப் போனே? பார்த்து உட்கார்த்தி வை. பத்திரம், அவங்க நாலாவது பேஷன்ட்” என்றாள் அந்தப் பெண் கையிலிருந்த காகிதத்தில் ‘டிக்’ செய்தபடி. டாக்டர் ரவுண்ட்ஸ் முடிஞ்சு இன்னும் ரூமுக்கு வரலை. அரை மணி நேரத்துல வந்துடுவார். பார்த்து உள்ளே கூட்டிட்டுப் போ. அதோ அவங்களுக்கப்புறம் நீங்க போங்க” என்று ஒரு நடுத்தர வயது தம்பதியைச் சுட்டிக் காட்டினாள்.

அதற்குள் சரஸ்வதி தானே நடந்து போய் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டுவிட்டாள்.

“ஸாரி பாட்டிம்மா…” காசி அருகில் வந்து வருத்தம் தெரிவித்தான்.

“எதுக்கு?”

“விட்டுட்டுப் போன நேரத்துல அவங்க வந்து கூப்பிட்டுட்டாங்க இல்லே… அப்பாய்ன்ட்மென்ட் இருக்குன்னு சொல்லிட்டு வரத்துக்குத்தான் கவுன்டருக்குப் போனேன். அதுக்குள்ள ஏன் எந்திரிச்சீங்க?”

“எனக்கு ஒண்ணும் இல்லேப்பா….”

“அதை டாக்டர் சொல்லட்டும் பாட்டிம்மா… அப்புறம் நடந்தே போய் டாக்ஸில ஏறிக்கலாம்”.

சரஸ்வதி அவனை முறைத்துப் பார்த்தாள். குமாரின் எதிரொலி மாதிரியல்லவா பேசுகிறான்! ஒரு வயதைக் கடந்த பிறகு வாழ்க்கையையும் இயக்கங்களையும் அப்படியே ஒரு பொறுப்பாளரிடம் ஒப்புக்கொடுத்து விட வேண்டுமா என்ன? தள்ளாமை உடலுக்கு மட்டும்தானே!

“போய் சாப்பிட்டுட்டு வரியா?” என்றாள் ‘கேன்டீன்’ என்று அம்புக்குறியிட்ட பலகையைச் சுட்டிக் காட்டி. பர்ஸிலிருந்து பணம் எடுத்து நீட்டினாள்.

காசிக்கு ரொம்பப் பசித்திருக்க வேண்டும். ஆவலாக வாங்கிக் கொண்டான்.

“தேங்க்ஸ் பாட்டிம்மா! பத்து நிமிஷத்துல வந்துடறேன்.”

அவனுடைய பத்து நிமிஷம் என்பது அரைமணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை நீடிக்கக் கூடியது என்பது நன்றாகவே தெரியும். வரட்டும். அதற்குள் டாக்டர் வந்தால், தானே எழுந்து போய் அவரைச் சந்திக்கும் தெம்பும் தைரியமும் இருந்தது.

தே தெம்பும் தைரியமும்தான் தனிக்குடித்தனம் நடத்த கை கொடுத்தன. தனிக்குடித்தனம்-2 என்று சொல்ல வேண்டும். ஆனந்திக்குக் கல்யாணம் ஆனபிறகு அவளும் மாப்பிள்ளையும் அமெரிக்காவுக்கு வரும்படி அழைத்தார்கள். குமாரும் வற்புறுத்தினான். “இங்கேயே வந்துடு…”

சரஸ்வதிக்கு அதில் விருப்பமில்லை. குமாருக்குப் பதினெட்டு வயதுதான். அவன் அப்பா கான்ஸரில் உயிரிழந்தார். குழந்தைகளை ஒரு நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற வைராக்கியத்தில் பிறந்த தெம்பும் தைரியமும் அவள் கூடவே தங்கிவிட்டன.

பேரன், பேத்தி என்று பிறந்தபோது, உதவி செய்ய, தனியாகவே பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு விமானம் ஏறினாள்.

“ஈரத்துண்டை கண்ட இடத்துல போடாதே!” என்று கடைசி வரை அவள் கடிந்துகொண்ட குமார், பளிங்கு போல் வீட்டைப் பராமரித்து, பாத்திரங்களைத் துடைத்து அடுக்குவதைப் பார்த்து ரசித்தாள்.

சென்னையில் இருந்த வரையில், “பழமா? பே…!” என்று முகம் சுளித்த ஆனந்தி, “அம்மாவுக்குப் பிடிக்கும்” என்று இப்போது பழங்களை நறுக்கித் தந்து, தானும் சாப்பிட்டதைக் கண்டு மகிழ்ந்தாள்.

ஆறேழு வாரங்கள்… பேரனோ, பேத்தியோ முகம் பார்த்துச் சிரிக்கிற பருவம் வரை எடுத்து வளர்க்க உதவிவிட்டு, அதே வைராக்கியத்துடன் திரும்பிவிட்டாள்.

சென்னையில் தனிமைதான். ஆனால், அது பிடித்திருந்தது. தன் பணிகளை, எளிய தேவைகளை தானே கவனித்துக் கொள்ள முடிந்தது. ஆனந்தியோ குமாரோ குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்து போக ஒரு வீடும் இருந்தது. வைராக்கியத்துடன் திருப்தியும் நிறைவும் சேர்ந்துகொள்ள, பெருமிதம் கூட ஏற்பட்டது. அந்தப் பாழாய்ப் போகிற தினத்தில் கண் அயர்ந்ததுதான் தப்பாகிவிட்டது!

வாசல் மணி அடிக்கும் சப்தம் கனவில் கேட்கிறது… இல்லை! கனவில்லை, நிஜமாகவே அழைப்பு மணி. நீண்ட நேரமாக யாரோ அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். தீவிரமும் அவசரமுமாக மீண்டும் ஒலிக்கிறது. சோஃபாவில் டீ.வி.முன் அமர்ந்தபடி உறங்கிவிட்டதை உணர்ந்தாள். எழுந்து வாசல் கதவை நோக்கி விரையும்போது மணியைப் பார்த்தாள். நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இலேசான கலவரத்துடன் கதவின் விழி துவாரம் வழியே நோக்கினாள். பக்கத்துக் குடியிருப்பிலிருந்து லல்லியும் அவள் கணவர் ஆறுமுகமும். கதவைத் திறந்தாள்.

“என்ன மாமி…? ஒரே கேஸ் வாடை வருது. அடுப்பு நிறுத்தியிருக்கா, ஏதாச்சும் ‘லீக்’ இருக்கா…?”

ஃபிளாஸ்கிற்கு தண்ணீர் சுட வைக்க அடுப்பில் வைத்துவிட்டு டீ.வி. முன் வந்து அமர்ந்தது ஞாபகத்துக்கு வந்தது. லல்லி-ஆறுமுகம் பின் தொடர சமையலறைக்குப் போனாள். தண்ணீர் கொதித்து, மூடியைத் தள்ளி வெளியே வழிந்து அடுப்பை அணைத்திருந்தது. லல்லி பாய்ந்து கேஸை ஆஃப் செய்தாள்.

“ஜன்னலையெல்லாம் முதல்ல திறங்க…” என்று ஆறுமுகம் உதவினார்.

“ரொம்ப ஸாரி. கண் அசந்துட்டேன். உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துட்டேன் இல்லே…”

“அது பரவாயில்லை மாமி. ஆனா, பெரிய ஆபத்து இல்லையா? கவனமா இருங்க. பக்கத்துலேயே நின்னு அடுப்பை அணைச்சுட்டு அப்புறமா கிச்சனை விட்டு வெளியே வாங்க. வயசாச்சில்லே, மறந்துடும், அசந்துடும்…”

மீண்டும் அவ்வாறு நடக்காது என்பதில் சரஸ்வதி உறுதியாக இருந்தாள். ஆனால், குமாருக்குத்தான் அவளால் நம்பிக்கையூட்ட இயலவில்லை.

“அதுக்குத்தான் இங்கே வந்து எங்களோட இருன்னு சொல்றோம். கேட்க மாட்டேங்கிற…” சண்டை பிடித்தான்.

சகஜமாக, அவனிடம் நடந்தவற்றைச் சொன்னது தப்பாகிவிட்டது.

“அங்க வந்து என்னடா பண்ணுவேன்? குழந்தைகள் பெரிசாயாச்சு. அவாவா ரூம்ல கதவைச் சாத்திக்குவா. நீங்களும் எப்பவும் பிஸி. இங்கே, வாசல்ல இறங்கினா கோயில். இரண்டு தெரு நடந்தா கச்சேரி, கதைன்னு கேட்கலாம். அங்க வந்து நாலு சுவத்துக்குள்ளே நான் என்ன பண்ண?”

அண்ணனும் தங்கையுமாகச் சேர்ந்து யோசித்திருக்க வேண்டும்.
அடுத்த வார இறுதியில், ஸ்கைப் காலில் சாந்தி சதனம் பரிந்துரைக்கப்பட்டது.

“எல்லாத்தையும் தீர விசாரிச்சுட்டேன்மா,” என்றாள் ஆனந்தி. “இருபத்து நாலு மணி நேரமும் டாக்டர் இருப்பாராம். ஒரு மினி வீடு மாதிரி அமைப்பு…”

“வெப் ஸைட்ல படங்களைப் பார்த்தேன். உனக்கேத்த மாதிரி இருக்கு” என்றான் குமார்.

“சே… சே… அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் இங்கேயே நிம்மதியா, பத்திரமா இருப்பேன்.”

“இல்லேம்மா. 75 ஆயிடுத்து உங்களுக்கு. இனிமே தனியா இருக்கிறது பாதுகாப்பில்லே. சென்னையில வயசாளிகளைத் தேடி கொலை பண்றதா வேற அப்பப்போ செய்தி வருது. நீங்க வேணா நிம்மதியா இருக்கலாம். ஆனா, நாங்க எப்படி இங்க நிம்மதியா இருக்கிறது?”

‘அதுக்குத்தான் இங்க வந்து இருங்கோன்னு சொல்றேன்…’ – குமார் சொன்னது போல் இலகுவாக அவளால் செல்ல முடியவில்லை. பிடுங்கி நட்ட நாற்று பயிரான பிறகு அதை மீண்டும் நாற்றங்காலுக்கு இடம்பெயர்க்கவா முடியும்?

பதில் பேசாமல் இருந்தாள்.

“நாங்க இந்தியா வந்தா உங்ககூட வந்து தங்கிக்கிற வசதிகூட இருக்கு சாந்தி சதனத்துல. உங்களுக்கு அந்த இடம் பிடிக்கும்மா. பாருங்களேன்…”

பிடித்துத்தானிருந்தது. முதியோருக்கான வாழ்விடம் என்ற வகையில் ஒரு சிறு தேவையைக் கூட விட்டு வைக்காமல் நிறைவேற்றியது சாந்தி சதனம். நேற்றுகூட சாப்பாட்டுக் கூடத்தில் இலேசாக மயக்கம் வந்ததைத் தொடர்ந்து உடனே குமாருக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அவனும் நுணுக்கமாக அங்கிருந்தபடியே ஆணையிட, இதோ சக்கர நாற்காலியில் அமர்த்தி சரஸ்வதியை இந்த முன்னணி மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

குமாரும் ஆனந்தியும் சென்னையில் இருந்திருந்தால் நேற்றைய நிகழ்வு ஒன்றும் பெரிதாகத் தெரிந்திராது. கடல் கடந்த இடைவெளியும் வெல்ல முடியாத குற்ற உணர்வுமாகச் சேர்ந்து பதற்றத்தைக் கூட்டி பாரத்தை இவள் மீதே சுமத்தியிருக்கின்றன. உடலும் உள்ளமும் திடமாக இருக்கும்போதே சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டதால் மனமும் முகமும் வெதும்பிவிட்டன. தான் பிறந்து வளர்ந்ததும் குழந்தைகளைப் பெற்று வளர்த்ததும் ஏதோ முன் ஜன்ம நிகழ்வுகள் போலாகிவிட்டன திடீரென்று. அந்த உணர்வுகளும் கலகலப்பும் ஸ்பரிசங்களும் புகை படிந்த பழங்கனவுகளாக மங்கிப்போய் மூலையில் கிடந்தன. அன்பின் அடையாளமான ஸ்பரிசம் எப்படி இருக்கும் என்பதே மறந்துவிட்டாற் போல் தோன்றியது.

சரஸ்வதிக்குத் தன் இருப்பைப் பற்றிய கேள்விகள் எழ ஆரம்பித்து மிகுந்த வலி தந்தன. சாந்தி சதனத்துக்கு இடம்பெயர ஒப்புக்கொண்டது மிகப் பெரிய தவறு என்று தாமதமாக உணர்ந்ததில் தன் பெயரிலேயே கோபம் கோபமாக வந்தது. எதையும் செய்யாமல், எல்லாமே செய்விக்கப்படுகின்ற  நிலை என்பது மனித வாழ்வின் அடிமட்ட துர்பாக்கியம். அதனை அவள் ஏற்றிருக்கக்கூடாது. தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் தகுதி இரவோடிரவாக அபகரிக்கப்பட்டு இப்படி கையாலாகாதவள் போல் சக்கர நாற்காலியில்…

“நானே நடந்து வர முடியும்… காசிதான் கூடவே வரானில்லே. சக்கர நாற்காலி வேண்டாம்.” சொல்லிப் பார்த்தாள். சதனத்தின் மேலாளர் ஒப்புக் கொள்ளவில்லை. “ஸார் போன்ல ரொம்ப தீர்மானமா சொல்லியிருக்கார் மேடம். உங்களை வீல் சேர்லதான் உட்கார்த்தி அனுப்பணும்னு… இந்த வயசுக்கு மேலே விழுந்துட்டா ரொம்ப கஷ்டமில்லையா?”

ஒரு கணம் பயம் வந்தது. மறுகணம் எரிச்சல். “விழலைன்னா?” மேலாளரிடம் முகத்தில் அறைவது போல் பேச மனம் வரவில்லை. அவர் வெறும் கருவி.

காசி சக்கர நாற்காலியை டாக்ஸி வரையில் தள்ளி வந்தான். தானே ஏறி அமர்ந்துதான் வந்து சேர்ந்திருக்கிறாள். சக்கர நாற்காலியை மடக்கி அவன் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு வர, தான் மிடுக்காக நடந்து போய் டாக்ஸியில் ஏறுவதாகக் கற்பனை செய்து கொண்டாள். மனம் சற்றே இலேசாகிச் சிரிப்பு வந்தது. காசிதான் இன்னும் வரவில்லை.

“எம்மா…!” இனிமையான இரைஞ்சும் குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள் சரஸ்வதி.

“ஒரு அஞ்சு நிமிஷம் பாப்பாவை வைச்சுக்க முடியுமா…?  நான் போய் பணம் கட்டிட்டு, டாய்லெட் போய்ட்டு வந்துடறேன்..” எதிரே நின்ற பெண்ணின் தோளில் துணி போர்த்திய குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. ரோஜா மொட்டுப் பாதங்கள் போர்வைக்கு வெளியே தெரிந்தன.

கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் உந்த, சரஸ்வதி கைகளை நீட்டினாள். கவனமாக குழந்தையை மடியில் ஏந்தி நெஞ்சின் அருகே இருத்திக் கொண்டாள்.

“தேங்க்ஸ்மா… இதோ வந்துடறேன்,” விரைந்தாள் அப்பெண்.

துணிப் பொட்டலத்துக்குள் இருந்த குழந்தைக்கு ஒன்றரை மாதங்களிருக்கும். இலேசாக விழி மலர்த்தி சரஸ்வதியைப் பார்த்தது  அது. ரொம்ப நாள் பழகியதைப் போல் கோணல் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு அவளோடு ஒண்டிக்கொண்டு மீண்டும் தூங்கிப் போயிற்று. நிபந்தனைகளற்ற நம்பிக்கையுடன் தன் கரங்களில் உறங்கிய ஜீவனின் அண்மையும் உயிர் ஸ்பரிசமும் சரஸ்வதிக்குள் ஊற்றுக் கண்களைத் திறந்துவிட்டன. அவள் விழிகளில் நீர் நிரம்பித் தளும்ப, கண்ணீர் குழந்தையின் முகத்தில் சொட்டி அதை எழுப்பிவிடுமோ என்று கவலை கொண்டாள். மூச்சை பலமாக இழுத்துவிட்டு தன்னைச் சமன் செய்து கொள்ள முயன்றபோது காசி வந்துவிட்டான்.

“தோடா!” என்றான் வியப்பில் வாய் பிளந்து.

அதற்குள் அந்தப் பெண் வந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டு நன்றி சொன்னாள். அறையின் மறுமுனைக்கு விரைந்தாள்.

“இவ்ளோ பேர் இங்க உட்கார்ந்திருக்காங்க. எல்லாரையும் விட்டுட்டு, உன்னாண்ட போய் பாப்பாவைக் கொண்டாந்து குடுத்துச்சுப் பாரு…” என்றான் காசி.

‘அதுக்குப் பேர்தான் நம்பிக்கை’ என்று சொல்ல நினைத்த சரஸ்வதி, மீண்டும் வார்த்தைகளைத் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு மௌனம் காத்தாள்.

இச்சிறுகதை “ஸ்டார் சிறுகதை’’ வரிசையில் மங்கையர் மலர்,
2015, மார்ச் – 1-15 இதழில் வெளியானது.

1 COMMENT

  1. ஏழு வருடங்களுக்குப் பிறகும் கதை ‘ உயிர் ஸ்பரிசம்’
    இன் னும் உயிர்த் துடிப்புடன் இருப்பதில் ஆச்சரியம்
    இல்லை. என்றும் துடித்துக்கொண்டுதான் இருக்கும். சந்தேகமேயில்லை.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

டைரி!

1
கதை: தேன்சிட்டு ஓவியம்: தமிழ்   6/8/2000 இன்னிக்கு காலேஜ்ல ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துச்சு. கீதா, அவளோட பிரண்ட்ஸோட பேய் கிட்ட பேசினேன்னு சொன்னா . "பேயா? ரொம்ப ரீல் விடாதேன்னு," அவளை ஓட்டினேன். ஆனா,  முகத்த சீரியஸா...

ஒரு பக்கக் கதைகள்!

ஓவியம்: பிள்ளை கதை: ச. மணிவண்ணன்  வாடகை ராமமூர்த்தி ஈசி சேரில் படுத்துக் கொண்டு நியூஸ் பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தார். "சார் வணக்கம்!" என்ற குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தார். சங்கர் நின்றிருந்தான். மாடி வீட்டில் குடியிருப்பவன். "சொல்லுப்பா...

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...