0,00 INR

No products in the cart.

அம்மா மசாலா!

இரண்டு சிறுகதைகள்.

ஓவியம்: சேகர்

நீ.த.வெங்கட்

‘’அம்மா… உங்க பையன், மருமகள், பேரன் ரெண்டு நாள் இங்க வரப்போறதா சொன்னேளே… உங்களுக்கு ஏதாவது டவுன்லேருந்து சாமான் வாங்கி வர வேண்டுமா? என்று கேட்கத்தான் வந்தேன்” என்று சொன்ன பக்கத்தாத்து சேகரைப் பார்த்து புன்னகைத்தாள் கமலம்மா.

‘‘இல்லப்பா, நானே எல்லாத்தையும் வாங்கிண்டு வந்துட்டேன். இதோ சமையலும் ஆச்சு. அவன் வரவை எதிர்பார்த்துதான் இந்தத் திண்ணைல உட்கார்ந்து இருக்கேன். அதோ ஒரு கார் வர்றது பார். இரு நான் கொஞ்சம் இறங்கிக்கிறேன். செத்த கை கொடுப்பா.” அவர் கை பிடித்து திண்ணையில் இருந்து இறங்க உதவினான் சேகர்.  அந்தக் கார் நிற்காமல் சென்றதைப் பார்த்து முகம் மாறிய கமலம்மாவைப் பார்க்க பாவமாக இருந்தது.

‘‘அம்மா, உங்கக்கிட்ட ஏதாவது போன் நம்பர் இருந்தா கொடுங்கோ… நான் போன் பண்ணிப் பார்க்கிறேன்.”

‘‘உள்ள வா சேகர். ஒரு டைரில குறிச்சு வச்சு இருக்கும். ஆனா, அது அவன் வெளிநாட்டு நம்பர். எனக்கு போன் வந்தா எடுக்கத்தான் தெரியும். நேக்கா பண்ண தெரியாது.”

‘‘பரவாயில்லை குடுங்கோ. நான் உங்க பையன்கிட்ட பேசி விவரம் சொல்றேன். நம்பர் வாங்கி, சிறு தயக்கத்தோடே ‘‘ஹலோ… சதீஷ் பேசறேளா?”

‘‘ஆமாம்… நீங்க யாரு?”

‘‘நான் கமலம்மா ஆத்துலே இருந்து பேசறேன். அவா பக்கத்தாத்து சேகர். நீங்க எப்போ வருவேள்னு காத்துண்டு இருக்கா அம்மா.”

‘‘ஓ… அப்படியா? இந்த வெயில் எங்களுக்கு ஒத்துக்கவே இல்லை. அங்க ஏசி வேற கிடையாது. அதனால இங்க டவுன் ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கி இருக்கோம். அம்மாகிட்ட சொல்லுங்கோ, நாளைக்கு வரோம்னு.”

அதைக் கேட்டதும் கமலம்மா இடிஞ்சு போய்ட்டா. ஆசை ஆசையா பாயசம், பச்சடி, வடைனு அமர்க்களமா சமைச்சு வச்சு இருக்கா இந்த தள்ளாத வயசுல பாவம்.

‘‘அம்மா நான் வேணா சுஜாவ அனுப்பி உங்களுக்கு உதவ சொல்லவா? நம்மாத்து பிரிட்ஜ்ல வைச்சுடுங்கோ. நாளைக்குச் சூடு பண்ணி போட்டுடலாம்” என்று சொன்ன சேகரை வாஞ்சையோடு பார்த்தாள் கமலம்மா. இந்தப் பையனுக்குத்தான் எவ்வளவு கரிசனம் என் மேல.

‘‘வேண்டாம் சேகர்… ஆனந்து வேற, நீ வேற கிடையாது எனக்கு. நீயும் சுஜாவும் இன்னிக்கு நம்மாத்துலேயே சாப்பிடுங்கோ. எனக்கும் மனசு நிறையும்” என்று அன்பு பொங்க சிரித்த கமலம்மா கை பிடிச்சு, ‘‘சரி வாங்கோ… உள்ள போகலாம் வெயில் காய்றது” என்றான் சேகர்.

றுநாளும் கொஞ்சம் கூட சலிப்போ, வெறுப்போ இல்லாமல் அன்போடு சமைக்க ஆரம்பித்தாள் கமலம்மா. வீடே சமையல் வாசனை. சமையல் முடித்து எப்போதும் போல் திண்ணையில் அமர்ந்தாள். சற்று நேரத்தில் கார் வந்து நின்றது. ஆனந்துதான் முதலில் இறங்கினான். கொஞ்சம் பூசின மாதிரி இருக்கான் இப்போ. ‘நன்னா இருக்கட்டும் கொழந்தை’ என்று ஆசிர்வதிச்சுண்டே, ‘‘வாங்கோ… வாங்கோ…’ என்று வாய் நிறைய கூப்பிட்டுவிட்டு உள்ளே போனாள். அமேயா குட்டி அம்மா ஜெயஸ்ரீ பின்னாடி ஒளிஞ்சுண்டு பயத்தோட சிரிச்சது.

அம்மா ஆனந்துவைப் பார்த்துக் கேட்டாள்.

“என்னடா ஆனந்து… வேஷ்டி ஏதாவது தரவா?”

“இல்லம்மா… ஷார்ட்ஸ்தான் வசதியா இருக்கும். அப்புறம் உடம்பு எல்லாம் நன்னா இருக்கயோனோ? இரு, ஒரு அவசர போன் வர்றது. பேசிட்டு வர்றேன்“ என்று வாசல் பக்கம் போனான் ஆனந்து.

“ஜெயஸ்ரீ எப்படி இருக்கே? டேய் அமேயா கண்ணா. பாட்டிட்ட வாடா.”

“அமேயாவுக்கு இங்க வந்ததுலே இருந்து ஒரே அலர்ஜி. இங்கு ஒரே புழுதி, சுத்தமான சாப்பாடு இல்ல. ஏண்டா வந்தோம்னு ஆயிடுத்து. எப்போடா அமெரிக்காவுக்குத் திருப்பி போவோம்னு இருக்கு. ஒரேயடியா வியர்த்துக் கொட்டறது“ என்று புலம்பித் தள்ளினாள் ஜெயஸ்ரீ.

“ஜெயஸ்ரீ… சீக்கிரம் சாப்பிடலாம். எனக்கு அவசரமா ஒரு எடத்துக்குப் போகணும். உங்கள ஹோட்டல்ல விட்டுட்டுப் போறேன். நாளைக்கு விடியக்காலம்பற கிளம்பி ஏர்போர்ட் போகணும்” என்று சொன்னான் ஆனந்து.

“என்னடா ஆனந்து, இப்போதானேடா வந்த. இப்படி கால்ல கஞ்சி கொட்டிண்ட மாதிரி கிளம்பணும்னு சொல்ற. பத்து நாள் லீவுன்னு சொன்னா, வந்து ஹோட்டல்ல தங்கிட்டே. நேத்திக்கும் வரல. இன்னிக்கு வந்துட்டு, இன்னிக்கே கிளம்பணும்னு சொன்னா எப்படி? வருஷத்துல ரெண்டு நாளாவது என்கூட இருக்கக் கூடாதாடா? என்னடா நீ போடா” என்று தன் ஆதங்கத்தை அடக்கிக்கொண்டு குரல் கம்மிக் கேட்டாள் கமலம்மா.

“என்ன பண்றதும்மா? நிறைய வேலை இருக்கு. உடனே கிளம்பி வான்னு ஆபீஸ்ல சொல்லிட்டா. அதான் நாளைக்கே கிளம்பணும். அடுத்த முறை நிச்சயம் பத்து நாள் உன் கூட இருக்கேம்மா” என்று சொன்னான் ஆனந்து.

“வருஷா வருஷம் இதையேதான் சொல்ற… சரி சரி சாப்பிட வாங்கோ. சூடு ஆறிடும். உனக்குப் பிடிக்குமேன்னு எல்லாம் ஆசையா பண்ணி இருக்கேன். வாங்கோ சாப்பிட. அவர்கள் அனைவருக்கும் அன்புடன் பரிமாறி அவர்கள் சாப்பிடுவதையே ஆனந்தமாகப் பார்த்தாள் கமலம்மா.

சாப்பிட்டு முடித்தவுடன் ஜெயஸ்ரீயிடம், “நான் பக்ஷணம், சாம்பார் பொடி, பருப்புப் பொடி எல்லாம் பேக் பண்ணி வச்சு இருக்கேன். ஜெயஸ்ரீ ஞாபகமா எடுத்து வச்சுக்கோ.”

“அம்மா லக்கேஜ் ஜாஸ்தி ஆயிடும். வேற எப்போவாவது நான் தனியா வந்தா எடுத்துண்டு போறேன். நீ உடம்ப பார்த்துக்கோ. கார்காரர் வேற ரொம்ப நேரமா வெயிட் பண்றார்” என்று சொன்னான் ஆனந்து.

குழந்தைக்கு முத்தம் கொடுத்து எல்லோர்க்கும் டிரஸ் இருக்கற பை கொடுக்கும்போது கண்ணுல வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அப்படியே திண்ணை தூணில் சாஞ்சு உட்காந்துண்டா கமலம்மா.

காரில் உட்கார்ந்ததும் ஜெயஸ்ரீ ஆனந்துவிடம், ‘‘நல்லவேளை… நீங்க அசடாட்டம் பக்ஷணம் அது இதுனு வாங்கிண்டு வந்துடுவேளோனு பயந்தேன். சமத்து அழகா சமாளிச்சுட்டேள். அப்படியே போற வழியில காரை, ‘அம்மா மசாலா’’ கடைக்கிட்டே நிறுத்துங்கோ. எல்லா ‘அம்மா மசாலா’ ப்ராண்டு பொடி, பக்ஷண ஐயிட்டங்களை அங்க வாங்கிக்கலாம். அந்த ப்ராண்டுதான் நமக்கு ஒத்துக்கும்”  என்று சொல்லிவிட்டு, அந்தக் கடை வந்ததும் கடைக்குள் சென்றாள் ஜெயஸ்ரீ.

ண்ணீரோடு திண்ணை தூண்ல சாய்ந்து கண் அசந்த கமலம்மாவை சைக்கிள் மணி சத்தம் எழுப்பியது. ‘‘வா ராஜு, என்ன திடீர்னு. நான் பக்ஷணம், பொடி எல்லாம் இந்த வாரக் கடைசிலதானே டெலிவரி பண்றேன்னு முதலாளிகிட்ட சொன்னேன்” என்றாள் கமலம்மா.

“இல்லமா, எங்களுக்குத் தெரியும். ஆனா, திடீர்னு ஒரு கஸ்டமர் வந்துட்டார், அவரு நாளைக்கு அமெரிக்கா போறாராம். பக்ஷணம், பொடி எல்லாம் இப்பவே வேணும்னு சொன்னார். அதான் முதலாளி எவ்வளவு ஸ்டாக் இருக்கோ அதை அவசரமா வாங்கிட்டு வரச் சொன்னார்.”

‘‘சரி இரு… என் பையனுக்குப் பண்ணினது இருக்கு. பாக்கெட் போட்டுத் தரேன்” என்று எழுந்த கமலம்மாவுக்கு, அது தனது மகன் கைக்குதான், ‘அம்மா மசாலா’ என்ற ப்ராண்டுல போய்ச் சேரப் போறது என்று தெரியாது. அதுபோல, தன் அம்மா பண்ணின மசாலாதான் தன் கைக்கு, ‘அம்மா மசாலா’ என்ற ப்ராண்டுல கிடைச்சதும் ஆனந்துக்கும் தெரியாது.

——————————————————–

நானும் உன்னைப் போலத்தான்!

– ஆர்.மீனலதா, மும்பை

“கலா! என்ன பண்றே?” பின்னாலிருந்து வந்த குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிய கலா, அங்கு தனது மாமியார் சரோஜாவை எதிர்பார்க்கவில்லை.

கல்யாணமாகி இருபது நாட்களே ஆன கலா, மெளனமாக நின்றாள்.
பின்னால் வந்து நின்று, தான் செய்த காரியத்தை மாமியார் பார்த்து விட்டார்களோ?

வெளியே டைனிங் டேபிளில், திடீரென டில்லியிலிருந்து வந்திருக்கும் சில உறவினர்கள், மாமனார், கணவன், நாத்தனார் ஆகியோர் கலகலவென்று பேசிக் கொண்டிருந்தனர்.

கலா செய்தது ஒருவகையில் சரியில்லையென்றாலும், அந்த நேரத்தில் அவளுக்கு அப்படித்தான் செய்யத் தோன்றியது.

திடீரென உறவினர்கள் வரவும், மாமனார் அவர்களைச் சாப்பிடக் கூறவும், புது மருமகள் கலாவின் தலையில் சமையல் வேலை. எப்படியோ தனது வீட்டில் செய்வது போல எல்லாவற்றையும் செய்து விட்டவள், கடைசியில் சொதப்பி விட்டாளோ? மாமியார் சமையல் கட்டுக்குள் திடீரென வருவாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. பேசாமல் நின்றாள். பார்த்திருப்பார்களா? மாட்டார்களா? என்று தெரியவில்லை.

“என்ன பேசாம நிக்கறே?”

என்ன பேசுவது? எதையாவது சொல்லப்போய், விஷயம் பெரியதாகி, வெளியில் அமர்ந்திருப்பவர்கள் காதுகளில் விழுந்தால்…? புது மருமகளாகிய தான் செய்தது தெரியவந்தால்…?

மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவள் படும் அவஸ்தையைக் கண்டு மெதுவாக சிரித்த சரோஜா, “பயந்துட்டியா கலா! அந்தக் காலத்துல கல்யாணம் ஆன புதிதில், திடீரென வந்தவர்களை சமாளிக்க, உன்னை மாதிரிதான் நானும் செய்தேன். இது சகஜம்தான். போ! போய் எல்லோரையும் கவனி. நான் மீதி வேலைகளைக் கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறி அன்புடன் அவளைத் தட்டிக் கொடுத்தாள்.

அப்போதுதான், தயிர் காணாதென்று தாராளமாக அதில் தண்ணீரைக் கலக்கி மோராகக் கடைந்து விட்டிருந்த கலாவிற்கு நிம்மதியாக இருந்தது.

2 COMMENTS

  1. அம்மா மசாலா கதை அருமை ! பெற்ற மனம் பித்து
    பிள்ளை மனம் கல்லு என்பதைத் தெளிவாக காட்டி
    யது.

  2. அம்மா மசாலா கதை அருமையோ அருமை. ஒரு அன்னையின் உணர்வுகளையும் தவிப்பையும் துல்லியமாக சித்தரித்த விதம் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

தலையாயப் பிரச்னை!

சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஒவியம்: பிள்ளை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் ரமேஷ். முப்பத்தியெட்டு வயது என்று சொன்னால்தான் தெரியும். கொஞ்சம் இளமையாக இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு மட்டும்தானா? என்ற சந்தேகம் அவனுக்கே உண்டு. தன் நீண்ட...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புகைப்படக் கவிதை!

- மங்கையர் மலர் வாசகீஸ் FB  பகிர்வு! பாடம் ..!  பயமறியா  பருவத்திலேயே பாசம், நேசமென போதித்தது இயற்கையா? இறைவனாயென இன்றளவும் யோசிக்கிறேன்...!! -பானு பெரியதம்பி, சேலம் பழைய தத்துவம் புதிய படத்திற்கு... நால்வரோடு சேர்ந்து ஐவரான உண்மை நண்பர்கள் ரசிக்கும் இயற்கை காட்சி -உஷாமுத்துராமன், திருநகர்   என்னப்பா  பார்க்கறீங்க நல்லா...

அன்புவட்டம்!

“பயணிகளுக்கு எச்சில் தொட்டு பஸ் டிக்கெட்டுகளைக் கொடுக்கக்கூடாது” என்று பஸ் கண்டக்டர்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை எச்சில் மட்டுமா? எங்க ஊர் கண்டக்டர்களை வந்துப் பாருங்க வாணி! நெற்றி, கழுத்துல...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...