0,00 INR

No products in the cart.

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் – 6
சுசீலா மாணிக்கம்

ஓவியம்: பத்மவாசன்

ம் வாயுறை வாழ்த்தாம் திருக்குறளின் ஆறாம் அதிகாரம் “வாழ்க்கைத் துணைநலம்”. வாழ்க்கைத் துணை  என்றவுடன்  பொன்னின் செல்வனுடனான கனவுப் பயணத்தில்  என் கைகோர்த்து வருவது ” திருக்கோவிலூர் மலையமான் புதல்வி சக்கரவர்த்தினி வானமாதேவி”.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைச்சான்ற                  சொற்காத்துத் சோர்விலாள் பெண்

உடலாலும், உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்தில் நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைபிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.

என் கனவு பயணத்துள்… நம் புதினத்துள்…

(கெடில நதிக் கரையருகினிலே காணும் அரச மரத்தடி மேடையிலமர்ந்தபடி  திருக்கோவிலூர் மலையமான் (பாட்டன்) ஆதித்த கரிகாலனுக்கும் (பேரன்) இடையேயான உரையாடல்.)

குழந்தாய்! கேள்! உன் தாயாரிடம் நான் வைத்திருந்த அன்புக்கு இந்த உலகத்தில் இணை ஒன்றுமே இல்லை. எனக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள். பீமனையும், அர்ச்சுனனையும் ஒத்த வீரர்களாய் வளர்ந்தார்கள். அவ்வளவு பேரையும் யுத்தகளத்தில் பலி கொடுத்து விட்டேன். அவர்கள் இறந்த செய்தி வந்த போதெல்லாம் நான் வருத்தப்படவில்லை. ஆனால் உன் தாயாரை மணம் செய்து கொடுத்து அனுப்பி வைத்த போது அவள் சாம்ராஜ்ய சிங்காதனத்தில் அமரப் போகிறாள் என்று தெரிந்திருந்தும் என் மனம் அடைந்த வேதனையைச் சொல்லி முடியாது. ஆனால் அந்த வேதனையை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டேனா? இல்லை !அவளிடந்தான் வெளியிட்டேனா? அதுவும் இல்லை. உன் தாயை மணம் செய்து கொடுப்பதற்கு முதல் நாள் அவளை தனியாக அழைத்து என்ன சொன்னேன்? கேள், கரிகாலா! ‘மகளே மாநிலம் புரக்கப் போகும் மன்னனை நீ மணந்து கொள்ளப் போகிறாய் . அதற்காகவும் நீ கர்வம் அடையாதே! அவ்வளவு புகழ்வாய்ந்த கணவனை மணந்து கொள்வதினால் உனக்கு கஷ்டந்தான் அதிகமாயிருக்கும். உன் அரண்மனையில் பணி செய்யும் பணிப் பெண்கள் பலரும் உன்னைக் காட்டிலும் சந்தோஷமாயிருப்பார்கள். துக்கப்படுவதற்கும் வேதனைப் படுவதற்கும் உன்னை நீ ஆயத்தம் செய்து கொள். உனக்குக் குழந்தைகள் பிறக்காவிட்டால் உன் புருஷன் வேறு ஸ்திரீகளைக் கட்டாயம் மணந்து கொள்வான். அதை நினைத்து நீ வேதனை படக்கூடாது. உனக்கு மக்கள் பிறந்தால் அவர்களை வீர மக்களாய் நீ வளர்க்க வேண்டும். அவர்கள் போர்க்களத்தில் உயிர் விட்டதாகச் செய்தி வந்தால் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடக்கூடாது. உன் கணவன் சந்தோஷமாயிருந்தால் நீயும் சந்தோஷமாயிரு! உன் புருஷன் துக்கப்பட்டால் நீ அவனைச் சந்தோஷப்படுத்தப் பார்! உன் பதி நோய்ப்பட்டால் நீ அவனுக்குப் பணிவிடை செய்! உன் கணவன் இறந்தால் நீயும் உடன் கட்டை ஏறிவிடு !உன் நெஞ்சில் உதிரம் கொட்டினாலும் உன் கண்களில் மட்டும் கண்ணீர் சொட்டக் கூடாது! மலையமான் வம்சத்தில் பெண்களுடைய குலாச்சாரம் இது !’ என்று இவ்விதம் உன் அன்னைக்குப் புத்திமதி கூறினேன். அம்மாதிரியே உன் அன்னை இன்றுவரை நடந்து வருகிறாள்; நடத்தி வருகிறாள். கரிகாலா ! உன்னையும் உன் சகோதரனையும் இணையில்லாத வீரர்களாக வளர்த்து வந்திருக்கிறாள். உன் தந்தை நோய்ப்பட்ட பின்னர் இரவு பகல் அவர் பக்கத்திலிருந்து அவளே எல்லா பணிவிடைகளையும் செய்து வருகிறாள் . உன் அன்னையை என் மகளாகப் பெற்றதை நினைக்கும்போதெல்லாம் என் தோள்கள் பூரிக்கின்றன !”என்றார் மலையமான்.

(புகுந்த வீட்டுக்கு செல்லவிருக்கும் தன் மகளுக்கு ஓர் தந்தை  சொன்ன அறிவுரைகளும் அதை கடுகளவேனும் பிசகாமல் பின்பற்றிவரும் மகளும்… ஒரு இல்லத்தின் நலத்துக்கும் நாட்டின் உயர்வுக்கும் பெண்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பது அன்றிலிருந்து இன்று வரை ஒன்றுதான். இப்போது புரிகிறதா தோழமைகளே என் மனதுக்குள் மலையமான் மகள் ஏன் வந்து அமர்ந்து கொண்டார் என !..இன்னும் பாருங்கள்…)

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.

(எப்போதும் என்நேரமும் தன் கணவனை நிழல் போல பாதுகாக்கும் சாதாரண இல்லத்தலைவியாகவே மனதுக்குள் காட்சியளிப்பார் இந்த அரச மாதேவி. சுந்தர சோழர் நோய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோது இணைபிரியாமல் அவரைக் காத்துக்கொண்ட பெண்ணரசி அவர். நோயுற்ற சுந்தர சோழரை  கண் போல பாதுகாத்து நேரம் அறிந்து ஓய்வும், மருந்தும் தந்து  பாதுகாத்துக் கொண்ட இல்லத்து “அரசி” அவர். மட்டுமல்ல தொடர்ந்து வரும் ஒரு நிகழ்வையும் கேளுங்கள்)

சோழ நாட்டில் அக்காலத்தில் ஆடல் பாடல் கலைகள் மிகச் செழிப்படைந்திருந்தன. நடனமும், நாடகமும் சேர்ந்து வளர்ந்திருந்தன. தஞ்சை நகர் சிறப்பாக நாடகக் கலைஞர்கள் பலரைத் தோற்றுவித்தது.

நவராத்திரித் திருநாளில் சக்கரவர்த்தியின் அரண்மனையில் சோழ வம்சத்து மன்னர்களின் வீர சரித்திர நாடகம் மூன்று நாட்கள் நடைபெற்றன. சித்திர விசித்திரமாக அமைந்த நாடகச் சாலைக்கு எதிரே அரண்மனை நிலா முற்றத்தில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடியிருந்து நாடகங்களைக் கண்டு களித்தார்கள். அரண்மனைப் பெண்டிர் அமர்வதற்கு ஒரு தனியான இடம், நீலப்பட்டு விதானத்தின் கீழ் முத்திழைத்த சித்திரத் துண்களுடன் ஏற்பாடாகி இருந்தது.

சுந்தர சோழரின் வண்மையும் வனப்பும், ஆயுளும் அரசும் வாழ்கவென வாழ்த்திவிட்டு நாடகம் முடிவடைந்தது. சபையோர் கலைந்து குதூகல ஆனந்தத்தினால் ஆடிக்கொண்டு தத்தம் வீடுகளுக்கு சென்றார்கள். சிற்றரசர்களின் தேவிமார்களும், அவர்களுடைய பரிவாரங்களும் சென்றார்கள். பின்னர் ,சக்கரவர்த்தினி வானமாதேவியும், மற்றுமுள்ள அரண்மனைப் பெண்டிரும் சோழர்குல தெய்வமான துர்க்கையம்மன் ஆலயத்துக்குப் புறப்பட்டார்கள்.

சுந்தரசோழர்  உடல்நலம் எய்தும்படி மலையமானின் புதல்வி பல நோன்புகள் நோற்று வந்தார். துர்க்கையம்மன் கோயிலுக்கு அடிக்கடி சென்று அவர் பிரார்த்தனை செலுத்துவது உண்டு.நவராத்திரி ஒன்பது நாள் ராத்திரியும் துர்க்கையம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. சக்கரவர்த்தியின் சுகத்தைக் கோரிப் பலிகள் இடப்பட்டன. ஒவ்வொரு நாள் இரவும் மகாராணி கோயிலுக்குச் சென்று அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு திரும்புவது வழக்கம். அரண்மனையின் மூத்த பெண்டிர் பலரும் மகாராணியுடன் ஆலயத்துக்குச் செல்வார்கள்.”

(அன்பும் அறனுமான இல்வாழ்க்கைத் தடத்தில் பல முத்திரைகளை பதித்துக் கொண்டே செல்கிறார் நம் தேவி)

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

(இவர் பெற்ற நன் மக்களைப் பற்றி நம் புதினத்தின் இருவேறு பக்கங்களின் பதிவுகள்…)

சுந்தரசோழ சக்கரவர்த்தியின் புதல்வர்களான ஆதித்த கரிகாலரும், அருள்மொழி வர்மரும் தந்தையை மிஞ்சக் கூடிய இணையற்ற வீரர்களாயிருந்தார்கள். அவர்கள் இருவரும் தந்தைக்குப் பரிபூரண உதவி செய்தார்கள். அவர்கள் மிகச் சிறு பிராயத்திலேயே போருக்குச் சென்று முன்னணியில் நின்று போர் புரிந்தார்கள். அவர்கள் சென்ற போர் முனைகளிலெல்லாம் விஜய லஷ்மி சோழர்களின் பக்கமே நிலை நின்று வந்தாள்.

பழந்தமிழ்நாட்டின் சரித்திரத்தைப் படித்தவர்கள் அந்நாளில் பெண் மணிகள் பலர் சமூக வாழ்வின் முன்னணியில் இருந்திருப்பதை அறிவார்கள். மன்னர் குலத்தில் பிறந்த மாதரசிகள் மிகவும் கௌரவிக்கப் பட்டார்கள். சோழ குலத்தில் பிறந்த பெண்மணிகளும் வாழ்க்கைப்பட்ட பெண்மணிகளும் சொந்தமாகச் சொத்துரிமை பெற்றிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் தரவாரியாகக் கிராமங்களும், நன்செய் புன்செய் நிலங்களும், கால்நடைச் செல்வமும் இருந்தன .இந்த உடைமைகளை அவர்கள் எவ்வாறு உபயோகித்தார்கள் என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். பலர் ஆலயங்களில் தங்கள் பெயரால் பலவிதத் திருப்பணிகள் நடைபெறுவதற்குச் சொத்துக்களை உபயோகப் படுத்தினார்கள்.

அரண்மனைப் பெண்டிர் ஆலயத் திருப்பணி செய்தல் அந்த நாளில் பொது வழக்காயிருந்திருக்க, சுந்தர சோழரின் அருமைப் புதல்வி குந்தவைப் பிராட்டி மட்டும் வேறொரு வகை அறத்துக்குத் தன் உடைமைகளைப் பயன்படுத்தினார். நோய்ப்பட்டிருந்த தம் தந்தையின் நிலையைக் கண்டு இரங்கியதனால் தானோ, என்னமோ, அவருக்கு நாடெங்கும் தர்ம வைத்திய சாலைகளை நிறுவ வேண்டும் என்னும் ஆர்வம் உண்டாயிற்று.”

நம் தமிழ் மறையாம் திருக்குறளின் வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தின் முதல் குறளான

 மனைத்தக்க மாண்புடையவள் ஆகித்தற் கொண்டான் 
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

முதல்,  பத்தாம் குறளான,

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
வரை சொல்லப்பட்ட அத்துணை நற்பண்புகளுடனும் வாழ்ந்து தழைத்த சுந்தரசோழரின் பட்டத்தரசி வானமாதேவியைத் தவிர வேறு யாரை நாம் இங்கு உதாரணமாகக் கூற முடியும்? நீங்களே சொல்லுங்களேன்…

சுசீலா மாணிக்கம்
-சுசீலா மாணிக்கம் பாண்டிய நாடு (திருநெல்வேலி) பூர்வீகமாய் கொண்டிருந்தாலும் - சேரநாடு (தர்மபுரி) பிறந்து வளர்ந்து - சோழநாடு (திருச்சி) திருமணம் செய்துகொண்ட தமிழ் பற்று மிக்க எழுத்தாளர். தன் கல்லூரிக் காலத்து முதலே தமிழ்த்தாயின் செல்ல மகளாய் வளர்ந்தவர். திருமணத்திற்குப் பின், குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க, எழுதுவதை சற்றே மறந்திருந்த இவரை, மங்கையர் மலர் மீண்டும் கண்டெடுத்து ஊக்கப்படுத்தியது. சமுதாய உயர்வு கண்டு மகிழ்ச்சியில் சுழல்வதும், இழிவுகளைக் கண்டு சாட்டையை சுற்றுவதுமாய் நடைபோடுகிறது இவர் பேனா.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

2
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...