0,00 INR

No products in the cart.

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.

முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால் பெண்கள் மேனிலைப்பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி) ஒன்றின் வாயிலில் பெண்கள் இரவு முழுவதும் விடிய விடிய நின்று கொண்டும், உட்கார்ந்தும் இருந்தார்கள் என்றால் ஆச்சர்யமாக இல்லையா? ஆச்சர்யம் தான். ஸ்ரீரங்கம் பெண்கள் மேனிலைப்பள்ளி வாசலில் தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாம் பலரிடமும் பேசினோம். குறிப்பாகப் பெண்களில் பலரும் கருத்து சொல்கிறார்களே தவிர போட்டோ எடுக்க ஒத்துழைக்கவில்லை. ஸ்ரீரங்கத்தில் எல்.கே.ஜி முதல் பிளஸ் டூ வரையிலான தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் நிறைய உள்ளன. அப்படி இருந்தும் ஸ்ரீரங்கம் பெண்கள் மேனிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆங்கிலவழிக் கல்விக்கான சேர்க்கைக்குத் தான், குறிப்பிட்ட பள்ளியின் வாசலில் பிள்ளைகளின் பெற்றோர்கள் இந்தளவு மல்லுக்கட்டு.

அன்றிரவு பள்ளியின் வாசலில் கூட்டத்தை சீர்படுத்த ஒரு கட்டத்தில் போலீசையே வரவழைக்க வேண்டியதாகப் போயிற்று என்கின்றனர் அந்தப் பகுதிவாழ் பொதுமக்கள். இரவு நேரத்தில் பெண்கள் பள்ளி ஒன்றின் வாசலில் சுமார் நாநூறு ஐந்நூறு பேர் திரண்டு நின்றால் எப்படி இருக்கும்? பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது அல்லவா?

“இது ஒவ்வொரு வருசமும் நடக்குற கூத்து தாங்க.” என்று நம்மிடம் ரொம்பவே சலித்துக் கொண்டார் ஒரு முதியவர். தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கவும் சேர்த்துப் படிக்க வைக்கவும் நம் மக்களிடையே இத்தனை ஆர்வமா? என்றால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று போட்டு உடைக்கிறார் ஒரு பெண்மணி.  ஆங்கிலவழிக் கல்வி கட்டணத்திற்குதான் இத்தனை ஈர்ப்பு என்கிறார். இது மட்டுமல்ல இன்னும் பல காரணங்கள் என்று நம் ஆவலை மேலும் தூண்டுகின்றனர்.

“இங்கு காத்திருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை இங்கிலீஷ் மீடியம் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் பணம் கட்டிப் படிக்க வைத்தவர்கள் தான். சரி. அவர்கள் ஏன் இப்போது மட்டும் அரசுப் பள்ளி ஆங்கிலவழிக் கல்வி நோக்கி ஓடி வந்து கால் கடுக்க நிற்க வேண்டும்? இங்கு தான் பல மறைமுகக் காரணங்கள் ஒளிந்துள்ளன.

து அரசு உதவி பெறும் மேனேஜ்மென்ட் பள்ளி. இங்கு ஆறாம் வகுப்பு ஆங்கிலவழிக் கல்வி சேர்க்கும் போது நிர்வாகத்துக்கு சில ஆயிரங்கள் நன்கொடையும் அரசுக் கட்டணமும் (இது ஆயிரம் ரூபாய்க்கு கீழே தான் இருக்கும்) செலுத்தினால் போதும். அதன் பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டிலும் ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வகுப்பு வரை ஆறாண்டுகளுக்கு அரசுக் கட்டணம் மட்டும் செலுத்தி வந்தால் போதும். இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரம் ரூபாய்க்குக் கீழேதான் வரும். தனியார் ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில் இப்படி இல்லை. அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அந்தத் தனியார் ஆங்கிலவழிக் நிலையத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் முப்பதாயிரம் நாற்பதாயிரம் ஐம்பதாயிரம் அறுபதாயிரம் (இதுவும் ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் மாறுபடும்) என்று பணம் கட்ட வேண்டி வரும்.

பெற்றோர்கள் ஆரம்பத்தில் வெளிப் பகட்டுக்காகவும் ஒரு பெருமைக் காகவும் தனியார் ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து விடுகின்றனர். பின்னர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பணம் கட்ட சிரமப்படுகின்றனர். நடுத்தரக் குடும்பத்தினர், மாத வருவாய்க் கொஞ்சம் குறைவாக உள்ளக் குடும் பத்தினர் பலரும் இதனை வெளியே சொல்ல முடியாமல் கஷ்டப்படு கின்றனர். அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக அமைந்து உள்ளதே அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி வகுப்புகள். யோசித்துப் பார்த்தால் நம் மக்களைக் குறை சொல்லியும் பயன் இல்லை என்றே தோன்றுகிறது. வெளிப்படையாகச் சொல்வதென்றால் அப்படிப்பட்ட தாய்மார்களில் நானும் ஒருத்தி.” என்கிறார் அந்தப் பெண்மணி.

ஸ்ரீரங்கம் பெண்கள் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை அவர்களை நேரில் சந்தித்துக் கருத்து பெற இரண்டு நாட்கள் முயற்சித்தோம். பள்ளியின் அலுவலக உதவியாளர்களிடம் இருந்து “ஹெச் எம் மீட்டிங்கில் இருக்காங்க சார். நாளைக்கு வாங்க.” என்கிற பதில்தான் நமக்குக் கிடைத்தது.

நல்லாண்டவர் அல்லிமுத்து

“ஸ்ரீரங்கம் பெண்கள் மேனிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆங்கிலவழிக் கல்வி சேர்க்கையில் மட்டும் தான் ஆண்டுதோறும் இந்தப் பரபரப்பு. பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆங்கிலவழிக் கல்விக்கு என்று குறிப்பிட்ட அளவு எண்ணிக்கைக்கான மாணவிகளை மட்டும் தான் அவர்களும் சேர்த்துக் கொள்ள முடியும். உதாரணமாக இரண்டு வகுப்புகள் ஆங்கில வழிக் கல்வி என்றால் எண்பது மாணவியர்க்கு இடம் கிடைக்கும். அவ்வளவுதான். பள்ளியின் வாசலில் நாநூறு ஐந்நூறு பேர் திரண்டு நின்றால் பள்ளி நிர்வாகம் தான் என்ன செய்யும்? மேலும் இதே பெண்கள் பள்ளியில் மாவட்டக் கல்வித்துறையின் அனுமதி பெற்று இன்னும் கூடுதலாக ஆங்கிலவழிக் கல்வி வகுப்புகள் உருவாக்க வேண்டும். அதுவே இப்பகுதி நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பப் பெண் பிள்ளைகளுக்குச் செய்கின்ற மகத்தான உதவியாகும்.” என்கிறார் அந்தப் பகுதியில் வசித்து வரும் நல்லாண்டவர் அல்லிமுத்து.

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. பள்ளி நாட்களில் இருந்தே கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் தீராத ஆர்வம். வானொலி நாடகங்கள் எழுதுவதிலும் கால் பதித்தது உண்டு. சமூகப் பார்வையுடனான கட்டுரைகள், நேர்காணல்கள் படைப்பதிலும் வல்லுனர். கல்கி, மங்கையர் மலர், தீபம் போன்ற கல்கி குழும இதழ்களின் நடைபாதைதனில் பயணிக்கும் நிரந்தரப் பார்வையாளன்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

0
பீட்ரூட் ரோஸ் மில்க் செய்முறை: பீட்ரூட் நன்கு மண் போக அலம்பிவிட்டு காம்புகளை நறுக்கி எடுத்துவிட்டு துண்டு, துண்டாக நறுக்கி தோலுடன் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். பின்பு வடிகட்டி விடவும். தண்ணீர் கொஞ்சமாகவிட்டு...