0,00 INR

No products in the cart.

காதல் என்பது எது வரை?

– வி.ஜி. சம்பத்

நான்தான் மகேஸ்வரி. செல்லமா மகி. என் நாத்தனார் சுதா கல்யாணத்துக்கு இன்னும் ஒரே ஒரு வாரம்தான் இருக்கு. இன்னும் ட்ரெஸ் பர்சேஸ் பண்ணல. என் கல்யாணம் முடிஞ்சு ஆறுமாசம் தான் ஆகுது. நானும் ரமேஷும் மூணு வருஷம் உருகி, உருகி காதலிச்சு ரெண்டு வீட்டு சம்மதத்தோட கல்யாணம் பண்ணிகிட்டோம். என் புடவைகளே இன்னும் அப்படி அப்படியே இருக்கு. ஆனா புதுசு எடுத்தாகணும்னு என் மாமியார் சொல்லிட்டாங்க. இன்னிக்கே வாங்கிட்டாதான் மத்த ஷாப்பிங்கையும் முடிச்சு மூணு நாள்ல ஊருக்கு கெளம்ப முடியும்.

மாமியார் வாங்கி வைக்கிறேன்னு சொன்னதையும் “வேண்டாம் நாங்களே வாங்கிக்கிறோம்,”னு சொல்லியாச்சு. இந்த ரமேஷ் ரொம்ப மோசம். ஒரு நாள் லீவு போடச் சொன்னாக் கூட போட மாட்டேங்கறான். ப்ராஜக்ட் , ப்ராஜக்ட்ன்னு சொலிட்டு ஓடறான். எனக்கு மட்டும் ப்ராஜக்ட் இல்லையா என்ன? ரெண்டு பேரும் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துப் பேசியே மூணு நாளாகுது. பேச்சு வார்த்தை எல்லாம் வாட்ஸப்புலதான்.

எப்ப மெசேஜ் போட்டாலும் “மீட்டிங்க்ல இருக்கேன்”..ங்கற பதில் வருது. நான் மட்டும் என்ன? அவன் கூப்பிடுறப்ப இதே பதிலத்தானே சொல்றேன். எதுக்கு கல்யாணம் பண்ணிகிட்டோம்னே தெரியல!

மூணு நாள் முன்னாடி ரமேஷ் கேட்டான்….
“ஏன் மகி! நான் தனியா இருக்கறப்ப சந்தோஷமா ஜாலியாத்தான இருந்தேன்?”

“ஆமாம்… அதுக்கென்ன?” (இன்னும் அஞ்சு நிமிஷத்துல எனக்கு ப்ராஜக்ட் மீட்டிங். இப்ப பாத்து என்னவோ கேள்வி-பதில் நிகழ்ச்சிக்குத் தயாராகறானேன்னு நெனச்சேன்.)

“நீயும் தனியா சந்தோஷமா ஜாலியாத்தான் இருந்தே. இப்ப கல்யாணம் பண்ணிகிட்டு ஆறு மாசத்துல நாம என்னத்தை சாதிச்சோம்னு தெரியலையே? காதலிக்கறப்ப  எப்போ சந்திப்போம்னு எப்படி ஏங்குவோம்… ஆனா இப்போ? ஒரே வீட்ல இருக்கோமே தவிர சேர்ந்து சாப்பிட, வெளில போக, எதுக்குமே நேரம் ஒத்து வரல…

யாராவது ஒருத்தரோட வேலை நேரத்தை மாத்தினாத்தான் நாம கல்யாணம் பண்ணிகிட்டதுக்கே ஒரு அர்த்தம் கிடைக்கும். இல்லேன்னா நீ வேண்ணா வேலையை ரிசைன் பண்ணிடு. அப்புறம் மெதுவா வேற வேலைல சேர்ந்துக்கலாம்…”

கேட்டதும். எனக்கு வந்துச்சே கோபம்…

“நான் ஏண்டா வேலைய விடணும், எத்தனை கஷ்டப்பட்டு இந்த வேலைய வாங்கி இருப்பேன்? அத விட எத்தனை கஷ்டப்பட்டு இந்த டீம் லீடர் பதவிக்கு வந்திருக்கேன்? நம்ம கல்யாணத்தப்பவே உனக்கு தெரியும்தானே என்னோட வேலையப் பத்தி? ஆஃபீஸ் டைமிங் பத்தி எல்லாம்? அப்ப அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு அசடு வழிஞ்சுகிட்டே சொல்லிட்டு இப்ப வேலைய விடுன்றியா? கழுத்துல தாலியக் கட்டியாச்சுல்ல, இனி இவள அதிகாரம் பண்ணலாம்னு ப்ளான் பண்ணிட்டியா? ஏன் நீ வேண்ணா வேலைய ரிசைன் பண்ணிட்டு வீட்டுல இருந்து பாரேன்” னு நல்லா கூச்சல் போட்டுட்டேன்.

ரமேஷ் பதிலுக்கு ஒண்ணுமே பேசாம ஆஃபீஸ் ரூமுக்குள்ள போயி கதவைச் சாத்திகிட்டான். அதுக்கப்புறம் அவன் என் கூட முகம் குடுத்தே பேசலை. வாட்ஸப்ல கேக்கற கேள்விக்கு மட்டும் பதில்.

நான் மூணு நாளா ஆஃபீஸ்க்கு போகல. வீட்லருந்தே வொர்க் பண்ணிகிட்டிருந்தேன். மிட்நைட்  வரை வொர்க் பண்ணிட்டு, காலைல பத்து மணி வரை தூங்கிடுவேன். நான் தூங்கற வரைக்கும் ரமேஷ் வீட்டுக்கு வர்றதில்ல. அதுக்கப்புறமா எப்ப வந்து தூங்கி எப்ப எழுந்து போறான்னு நானும் கவனிக்கல.

முக்கியமான ப்ராஜெக்ட், இந்த வாரம் முடிச்சுக் குடுத்தாதான் கல்யாணத்துக்கு ஊருக்குப் போக முடியும்கிற டென்ஷன்  வேற எனக்கு.  இப்ப கல்யாணத்துக்கு ஊருக்குப் போகணும். ஃப்ளைட் டிக்கட் போட்டுட்டானான்னு தெரியல.

அது மட்டுமில்லாம எங்களுக்கு ட்ரெஸ், ரெண்டு வீட்டுக்கும் ஸ்வீட்ஸ், கிஃப்ட்டுனு நெறய பர்சேஸ் பண்ண வேண்டி இருக்கு. கடைக்குப் போய் வாங்க நேரமில்லாட்டா அமேஸான்லயாவது ஆர்டர் பண்ணனும். எங்க வீட்டுக்கு நானே வாங்கிடுவேன். எங்க மாமனார் வீட்டுக்காரங்க டேஸ்ட் என்னான்னு எனக்கு ஒண்ணும் தெரியாது. கல்யாணமானதும் எங்களத் தனிக்குடித்தனம் வெச்சுட்டுப் போனவங்கதான். திரும்ப அவங்களும் இங்க வரல. நாங்களும் போகல.

எங்கம்மா அப்பாவும் “நீங்க ரெண்டு பேரும் காலைல வேலைக்குப் போனா ராத்திரி வர்றீங்க. நாங்க வந்து என்ன பண்ண போறோம்?” னு எங்க வேலையக் காரணம் காட்டி வராம இருந்துட்டாங்க. இவன் என்னடான்னா பேச மாட்டேங்கறான்!  இப்ப என்ன பண்ணலாம் ? இந்த கண்ணாமூச்சி வெளயாட்டை எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சுட்டு உனக்கு என்னதாண்டா வேணும்னு ஃபோன் பண்ணி கேக்கலாமா?

ஆனா நான் ஏன் இறங்கிப் போய் பேசணும்? அவன் மொதல்ல பேசட்டுமே! சரி… எப்ப வீட்டுக்கு வருவான்னு கடைசியா வாட்ஸப்ல கேட்டுப் பாக்கலாம். அதுக்கப்புறமா ஃபோன் பண்ணிப் பேசறதப் பத்தி யோசிப்போம் னு அவனுக்கு மெசேஜை டைப் பண்ணிகிட்டே ரூம்லருந்து வெளில வந்தேன்!

நேரா யாரோ வந்து டங்குனு எம்மேல மோதுனாங்க… வேலைக்காரம்மான்னு நெனச்சுகிட்டே நிமுந்து பாத்தா ரமேஷ்! குளிக்காம, கொள்ளாம தலை ஒரு கோலமா, உடம்பு ஒரு கோலமா அவனும் மொபைல்ல டைப் பண்ணிகிட்டே வந்து எம்மேல மோதி இருக்கான். பாக்கவே சகிக்கல. அவம்மேல நான் கோவமா இருக்கேங்கிறதை மறந்து…

“என்னடா இப்பிடி ஒரு அலங்கோலம்?. இப்படியேவா ஆஃபீஸ்க்குப் போனே?”

”யாரு ஆஃபீஸுக்குப் போனா… மூணு நாளா வொர்க் ஃப்ரம் ஹோம் தான்!”

“நானும் மூணு நாளா வொர்க் ஃப்ரம் ஹோம்தான்… அப்ப நீ வீட்லயேவா இருந்த?”

“ஆமா அன்னிக்கு நீ கத்துனப்ப ஆஃபீஸ் ரூமுக்குள்ள போனவன் இப்பதான் வெளியவே வர்றேன். நீ ஆஃபீஸ் கெளம்பினப்புறம் வந்து வார்ட்ரோப்லருந்து ட்ரெஸ் எடுக்கலாம்னு பாத்தா, நீ ரூமை விட்டே நகரல. ஆஃபீஸ் ரூம் பாத்ரூம்லயே குளிச்சிட்டு அதே ட்ரெஸ்ஸப் போட்டுகிட்டேன்.

வேலைக்காரிய சாப்பாடு ரூமுக்கே கொண்டு வந்து தரச் சொல்லி சாப்டுகிட்டேன்! என்னப் பத்தி வேலைக்காரி கிட்ட கூட நீ எதுவும் விசாரிக்கல இல்ல? அந்த  அளவுக்கு எம்மேல உனக்கு கோவம்?

நான் என்ன பெரிசா சொல்லிட்டேன். நாம இப்படியே இருந்தா நமக்குள்ள எப்படி ஒரு   நல்ல புரிதல் ஏற்படும்?மெஷின் மாதிரி வேலை செஞ்சு சம்பளம் வாங்கி பேங்க் பேலன்ஸை நெரப்பினா போதுமா?

கூடிய சீக்கிரத்துல நமக்குனு ஒரு குழந்தை வர்றப்ப நாம ரெண்டு பேரும் அந்தக் குழந்தைக்குப் பணக்கார பெற்றோரா மட்டும் இல்லாம ஒரு ஆதர்ச பெற்றோரா இருக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. பணத்தை எப்போ வேண்ணாலும் சம்பாதிச்சுக்கலாம் மகி. நம்ம இளமைக் காலத்தை தொலைச்சிட்டு, வயசானப்புறமா அதை நெனச்சு வருத்தப் படறதுல அர்த்தமே இல்ல.

நான் என்னோட வேலைகளை முடிச்சுக் குடுத்துட்டு ரெண்டு வாரம் லீவு போட்டுட்டேன். நீயும் இப்போதைக்கு லீவு போடு. ஒரு வாரம் நம்மளப் பெத்தவங்களோட ஜாலியா சுதா கல்யாணத்தை என்ஜாய் பண்ணலாம். அப்புறம் ஒரு வாரம் எங்கயாவது ஹில் ஸ்டேஷனுக்குப் போய் வரலாம்.” என்று நீளமாக சொல்லி முடித்தான்.

பாவமா அவன் சொல்லவும்…சீரியஸா கேட்டுகிட்டிருந்த நான் அவனைப் பாத்து…

“டேய்! நீ இஞ்சினீயரிங் தானே படிச்சேன்னு?” கேட்டேன்.

“ஆமா “

“அப்புறம் ஏன் மனோதத்துவ டாக்டர் மாதிரி பேசறேனு கேட்டேன்.

“மூணு நாளா தனிமையிலே யோசிக்க நேரம் நிறைய கெடச்சுதுல்ல அதான்” னு சீரியஸா ரமேஷ் சொல்லி முடிச்சப்புறம்தான் அவனுக்கு நான் கிண்டல் பண்றேங்கறதே புரிஞ்சுது.

“ஏய் என்ன கிண்டலா பண்றே?” னு என்னை அடிக்க கையை ஓங்கிகிட்டே துரத்திகிட்டு வந்து, என்னைத் தன் கைமடக்கில் அணைச்சுகிட்டு அவன் மேலும் தொடர்ந்தான்…

“நான் சொன்னது உனக்குப் புரிஞ்சுதா மகி? காதலர்களா இருக்கறப்ப எப்ப கல்யாணம்னு ஏங்கினோம். கல்யாணத்துக்கப்புறம், அந்தக் காதல் எங்க போயிடுச்சுன்னே தெரியலையே? கல்யாணத்துக்கப்புறம் காதலிக்க கூடாதுன்னு ஏதாவது சட்டமிருக்கா என்ன?” என மேலும் உருக்கமாக பேசினான்.

ரமேஷ் சொன்னதுல இருந்த உண்மை எனக்குப் புரியாம இல்ல… இத்தனை வருஷம் படிப்பு , அப்புறம் என்னோட கரியர், அத என்னால  சட்டுனு விட்டுத் தர முடியல…

சரி! சரி ! எங்களுக்கு ஷாப்பிங் போக நேரமாயிடுச்சு. அடுத்த வாரம் சுதா கல்யாணத்துல சந்திப்போம்.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...

ஒரு பக்கக் கதைகள்!

3
ஓவியம்; தமிழ் துரோகம்! -புதுவை சுபா அதிகாலை 4.00 மணிக்கே அந்த நடுத்தர உணவகம் ஆயத்தமானது. “இன்னும் கொஞ்ச நேரத்துல வாடிக்கையாளர்கள் ‘டீ’க்கு வந்து நிப்பாங்க. இட்லி ஊத்தி எடுக்கணும். சட்னி சாம்பார் தயார் செய்யணும். வேலை...

மனத்துக்   கண்    மாசிலன்     ஆதல்…….

1
சிறுகதை - சாந்தி நாதன் ஓவியம்: லலிதா   மதிய உணவிற்குப் பின் சிறிது உறங்கி எழுந்த ராமநாதன் அறையை விட்டு வெளியே வரவும் , "உள்ளே வரலாமா?" என்று குரல் கொடுத்தவாறே அவர் நண்பர் சடகோபன்...