0,00 INR

No products in the cart.

உயர்வான காதலின் நிறைவான வடிவம்!

-மீனாட்சி பாலகணேஷ்

ணழகனான வில்வீரன் அர்ஜுனன் வைத்த குறி தப்பாது அந்த அம்பு அவனுடைய வில்லிலிருந்து புறப்பட்டு வெகு தூரத்திலிருந்த அந்தக் கொடிய காட்டு மிருகத்தை வீழ்த்தியது. இதை அந்த அழகிய இளைஞன் பார்த்தான். பரவசம் கொண்டான்.

‘ஆகா! இத்தனை அற்புதமாக வேட்டையாடும் இவர் யார்? ஆண்மையும் கம்பீரமும் பொங்கும் இந்தத் திருவுருவுக்கு சொந்தமான இவர் யார்?’
வினாக்கள் இளைஞனைக் குடைகின்றன. பார்த்த கண்கள் பார்த்தபடியே தான். உள்ளம் தன் வயமிழந்து அவர்பால் ஈடுபட்டு விட்டது. ஒரு வீரனுக்கல்லவோ இன்னொரு வீரனின் வீரத்தின் உயர்வு பற்றித் தெரியும்? ஆனால் … ஆனால்… அர்ஜுனனின் முன்பு நின்றபோதில் இந்த இளைஞனின் உள்ளம் குழைந்து தத்தளிக்கின்றதே! ஏன்?

மதனன் எனும் காமதேவனிடம் இதனை விவரிக்கிறான் பால்வடியும் முகத்தினனான அந்த இளைஞன். “என் மெல்லிய உருவத்தைக் கண்டு அவருடைய இதழ்க்கடையில் ஒரு விசித்திரமான இகழ்ச்சிப் புன்னகை தோன்றியது. என் வாழ்வில் முதல்முறையாக நான் ஒரு பெண் எனவும், கம்பீரமான ஒரு வீரனின், ஆடவனின் முன் நிற்பதையும் உணர்ந்தேன்,” உள்ளத்தை இழந்து தவிக்கும் காதல்பெருக்கில் கண்ணீர் வழிந்தோடுகின்றது.

என்ன குழப்பம் இது? யார் இந்த இளைஞன்?

ணிபுரத்தின் அரசன் சித்ரவாகனனின் மகளான இளவரசி சித்ராங்கதா தான் ஆண்வேடம் பூண்ட அந்த இளைஞன். சித்ராங்கதா மகாபாரதக் கதையில் வரும் ஒரு துணைப்பாத்திரம். அர்ஜுனன் தலைமறைவாக ஒரு நாடோடிபோல் சுற்றித் திரிந்த காலங்களில் மணிபுரத்தை வந்தடைகிறான். இந்தக் கதையைக் கவியரசர் தாகூர் சிறிதே மாற்றியமைத்து சித்ராங்கதா – அர்ஜுனன் காதலை ஒரு புதிய கோணத்தில் நமக்குக் காண்பிக்கிறார்.

காதல் கடவுளான மதனன் தனது உதவியாளன் வசந்தனுடன் இளவரசி சித்ராங்கதாவைச் சந்திக்கிறான். சித்ரா மதனனிடம் சொல்கிறாள்: “சிவபெருமான் என் தந்தையின் வம்சத்தினருக்கு ஆண்வாரிசுகளையே தருவதாக அருளியிருந்தார். ஆனாலும் என் விஷயத்தில் அது பொய்யாகிப் போயிற்று. நான் என் தந்தைக்கு மகளாகதான் பிறந்தேன். ஆகவே, பெண்ணான என்னை ஆண்மகனைப் போலவே வளர்த்து, வில் வாள் வித்தை பயிற்றுவித்தார்.

ஆண்மக்களின் உடைகளையே நானும் அணிந்து வந்தேன். அந்தப்புரத்தில் தங்குவதை விட்டொழித்தேன். பெண்மையின் நளினங்களும், குழைவுகளும், கண்களால் கணைதொடுப்பதும் எப்படியென எனக்குத் தெரியாது.”

மதனன், “சரியான சமயத்தில் நான் ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்தப் பாடங்களை கற்பிப்பேன்,” என்றான்.

“மதனா, அவர் அர்ஜுனன் என அறிந்ததும் என் மனம் என்ன பாடுபட்டது தெரியுமா? அவரை வணங்கவும் மறந்து சிலையாக நின்றேன். எனது கனவுகளின் நாயகன் அல்லவோ அவர்? அவரை வாள்வித்தையில் எதிர்கொண்டு எனது வாள் முறிவதை எதிர்பார்த்தேன்; நான் கற்ற போர்க்கலையை அவர் முன்பு காட்டி பெருமைப்பட எண்ணினேன். நான் இக்கனவுகளில் ஆழந்து சிலையென நின்றிருக்க, அவர் என் கண் முன்பே சென்று வனத்துள் மறைந்து விட்டார்.

“அடுத்த தினம் நான் எனது ஆண் உடைகளை விடுத்து, கைவளைகள், பாதசரங்கள், இடையில் மேகலை, சிவந்த வர்ணப்பட்டாடை இவற்றைப் புனைந்து கொண்டு அவரைத் தேடிச் சென்றேன். சிவன் கோவிலில் அவரைக் கண்டேன்.

“நான் பேசியதும், அவர் பதில் கூறியதும் என் நினைவில் இல்லை மதனா! ஆனால், என் மீது இடியிறங்கியது போன்ற சொற்கள்….. அவர் கூறியவை….. காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போன்ற மொழிகள்…. அர்ஜுனன் கூறினார்: ‘நான் பிரம்மசரிய விரதம் பூண்டுள்ளேன். என்னால் உனக்குக் கணவனாக இருக்க இயலாது!’ ஆ! மதனா, இவை எத்தனை கொடூரமான சொற்கள்! எத்தனை எத்தனை ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் தவவலிமையை, ஆயுட்காலத் தவத்தின் பயனை ஒரு பெண்ணின் காலடியில் இழந்துள்ளார்கள்! நான் ஏன் நிராகரிக்கப்பட்டேன்? அர்ஜுனனின் காதலை வெல்லும் பெண்மையின் சுந்தர வடிவு எனக்கு இல்லாததால் தானே!

“மதனா, காதலின் கடவுளே! எனது வலிமையையும், பெருமையையும் நீ புழுதியில் கிடத்தி விட்டாயே!” அர்ஜுனன் மீது காதலில், மையலில் ஆழ்ந்து விட்ட சித்ராங்கதா புழுவாகத் துடித்துப் புலம்புகிறாள்.

இந்த நிலையின் உட்பொருளைத் தாகூர் உணர்த்தும் விதத்தினை நாம் உற்று நோக்க வேண்டும்.

தான் பல காலங்களாகக் கனவுகண்டு மனதில் உருவகப்படுத்தி வைத்திருந்த பேராண்மை மிக்க ஆண்மகன், அர்ஜுனன்; அவனை நேரில் கண்டதும், சித்ராவின் பெண்மை உணர்வுகள் விழித்துக் கொண்டு அவன்மீது மீளாக்காதலில் ஆழந்து விடுகிறாள் பாவம்! ஆண்மகனை வெற்றி கொள்ளும் பெண்மையின் நளினங்களும், மென்மைச் செய்கைகளும் குணங்களும் அவளுக்கு இயற்கையாக அமையவில்லை; அவற்றை அவள் கற்றுக்கொள்ளவில்லை! அவள் வளர்ந்த விதம், வளர்க்கப்பட்ட விதம் அவ்வாறு!

மதனனும் வசந்தனும் அவள் துயரம் கண்டு அவளுக்கு ஒராண்டுக் காலத்திற்குப் பெண்மையின் மென்மை, இனிமை, ஒப்பற்ற அழகு இவற்றை வழங்குகின்றனர். அடுத்த வந்த நாட்களில் சித்ராவின் இத்தகைய எழிலுருவைக் கண்ட அர்ஜுனன் அவள்பால் காதல் வயப்படுகிறான். காதலர்கள் இணைந்து இன்புறுகின்றனர்.

கதையில் இப்போது ஒரு எதிர்பாராத திருப்பம்! மணிப்புர நாட்டைப் பகைவர்கள் தாக்குகின்றனர். நாட்டு மக்கள் தங்கள் நாட்டை இதுவரை காத்து வந்த தங்களது வீர இளவரசி சித்ராவைக் காணாததால் ஒரே குழப்பத்திற்குள்ளாகுகின்றனர்.

அவள் எங்கோ தவம் இயற்றச் சென்று விட்டதாக மக்கள் பேசிக் கொள்வதன் மூலம் அறிந்து கொள்கிறான் அர்ஜுனன். “அவள், சித்ரா, வீரத்தில் தனக்கு நிகரில்லாத ஆண்மகன் ஆனவள்; மென்மையில் தனக்கு நிகரற்ற பெண்மணியானவள் என மக்கள் கூறுகின்றனர், அவள் எங்கே தான் சென்று விட்டாள்? அவளுக்கு வாழ்வில் என்ன குறை இருக்க முடியும்?” எனத் தான் யாரென்று இன்னும் அறிந்து கொண்டிராத சித்ராவினிடம் கூறுகிறான்.
தான் போய் மக்களுக்கு உதவ வேண்டும் எனப் பரபரக்கிறான். இளவரசி சித்ராங்கதாவைப் பற்றிய எண்ணங்களே அவன் மனதை ஆக்கிரமிக்கின்றன.

அவளைப் பற்றியே பேசிவரும் அர்ஜுனனிடம் உண்மையான சித்ரா பொய்க்கோபம் கொள்கிறாள். ‘என்ன குறை என்றோ கேட்டீர்கள்? அந்த துரதிருஷ்டசாலியிடம் என்ன இருந்தது? அவளுடைய பெருமைக்குரிய வீரதீரப் பிரதாபங்களும் குணங்களும் அவள் தனது பெண்மை உள்ளத்தை வெளிப்படுத்த ஒரு தடையாக நின்றனவே. நிறைவேறாத கனவுகள் கொண்டது அல்லவோ அவள் வாழ்க்கை,” எனத் துயரத்துடன் மொழிகிறாள் சித்ராங்கதா.

அர்ஜுனன்: “பெண்ணே! இன்னும் அவளைப் பற்றி நீ அறிந்ததை எல்லாம் எனக்குக் கூறுவாய். என் மனக்கண்ணில் ஒரு வெண்புரவி மீதமர்ந்து, கடிவாளத்தை இடது கையிலும், வில்லினை வலது கையிலும் ஏந்தி வரும் அவளை நம்பிக்கையைத் தன்னைச் சுற்றிப் பரப்பி நிற்கும் ஒரு வெற்றி தேவதையாக நான் காண்கிறேன். ஒரு மூர்க்காவேசமான அன்புடன் தனது குட்டிகளைக் காக்கும் பெண்சிங்கமென அவளை நான் உருவகிக்கிறேன்; தடுக்க முடியாத உறுதியுடன் காணப்படும் பெண்மையின் கரங்கள், அழகுபடுத்தப்படாததும் மென்மையற்றதும் ஆயினும் மிகுந்த அழகு வாய்ந்தவை தெரியுமா?” எனவெல்லாம் இளவரசி சித்ராவைப் பற்றி உணர்ச்சிகரமாக அர்ஜுனன் வருணித்துக் கூறக் கேட்கிறாள் அவள்.

அர்ஜுனனின் காதலின் பரிபூரணத்துவத்தை உணர்ந்து சிலிர்க்கிறாள் சித்ரா. பெண்மையின் அழகாலும், மென்மையாலும், நளினத்தாலும் மட்டும்தான் வெல்ல முடியும் எனத் தான் எண்ணியிருந்த அவனுடைய உள்ளத்தை, ஆண்மை முகிழ்க்கும் தனது முரட்டுப் பெண்மையாலும், அதில் உதித்த தன் கடமை உணர்வினாலும், அதன் தொடர்பான வீரத்திறத்தினாலுமே வெல்ல முடியும் என அறிந்து பேரானந்தம் அடைகிறாள். தனக்கு உவக்காத அந்தப் பொய்ம்மையான வேடத்தைக் கலைத்து விடுகிறாள்.

“என் கனவுகளின் நாயகனே, உம்மைக் காதலில் வழிபட ஒப்பற்ற உருவ அழகினை நான் வேண்டிக்கேட்டு வாங்கிவந்தேன். என் வழிபாடு முடிந்து விட்டது. என் தெய்வத்தை நான் அறிந்து கொண்டேன். பூசனை செய்த காய்ந்த மலர்களை வெளியே வீசி விடுகிறேன்,” என்றபடி, அந்தக் கணத்தில் தான் அணிந்திருந்த போர்வை போன்ற மேல் அங்கியை விலக்கி விட்டு ஆண் உடையில் அவன் முன் நின்றாள் இளவரசி சித்ராங்கதா.

“நான் தான் மணிபுரத்து இளவரசி சித்ரா. பெருமையுடன் எனது பெண்ணுள்ளத்தை உமக்கு அர்ப்பணிக்கிறேன். உருவில், வடிவில் நான் பெண்ணழகி அல்ல. என்னை என் உருவக் குறைபாடுகளுடன் ஏற்றுக் கொள்வீராக! உமது வீரம் மிகுந்த, கடினமான வாழ்வில் என்னை இணைத்துக் கொள்வீராக! உமது கடமைகளில் நான் பங்கெடுக்க அனுமதிப்பீராக! அப்போது உண்மையான என்னை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

நமக்குப் பிறக்கும் மகனை இன்னொரு அர்ஜுனனாக வளர்ப்பேன். எனது தந்தைக்கும் இந்த நாட்டுக்கும் அவன் அடுத்த வாரிசாவான். இதுவே மணிபுரத்து அரசமகளான சித்ராங்கதா தங்களுக்கு அளிக்கும் உறுதிமொழி,” என்கிறாள்.

“அன்பே! என் வாழ்வு உன் அன்பினால் முழுமை பெற்றது,” என்று மகிழ்வோடு உரைக்கிறான் காண்டீபன்.

காதல் மனதில் அரும்பியதும், அதனால் எழும் பயங்களும் சந்தேகங்களும் நிவர்த்தியாகி, அக்காதலின் சக்தியினாலேயே அதன் முழுமையை உணர்ந்த மனமொத்த காதலர் இருவரைத் தம் ஈடிணையற்ற கற்பனைத் திறத்தினால் ஒப்பற்ற இலட்சியக் காதலர்களாக உருவாக்கிக் காட்டியுள்ளார் கவியரசர் தாகூர்.

ஒரு உயர்வான ஆண்மகனின் காதலில் தன் பெண்மையின் முழுமையையும் பெருமையையும் உணர்ந்தவளாகச் சித்ராங்கதாவையும், அவளுடைய தன்னலமற்ற, தன்னை அறிந்து கொண்ட அன்பில், அர்ஜுனன் கண்டெடுத்த அவளுடைய உறுதி வாய்ந்த உள்ளப்பண்பையும், காதலையும் நமக்குக் காண்பித்த தாகூரின் படைப்பின் சிறப்பை வியக்காமல் இருக்க முடியவில்லை அல்லவா? இது ஒரு நாடகமாக தாகூரால் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

ஒரு பிராயச்சித்தத்தின் காரணமாக அலைந்து திரிந்த அர்ஜுனன், மணிப்பூரை வந்தடைகிறான். அந்நாட்டு அரசனான சித்ரவாஹனனின் மகள் சித்ராங்கதாவைக் காண்கிறான். அவள் அழகால் கவரப்பட்டு அவளைத் தனக்கு மணமுடித்துத் தருமாறு அரசனிடம் கேட்கிறான். அர்ஜுனனை யாரெனக் கேட்கும் சித்ரவாஹனன் அவன் பாண்டவர்களில் ஒருவன் என அறிந்ததும் அவனிடம் தன் கதையைக் கூறுகிறான்.

பிரபஞ்சனன் எனும் அவனுடைய மணிப்பூர் அரசவம்சத்து மூதாதையர் ஆனவன், குழந்தைகளின்றி வருந்தினான். அதற்காகக் கடுந்தவம் புரிந்தான். அதற்கு மகிழ்ந்து சிவபெருமான், அவனும் அவன் வம்சாவழியினரும் ஒவ்வொரு குழந்தையைப் பெறுவார்கள் என அருளினார். எல்லாருக்குமே ஆண்குழந்தைதான் பிறந்து வந்தது. சித்ரவாஹனனுக்கு மட்டும் அவன் வம்சத்தை விளங்கவைக்க ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவன் அவளை ஒரு மகனாகவே பாவித்து, தனது வாரிசாகக் கொண்டான்.

அரசன் கூறுவான்: ‘இவளுக்குப் பிறக்கும் ஒரு மகன் என் வம்சத்தை விளங்கவைப்பவனாக இருப்பான். அந்த மகனே நான் இந்தத் திருமணத்திற்காகக் கேட்கும் விலை! அர்ஜுனா! நீ இதனை ஒப்புக்கொண்டால் இவளை மணந்து கொள்ளலாம்.’

அர்ஜுனன் இதற்கு ஒத்துக்கொண்டு சித்ராங்கதாவை மணந்து கொள்கிறான். மணிப்பூரில் மூன்று ஆண்டுகள் அவளுடன் வாழ்கிறான். அவளுக்கு ஒரு மகன் பிறந்ததும், அவளை அன்போடு அணைத்துக்கொண்டு, அவள், அவள் தந்தை இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, தனது பிரயாணங்களைத் தொடர்கிறான். அர்ஜுனன்- சித்ராங்கதாவின் மகன் தான் மகாபாரதத்தில் நாம் காணும் ஒரு வீரனான பப்ருவாகனன்.

காதலர் தினமான இன்று உங்களுடன் இன்னும் சில சுவாரசியமான பகிர்வுகள்: 

பொதியமலைக் குறுமுனி அகத்தியரின் ஆணைப்படி, மக்களுடைய நலனுக்காகத் ‘தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’ எனும் சோழமன்னனால் துவக்கி வைக்கப்பட்ட விழா இந்திரவிழா. தமது குடிமக்களுக்கு எல்லா நலன்களையும் தருமாறு இந்திரனை வேண்டி, கோயிலில் அரசனும் அமைச்சரும் அவனுக்கு ஆயிரம் பொற்குடங்களில் கொண்டுவந்த காவிரி நன்னீரால் நீராட்டிப் பூசனைகள் செய்வார்கள்.
சோழமன்னன் இதனை, ‘வில்விழா’ (காமன் கையில் விளங்கும் கரும்புவில்) என அறியப்படும் காதல் திருவிழாவாகவே நடத்தினான். மன்னனின் ஆட்சியில் அமைதி நிலவும்போது கலைகள் பெருகி வளரும். மக்கள் கேளிக்கைகளில் ஈடுபடுவார்கள். மன்மதனுக்கு உரிய பொழுது இளவேனில். ஆகவே, காதல்விழாவும் இளவேனில் காலத்திலேயே தொடங்கப்பட்டது. பங்குனி மாத முழுமதி நாளில் தொடங்கும் விழா 28 நாட்கள் நடைபெற்று அடுத்த முழுமதி நாளில் நிறைவுபெறும்.

சங்க இலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்களிலும், தம் காதல் கைகூட மகளிர் காமனை வேண்டுவது என்பது பாவைநோன்பினைப் போன்ற ஒரு மரபாகவே இருந்துள்ளது. இந்திரவிழாவான காதல் திருவிழா கி. பி. 2ஆம் நூற்றாண்டுக்கு முன்பாகவே கொண்டாடப்பட்டதற்கு வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

தற்காலத்தில் நம் குடும்பங்களில் காமன் பண்டிகை என்று கொண்டாடுவதில்லை! ஆயினும், நாம் நோற்கும் சாவித்திரி நோன்பும், தமிழகத்துக் கோயில்களில் நடைபெறும் வசந்தவிழாவும், வட இந்தியாவில் இதே காலகட்டத்தில் கொண்டாடப்படும் ஹோலிப்பண்டிகையும் இதன் தொடர்பானவையே என்பதில் சந்தேகமே இல்லை.

காதலர் தினம்– Valentine’s day- எனப்படும் மேற்கத்திய கலாச்சாரம், இங்கும் வந்துவிட்டது என்பவர்களுக்கு- ஓரு சுவையான செய்தி!
உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினம் – இதுவும் பிப்ரவரி மாதம் – தமிழ் மாதமான தை – மாசியில் வரும்; ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் இது நமது பழந்தமிழ்ச் சோழரின் காமவேள் விழாவின் வடிவே என்றும், தாலமி (Ptolemy), பிளினி (Pliny) ஆகிய யாத்திரிகர்கள் மற்றும் யவன வீரர்களும் வணிகர்களும் தமிழகத்திலிருந்து தத்தமது நாடுகளுக்குக் கொண்டுசென்ற ஒரு பண்டிகை என்றும் கூறப்படுகின்றது. இங்கிருந்துதான் அங்கு சென்றது போலும்! உலகம் தழைத்தோங்கக் காமவேளின் தயவு என்றுமே வேண்டுமல்லவா?

மேலும், இது போல் பல தெய்வீகக் காதல் ஜோடிகளைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்களுடனும், அழகான பாடல்களுடனும் கட்டுரையாசிரியர் மீனாட்சி பாலகணேஷ் ’காதலின் பொன் வீதியில்’ எனும் தலைப்பில் நமது கல்கி ஆன்லைன் இணையதளத்தில் Podcastல் தொடராக வழங்கியுள்ளார். அதனைக் கேட்டு மகிழ கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
Link :https://kalkionline.com/category/podcast/

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...