(திருநங்கை வர்ஷா, புதுக்கோட்டை மாவட்டம், விராலூர் கிராமம்)
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே விராலூர் கிராமத்தில் வசித்து வருபவர் திருநங்கை வர்ஷா. அவருக்கு வயது முப்பது. ‘’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழே என்பது போல, எங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியதும் எங்களுக்கு வாழ்வு தந்ததும் எங்களின் இந்த கிராமியக் கலைக்குழு தான்’’ என்று தாம் சந்தித்த சவால்கள் குறித்தும், தமக்குக் கிடைத்த சந்தோஷங்கள் குறித்தும் நம்மிடையே நளினத்துடன் பகிர்ந்து கொள்கிறார் வர்ஷா.
உங்கள் குடும்பம் குறித்து…
அம்மா சித்ரா விவசாயக் கூலி வேலை செய்கிறார். அப்பா கருப்பையா ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். நான் தான் முதல் பையன். எனக்குப் பிறகு ஒரு தம்பி. நான் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது தான் என் உடலில் சில மாற்றங்கள் எனக்கே தெரிய வந்தன. நான் யாரிடமும் சொல்லவில்லை. என் வாழ்க்கை என் கையில் என்று அப்போதே முடிவு செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மேலும் சில மாற்றங்களை நான் உணர்ந்தேன். என் குடும்பத்தார் என்னை அன்புடனும் ஆதரவுடனும் நடத்தினார்கள். அதுவே எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.
பள்ளி கல்லூரி படிக்கச் சென்ற அனுபவங்கள்….
ஒன்பதாம் வகுப்பு படித்த போது என் சமூக மக்களுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. பள்ளியில் பசங்களோட கேலி கிண்டல்களுக்கு ஆளானேன். நான் அவைகளை எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. விராலிமலை ஆண்கள் மேனிலைப்பள்ளியில் பிளஸ்டூ தேர்ச்சி பெற்றேன். பின்னர் பாண்டிச்சேரி சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். கொஞ்ச நாட்கள் கழித்து ஒரு ஆண்கள் கல்லூரியில் பிபிஏ சேர்ந்தேன். அந்தக் கல்லூரிக்கு மூன்று ஆண்டுகளும் ஆண்கள் உடையில் தான் சென்று வந்தேன். ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன். அங்கு எனக்குக் கழிவறை சென்று வருவது தான் பெரிய பிரச்னை. பெரிய கஷ்டம். கஷ்டம் மட்டுமல்ல. பெரும் துயரமும் கூட. வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். பல நாட்களில் சிறுநீரை ரொம்ப நேரமாக அடக்கிக் கொண்டெல்லாம் இருந்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் வயிறு வலி வந்து விடும். ஆண் மாணவர்கள் அனைவரும் கழிவறைக்குப் போய் வந்த பின்னரே தனியாளாக நான் மட்டும் போய் வருவேன். அப்பாடா என்று அப்போது தான் நிம்மதியாக இருக்கும். கல்லூரி நாட்களில் நிறைய அவமானங்களும் நிறைய படிப்பினைகளும் பெற்றேன்.
இந்த கஷ்டங்கள், அவமானங்களில் இருந்து மீண்டது எப்படி?
கல்லூரி விட்டு வெளியே வந்த பின்னர் முழுமையான திருநங்கையாக என் உடைகளை மாற்றி அமைத்துக் கொண்டேன். திருநங்கை அமைப்பு சார்ந்த அதன்மாவட்டத் தலைவியை நேரில் சென்று சந்தித்தேன். அவர்கள் என் வீட்டுக்கு வந்திருந்து என் அம்மா அப்பாவிடம் பேசினார்கள். வீட்டில் அம்மாவும் அப்பாவும் என் மீது அன்பாகவும் கரிசனமாகவும் இருந்தார்கள் என்பது எனக்குக் கூடுதல் பலம். எனக்கு நாட்டியம் என்றால் அத்தனை உயிர். வீட்டில் இருக்கும் போது நானே ஆடிப் பார்ப்பேன். அப்போது தான் விராலிமலை பரதநாட்டியக் கலைஞர் சந்திரசேகர் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அவர் தான் எனக்குக் குருநாதர். அவரிடம் சிறப்பாகவே தேர்ச்சி பெற்றேன்.
கிராமிய கலைக்குழு எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
நடனப் பயிற்சி கற்றுக் கொண்ட பிறகு மற்றவர்களின் நடனக் குழுவில் நானும் ஒருத்தியாக சென்று மேடைகளில் நடனம் ஆடி வந்தேன். நாமே இது போல தனியாக ஒரு கலைக்குழு தொடங்கி அதில் முற்றிலும் என் போல திருநங்கைகளுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும் என்று தோன்றியது. எனக்கும் சரி என் போன்ற திருநங்கைகள் சிலருக்கும் அது வாழ்வில் புதிய மாற்றம் தரும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு கலைக்குழு கை கொடுக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. 2017ல் ‘ஆதிபராசக்தி திருநங்கைகள் கிராமிய கலைக்குழு’ தொடங்கினேன்.
என்னென்ன வகை நடனங்கள் ஆடுவீர்கள்?
கரகாட்டம், மாடு ஆட்டம், மயில் ஆட்டம். குதிரை ஆட்டம், பஞ்சாபி நாட்டுப்புற நடனம். ராஜஸ்தானி நடனம், கட்டக்கால் ஆட்டம் என்று நடனங்களில் பயிற்சி. இந்தக் கட்டக்கால் ஆட்டத்தில் நான் எக்ஸ்பெர்ட். அதாவது ஆறடி உயரத்துக்கு கட்டைக் கால்கள் பொருத்திக் கொண்டு, ரொம்பவும் பாலன்சாக ஆட வேண்டும். ஒரு நிகழ்ச்சி என்பது மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் நடக்கும்.
திருப்திகரமாக உள்ளதா உங்களின் கிராமிய கலைக்குழு வாழ்க்கை?
எனது குழுவில் எட்டு திருநங்கைகள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு ஊர்க்காரர்கள். நிகழ்ச்சிக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுவோம். நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு திருநங்கைக்கும் அப்போதே அவரவர்க்கு உரிய சன்மானம் தந்து விடுவேன். என்னைச் சார்ந்த திருநங்கைகளுக்கும் கௌரவமாக ஒரு வருமானம். மற்ற திருநங்கைகளுக்கும் ஒரு வழிகாட்டியாகவும் உதவும் கரமாகவும் நான் இருப்பதில் எனக்கு ஆத்ம திருப்தி. அரசு எங்கள் போன்றோரின் கலைக்குழுக்களை ஆதரிக்க வேண்டும். அரசு விழாக்களில் எங்கள் கலைக்குழு நடனத்துக்கும் வாய்ப்புகள் வழங்கி எங்கள் வாழ்வை இன்னும் மேம்படுத்த வேண்டும்.