0,00 INR

No products in the cart.

சுகம் தரும் சங்கீதம்!

நவம்பர் 13 – பி.சுசீலா பிறந்த நாள்

ஜி.எஸ்.எஸ்.

பி.சுசீலாவின் திரைப்படப் பாடல்களைக் கேட்ட ரசிகர்கள், அவர் தாய்மொழி தமிழல்ல என்று சத்தியம் செய்தால்கூட நம்ப மாட்டார்கள். (ஆனால், அவரது தொலைக்காட்சி உரையாடல்களைக் கேட்டவர்கள் சத்தியம் செய்யாமலேயே கூட இதை நம்புவார்கள்.)

மிழ்த் திரையுலகத்துக்கு தனது குரல் வளத்தால் பெரும் பெருமை சேர்த்தவர் சுசீலாம்மா. இன்னொரு விதத்திலும் அவர் குறித்து, தமிழ்த் திரையுலகம் பெருமை கொள்ளலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல இந்திய மொழிகளில் அவர் பாடி இருந்தாலும், (சிங்கள மொழியிலும் சில பாடல்களைப் பாடி இருக்கிறார்!) அவர் முதலில் பாடியது ஒரு தமிழ்த் திரைப்படத்துக்குத்தான்.

ந்தக் காலத்தில் சென்னை வானொலியில் ஞாயிற்றுக்கிழமை தோறும், ‘பாப்பா மலர்என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த நிகழ்ச்சியில் சுசீலா பாடத் தொடங்கினார். இந்தக் குரலில் மயங்கிய பிரபல இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ் ராவ், தான் இயக்கிய, ‘பெற்ற தாய்என்ற படத்தில் அவருக்குப் பின்னணி பாட வாய்ப்பளித்தார். 1953ல் வெளியானது இந்தப் படம். பெண்டியாலா நாகேஸ்வர ராவின் இசையமைப்பில், ‘எதுக்கு அழைத்தாய்’ என்ற பாடலைப் பாடினார் சுசீலா. உடன் பாடியவர் பிரபல பாடகர் ஏ.எம்.ராஜா.

அந்த முதல் பாட்டை இன்று நினைவுகூறுபவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள் என்றாலும், அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே சுசீலா பாடிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆகின. ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ’, ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ ஆகியவை சில எடுத்துக்காட்டுகள்.

பெற்ற தாய்’ திரைப்படம் தெலுங்கில், ‘கன்னட தல்லி’ என்ற பெயரில் உருவானது. தான் தமிழில் பாடிய அதே பாடலை கண்டசாலாவுடன் சேர்ந்து பாடுவதற்கு சுசீலாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாத ஊதியத்தில் ஏவி.எம். ஸ்டூடியோவில் இவருக்குப் பணி கிடைத்தது. ‘மாடிதுன்னோ மாரையா’ என்ற கன்னட படத்தில் முதன் முதலாகப் பாடினார். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகுதான் மலையாளத்தில் பாடத் தொடங்கினார். அங்கும் எண்ணற்ற ஹிட்களைக் கொடுக்கத் தொடங்கினார். முக்கியமாக, ஜி.தேவராஜன் இசையமைப்பிலும், ஜேசுதாஸுடன் இணைந்தும், லட்சுமிகாந்த் பியாரிலால் போன்றவர்களின் இசையில் ஹிந்திப் பாடல்களும் பாடினார்.

லீலா, எம்.எல்.வசந்தகுமாரி, ஜிக்கி போன்றவர்கள் பின்னணிப் பாடகிகளாக கோலோச்சிக்கொண்டிருந்த நிலையில், தொடக்கத்தில் சுசீலா கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருந்தது. இரண்டாவது கதாநாயகிக்கான பாடல் வாய்ப்புகள்தான் அவருக்குக் கிடைத்தன. ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தில் கூட சாவித்திரி வாயசைக்கும் ‘வாராயோ வெண்ணிலாவே‘, ‘எனையாளும் மேரி மாதாபோன்ற பாடல்களுக்கு பி.லீலா பாடி இருப்பார். ஜமுனா வாயசைத்த, ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’ பாடல் சுசீலாவுக்கு அளிக்கப்பட்டது. ‘வஞ்சிக்கோட்டை வாலிபனின் மிக முக்கியமான நடனப் போட்டி பாடல் பாடும் வாய்ப்பு லீலா மற்றும் ஜிக்கிக்குதான் வழங்கப்பட்டது. ஓரிரு உதிரிப் பாடல்கள் மட்டுமே சுசீலாவுக்கு.

என்றாலும், கிடைத்த வாய்ப்பில் எல்லாம் சிக்ஸர் அடித்தார் சுசீலா. வெகு வேகமாக வெற்றிப்படிகளில் ஏறினார். ‘பாக்யலட்சுமியில் வெளிவந்த ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே‘, ‘காண வந்த காட்சி என்னபாடல்கள் அவரது குரலின் பாவங்களை மிகத் தெளிவாக உணர்த்தின. ‘அமுதைப் பொழியும் நிலவே’ பாடலில் ஏக்கத்தையும், ‘தண்ணிலவு தேனிறைக்க’ பாடலில் மெல்லிய சிருங்கார ரசத்தையும், ‘உன்னை ஒன்று கேட்பேன்பாடலில் குறும்பையும் குழைத்துத் தந்திருப்பார்.

ந்திராவின் விஜயநகரத்தில் பிறந்த சுசீலாவுக்கு, அவர் பெற்றிருந்த கர்நாடக இசைப் பயிற்சி திரைத்துறையில் பெரிதும் கை கொடுத்தது. துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் இசைப் பயிற்சி பெற்றவர்.

மிகக் குறைவான இசைக்கருவிகளின் பின்னணியில் வெளியான, ‘அத்தான் என்னத்தான்பாடல் கேட்க சுகமானது. ‘சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமேபாடலில் டி.எம்.எஸ்.ஸின் சங்கீதக் கோர்வைக்கு சமமான சங்கீதச் சிரிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார். ‘மலர்ந்தும் மலராதபாடலில் வரும் தேம்பலை மறக்க முடியுமா? ‘காதல் சிறகைக் காற்றினில் விரித்துபாடலில், நெடுநாட்களுக்குப் பின் கணவனை சந்திக்கப்போகும் ஏக்கம் கலந்த உற்சாகத் துள்ளல் ஈடற்றது. ‘உன்னைக் கண் தேடுதேவின் நடுநடுவே இடம்பெறும் விக்கல் ஒரு தனி எஃபெக்ட். ‘கண்ணாகருமை நிறக் கண்ணாவில் தெறிக்கும் ஆதங்கம் இணையற்றது. ஆக, குரல் இனிமை என்பதையும் தாண்டி, அந்தப் பாத்திரங்களின் உணர்வுகளையும் முழுமையாகப் பிரதிபலித்தார் சுசீலா.

சங்கராபரணம்ஒரு சங்கீத வித்வான் தொடர்பான கதை என்பதால் அதில் எஸ்.பி.பி.யின் குரலும் கர்நாடக இசைத்தெளிவும் பெரிதும் சிலாகிக்கப்பட்டது. ‘கர்ணன்படத்தில் தேவிகா ஏற்ற வேடம் இசை தொடர்பானது அல்ல. ஆனால், ‘கண்கள் எங்கேநெஞ்சமும் அங்கே’, ‘மகாராஜன் உலகை ஆளுவான்’, ‘கண்ணுக்குக் குலமேதுஎன்று ஒவ்வொரு பாடலிலும் சுசீலா தன் தேன்குரலில் கர்நாடக இசை ஆளுமையை வெளிக்காட்டியிருப்பார். அதே படத்தில் சாவித்திரி வாயசைத்த என்னுயிர்த் தோழிபாடலிலும்தான். ‘திருவருட்செல்வர்படத்தில் இடம்பெற்ற மன்னவன் வந்தானடியில் அவர் குரல் செதுக்கிய ஏற்ற இறக்கங்கள் குறிப்பிடத்தக்கவை.

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலாஇன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா’, ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு…. தென்றலே உனக்கேது சொந்த வீடு‘ – பி.சுசீலாவின் திரைப்பாடல்கள் வரிசையில் இந்த இரண்டு பாடல்களுக்கும் தனி இடம் உண்டு. காரணம் இவற்றிற்காக சிறந்த பின்னணிப் பாடகி என்ற தேசிய விருதைப் பெற்றார் அவர். தமிழில் இந்த இரண்டு என்றாலும், தெலுங்கில் இரண்டு, மலையாளத்தில் ஒன்று என்று அதிகப்படியாக மூன்று தேசிய விருதுகள் பெற்றவர். கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த, ‘சிரி சிரி மூவாஒரு சூப்பர் ஹிட் திரைப்படம். அதில், ‘ஜும்மந்தி நாதம்போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப் பாடினார் சுசீலா. இந்தத் திரைப்படமும் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ‘மேக சந்தேசம்என்பது ஒரு மலையாள திகில் படம். இதில் பாடியதற்காகவும் 1983ல் வெளியான, ‘எம்.எல்.. ஏடுகொண்டலுஎன்ற தெலுங்கு திரைப்படத்தில் பாடியதற்காகவும் தேசிய விருதுகள் தேடி வந்தன.

டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீனிவாஸ், .எம்.ராஜா, எஸ்.பி.பி., ஜேசுதாஸ் ஆகிய அத்தனை பேருடனும் சுசீலாவின் குரல் பொருந்திப்போனது. ஒவ்வொருவருடனும் காலத்தால் அழியாத பாடல்களை அளித்திருக்கிறார். ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்’, ‘பால் வண்ணம் பருவம் கண்டு’, ‘நிலவும் மலரும் பாடுது’, ‘ஆயிரம் நிலவே வா’, ‘கண்ணன் ஒரு கைக்குழந்தைஆகியவை சும்மா ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம்.

தாலாட்டுப் பாடல்களில் சுசீலாவை அடித்துக்கொள்ள இன்றுவரை யாரும் இல்லை. ‘கண்ணான பூமகனே’, ‘அத்தை மடி மெத்தையடி’, ‘காலமகள் பாதையிலே போடா கண்ணே போ’, ‘பூஞ்சிட்டு கன்னங்கள்’, ‘கற்பூர பொம்மை ஒன்று’, ‘சின்னச் சின்ன நடை நடந்து’, ‘நான் பாடும் பாட்டிலே வான்மீனும் தூங்குமே’, ‘பச்சை மரம் ஒன்று’, ‘பூ உறங்குது பொழுதும் உறங்குதுஆகியவை அக்மார்க் தாலாட்டுகள்.

எம்.எஸ்.விஸ்வநாதன்தான் சுசீலாவின் பல குரல் பரிணாமங்களை வெளிக் கொண்டு வந்தார். இளையராஜா இசையிலும் பல முத்துக்களைக் கொடுத்திருக்கிறார் (’கண்ணன் ஒரு கைக்குழந்தை’, ’முத்து மணி மால’, ’தென்மதுரை வைகை நதி’) என்றாலும், ஜானகிக்கும் பிறகு சித்ராவுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்கினார் இளையராஜா.

னியார் ஆல்பங்களிலும் பக்திப் பாடல்களிலும் முத்திரை பதித்தார். ’கொண்டை முடி அலங்கரித்துகொஞ்சும் கிளி கையில் வைத்து’, ’குருவாயூருக்கு வாருங்கள்’, ’கோகுலத்தில் ஒருநாள் ராதை’, ’ஜெய ஜெய தேவிஜெய ஜெய தேவி’, ’ரட்ச ரட்ச ஜகன்மாதா’ போன்றவை சில எடுத்துக்காட்டுகள்தான். இப்படி, ஆயிரம் பக்தி பாடல்களைப் பாடியிருக்கிறார்.

கின்னஸ் சாதனை எப்போதுமே பெருமைக்குரிய விஷயமாகி விடாது. ஒரு நிமிடத்தில் அதிகபட்ச விக்கல் என்பது கூட அந்த நூலில் இடம்பெறக் கூடும். ஆனால், பல லட்சம் பொதுமக்கள் அந்த சாதனையாளரின் பெருமை தங்களுக்கே கிடைத்ததாக எண்ணி மகிழும் கின்னஸ் சாதனைகள் மிகக்குறைவே. பல்வேறு மொழிகளில் ஐம்பதாயிரத்துக் கும் அதிகமான பாடல்களைப் பாடி, சுசீலா அந்த சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பதில் என்ன சந்தேகம்?!

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...