0,00 INR

No products in the cart.

ஞாபகம் வருதே…

பகுதி – 1

எப்படி ஒரு டேப் ரிக்கார்டரில் அல்லது வானொலியில் நமது  மனதிற்கு பிடித்த இனிமையான பாடல்களை  கேட்கும்  போது ஓர் ஆனந்தம் பிறக்குமோ, அதே போல வாசகர்களின் ஒவ்வொரு கோடைக்கால  நினைவும் மனதிற்கு இதமளிக்கிறது.  இதில் அனைத்திலும்  பொதுவாக இருப்பது கிராமத்து வீடுகளும், உறவுகளின் பலமும், இயற்கையுடனும்,  கோயில்களுடனும்  இணைந்த நம் முன்னோர்களின்  வாழ்க்கை முறையும். 

 

இதோ உங்களுக்காக  சில சிறந்த நினைவுகள்… 

சின்ன வயதில் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் நானும் என் அண்ணாவும் தவறாமல் , எங்கள் ஊரான மதுரையிலிருந்து எங்கள் தாத்தா, பாட்டி இருந்த திருவையாறு சென்று விடுவோம். என் சித்தி பையன்களும் வருவார்கள். திண்ணை, தாழ்வாரம், ரேழி, முற்றம் என்று பழைய வீடு. மின்சாரம் கிடையாது. புழக்கடையில்  கிணறு, தோப்பு உண்டு. எல்லோருக்கும்  ரொம்பவே பிடித்தது அந்த வீட்டின் கொல்லைப்பக்கம் ஓடிய வாய்க்கால்  தான். அங்கு இருக்கும் நாட்களில் தினமும்   காலையில் தூங்கி எழுந்து மணிக்கணக்காக வாய்க்காலில் குளித்து ஆட்டம் போட்டு விட்டு வந்ததும் , பாட்டி கெட்டித்தயிர் ஊற்றி பிசைந்து கையில் போடும் பழைய சாதம், (எரித்த குழம்பு, மாவடு உடன்) சாப்பிட்டு விட்டு, பல்லாங்குழி, கிட்டிப்புல், தாயம், பாண்டி ஆட்டம் , கோலி ஆகிய விளையாட்டுக்கள் விளையாடுவோம்.

என் தாத்தா தென்னை ஓலை, பனை ஓலை பிண்ண சொல்லிக் கொடுப்பார். நாங்களும் காற்றாடி, பட்டம் செய்து விடுவோம். மாலையில் தினமும் பட்சண வண்டி வீட்டு வாசலில் வரும். கோவிலுக்கு செல்வோம். டூரிங் கொட்டகையில் படம் பார்ப்போம். வீட்டிற்கு வரும் வைத்தியரிடம் கையைக்காட்டி அவர் தரும் சூரணத்தை சாப்பிடுவோம்.  இரவில் லாந்தர் வெளிச்சத்தில் சீக்கிரம் வேலைகளை முடித்து திண்ணையில் வரிசையாக படுத்து கதை கேட்டுக் கொண்டும், சொல்லிக் கொண்டும் தூங்கி விடுவோம். அந்த நாட்களில்  வெயிலைப் பற்றிய சிந்தனையே இருக்காது. விடுமுறை முடிந்து திரும்பும் போது மறுபடியும் எப்போது வருவோம் என்ற ஏக்கத்துடன் தான் திரும்புவோம்.
  ராதிகா ரவீந்திரன்

பசுமை மாறா நினைவுகள்

தியம் 4 மணிக்கு அம்மாவிடம், மாடு நீ கறக்க வேண்டாம், நான் கறந்து வருகிறேன் என்று சொல்லி (கறந்த பாலை அப்படியே கொஞ்சம் நுறையுடன் குடிக்க ஆசைப்பட்டு) கறந்து சில நிமிடங்களில் மாடு உதைக்க கறந்தபால் கீழே கொட்ட, பசுமாடு உதை வலி மறப்பதற்குள், பாலை கொட்டியதற்காக அம்மாவிடம் உதை,  இன்று நினைத்தாலும் பசுமை மாறா நினைவுகள். பத்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்த வேடிக்கை இது.

கோடை வெயிலில் நண்பகலில்  வீட்டுக் கொல்லையில் கிணற்றிலிருந்து வாளியை உருளை  வழியாக விட்டு என் சகோதரன் 10 வாளி தண்ணீரை என் தலையில் ஊற்றவேண்டும்.பிறகு நான் அவர் தலையில் ஊற்ற வேண்டும். நான் இரண்டு வாளி ஊற்றி விட்டு அண்ணன் கண்ணை திறப்பதற்குள் ஓடி வந்து விடுவேன். என்னை தேடிப்பிடித்து ஓடி வந்து அடிப்பாா். இன்று கூட  அந்த அடியை மறக்க முடியாது.  இப்போது அவர் கீழே விழுந்து நடக்க முடியாமல் இருக்கிறாா், இதை எழுதும்போது அந்நாளில் அவா் ஓடி வந்தது கண்ணில் வருவதோடு கண்ணீரும் வருகிறது.
ஆா்.நாகராஜன், செம்பனாா்கோவில்.

எலுமிச்சம் பழ சர்பத்!

ன் அம்மா அப்பா இருவரும் வேலைக்கு சென்றதால் எங்கள் எல்லோருக்கும் கோடை விடுமுறை விட்டாலும் அப்பா அம்மாவுக்கு லீவு கிடைக்காது என்பதால் வீட்டிலேயே இருப்போம். அருகில் இருக்கும் கடைக்கு சென்று பத்து பைசாவுக்கு ஐஸ்கட்டிகள் வாங்கிக் கொண்டு வந்து அம்மா வேலைக்குச் சென்ற பிறகு எலுமிச்சம் பழ சர்பத் செய்து குளிர்ச்சியாக குடிப்போம்.அப்போது எங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லாததால் அந்த குளிர்ச்சியான பானம் எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.           –பிரகதா நவநீதன் 

மெரீனா கடற்கரை…

கோடை விடுமுறை என்றாலே எங்களுக்கு மிகவும் ஜாலியாக இருக்கும். என் அப்பா ரயில்வேயில் வேலை பார்த்ததால் அவருக்கு ரயிலில் பயணம் செய்வதற்கு இலவச பாஸ் கிடைக்கும். அதனால் நாங்கள் ஆறு பேரும் அண்ணன், தம்பி, தங்கை இவர்களுடன் டெல்லியில் இருக்கும் மாமா வீட்டிற்கு செல்வோம். ஒரு வருடம் நாங்கள் டெல்லி சென்றால் அடுத்த வருடம் மாமா தங்கள் பிள்ளைகளுடன் சென்னைக்கு வருவார்.

இப்படி நாங்கள் எல்லோரும் சேர்ந்து சென்னையில் பீச்சுக்கு செல்வோம். அங்கு எங்கள் தாத்தா எங்களுக்கு ஐஸ்கிரீம், பஜ்ஜி ,பலூன் எல்லாம் வாங்கிக் கொடுப்பார். அந்தக் கோடை கால நினைவுகள் இப்போது நினைத்தாலும் தித்திப்பாக இருக்கு.அந்த அருமையான நாட்கள் திரும்பி வராதா என்று ஏங்க வைக்கும்  கோடை விடுமுறை நாட்கள் அது.
உஷா முத்துராமன்  

அடடா… ஆனந்தமே!

கோடை விடுமுறை என்றாலே  அலை அலையாய் கடல் போல் ஞாபகங்களும், அருவியில் குளித்து சிலிர்த்த அனுபவங்களும், ஆஹா! நினைத்தாலே இனிக்கும் ஆனந்தம் அது. கோபிசெட்டிபாளையம் போய் இறங்கினாலே உடம்பும் மனதும் ரெக்கை கட்டி பறக்கும். பாரியூர் குலதெய்வ வழிபாடும், போகும் வழி நெடுக பச்சை பசேல் என மரங்கள், செடிகள், வயல்கள், ஆஹா கண்ணுக்கு  எத்தனை குளிர்ச்சி. கொடிவேரி அருவியில்  சில் குளியல் கும்மாளம், அடடா ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்தமே! கோடை விடுமுறை கொண்டாட்டமே, வாராய் நீ வாராய்…
ராதா நரசிம்மன்

நுங்கு வண்டி ரேஸ்

கோடை விடுமுறை ஆரம்பமாகும் பொழுதே, தாத்தா வந்து எங்களை கிராமத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றுவிடுவார். சுமார் ஒருமாதம் நுங்கு வண்டி செய்து ‘Formula கார்’ ரேஸ் போல ஓட்டுவதும், கிணற்றில் நீச்சல் அடிப்பதும், மதியம் இளம் நொங்குகளை கணக்கில்லாமல் சாப்பிடுவதும், மரத்தில் கயிற்று ஊஞ்சல் கட்டி ஆடுவதும் என நேரம் போதாது எங்களுக்கு. அவ்வப்போது சோளப் பணியாரம், ஒப்பிட்டு, இனிப்பு உளுந்து வடை என வகைவகையான உணவுகள்.  சிறு வயதில் அனுபவித்த கோடைக்கால விடுமுறையை இப்போது நினைத்தாலும் இனிக்கும்!
 -பானு பெரியதம்பி

நாலுகால் ஆட்டம், பாண்டி ஆட்டம்…

நாங்கள் இருந்த மாயவரத்தில் இருந்து ஒவ்வொரு கோடைவிடுமுறைக்கும் என் அம்மா வழிப் பாட்டியின் ஊரான பட்டுக்கோட்டைக்குத்தான் செல்வோம். சோழன் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் இருக்கும் திருக்குறள்களை எங்கள் அம்மா எங்களை மனப்பாடம் செய்ய சொல்வார். நாங்கள் மூன்று முறை பேருந்துகளை மாற்ற வேண்டியிருந்ததால் ஒரு கோடைப் பயணத்தில் ஆறு திருக்குறள்களை மனப்பாடம் செய்திருக்கிறோம்.

பாட்டி வீட்டை அடைந்தவுடன் என் பெரியம்மா, என் அம்மா,  என் மாமி  என அனைவரும் பல வேலைகளில் பிஸியாக இருந்ததனால்  குழந்தைகள் அணியானது ( என் இரண்டு சகோதரர்கள், நான், என் மாமாவின் மூன்று குழந்தைகள்) எங்கள் இரண்டு சித்திகளின் கஸ்டடியில் தான் இருந்தோம்.

வீட்டுக் கொள்ளையில் இருந்த இரண்டாவது கிணற்றில் இருந்து ஒவ்வொரு குடமாக தண்ணீர் கொண்டு வந்து வாசலில் சிமெண்ட் தொட்டியை நிரப்புவது பெண் குழந்தைகளின் வேலை, எங்கள் அணியின் ஆண்கள் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்தும் தந்தார்கள்.

மற்றபடி, எங்களது வேலைகள் ஒரே அட்டவணையில்தான் இருக்கும். காலை நந்தியாவட்டை மரத்தில் ஏறி பூப்பறித்தல்,  பிறகு சண்டைப் போட்டுக் கொண்டே குளித்தல். பிறகு, வாசலில் உள்ளூர் திருக்கோயிலில் இருந்து சுவாமி  புறப்பாட்டின் போது  முன்  இருக்கும் ரோட்டில் தண்ணீர் தெளித்து கோலம் என பொழுது போய்விடும்.  அதன் பின் தயிர் விற்கும் நடேசன் தாத்தாவிடம் தயிர் வாங்கும் போது கொஞ்சம் உரையாடல்.

காலை பதினொரு மணிக்கு கோவிலுக்கு சென்று பட்டறையில் உட்கார்ந்து வெயில் வீணாகாமல் ஆட்டம். மண்டபத்தில் மற்ற குழந்தைகளோடு நாலுகால் ஆட்டம், பாண்டி ஆட்டம். மதியம் ஒரு மணியளவில் கோவிலில் சாப்பாட்டு பந்தி ஆரம்பம். தாமரை இலையில் சாப்பாடு. தொண்ணையும் தந்தார்கள். அப்பொழுதும்  கூட்டோ, கறியோ, பச்சடியோ, சாப்பிட்டு விடுவோம். கோயில் பிரசாதமானதால் வீணடிக்கக் கூடாது. இதுதான் பெரியவர்களால் சொல்லப்படும் ஒரே வாக்கியம். பிடிக்காத காயென்று எதுவும் இருக்க வில்லையோ. தெரியவில்லை!

தாமரை இலையில் பாயசத்தை சுடசுட ஊற்றும் போது இலையின் நடுவில் கொப்பளித்துக் கொண்டு வருவது, பார்க்கவே அழகாய் இருக்கும். அதிலும் ஒரு போட்டி வரும்,  யாருடைய இலையில் பெரியதாய் கொப்பளித்து வந்தது, எவ்வளவு நேரம் இருந்தது என்று. நம் இலையை பார்க்காமல் அடுத்தவர் இலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது

நம் இலையிலிருந்து பாயசம் கீழே வழிந்தோட, அந்த சமயத்தில் எங்கள்  மாமா கண்ணில் அது பட “உங்க இலையப் பார்த்து சாப்பிடுங்க,”  என்று அவர் குரல் விட அங்கு களேபரம்தான். சாப்பிட்ட இடத்தை பசுஞ்சாணியைப் போட்டு சுத்தம் செய்யும் வேலையும் எங்களுக்கு வந்து விடும். இன்று போல்  வழவழப்பான தரையல்ல அன்று, கரடுமுரடான தரை.  எங்கள் நிலமையையை ஊகித்துக் கொள்ளுங்கள்.

மாலை மாமா வெள்ளரிப் பழம், கொய்யாப் பழம், நொங்கு என தீர, தீர   வாங்கி கொடுத்தார். பின் மறுபடியும் கோவில் சென்று ஒரே ஆட்டம் தான். இந்த அட்டவணையில் ஒரு நாளும் மாறுதல் இருக்காது. எங்களுக்கும் பொழுது போகவில்லை, போரடிக்கிறது என்கிற எண்ணமே வந்ததில்லை. நாங்கள் பெரிய வகுப்புகளில் போனவுடன் எங்கள் பாட்டியின் வீட்டிற்கு செல்வது குறைந்தாலும், பசுமையாய் இருக்கும்  கோடைக்கால நினைவலைகளானது வசந்தமாய் இப்பொழுதும் உள்ளது.
ஜெயஸ்ரீ எம்.சாரி

ஐஸ் பாய் விளையாட்டு

ன் சிறுவயதில் மதுரையில் இருந்தபோது, பள்ளி கோடை விடுமுறைக்கு தவறாமல் என் பெரியக்கா குழந்தைகளுடன் சென்னையிலிருந்தும், என் சித்தி அவர்கள் குழந்தையுடன் பெங்களூருவிலிருந்தும் வந்து விடுவார்கள். அவர்களுடன் சினிமா பார்ப்போம்.

குழந்தைகளுடன் விளையாடுவோம். மத்தியான நேரம் பல்லாங்குழி, சீட்டுக்கட்டு, அந்தாக்ஷரி எல்லாம் விளையாடுவோம். என் அம்மா விதவிதமான தின்பண்டங்கள் செய்வார். அவற்றை சாப்பிட்டுவிட்டு மாலையில் தெருவில் ஐஸ் பாய் விளையாடுவோம். ஒவ்வொரு

கோடையிலும் வரும் பொருட்காட்சிக்கு சென்று டெல்லி அப்பளம் வாங்கி சாப்பிடுவோம். ஜெயன்ட் வீல் என்னும் ராட்டினத்தில் சுற்றுவோம். போட்டோ எடுத்துக்கொள்வோம்.மொத்தத்தில் சந்தோஷம்தான்.
ஹேமலதா  ஶ்ரீனிவாசன்

பனை வண்டி ஓட்டுவது!

ன்னுடைய சிறு வயது (ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்பு) கோடை விடுமுறை என்றாலே நினைவுக்கு வருவது என்னுடைய தாத்தா பாட்டி ஊரான டெல்டா மாவட்டத்தின் கடைக்கோடி ஊரான  தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கீழையூர் ஆகும். காவிரி பொங்கி ஓடும், ஆனால் கோடையில் பள பளவென்று மின்னும் மணல்தான், அதில் ஓடி ஆடி விளையாடுவது எங்களின பொழுது போக்கு. மேலும் பனை மரத்திலிருந்து நுங்கு வெட்டி எங்கள் தாத்தா தருவார். அதை சாப்பிட்டு முடித்தவுடன் பனங்காய்களில் ஒரு கம்பை செருகி பனை வண்டி செய்து ஓட்டுவதும், பின்பு பனை ஓலைகளில் காத்தாடி செய்து அதை  ஒரு குச்சியில் செருகி யாருடைய காத்தாடி வேகமாக சுற்றுகிறது என்பதை பார்க்க வேகமாக ஓடுவதும் எங்கள் விளையாட்டுகளில் ஒன்று. எங்களுக்கு  பிடித்த உணவு என்று எதுவும் கிடையாது. வெயில் நேரத்தில் மண்பானையில் வடித்த சோறும் வீட்டில் பறித்த கறிவேப்பிலையில் அரைத்த துவையலும் அமிர்தம். மேலும் எல்லா பேரப்பிள்ளைகளும் ஒரே இடத்தில் சேருவதால் விளையாட்டிற்கு பஞ்சமில்லை. இதனால் உறவுகள் பலப்பட்டன.

காலையில் எழுந்ததும் ஆளுக்கொரு கூடையை எடுத்துக்கொண்டு புளியம்பழத்தை பொறுக்கி வந்து உடைத்து காயவைப்போம்.  யார் வேலை சுறு சுறுப்பாக செய்கிறார்கள் என்ற போட்டி எங்களுக்குள் வரும் மொத்தத்தில் கோடையின் வெம்மை தெரியாத வசந்த நாட்கள்  அவை.
அன்புக்கரசி பாலசுப்ரமணியன்

பாவமாய் முகத்தை வைத்து…

காலை எழுந்ததும் அவசரமாய் காலைக் கடன்களை முடித்து தோழி வீட்டிற்குள் நுழைந்தால் உச்சி வெயிலில் ஆட்டம் போட்டு, நிறம் மாறி, உருமாறி வீட்டிற்குள் நுழைந்து அம்மாவிடம்  திட்டு வாங்கி, ‘நாளையிலிருந்து வீட்டில் இருப்பேன்’ என்று உறுதி கூறி, மறுநாளும் முந்தைய நாளின் தொடர்கதையாய் நீளும்.

‘அடிக்கிற வெயில் எல்லாம் உன் தலையில்தான்’, என்று பரட்டைத்தலையில் எண்ணெய் வைத்து ,அழுந்த ரிப்பன் வைத்து இரட்டைப் பின்னல் பின்னி தூக்கிக் கட்டிய கூந்தலுடன் அனுப்புவார் அம்மா. விளையாடி விட்டு திரும்பும் போது, ஒரு பக்கக் கூந்தலின் ரிப்பன் காணாமல் அவிழ்ந்து தொங்கும். அம்மா, ‘ரிப்பன் எங்கேடி?’ என்றதும்,  நீ சரியா ரிப்பன் வைத்து முடி போடலை, என்று அம்மா மேல் பழியைப்போட்டு ஒன்றுமே தெரியாதது போல் பாவமாய் முகத்தை வைத்து நடித்தது. ஞாபகம் வருதே! இன்றைய குழந்தைகள் அறியாத நிகழ்விது.
செ.கலைவாணி

தேர்வு  முடிந்த அன்றே பாட்டி வீட்டிற்கு  பயணம்.கரும்பு ஆலையில்  ஜூஸ், நுங்கு, இளநீர், ஊஞ்சல், பாலாற்றில்  தேங்கும் நீரில்  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். கோடை  விடுமுறை  முடிந்து அம்மா வீட்டிற்கு  திரும்புவது சோக கீதம்தான்.
ஷெண்பகம் பாண்டியன் 

‘மூக்கு சளி’ பழம்

னது டீனேஜ் கால கோடை விடுமுறைகளுக்கு,  பத்து மைல் தொலைவில் உள்ள  பாட்டி வீட்டுக்கு அம்மா, தம்பி தங்கை சகிதம் மாட்டு வண்டியில் செல்வோம். அப்போ என் சித்தி பசங்களும் அங்கு வந்துவிடுவர். காலை டிபன் சாப்டுட்டு விளை  நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் பம்ப் செட்டில் போய் ஆசை தீர குளிப்போம். அங்கு மரத்தில் பழுத்திருக்கும் ‘மூக்கு சளி’ பழங்களை (நிஜ பெயர் தெரியல) பறித்து தின்போம்.

பின் வீட்டுக்கு வந்தா, சொந்த பனை மரத்திலிருந்து வெட்டி சீவியெடுத்த  நுங்குகளை ஓலையில் குவித்து வைத்திருப்பார் பாட்டி. தின்ன தின்ன தீராது. சாயங்காலம் மொறுமொறு உளுந்து போன்டாக்களை  தொட்டுக்க கருப்பட்டி பாகோடு தருவாங்க.  சுவை தாறுமாறா இருக்கும். அப்படியொரு காலமெல்லாம் இனி வராது.
ஜெயகாந்தி மகாதேவன்

பசுமையாக நினைவுகள்!

ஞாபகம் வருதே என்ற வார்த்தையை பார்த்தவுடன் பள்ளிக்குச் சென்ற அந்த காலம் பசுமையாக நினைவிற்கு வந்தது.  முழு ஆண்டுத் தேர்வு எப்போது முடியும் என்று ஆவலுடன் காத்திருப்போம். எங்கள் வீட்டில் பெரிய மாமரம் இருக்கும் என்பதால் அதில் உள்ள சின்ன சின்ன மாங்காய்களை பறித்து அம்மாவிடம் கொடுக்க அம்மா மாவடு போடுவார். தெருவில் உள்ள எல்லா பிள்ளைகளுடன் நட்பு பாராட்டி கில்லி கிரிக்கெட் என்று எல்லா விளையாட்டுகளும் விளையாடும் போது மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் பள்ளியில் விடுமுறை முடிந்து அடுத்த வகுப்புக்கு சென்றாலும் முழு ஆண்டுத் தேர்வு கேள்வித்தாள்களை ஒரு நோட்டுப் போட்டு எழுதிக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லுவார்கள். அதனால் அந்த வேலையும் நடு நடுவே செய்வதால் மிகவும் உற்சாகமாக இருக்கும். கிடைக்கும் அட்டைப் பெட்டிகளை எல்லாம் சேர்த்து வைத்து அதில் சின்ன சின்ன வீடுகளை கட்டி வைப்பேன். அந்த வீடுகளை நாங்கள் நவராத்திரி கொலு வைக்கும் போது அதில் வைத்து அலங்கரிப்போம். ஞாபகம் வருதே என்ற வார்த்தையை பார்த்தவுடன் கோடை விடுமுறையில் நான் செய்த அத்தனை வேலைகளும் எனக்கு மலரும் நினைவாக நினைவில் வர மகிழ்ச்சியில் மனம் பூரித்தது.
வெ.  முத்துராமகிருஷ்ணன், மதுரை.

சண்டையில் தான் முடியும்!

ள்ளி வகுப்புகள் முடிந்து கோடை விடுமுறை விட்டால் எங்கள் வீட்டில் ஒரே கொண்டாட்டம் தான். நாங்கள் அண்ணன் தம்பி  தங்கை எல்லோரும் சேர்ந்து சீட்டு விளையாடுவோம். பெரும்பாலும் அந்த சீட்டு விளையாட்டு கடைசியில் சண்டையில் தான் முடியும். அதை சமரசம் செய்ய அம்மா வந்து எல்லோருக்கும் ஒரு அடி வைத்து அனுப்பி விடுவார்கள்.  அம்மா அடித்த அடி எல்லாம் துடைத்து வைத்துவிட்டு மீண்டும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து கேரம் விளையாடுவோம்.  எங்கள் வீட்டில் ஒரு பெரிய புளிய மரம் இருக்கும் அது கோடை காலத்தில்தான் அதிகமாக காய்க்கும். ஒருவரைக் கூப்பிட்டு எல்லா புளியம்பழம் பறிக்க சொல்லி அதன் மேல் இருக்கும் ஓட்டினை எடுத்து கொடுக்க வேண்டும் என்று அம்மா எல்லோருக்கும் சிறிதளவு புளியை கொடுத்து விடுவார்கள் அந்த வேலையும் நடுநடுவே செய்து கொண்டு எங்கள் கோடை விடுமுறையை நாங்கள் உற்சாகமாக கழிப்போம்.  புளியம் பழத்தில் இருந்து எடுக்கும் புளியங்கொட்டையை நன்கு கழுவி சேகரித்து வைத்து அதில் பல்லாங்குழி விளையாடுவோம். பகல் நேரத்தில் இந்த விளையாட்டுகளை விளையாடி விட்டு மாலை நேரங்களில் தெருவில் ஓடிப்பிடித்து பாண்டி எல்லாம் விளையாடுவோம். மிகவும் அருமையான கோடை காலம் அது.
நந்தினி கிருஷ்ணன், மதுரை 

அலாவுதீனின் அற்புத விளக்கு!

ல்லிடைகுறிச்சியில் எங்கள் வீட்டு பின்புறம் தான்  வாய்க்கால். ஆழம்  அதிகம் இருக்காது. படிக்கட்டுதான் எங்கம்மாவுக்கு பாத்திரம் கழுவும் சிங். ஒரு முறை பால் செம்பை நான் கழுவுகிறேன் என்று (அப்போது வயது எட்டு) வாய்க்காலில் விட்டு விட்டேன். அந்த காலத்து பாத்திரம், அதுவும் வெண்கல செம்பு, வென்கலச்சிலை போன்ற கனமாக இருக்கும். என் அம்மாவின்  மாமியார் (எங்கள் பாட்டி) ஆசையாய் வாங்கிக் கொடுத்தது, அம்மாவுக்கு  அதனால் ஒரே  வருத்தம். என்ன ஒரு ஆச்சர்யம், கோடை வெயிலில் நீர் வற்றியதில், மண்ணுக்குள் புதைந்து போன செம்பு வெளியே தெரிய அதை எடுத்துக்கொண்டு அம்மாவிடம் காட்ட, அம்மாவால் தன் கண்களையே  நம்ப முடியவில்லை. அலாவுதீனின் அற்புத விளக்கு போல, அதைப் பார்த்து ரசித்தது மறக்க முடியாத  நினைவு. அம்மா அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
ஜானகி பரந்தாமன்

(நினைவுகள் அடுத்த இதழிலும்  தொடரும்)

1 COMMENT

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவிதைகள்!

-பி.சி.ரகு, விழுப்புரம் எப்படி சிரிப்பது? மணமேடையில் உட்கார்ந்திருக்கும் என் காதருகில் தோழி வந்து சொல்லிவிட்டுப் போகிறாள் சிரித்த முகமாய் இருக்கச் சொல்லி... என் தாலி செய்வதற்காக அம்மாவின் தாலி விற்கப்பட்டதையும்... என் திருமணச் சீர் செய்ய அப்பா ஆசையாய் பயிரிட்ட ஐந்து ஏக்கர் நிலம் விற்கப்பட்டதையும்... திருமணச் செலவிற்காக இருந்த வீட்டையும் அடமானம் வைத்த என் குடும்பநிலையை எண்ணும்போது எப்படிச்...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...