0,00 INR

No products in the cart.

தன்னம்பிக்கையே வெற்றியின் ரகசியம்!

ஊனம் ஒரு தடையல்ல…
– ராஜி ரகுநாதன்

“ஜன்னலருகில் நின்று சுதந்திரமாக ஆகாய வீதியில் பறக்கும் பறவையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘பறவைக்கு எத்தனை சிறிய கால்கள்! இதற்கு அத்தனை உயரம் பறக்கும் சக்தியை கடவுள் எப்படிக் கொடுத்தான்?’ என்று நினைத்து வியந்தேன்.

‘ஸ்கூலுக்குப் போகவில்லையா, அனு? இன்று பள்ளி ஆண்டு விழா உள்ளதே!’ என்று கேட்டார் என் தந்தை மோகன் ராவு.

‘போக வேண்டும் என்று தோன்றவில்லை, அப்பா!’ என்று நிதானமாக பதில் கூறினேன்.

‘ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்ததற்கும், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, இன்டோர் அவுட்டோர் கேம்ஸ் எல்லாவற்றிலும் முதல் பரிசு வாங்கி உள்ளாய். நீ ஸ்கூலுக்குப் போகாவிட்டால் எப்படிமா? கை நிறைய பரிசு வாங்கி, பை நிறைய வீட்டுக்கு எடுத்து வர வேண்டாமா?’ என்றார் அப்பா.

‘எங்கள் பள்ளியில் ஸ்டேஜ் ரொம்ப உயரமாக இருக்கும்பா! ஒரு முறை ஏறுவதே எனக்குக் கஷ்டம்! பத்து பரிசுகள் வாங்குவதற்கு பத்து முறை ஏறி இறங்க வேண்டும் என்றால் என்னால் இயலாது! மேடை ஏறும்போது கீழே விழுந்து விடுகிறேன். அதற்கு பதில் போகாமல் இருப்பதே மேல்!’ என்று கூறும்போது, பொங்கி வரும் கண்ணீர் தரையில் விழுந்தாலும், அப்பா கவனித்து விடாமல் இருப்பதற்காக தலை குனிந்து அமர்ந்திருந்தேன்.

என் தந்தையின் மனம் துடித்தது. படிப்பிலும் கலைகளிலும் திறமையோடு விளங்கும் மகளை நினைத்து மகிழ்வதா? கொஞ்சம் கொஞ்சமாக மகளை பாதித்து வரும் இந்த நோயைக் கண்டு வருந்துவதா? என்று புரியாத நிலையில் இருந்தார் என் தந்தை.

ன்னை விட ஒன்பது வயது பெரியவளான என் அக்கா, நடக்கும் நிலையிலிருந்து தவழும் நிலைக்குத் தள்ளப்பட்டதைப் பார்த்தே வளர்ந்த எனக்கு, ‘இன்னும் சில ஆண்டுகளில் நானும் சக்கர வண்டியில் அமர்ந்து விடுவேனோ என்று பயமா இருக்குப்பா! நாளை என் நிலைமை எப்படி இருக்குமோ? இனி நடக்கவே முடியாமல் போய்விடுமோ… என்ற அச்சம் என்னைக் கண் மூடித் தூங்க விடுவதில்லை அப்பா!’ என்று கூறியபோது இயலாமையும் துயரமும் என் தொண்டையை அடைத்தன.

‘எந்தப் போட்டியில் நீ கலந்து கொண்டாலும் அதில் முதல் பரிசு வாங்குவதற்குக் காரணம் உனது தன்னம்பிக்கையே! அதே தன்னம்பிக்கையோடு நீ உனது ஊனத்தைத் தாண்டி எதிர்காலத்தில் வெற்றி பெறுவாய் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உன்மேல் நீயும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்! இந்த சிறிய குறையைப் பெரிதாக நினைத்து வருந்தாதே!’ என்று என் தந்தை எனக்கு ஆதரவாகப் பேசி, என் தலையைக் கோதி விட்டார்.

எனக்குள் தைரியத்தை நிரப்பி, சக்தியையும் சாமர்த்தியத்தையும் வளர்த்தார் என் தந்தை மோகன்ராவு. தினமும் அவர் கூறும் சொற்கள் எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கத் தவறியதில்லை…”

சரி… அப்படி என்னதான் நடந்தது இந்த, ‘அனு’ என்று அழைக்கப்படும் அனுராதாவுக்கு? இதுதானே உங்கள் கேள்வி… தசைநார் தேய்வு பாதிப்பு. அது எவ்வளவு கொடுமையானது? அதை எப்படி அவர் சமாளித்தார்? என்பதைப் பார்ப்போம் வாருங்கள்!

சைநார் தேய்வு (Muscular Dystrophy) என்பது, ‘டிஸ்ட்ரோஃபின்’ என்ற தசைப் புரதத்தை உற்பத்தி செய்யும் மரபணுக்களின் பிறழ்வு காரணமாக ஏற்படும் ஒரு மரபணுக் கோளாறு. இது பெரும்பாலும் பரம்பரை நோயாகவே கருதப்படுகிறது. இதன் குணங்கள் இளம்பருவத்திலேயே தொடங்கினாலும், அதன் பாதிப்புகள் உடனே தெரிவதில்லை. தசைநார் தேய்வில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் சில சிறுவர்களுக்குக் காணப்படும். சிலது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் வெளிப்படும். கழுத்துப் பகுதி, தோள்பட்டை, கெண்டைக்கால் பாதிப்பு என்பதாக உடலின் பல பகுதிகளில் இதன் தாக்கம் இருக்கும். இதனால் நடக்கும்போது பலவீனமாகி கீழே விழுவது, தசைகள் விரைத்துப் போவது, தசைகளில் வலி இருப்பது, ஓடவோ, குதிக்கவோ இயலாமை, கால் விரல்களை ஊன்றி நடக்க வேண்டி வருவது, உட்கார்ந்து எழுவதில் சிரமம், பேச்சுக் குறைபாடு, உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற பல்வேறு உபாதைகளை இந்த தசைநார் தேய்வு நோயால் ஏற்படுகிறது. ஆனால் அனுராதா, இந்த நோய் தாக்கத்தால் ஏற்பட்ட இயலாமையை தனது மன உறுதியாலும் கடின உழைப்பாலும் வென்று காட்டினார்.

ன் தோழி எழுத்தாளர் டாக்டர் ஷோபா குரஜாட பெரிந்தேவி முதியோர் வாழ்க்கைத்தரம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பார்வையற்றோர் நலனுக்காக பல சமூக சேவைகள் செய்பவர். இவர் மூலம் தசைநார் தேய்வு நோயால் பாதிக்கப்பட்ட அனுராதாவை பற்றி அறிந்து, அவரைத் தொடர்பு கொண்டேன். அனுராதா தனது ஊனத்தை வென்று, தன் காலில் தான் நிற்பதாக வெற்றிப் பெருமிதத்துடன் கூறுகிறார். கால் ஊனமுற்றவர்களால் நடக்க முடியாதல்லவா? ஆனால், இவர் தனது கல்வியறிவும் உத்தியோகமும்தான் தனது இரு கால்கள் என்று குறிப்பிடுகிறார். இதோ… அனுராதாவின் வார்த்தைகளிலேயே அதைக் கேட்போம்!

‘‘பன்னிரெண்டு வயது சிறுமியாக ஓட்டப் பந்தயங்களில் முதல் இடத்தில் வந்து கொண்டிருந்த நான், தசைநார் தேய்வு நோயால் பாதிக்கப்பட்டேன். மாடிப்படி ஏற முடியவில்லை. நடந்து கொண்டிருக்கும்போதே கால் வலுவிழந்து கீழே விழுந்தேன். என்னுடைய நோயின் அறிகுறிகள் நாளுக்கு நாள் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கவலையை அளித்தன. என்னைக் காப்பாற்றப்போவது கல்வி மட்டுமே என்பதை எனது தந்தை எனக்கு உணர்த்தினார்! அதனை நானும் உணர்ந்தேன். படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்தினேன். டாக்டருக்குப் படித்து ஏழை மக்களுக்கு சேவை செய்வதே என் இலக்காக எண்ணி இருந்தேன். இன்டரில் நல்ல மதிப்பெண் பெற்றேன். எம்செட்டிலும் நல்ல ராங்க் வந்தது. ஆனால், என் உடல் நிலை அந்தப் படிப்பை படித்து முடிக்க ஒத்துழைக்காது என்ற உண்மையை உணர்ந்து அதனை ஏற்றேன்.

‘அப்பா! இன்று நான் இதைச் செய்யப்போகிறேன்!’ என்று எதைப் பற்றிச் சொன்னாலும், ‘உன்னைத் தவிர வேறு யாரால் இதைச் செய்ய முடியும், அனு? கட்டாயம் செய்! உனது திறமையை முழு அளவில் காட்டு!’ என்று ஊக்கப்படுத்துவது என் தந்தையின் வழக்கம்.

அதுவே எனக்கு உற்சாக ஊற்று. ஐடிஎல் நிறுவனத்தில் டிரைவராகப் பணி புரிந்த என் தந்தைக்கு நாங்கள் ஐந்து பேர் பிள்ளைகள். அப்பாவின் ஒவ்வொரு சொல்லும் என்னை தைரியத்தின் மறு வடிவமாகவும் உற்சாகத்தின் முழு உருவமாகவும் வளர்த்தெடுத்தது.

‘வெற்றியின் மணத்தை நுகர வேண்டுமென்றால், தோல்வியைத் தாங்கிக்கொள்ள வேண்டும். பிரச்னையைத் தாண்ட வேண்டுமென்றால் பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்னால் இயலாது என்று குமைந்து விடாமல், கிளர்ந்தெழ வேண்டும். வெற்றி தேவதை உனது வாசற்படி எதிரில் நின்று உன்னை வரவேற்கும் வரை முயற்சியைக் கைவிடக் கூடாது!’ என்று எனது தந்தை தினமும் எனக்கு எடுத்துரைப்பார்.

என் வாழ்க்கைக்கு நானே நல்ல திருப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு எனது தந்தையின் இந்தச் சொற்கள் உற்சாகத்தை அளித்தன!

‘ஓட முடியாவிட்டால் நட! நடக்க முடியாவிட்டால் தவழ்! தவழ முடியாவிட்டால் ஊர்ந்து செல்! ஒரே இடத்தில் தேங்கி விடாதே! உன் எதிர்கால இலக்கான தீயின் மீது பச்சைத் தண்ணீரை ஊற்றி அணைத்து விடாதே!’ என்று சதா எனக்கு நானே நேர்மறை வாக்கியங்களை உதிர்த்துக் கொண்டு முன்னேறினேன்.

ட்சியத்தை அடைய முடியாமல் போனதால், லட்சியமே இல்லாமல் வாழ்வது சரியல்ல! லட்சியத்தை மாற்றிக்கொண்டு வாழ்க்கையைத் தொடர்வதே முக்கியம் என்பதை புரிந்துகொண்டு பி.காம்., படிப்பில் சேர்ந்தேன். ‘பி.காம்., முடித்துவிட்டு மேலும் முன்னேறுவதற்கு அயராது முயற்சி செய்ய வேண்டும்’ என்று முடிவெடுத்துக் கொண்டேன்.

முதல் நாள் கல்லூரிக்கு வீட்டிலிருந்து உற்சாகமாகப் புறப்பட்டு பஸ் ஏறினேன். கல்லூரி பஸ் ஸ்டாண்டில் இறங்கினேன். கல்லூரிக்கு சாலையைக் கடந்துதான் செல்ல வேண்டும். பாதி தொலைவு கடக்கும்போது கால்கள் தளர்ந்து சாலை நடுவில் கீழே விழுந்தேன். வருத்தம், கவலை, வெட்கம், உதவியற்ற நிலை… என் மேல் எனக்கே வருத்தமாக இருந்தது. கண்கள் நிறைந்தன. மெதுவாக, ஓரமாக தவழ்ந்து சென்று சாலை ஓரத்தில் சற்று நேரம் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்து உடலில் ஒட்டியிருந்த தூசியையும் மனதைப் பின்னுக்கிழுத்த தாழ்வு மனப்பான்மையையும் உதறித் தள்ளிவிட்டு, கல்லூரி வாசலில் காலெடுத்து வைத்தேன்.

முதல் இரு ஆண்டுகள் எப்படியோ ஓட்டிவிட்டேன். மூன்றாம் ஆண்டில் தினமும் கல்லூரிக்குச் சென்று வரும் சக்தியை இழந்தேன். அவ்வப்போது மட்டும் சென்று வந்தாலும் பி.காம்., முதல் வகுப்பில் வெற்றி பெற்றேன். டிகிரி ரிசல்ட் வருவதற்குள் என் அண்ணன் புரிய பணிபுரியும் அலுவலகத்தில் எனக்கும் வேலை கிடைத்தது. அந்த ஆபீஸ் உத்தியோகத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே எனது தந்தை காலமானார். எனக்கு மிகவும் மனச்சோர்வு ஏற்பட்டது. என் முன்னேற்றம், திறமை, வெற்றி, அனைத்துக்கும் முன்னுரிமை கொடுத்து உற்சாகமாகப் பேசி வளர்த்த தந்தையின் மரணம், நீண்ட நாட்கள் என்னைக் குமையச் செய்தது. இப்போது வரை அந்த இழப்பு என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது. அவருடைய நினைவுகள் என்னை தினம் தொடர்ந்து வந்து எனக்கு ஆதரவாக நிற்கின்றன.

பள்ளியில் படிக்கும் நாட்களில் இருந்தே பிற மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்தேன். பணியில் சேர்ந்த பின்பும் அதை நிறுத்தவில்லை.

கணவருடன் அனுராதா

ந்தை காலமான மூன்றாண்டுகள் கழித்து என்னை மணம்புரிய விரும்பி, ஒரு நல்ல வரன் வீட்டுக் கதவைத் தட்டியதைப் பார்த்து எனக்கு ஆனந்த வியப்பு ஏற்பட்டது. காய்கறி வியாபாரம் செய்யும் குடும்பத்தினர் தங்கள் மகன் நரேந்திரனுக்கு என்னைப் பெண் கேட்டு வந்தனர். என் குடும்பத்தினருக்கு இது கேள்விக்குறியானது! ஊனமுற்ற பெண்ணைத் திருமணம் புரிய விரும்பும் ஆண் மகன் கூட இருப்பானா? தன் ஐயத்தை என் தாய் நரேந்திரனின் தாயிடம் நேரடியாகவே கேட்டு விட்டார். ‘உங்கள் வீட்டில் அனைவரும் என் மகளை விரும்பி ஏற்றுக்கொண்டால்தான் சம்மதிப்போம்!’ என்றார் என் அம்மா.

இரண்டு நாத்தனார்கள், இரண்டு மைத்துனர்கள் மற்றும் நரேந்திரன் குடும்பத்தினர், உறவினர் அனைவரும் சேர்ந்து என் வீட்டிற்கு வந்து, ‘உங்கள் மகளை நீண்ட நாட்களாக என் மகன் கவனித்து வருகிறான். அவளுடைய சிறப்பை உணர்ந்துதான் அவளை விரும்புவதாக எங்களிடம் கூறினான். நாங்கள் அதை அங்கீகரித்துதான் பெண் கேட்டு வந்துள்ளோம்!’ என்றனர்.சொன்னபடியே திருமணமான பின் எனது கணவர் நரேந்திரனும் எனது மாமியார் வீட்டிலும் என்னைப் பூவில் வைத்து பார்த்துக் கொள்கிறார்கள்.

ஊனமுற்ற வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பேரதிர்ஷ்டம்! எனக்கு சுதந்திரம், ஊக்கம், உதவி அனைத்தும் அளித்து அருமை பெருமையாகப் பார்த்துக் கொள்கிறார் என் கணவர். தெய்வம் ஒரு வழியை அடைத்தாலும், மறு வழியைத் திறந்து வைத்திருக்கும் என்பதில் வியப்பென்ன உள்ளது?
எம்.பி.ஏ., திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த நான், என் முதல் மகன் பிறந்ததும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். அதன் பின் வேறு ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து, ‘ஹெச்.ஆர்’ ஆகப் பதவி உயர்வு பெற்றுள்ளேன்.

இரண்டு மகன்கள், நல்ல கணவர், மகிழ்ச்சியான வாழ்க்கை! என் தந்தை மேலிருந்து பார்த்து நிச்சயம் எனக்கு ஆசிகள் வழங்கி ஆனந்தமடைந்து இருப்பார் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை! பெரிய மகன் தற்போது பி.டெக்., படித்து வருகிறான். சிறிய மகன் பள்ளிக்குச் சென்று வருகிறான்.

ந்தை மோகன்ராவு பிறப்பளித்து வாழ்வில் வளர்வதற்கு ஏணியில் ஏற்றி விட்டார். ஏணியில் ஏறி மேலே செல்வதற்கு எனது கணவர் உடனிருந்து உதவுகிறார். ஏணியின் உச்சிப் படியேறி இலக்கை எட்டுவதற்கு எனது அலுவலக எம்.டி., உதவுகிறார். இவர்கள் மூவரும் என் வாழ்வில் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் எனும் மும்மூர்த்திகள்!

என் கணவர் என்னை தனது ஸ்கூட்டியில் அலுவலகம் அழைத்துச் சென்று, அங்கே வீல் சேரில் அமர வைப்பார். மீண்டும் மாலை என்னை வீல் சேரில் இருந்து இறக்கி, தூக்கிச் சென்று ஸ்கூட்டியில் ஏற்றி வீட்டுக்கு அழைத்து வந்து நங்கள் வசிக்கும் இரண்டாவது மாடிக்குத் தூக்கிச் செல்வார். சமையல், வீட்டு வேலைகள் எல்லாவற்றிலும் என் கணவர் எனக்கு உதவி செய்கிறார்.

நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் என் சிரமத்தின் பிரதிபலன். என் திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டு! இதைச் சொல்லிக்கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்! என்னை நான் நம்பினேன். வளர வேண்டும் என்று எண்ணினேன்! ‘எது வந்தாலும் நான் முன்னேறுவேன்! கல்வி பலத்தால் வீர நடை போடுவேன்!’ என்று சிறு வயதிலேயே தீர்மானித்து இடைவிடாமல் பாடுபட்டேன்! இதுவே என் வெற்றியின் ரகசியம்!

என் லட்சியத்தை அடைவதற்கு நான் பட்ட சிரமங்களின் பலனை இப்போது அனுபவிக்கிறேன்! அனைவரிடமும் நான் வேண்டுவது, ஊனம் என்பது சிறியது; லட்சியமோ பெரியது! சிறிய ஊனத்தைத் தாண்டி, பெரிய லட்சியத்தை சாதிக்க வேண்டும்! ஊனத்தையே நினைத்து மறுகாதீர்கள்; வெற்றியை மட்டுமே எண்ணுங்கள்! வெற்றியை நோக்கி அடியெடுத்து வையுங்கள்! உங்கள் ஒவ்வொரு அடியும் உங்கள் தைரியத்தை வளர்க்கும்! வெற்றியை எட்ட வைக்கும்! இதுவே என்போன்ற சக ஊனமுற்றோருக்கு நான் கூறிக்கொள்வது!

கால் ஊனம் காரணமாக எழுந்து நிற்க முடியாதுதான். ஆனால், நன்றாகப் படித்து நல்ல பணியில் சேர முடியும். அதைச் செய்ய முடிந்ததில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. நன்றாகப் படித்து வாழ்க்கையில் நிலைபெற வேண்டுமென்று ஒவ்வொருவருக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் உடல் ஊனத்தை நினைத்து வருந்தாதீர்கள்! அதைத் தோற்கடிப்பதைப் பற்றி சிந்தியுங்கள் என்பதே என் அறிவுரை!” என்கிறார் அனுராதா வெற்றிப் புன்னகையோடு!

1 COMMENT

  1. “ஓட முடியாவிட்டால் என்ன நட, நடக்க முடியாவிட்டா ல் என்ன தவழு .
    தவழ முடியாவிட்டால் என்ன ஊர்ந்து செல் ..ஒரு இடத்தில் மட்டு ம்
    தேங்க கூடாது””என்ற வார்த்தைகள் சோம்பி போன மன!தை எழுந்து நிற்கச்செய்யும்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன் தமிழ் தெலுங்கு இரு மொழி இலக்கிய உலகிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருதும் தினசரி டாட்காம் வழங்கிய தெய்வத் தமிழர் விருதும் பெற்றுள்ளார். இது நம் சனாதனதர்மம் என்ற நூலும் மேடம் கதைகள், பால்டம்ளர் என்ற சிறுகதைத் தொகுப்புகளும் இவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. தெலுங்கில் இவருடைய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி விரிவுரை நூலை ருஷிபீடம் பதிப்பகம் சிறப்பாக வெளியீட்டது. தாய்மண்ணே வணக்கம் என்ற சிறுகதை மங்கையர்மலர் போட்டியில் பரிசு பெற்றதை பெருமையாக நினைக்கிறார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...

வீட்டுப் பணி – அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?

Ten Tips For Successful Work-Life Balance -உஷா ராம்கி அந்தரத்தில் நன்கு இழுத்து இறுக்கமாகக் கட்டியிருக்கும் கயிற்றின் மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு கீழே விழாமல் நல்லபடியாக நடந்து...

ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி – மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!

 -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள். அது ஒரு காலம். இப்போது அங்கு கூட யாரும் காத்திருப்பது இல்லை. ஆனால்...

இனிதே நடந்தேறிய விக்கி- நயன் திருமணம்!

-ஜெனிபர் டேனியல் ***************************************************************** காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்! சுமார் ஏழு ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடிக்கு 09.06.2022 அன்று மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. துள்ளலில் விக்கி! திருமண தினத்தன்று...