0,00 INR

No products in the cart.

தாய்வழிச் சொந்தங்களின் கூட்டுச் சந்திப்பு…!!!

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.

சென்னையில் இருபத்தைந்து ஆண்டுகளாக வசித்து வருபவர் பழனியப்பன். அவரது பூர்விகம் சிவகங்கை மாவட்டம். அவரது அம்மா ராஜாமணி. தாய் மண் திருப்பத்தூர் அருகே ஆ. தெக்கூர் கிராமம். அப்பா ஆறுமுகம் தந்தை மண் சிவகங்கை அருகே அரசனி நைனாங்குளம் கிராமம். மனைவி பிள்ளைகளுடன் பழனியப்பன் சென்னையில் வசித்து வருகிறார். அவருக்குள் பல ஆண்டுகளாகவே ஒரு எண்ணம். அவரது உறவுகள் பெரும்பாலானோர் சிவகங்கை மாவட்டத்தில் தான் இருக்கின்றனர். ஏதேனும் சுப, துக்க காரியங்களுக்கு ஊருக்குப் போய் வருவதோடு சரி. அப்போது கூட சில உறவுகளைப் பார்த்து பேச முடியும். சில உறவுகளைப் பார்க்கக் கூட இயலாது.

இதனை இப்படியே மாற்றிச் செய்தால் என்னவென்று தோன்றியது அவருக்கு. தமது தாய்வழிச் சொந்தங்களை மட்டும் ஓரிடத்தில் கூடச் செய்து விருந்து உண்டு கலகலப்பாகப் பேசி மகிழ்ந்தால் எல்லோருக்குமே எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று யோசித்தார். இதனை உடனே அந்தமான் தீவில் இருக்கும் செந்தில்குமார், குவைத்தில் வசித்து வரும் ராஜசேகர், காரைக்குடியில் வசிக்கும் இளையராஜா, திருப்பத்தூரில் வசிக்கும் பாண்டியன் ஆகியோரிடம் பகிர்ந்து கொண்டார் பழனியப்பன். உடனே ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கினார்கள். தாய்வழிச் சொந்தங்கள் கூட்டுச் சந்திப்பு என்று குழு ஒன்றினை உருவாக்கினால் அது எல்லோரையும் ஈர்க்குமா என்று சந்தேகம் வரவே, “கறி விருந்து” என்கிற தலைப்பில் வாட்ஸ் அப் குழு உருவாக்கினர். எல்லோர்க்கும் தகவல் தரப்பட்டது. 29.௦5.2௦22 ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கம்புணரி அருகே கோவிலாப்பட்டி கிராமத்தில் உறவினர் ஒருவரின் பெரிய இல்லம் ஒன்றில் அந்த இனிய சந்திப்பு நிகழ்ந்து நிறைவானது.

நாற்பது குடும்பங்கள். ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் என மொத்தம் நூற்றைம்பது பேர். அனைவரும் தாய்வழிச் சொந்தங்கள். கைக் குழந்தைகள் முதல் அறுபது எழுபது வயது உறவுக்காரர்கள் வரை சூழ்ந்திருந்தனர் அங்கு. நடன உடையணிந்த உறவுக்கார வண்ணப் பெண்கள் ஓரிடத்தில் பரத நடனம் ஆடத் தொடங்கினர். சிறுவர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? அவர்களது பங்களிப்பாக சிறுவர்களில் சிலர் சிலம்பாட்டம் ஆடத் தொடங்கினர். அங்கே கலகலப்புக்கு கேட்கவா வேண்டும்? நாம் ஒரு சிலரிடம் பேசினோம்.

ராஜசேகர்

“தெக்கூர் நான் பிறந்த கிராமம். இருபது ஆன்டுகளுக்கு மேலாக குவைத்தில் வசித்து வருகிறேன். மனைவி பிள்ளைகள் தெக்கூரில் தான் வசிக்கின்றனர். இந்தத் தாய்வழிச் சொந்தங்களின் கூட்டுச் சந்திப்புக்காகவே குவைத்திலிருந்து நான் வந்து விட்டேன். இந்த வாய்ப்பு மிகவும் அபூர்வமானது. இதுபோன்ற நிகழ்வு இதுவரை எங்கள் உறவுகள் மத்தியில் நடைபெற்றதே இல்லை. அப்படி இருக்கும் போது என் ஆர்வத்தை மேலும் தூண்டி விட்டது இந்தச் சந்திப்பு. இத்தனை உறவுகளை அதுவும் ஒரே இடத்தில் வைத்துப் பார்ப்பது அவர்கள் ஒவ்வொருவருடனும் பேசுவது என்பது என் வாழ்க்கையில் நான் நினைத்துப் பார்க்காத ஒன்றாகும். ரொம்பவே சந்தோசமா இருக்கு மனதுக்கு.” என்கிறார் ராஜசேகர்.

உமா மகேஸ்வரி

சிவகங்கையில் வசிக்கிறோம். என் கணவர், ரெண்டு பொண்ணுங்க ஒரு பையன் எல்லாருமே வந்திருக்கோம். இது தான் முதல் சந்திப்பு. முத்தான சந்திப்பு. என்னோட பொண்ணுங்க ரெண்டு பேருக்குமே முறைப்படி பரதம் தெரியும். நாங்க அதுக்கான ட்ரெஸ் மெட்டீரியலும் கொண்டு வந்தோம். எங்க பொண்ணுங்க மத்த பொண்ணுங்களோட சேர்ந்து ஒரு மணி நேரமா பரத நடனம் ஆடுனாங்க. எல்லாரும் ரசிச்சிப் பார்த்தாங்க. எனக்கும் என் கணவருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. இதைவிட வேறென்ன வேண்டும் எங்களுக்கு?” எனக் கேட்கிறார் உமா மகேஸ்வரி.

பூங்கோதை

“நாங்க திருப்பத்தூர். என்னோட குடும்பம், என் அக்கா குடும்பம், என் தங்கை குடும்பம் என எல்லோருமே வந்திருக்கோம். ஒரு கல்யாணம் காட்சி நல்லது கெட்டதுனாக் கூட வீட்டுல ஒருத்தர் தான் போய்ட்டு வருவோம். ஆனா இந்த நிகழ்ச்சி அப்படி இல்லை. ஒவ்வொரு குடும்பத்துலயும் குழந்தைகலள்லேந்து என்னைப்போல பெரியவங்க வரைக்கும் வந்து கூடிட்டோம். நெஜமாவுமே இவ்வளவு பேரு கூடுவாங்கனு
நான் நெனைக்கவே இல்லை.” எனச்
சொல்கிறார் பூங்கோதை.

காவனூர் கிராமத்தில் இருந்து வந்திருக்கும் மதிவதனிக்கு வயது பதினான்கு. ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறார். “இந்தச் சந்திப்பானது என் வயதுப் பிள்ளைகளுக்கு ரொம்ப ரொம்ப புதுசு. இதுபோல இனியொரு சந்திப்பு எப்போ நடக்கும்னு ஒரு ஏக்கத்தை கொடுத்திருக்கு.” என்கிறார் பதினான்கு வயது மதிவதனி.

இதற்கெல்லாம் காரண கர்த்தாவாக இருந்த பழனியப்பன் என்பவரிடம் இறுதியாகப் பேசினோம். “இந்தத் தாய்வழிச் சொந்தங்களின் கூட்டுச் சந்திப்பு என்பது திடீரென தோன்றியது இல்லை. இரண்டு மூன்று ஆண்டுகளாகவே என் மனதுக்குள் அவ்வப்போது அசை போட்டுக் கொண்டிருந்த ஒன்றாகும். என் தாய்வழி உறவுகள் சிலரிடம் இதனைத் தெரிவித்தேன். இது ரொம்ப நல்ல விஷயம். என்றார்கள். செயல்படத் தொடங்குங்கள் நாங்கள் எல்லோருமே ஒத்துழைப்பு தருகிறோம் என்றனர்.

பழனியப்பன்

தனி ஒரு நபராக என்னால் மட்டுமே எல்லாவற்றையும் செய்து விட முடியாது அல்லவா? அந்தமான் தீவு செந்தில்குமார், குவைத் ராஜசேகர், காரைக்குடி இளையராஜா, திருப்பத்தூர் பாண்டியன் மற்றும் சிலரும் எனக்கு இணையாக நின்றனர். அதனால் தான் இது சாத்தியம் ஆயிற்று. நாற்பது குடும்பங்களில் சுமார் நூற்றைம்பது நபர்களை ஓரிடத்தில் ஒன்றிணைத்து ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக நடத்துவது என்பது அத்தனை எளிதல்ல. காலை உணவு, மதியம் அசைவம் சைவம் உணவு விருந்து. எல்லோர்க்கும் அவ்வளவு சந்தோசம். நிகழ்ச்சி நிறைவு பெற்று கிளம்பிச் செல்கையில் ஒவ்வொருவரும் என்னிடம் கேட்டது, “அடுத்து சந்திப்பு எங்கே எப்போது?” என்று தான்.” எனச் சொல்கிறார் பழனியப்பன்.

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. பள்ளி நாட்களில் இருந்தே கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் தீராத ஆர்வம். வானொலி நாடகங்கள் எழுதுவதிலும் கால் பதித்தது உண்டு. சமூகப் பார்வையுடனான கட்டுரைகள், நேர்காணல்கள் படைப்பதிலும் வல்லுனர். கல்கி, மங்கையர் மலர், தீபம் போன்ற கல்கி குழும இதழ்களின் நடைபாதைதனில் பயணிக்கும் நிரந்தரப் பார்வையாளன்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அரசியலும், பெண்களும்!

0
- ரங்கஸ்ரீ களஞ்சியம்! மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில் ஜனவரி – 1995,...

பகுத்தறிந்து புரிந்து கொள்வோம்!

0
தொகுப்பு: இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம் ஓவியம்:  சேகர் அன்று: துரோணரைத் தாக்கிய ஓணான்!  பாண்டவர்களுக்கும்  துரியோதனாதியர்களுக்கும் ஆசிரியராக துரோணாச்சாரியார் இருந்தார். பாண்டவர்களோ அறிவில் சிறந்து விளங்க , துரியோதனாதியர்களோ மூடர்களாக விளங்கினார்கள். தன் மக்கள் மூடர்களாக இருப்பதை அறிந்து...

கவிதைத் தூறல்!

0
-எஸ்.பவானி, திருச்சி   அபத்தம் காலில் கட்டோடு வந்தவரிடம் காலில் அடியா என அபத்தமாய் கேட்டவருக்கு பதில் சொல்கிறார் தலையை மட்டும் ஆட்டி. ******************************* அவசரம் காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்கிறான் கதவில் பூட்டு தொங்குவதை கவனிக்காத ஒரு அவசரக்காரன். ******************************* மணி ஓசை கோவில் மணி பக்தர்களுக்கு அருள்கிறது பள்ளியின் மணி படிப்பதற்கு அழைக்கிறது தலைவர்களுக்கோ ஆங்காங்கே ஒலிக்கிறது. தொண்டர்களின் ஜால்ரா மணி. ******************************* அநாவசியம் கணவர் நாத்திகம் மனைவி ஆன்மீகம் இது எப்படி சாத்தியம் மற்றவர் ஆராய்வது அநாவசியம்.

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி... பகுதி-9 "ஹே... ராசாத்தி ரோசாப்பூ  வா வா வா  அடியே சீமாட்டி பூச்சூட்டி  வா வா வா  தேவதையே திருமகளே  மாங்கனியே மணமகளே மாலை சூடும் குணமகளே  வா வா வா "  நேர்மறையான விமர்சனங்கள் பெற்ற அருமையான படம். ‘என் உயிர்...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்   விண்வெளி நிலையங்களின் தூதுவர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஐரோப்பா மற்றும் மாஸ்கோவில் அமைந்துள்ள பிற விண்வெளி நிலையங்களின் தூதுவராக செயல்படும் ஒரே இந்தியர் டாக்டர் ஸ்ரீமதி கேசன். ராமனாதபுரத்தில் பிறந்த...