0,00 INR

No products in the cart.

குரு அருள் திரு அருள்!

பகுதி – 1
-நளினி சம்பத்குமார்
குரு பக்திக்கு பரிசளித்த திருமலையப்பன்

குருவின் அருள் நம்மோடு இருந்து விட்டால் போதும் தானாகவே திருவின் அருள், திருமாலின் அருள் நமக்கு கிடைத்து விடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நம்மால் நேரிடையாக இறைவனிடம் பேச முடியாது. ஆனால் , குரு முகமாக பேச முடியும். நமக்காக இறைவனிடம் பரிந்துரைப்பவர் நிச்சயம் குருவாக தான் இருக்க முடியும். “இறைவா ஏதோ தவறு செய்து விட்டான்/ ள் இந்த ஜீவன். தயவு செய்து இந்த ஜீவனை மன்னித்து நற்கதி அருளிடு” என இறைவனுக்கு புரியும் மொழியில் இறைவனோடு நமக்காக பேச கூடியவர் குரு, ஆசார்யன்தான். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒண்றே ஒன்றுதான். அந்த குருவிடம் சரணாகதி செய்ய வேண்டும். குருவின் வார்த்தைக்கு மறுப்பேதும் சொல்ல மாட்டார் பகவான் என்ற முழு நம்பிக்கையில் குருவின் பாத கமலங்களை கெட்டியாக பிடித்துக் கொள்வோம்.

குருவின் வார்த்தைக்காக திருமலைக்குச் சென்று முதன் முதலாக புஷ்ப கைங்கர்யம் செய்த அனந்தாழ்வாருக்கு அந்த திருமலையப்பனே எப்படி எல்லாம் அருள்மழை பொழிந்தான் என்று பார்போமா? திருமலைக்கு போவதற்கே பலரும் தயங்கிய காலம் அது. வன விலங்குகள் மட்டுமே சீனீவாசனின் மலையில் வாசம் செய்து கொண்டிருந்த காலம் அது. உடையவரான ஸ்வாமி ராமானுஜர், திருவரங்கத்தில்  தம் சிஷ்யர்களுக்கு திருவாய் மொழி பாசுரங்களை விளக்கி கொண்டிருந்த காலமும் அதுவே .

“சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து,

அந்தமில் புகழ்க் காரெழில் அண்ணலே” என்ற  திருவாய் மொழி பாசுரத்தை விளக்கி கொண்டிருந்த ராமானுஜர், “திருமலையப்பனுக்கு புஷ்பங்கள் என்றால் அலாதி பிரியம். அதனாலேயே வைகுண்டத்திலிருந்து வித விதமான பூக்களை ஏந்தியபடி தேவர்கள் திருமலைக்கு வந்து திருமலையப்பனின் பாதார விந்தங்களில் பூக்கள் கொண்டு வந்து சமர்பிக்கிறார்கள். புஷ்பங்கள் பல தாங்கி நிற்கும் புஷ்ப மண்டபத்தில் அல்லவா அவன் எழுந்தருளியிருக்கிறான்? அப்படி பட்ட பகவானுக்கு திருமலையிலேயே ஒரு நந்தவனம் அமைத்து வித விதமான பூ செடிகளை வளர்த்து அவனுக்கு தினம் அப்பூக்கள் கொண்டு  மாலை சூட்டிட வேண்டும். உங்களில் யாராவது அந்த கைங்கர்யம் செய்வீர்களா?” என்று கேட்க, சிஷ்ய குழாமிலிருந்து, “ ஆசார்யனே, அடியேன் அந்த புஷ்ப கைங்கர்யத்தை செய்ய தாங்களே அனுக்ரஹிக்க வேண்டும்” என்று சொன்ன அந்த அனந்தார்யரை பார்த்து, “ நீரே ஆண் பிள்ளை” என்று சந்தோஷமாக கூறினார் ஸ்வாமி ராமானுஜர். அன்றிலிருந்தன்றோ அனந்தார்யார் அனந்தான் பிள்ளை என்றே பெயர் பெற்றார்? அவரே அல்லவோ பிற்காலத்தில் அனந்தாழ்வாராக போற்றவும் பெற்றார்?

ர்ப்பிணியான தன் மனைவியோடு கடப்பாரையை சுமந்து கொண்டு கடும் பாறைகள் பல மீது ஏறி திருமலைக்கு சென்று விட்டார் அனந்தாழ்வார். தம் குருவான ராமானுஜர் சொன்னபடி, அங்கே ஒரு அழகான நந்தவனம் அமைக்க முதலில் குளம் வெட்டத் தொடங்கினார். அனந்தாழ்வார், கடப்பாரை கொண்டு மண்ணை எடுத்து தர, அதனை (தன் வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் கருவோடு) ஒரு கூடையில் அந்த மண்ணை சுமந்து கொண்டு, வேறு ஒரு இடத்தில் கொட்டி விட்டு வந்து கொண்டு இருந்தாள் அந்த தர்ம பத்தினி. ஸ்ரீனிவாசனுக்கு அந்த ஸ்ரீ படும் துன்பத்தை பொறுத்து கொள்ள முடியவில்லை. ஒரு சிறு பிள்ளையாக ஓடோடி வந்து அனந்தாழ்வாரின் முன் நின்று, “ஐயா பெரியவரே.. நீங்கள் ஏன் இப்படி கஷ்டப்பட்டு இந்த மலை பிரதேசத்தில் தூர் வாரி கொண்டு இருக்கிறீர்கள்? என்னிடம் அந்த கடப்பாரையை கொடுங்கள். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்.” என கூறியபடி கைகளை நீட்ட, “ அடேய் பயலே இதை நான் ஆசார்ய கைங்கர்யமாக செய்து வருகிறேன். இதில் யார் உதவியும் எனக்கு வேண்டாம். இங்கிருந்து போ.. என் வேலையின் இடையில் வந்து என்னை தொந்தரவு செய்யாதே” என கோபமாக அனந்தாழ்வார் சத்தம் போட, தாய்மையை சுமந்து கொண்டு மண்ணையும் சுமந்து செல்ல சிரமப்பட்டு கொண்டிருந்தவள் முன் சென்ற சீரிய அந்த சிறியவன், “ அம்மா, உங்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது. அந்த கூடையை என்னிடம் கொடுங்கள்.. நான் சென்று அந்த மண்னை கொட்டி விட்டு வருகிறேன்” என கேட்க, பாலகனின் பால் வடியும் முகத்தை பார்த்து கொண்டே அந்த பரவசத்தில் அவளும் தம் வசத்தில் இருந்த மண் கூடையை கொடுக்க, வேகமாக சட் சட்டென்று மண்ணை கொண்டு போய் கொட்டி விட்டு சட சடவென்று காலி கூடையை அவளிடமே திருப்பி கொண்டு வந்து கொடுத்தான் சிறுவன். மெதுவாக மண்னை கொண்டு போய் கொட்டி வந்தவள் இப்பொழுது எப்படி வேகமாக திரும்பி பார்ப்பதற்குள் காலி கூடையுடன் வருகிறாள் என்று சந்தேகப்பட்ட அனந்தாழ்வார், இந்த திடீர் வேகத்தின் ரகசியம் என்ன என்று அவளை பார்த்து கேட்க, அவளோ அந்த சிறியவனின் உதவியை உயர்வாக எடுத்து கூற, கடப்பாரையோடு அந்த சிறியவனை துரத்தி சென்ற அனந்தாழ்வார், “ சிறியவனே ஆசார்ய கைங்கரியமாக தான் இந்த பணியை நாங்கள் செய்து வருகிறோம். இதில் தலையிடாதே என நான் கூறிய பின்னுமா நீ என் மனைவி தானே செய்ய வேண்டிய வேலை செய்ய விடாமல் தடுக்கிறாய்? என கோபமாக கூறிக்கொண்டே கையில் இருந்த கடப்பாரையை சிறியவன் மீது விட்டெறிய அந்த சிறுவனின் தாடையில் பதம் பார்த்தது கடப்பாரை. அந்த சிறியவனாய் வந்த சீனிவாசனின் தாடையிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. சன்னதிக்கு சென்ற அனந்தாழ்வாருக்கு அப்போது தான் சிறியவனாக வந்தவன் சீனிவாசனே என்பது புரிய வந்தது. ஓடிச்சென்று கையில் பச்சை கற்பூரத்தை எடுத்து பெருமானின் தாடையில் இட்டபடியே “ எம்பெருமானே வந்தவன் நீ தான் என்பதை அறிந்து கொள்ளாமல், அடியேன் உம்மையே அடித்து விட்டேனே என கதற, அதற்கு ஏழுமலையானோ, “ எம்பெருமானாரின் வாக்கிற்கிணங்க , அவரிடம் நீர் கொடுத்த வாக்கிற்கிணங்க நீர் செய்யும் இந்த கைங்கர்யம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இனி இந்த பச்சை கற்பூர அடையாளமும், நீர் அமைத்த இந்த குளமும் நந்தவனமும் என்றுமே திருமலையில் நிரந்தரமாக வாசம் செய்யும். இது நீர் உன் குருவிடம் காட்டிய பக்திக்கு அவர் வாக்கிற்கிணங்க நீர் செய்யும் கைங்கர்யத்திற்கு நான் தரும் பரிசு” என்று பரிவுடன் சொன்ன திருமலையப்பனின்   தாடையில் இன்றும் அழகாய் சிரித்து கொண்டு நம்மை சிலிர்க்க வைத்த படி நிற்கிறது அந்த பச்சை கற்பூரம்.

(தொடரும்)

5 COMMENTS

  1. இந்த கதையை என்பேரனிடம் சொன்னேன் . அவன் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை
    அந்த கேள்வி __ ” சின்னப்பையன் மேல கடப்பாறையை எடுத்து வீசுகிறாரே , எப்படி மனசு வந்தது .சாமி பக்தி உள்ளவங்களுக்கு இவ்வளவு கோபம் வருமா? “”அவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது தெரியவில்லை .

    • அருமையான கேள்வி கேட்ட பேரனை நினைத்து பெருமை கொள்ளுங்கள். சாமிக்காக அந்த வேலை‌யை, குரு சேவையாக ஏற்றுக்கொண்டு தீவிரமாக அனந்தாழ்வார் செய்து வந்ததால் வந்த உணர்வு அது. திருமலையானின் திருவிளையாடல்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

பெரியாழ்வார்!

0
 பகுதி - 10 -ரேவதி பாலு, சென்னை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தர் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

பாகம் - 8 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் ஆதி காலத்தில் மொழிகள் கண்டுபிடிக்காத ஒரு சமுதாயத்தில் மனிதன் எப்படி பேசி இருப்பான்? எப்படி தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்? அன்பால் இணைந்து... கண்களால்தான் பேசியிருப்பார்களோ! தங்களின்...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 9                              ‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். ‘நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது.  கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக,...

பறக்கும்  பாவைகள்!

பகுதி - 8 - ஜி.எஸ்.எஸ். “எல்லைகளை உடையுங்கள்!” அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்! ஜெசிகா காக்ஸ் செய்துள்ள...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்! 

பாகம் - 5 -சுசீலா மாணிக்கம் ஓவியம்: பத்மவாசன் இல்லறவியல் (இல்+அறம்+இயல்)      அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை...