0,00 INR

No products in the cart.

ஆங் சாங் சூச்சிக்கு எதிரான சூழ்ச்சி!

– ஜி.எஸ்.எஸ்

மியான்மர் (முந்தைய பர்மா) தலைவர் ஆங் சாங் சூச்சிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம். ஏற்கெனவே 21 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச் சிறையில் இருந்தவர் சூச்சி. அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். எழுபத்தாறு வயதான அவருக்கு இப்போது (மீண்டும்) சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. வழக்குகளும் தண்டனையும் மேலும் தொடரும் என்று தோன்றுகிறது. மியான்மர் ராணுவத்தின் இரும்புப்பிடி அப்படி.

1962 முதல் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு ராணுவ ஆட்சிதான். இதைக் கடுமையாக எதிர்த்துப் போராடினார் தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்ஆங் சாங் சூச்சி (இதனால்தான் 21 ஆண்டுகள் வீட்டுக் காவல்). மியான்மரில் ஜனநாயகம் மலர வேண்டுமென்பதை மக்கள் இயக்கமாக்கினார். மக்கள் இவர் பின்னால் அணி திரண்டு நின்றதை ராணுவத்தால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

மக்களின் தொடர் போராட்டம் காரணமாக 2015ல் மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் சூச்சியின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. என்றாலும் சூச்சியால் நாட்டின் தலைமையை ஏற்க முடியாத நிலை. நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சாங் சூச்சி பொறுப்பேற்றார்.
ஏன் நாட்டின் பிரதமராக முடியவில்லை? மியான்மரின் சட்டம் அப்படி. சூச்சியைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட சட்டம்!

மியான்மர் விடுதலையை வேண்டி பிரிட்டிஷாருக்கெதிராகப் போராடியவர் சூச்சியின் தந்தை ஆங் சான். மக்களின் பேரபிமானத்தைப் பெற்ற அவர், அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டார். நாளடைவில் மக்கள் அவரது மகள் ஆங் சான் சூச்சிக்குப் பின் திரண்டு நின்றார்கள். ஆனால், சூச்சியால் மியான்மரின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியவில்லை.

மைக்கேல் ஆரிஸ்

காரணம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ஆங்கிலேயரான மைக்கேல் ஆரிஸ் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டிருந்தார். வெளிநாட்டவரை திருமணம் செய்துகொண்ட யாரும் தங்கள் நாட்டின் அதிபராக இருக்கக் கூடாது என்று வஞ்சகமாகச் சட்டம் இயற்றி விட்டது மியான்மரின் ராணுவம். 1999ல் மைக்கேல் ஆரிஸ் இறந்து விட்டார். அவரே இறந்துவிட்ட பிறகு மேற்படி சட்டம் செல்லத்தக்கதல்ல என்று மக்கள் குரல் எழுப்பினார்கள்.

பின்னர் அவசரமாக இன்னொரு சட்டமும் இயற்றப்பட்டது. யாருடைய வாரிசுகளாவது வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருந்தால் அவரால் மியான்மரின் அதிபராக முடியாது என்கிற சட்டம்.

சூச்சியின் மகன்கள் பாதுகாப்பு கருதி பிரிட்டனில் தங்கி அந்த நாட்டின் குடியுரிமை பெற்றிருப்பதால் சூச்சியால் இப்போதும் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூச்சிக்கு நெருக்கமான டின் கியாவ் என்பவர் அதிபர் பதவியேற்க, சூச்சி ஆலோசகரானார்.
ஆனால், நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டி, அந்த ஆட்சியைக் கவிழ்த்தது மியான்மர் ராணுவம். அங்குள்ள ராணுவத் தளபதி ஹிலாய்ங் என்பவர் ஒரு சர்வதேச குற்றவாளி. ராணுவத்திலிருந்து ஓய்வு பெற வேண்டிய வயது அவருக்கு. இந்த நிலையில் தன்னுடைய பாதுகாப்புக்காக அவர் மியான்மரின் அதிபர் ஆகி விட்டார். ஆனால், மியான்மர் மக்கள் ராணுவ ஆட்‌சியை ஏற்க மறுத்து, வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், அமைதியான வழியில் போராடும் அப்பாவி மக்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் மியான்மர் ராணுவத்துக்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.


ஆங் சாங் சூச்சிக்கு 505 (பி) பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இயற்கைப் பேரிடர் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இவை கொரோனா விதிமுறையை மீறி பொதுக் கூட்டங்கள் நடத்திய குற்றச்சாட்டுகள்!
அவர் மீது இன்னும் ஏராளமான வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. தேர்தலின் போது சட்ட விரோதமாக வாக்கி டாக்கி வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கு, தேசத் துரோக வழக்கு, ரகசிய சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கு மற்றும் சட்ட விரோதமாக தங்கம் பெற்றதாக வழக்கு… என பல வழக்குகள் ஆங் சான் சூச்சி மீது தொடரப்பட்டுள்ளன.
இவையெல்லாம் இனி ஒவ்வொன்றாக நீதிமன்றத்தை எட்டும். நான்கு வழக்குகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தலா பதினைந்து ஆண்டுகள் என மேலும் அறுபது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மியான்மருக்கு பிற நாடுகள் எந்த அளவுக்கு அழுத்தம் தரப்போகின்றன, எந்தவிதப் பொருளாதாரத் தடைகள் அதன் மீது விதிக்கப்படும் என்பதெல்லாம் இனி தெரியவரும்.

சூச்சியை வீட்டிலிருந்து சிறைக்கு மாற்றலாம். ஆனால், மக்களின் மனங்களிலிருந்தும் உலக சமாதான வரலாற்றுப் பக்கங்களிலிருந்தும் மாற்ற முடியாது.

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...