0,00 INR

No products in the cart.

கொட்டிக் கிடக்குது வாய்ப்பு!

– ஜெனிபர் டேனியல்

கொரோனா பெருந்தொற்று காரணமாக, டிஜிட்டல் வேலைகளுக்கான மவுசு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், சுய தொழில் செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

‘வீட்டிலிருந்து புதிய வேலையைக் கண்டறிந்து பணியாற்றுவது சாத்தியமா?’ என்ற கேள்விக்குச் செல்வதற்கு முன்பு, உலகம் முழுவதும் தினமும் அலுவலகத்துக்குச் சென்று வேலை செய்தவர்களில் கோடிக்கணக்கானோர் தற்போது வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜெனிபர் டேனியல்

ஏற்கெனவே இருக்கும் பணியை வீட்டிலிருந்தே செய்வது சாத்தியமெனில், புதியதொரு பணியைக் கண்டறிந்து சம்பாதிப்பதும் சாத்தியமே என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள்.

வேலைவாய்ப்பற்று இருக்கும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மொழியியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இணையம் வழியே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கணிதம், அறிவியல், பொருளியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களை கற்பிக்கலாம்.

இணையம் வழியே கற்கவும், கற்பிக்கவும் ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைக்கும் சரியான இணையதளங்களை சுய உறுதிப்படுத்தலுக்குப் பிறகு அணுகுவதன் மூலம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு, மக்கள் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்து பொருட்களை வாங்கும் பழக்கம் குறைந்துள்ளது. மாறாக, இணையம் வழியே பொருட்களை வாங்கவும் அல்லது இணையத்தில் தேடல் மேற்கொண்டு அதன் மூலம் நேரில் செல்ல வேண்டிய கடையை தெரிவு செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது.

பல்வேறு தொழில்களைச் சேர்ந்தவர்களும் தங்களது தயாரிப்பை இணையம் வழியே சந்தைப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்தினால் நிறுவனங்களுக்குத் தேவையான இணையதளம், செயலி உள்ளிட்டவற்றை வீட்டிலிருந்தே மேம்படுத்தித் தந்து வருமானம் ஈட்ட முடியும்.

வீட்டிலிருந்தே வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றிற்கு பதிலளிக்கும் பணியை மேற்கொள்வதில் விருப்பமுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சாத்தியமுள்ளது.

ரு நிறுவனத்தின் செயல்பாட்டை, தயாரிப்பை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்ப்பதில் Content Writers பணி குறிப்பிடத்தக்கது. ஒரு நிறுவனத்தின் இணையதளம் தொடங்கி, தயாரிப்புகளின் விளக்கக் கட்டுரை, காணொளி, சமூக ஊடக விளம்பரம் என பல்வேறு நிலைகளிலும் உள்ளடக்க எழுத்தாளர்களின் உதவி தேவைப்படுகிறது. தேர்ந்த மொழியறிவு, நேர்த்தியான எழுத்து நடை உள்ளிட்ட திறன் கொண்டவர்கள் இந்தப் பணியை வீட்டிலிருந்தே மேற்கொள்ளலாம்.

நாளுக்கு நாள் பிறமொழி நாடகங்கள், திரைப்படங்கள், தொடர்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட இணையவழி காணொளி தளங்களில் இவ்வாறான படைப்புகளைக் காண முடிகிறது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே வீட்டிலேயே குரல் பதிவு செய்வதற்கான சாதனங்களைக் கொண்ட கட்டமைப்பை உருவாக்கும் போக்கு இருந்து வந்த நிலையில், அது இப்போது காலத்தின் கட்டாயமாகவும் மாறி வருகிறது எனலாம். நல்ல குரல் வளமும், தக்க தொழில்நுட்ப சாதனங்களும் உள்ளவர்களும் இந்தப் பணி வாய்ப்பை முயற்சித்துப் பார்க்கலாம்.

——————————————————————————————————

 www.kalkionline.com

திறமைமிகு அன்பு வாசகீஸ்,
கல்கி ஆன்லைன் மற்றும் வலைதள பிரிவுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளைத் தேடுபவரா நீங்கள்?
உங்கள் ஆர்வம், விருப்பம், அனுபவம் பற்றிய
சிறு குறிப்புகளுடன் 
customercare@kalkiweekly.com 
என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்புங்களேன்!

——————————————————————————————————

நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் மொழிபெயர்ப்புப் பணிக்கான தேவை எப்போதும் உள்ளது. பல வெளிமாநில, வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை தன்மொழியாக்கம் செய்து வருவதால் மொழிபெயர்ப்புப் பணி முக்கியத்துவம் பெற்று வருகிறது. நல்ல மொழியறிவும், ஆர்வமும், தேடலும் கொண்டவர்களுக்கு, கட்டுரைகளை மொழியாக்கம் செய்வது முதல் ஒட்டுமொத்த நூலையே மொழியாக்கம் செய்வதற்கான வாய்ப்பு வரை கிடைக்கக் கூடும்.

நமக்கு வேண்டிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள நூலகங்களுக்குச் சென்று படிப்பது, இணையத்தில் கட்டுரைகளைத் தேடுவது உள்ளிட்டவற்றிற்கு அடுத்து, தற்போது அனைத்திற்கும் காணொளி வழி விளக்கங்களைத் தெரிந்துகொள்ள விரும்பும் போக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிகரித்துள்ளது. பயன்பாட்டாளர்களின் கவனத்தைத் தக்க வைக்கும் வகையில் காணொளிகளை தொகுப்பாக்கம் செய்பவர்கள் இந்தப் பணியை வீட்டிலிருந்தபடி மேற்கொள்ள முயற்சி செய்யலாம். ஆனால், இந்தப் பணிக்குத் தேர்ந்த மென்பொருள் பயன்பாட்டு அறிவும், சிறந்த கணினியும் தேவை.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையில், அதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. இருப்பினும், பொருளாதாரத்தையும் பங்குச்சந்தை நகர்வுகளையும் உற்றுநோக்கி அனுபவத்தின் மூலம் சரியான முடிவுகளை எடுக்கத் தெரிந்தவர்களுக்கு பங்குச்சந்தை எப்போதும் ஒரு பணமீட்டும் களமே. வெறும் திறன்பேசியை கொண்டே வீட்டிலிருந்தபடி வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

விளம்பரத்துறை அளிக்கும் வாய்ப்புகள் எக்கச்சக்கம். கற்பனை வளம்மிக்க வாசகங்கள் எழுதுவோர் Freelancerஎன்ற வகையில் காப்பி ரைட்டராக விளம்பர ஏஜென்சிகளுடன் பணியாற்றலாம். மிகப்பெரிய நிறுவனங்கள்கூட அவர்களுடைய தமிழ் விளம்பரங்களில் ஏடாகூடமாகத் தடுமாறியிருப்பதை அடிக்கடி காண முடியும். இதிலிருந்தே நல்ல தமிழ், கற்பனை வளம், சந்தைப்படுத்துதல் பற்றிய புரிதல் இவை மூன்றும் இருப்பவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்தை, இணையத்தில் பிரபலமாக்கும் வித்தைதான் எஸ்.இ.ஓ. (SEO-Search Engine Optimization) அதிகம் பிரபலமாகாத, ஆனால் வேகமாக வளர்ந்து வரும் துறை இது. இந்த வித்தை தெரிந்தவர்கள் வீட்டிலிருந்தே கை நிறைய சம்பாதிக்கலாம்.

வலைப்பூ – இது ஒரு வரப்பிரசாதம். நெட்டில் பிளாக் எழுதுவது. ‘பொழுது போகாதவர்களின் இணைய விளையாட்டு அது’ என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை இப்போதே மாற்றிக்கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நீங்கள் இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட எந்த விஷயத்தின் மீதாவது தீவிர ஆர்வம் உடையவராக இருந்தாலோ இன்றே தொடங்குங்கள் ஒரு வலைப்பூ. போதுமான அளவு பார்வையாளர்கள் உங்கள் வலைப்பூவுக்கு உருவாகிவிட்டால், தங்கள் நெட்வொர்க்கில் வந்து இணையுமாறு உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்போவது யார் தெரியுமா? சாட்சாத் கூகுள்.

வெப் டெவலப்பர் – இப்போதைய ஹாட் வேலைகளில் ஒன்று. வீட்டில் இருந்தபடியே தனியாருக்குத் தேவையான வலைதளங்கள் உருவாக்குவதுதான் இந்த வேலையே. இணையத்தில், இதற்கென இருக்கும் பகுதிகளில் உங்களைப் பற்றி ஒரு விளம்பரம் கொடுத்தால் வேலை தேடி வர வாய்ப்பு உண்டு.

‘புரூஃப் ரீடிங்’, ‘எடிட்டிங்’ போன்ற வேலைகளைச் செய்வதற்கு இப்போது நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதிலும், வீட்டில் இருந்தபடியே செய்யத் தயாராக இருந்தால் வரவேற்பு நன்றாகவே இருக்கும். பத்திரிகை அலுவலகங்கள், பதிப்பகங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் வாய்ப்புகள் கிடைக்கும்.

டைப்பிங் நன்றாகத் தெரிந்தால் டேட்டா என்ட்ரி வேலை செய்யலாம். வீட்டில் இருந்தபடியே ஆவணங்களை கம்ப்யூட்டரில் டைப் செய்து ஏற்ற வேண்டும். பெரும்பாலும் அதுதான் வேலை. இந்த வேலைக்காக ஆள் கேட்டு பேப்பரில் வரும் விளம்பரங்களில் தொடர்புகொண்டு பணி தேடலாம். அதோடு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை ஏற்கெனவே பணி செய்பவர்களிடம் உறுதி செய்வதும் முக்கியம்.

வீட்டில் நான்கு கம்ப்யூட்டர் வைக்க இடமிருந்தால் போதும்; குழந்தைகளுக்குக் கம்ப்யூட்டர் பயிற்சி கொடுக்கும் தொழிலை ஆரம்பிக்கலாம். அளவான வருமானத்துக்கும், உங்களின் பொழுதுபோக்குக்கும் இது உத்தரவாதம். கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தெரிந்தால் வீட்டிலேயே ரிப்பேர் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். கம்ப்யூட்டர்தான் என்றில்லை; எந்தெந்தத் துறையில் எல்லாம் ரிப்பேர் பார்க்கும் திறமை உங்களுக்கு உண்டோ, அதிலெல்லாம் நுழையலாம்.

அலுவலகவாசிகளின் மிகப்பெரிய சிக்கலே வீட்டுச் சாப்பாடுதான். கேன்டீன், ஹோட்டல் என சாப்பிடும்போது பர்ஸ் காலியாவதோடு, வயிறும் பதம்பார்க்கப்படுகிறது. இவர்களை குறி வைத்து வீட்டுச் சாப்பாடு விற்பனையில் இறங்கினால், கொடி கட்டலாம். ஒரு இடத்தில் வைத்து விற்பதனாலும் சரி, வேலையாள் மூலமாக அலுவலக வாசல்களில் விற்பதனாலும் சரி சிறந்த வருவாய் தரக்கூடிய வேலை.

பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது சுவாரஸ்யமான வேலை. கேக் டெகரேஷன் பண்ணுவதே ஒரு கலை. அதைக் கற்றுக் கொண்டால் இதில் பிரகாசிக்கலாம். அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல் போன்றவற்றை அணுகுவது பயனளிக்கும்.

மாலை நேர திடீர் கடை ஆரம்பித்து சூப், பிரட் ஆம்லெட், சாண்ட்விட்ச், சாலட் தயாரித்து விற்றுப்பாருங்கள். நல்ல ஆள் நடமாட்டமுள்ள பகுதியெனில் வியாபாரம் சூடு பிடிக்கும்.

இயற்கை உணவுகள் பற்றி பெரிதாகப் பலரும் பேச ஆரம்பித்திருக்கும் நேரமிது. கேழ்வரகு கூழ், கம்பங்கஞ்சி என்று சுத்தம் சுகாதாரமாக ஒரு கடையைப் போட்டுப் பாருங்கள்; ஈஸியாக கல்லா நிறையும்!
மார்க்கங்கள் உண்டு நிறைய. மனம் நம் வசம்தானே? முயற்சி கைவிடாது இல்லையா?!

1 COMMENT

  1. வருமானம் ஈட்டும் ஏகப்பட்ட வழிகளை மிக
    அருமையாக கூறியிருப்பது .மிகவும்
    மகிழ்ச்சியாக இருக்கிறது

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...