0,00 INR

No products in the cart.

கோலங்கள் இல்லாத மார்கழியா?

– தனுஜா ஜெயராமன்

கோலம் போடுவதென்பது நமது மரபுவழி கலாசாரம். அதிலும், மார்கழியில் போடப்படும் கோலங்கள் மிகவும் ஸ்பெஷல். பூக்கோலம், இழைக்கோலம், கம்பிக்கோலம், மாக்கோலம், படிக்கோலம், ரங்கோலி என்று நமது ரசனைக்கேற்ப எத்தனை எத்தனை கோல வகைகள்!

மார்கழியின் அதிகாலை பனியில் வீட்டின் பெண் குலங்கள் குளித்து முடித்து தலையில் ஈரத்துண்டுடன் வாசலில் மண் விளக்குகளை ஏற்றிவைத்து மார்கழியை வரவேற்பது அழகு. அதன் பிறகு அப்பெண்கள் தங்கள் ரசனைக்கேற்ப தெருவடைக்கக் கோலமிடுவது பேரழகு. இப்பெண்கள் கோலமிட்டால் மயில்களும் குயில்களும் நட்சத்திரங்களும் தெருவில் இரைந்து கிடக்கும். அப்பொதெல்லாம் நேர் புள்ளி கோலங்களும் சந்துப்புள்ளி கோலங்களும் வழமையானவை. புள்ளி வைத்து கோலமிடுவது என்பது நமது எண்ணங்களை ஒருங்கே குமியச்செய்யும் சிறந்த பயிற்சியே.

தே போன்று, பழைய காலங்களில் வீட்டு வாசலில் மண் தரைகள் மட்டுமே இருக்கும். அதனை நன்றாகப் பதப்படுத்தி, பசுஞ்சாணம் மொழுகி காயவைத்திருப்பார்கள். பசுஞ்சாணம் கிருமிகளை வீட்டில் அண்டவிடாத இயற்கை கிருமி நாசினி. நன்றாக மொழுமொழுவென மொழுகிய மண் தரையில் பளீர் வெண்மையான பச்சரிசி மாவில் போடப்படும் கோலங்கள் மிக அழகானவை. அதன் ஓரங்களில் செம்மண் இட்டு கூடுதல் அழுகுபடுத்தி இருப்பார்கள். நடுவில் பசுஞ்சாணத்தை உருட்டி வைத்து, அதில் பூசணிப்பூவை வைப்பதே நமது வழமையான பழக்கங்களில் ஒன்று. அந்தக் கோலங்களின் ஓரங்களில் செம்மண் மிளிர, பளீர் வெண்மையில் பூசணி பூவுடன் மனதைக் கொள்ளை கொள்ளும். அந்தக் கோலங்கள், ‘வாசலிலே பூசணிப்பூ வைச்சதென்ன… வைச்சதென்ன?’ என நம்மைப் பாட வைப்பதில் வியப்பில்லைதானே?!

பழங்காலத்தில் போடப்படும் கம்பி கோலங்களுக்கு பல்வேறு பயன்களைத் தரும் ஆற்றலுண்டு. நெளிநெளியாக வளைந்து நெளிந்து போடப்படும் கம்பி கோலங்கள் நமது மூளைக்குப் பயிற்சி தரக்கூடியவை. சிக்கலான அந்தக் கோலங்கள் நமது வாழ்வின் இடியாப்பச் சிக்கலை எளிதாக கையாளும் இயல்பை தரக்கூடியவை என்பது பலருக்குத் தெரியாதது. சவால் நிறைந்த கம்பி கோலங்கள் மூளைக்கு சுறுசுறுப்பும் ஆகச்சிறந்த பயிற்சியும் ஆகும் என்பது கூடுதல் சிறப்பு.

மாக்கோலமென்பது, பச்சரிசியை ஊறவைத்து நன்றாக அரைத்து சிறிது தண்ணீரில் கரைத்து விரல் தேய கோலமிடுவதே. நம் மனதில் நினைத்த உருவங்களை, டிசைன்களை எளிதாக வரைந்து விடலாம். இவற்றை காங்கிரீட் தரைகளில் போடுவதே வழக்கம். பச்சரிசி மாவு கோலங்கள் இடுவது ஈ, எறும்பு போன்ற சிறிய ஜீவன்களின் உணவுக்கான எளிய ஈகை முறையென்பது அதன் தனிச்சிறப்பு.

டிக்கோலம் என்பது, கோடுகளால் ஆன ஒரு ஸ்பெஷல் வகை கோலம். வளையாமல் நேர்த்தியாக வரையப்படும் இவ்வகை கோலங்கள் சவால் நிறைந்தவை. இவை நமது மூளைக்கும் மனதிற்கும் பயிற்சி தருபவை. இவை கைகளினாலும் சிறிய வகை கோல டின்களை வைத்தும் மிகப்பெரியதாகப் போடுவார்கள். ஓரங்களில் செம்மண்களை இட்டு அழகுபடுத்துவார்கள். இதுவும் நம் பாரம்பரிய கோல முறைகளில் ஒன்று.

நாகரிகம் பெருகி, தெருக்கள் குறுகி அபார்ட்மெண்ட் கலாசாரம் பெருகிய இக்காலகட்டத்தில் அதிகம் போடப்படுவது கலர் கலரான ரங்கோலி கோலங்கள். சிறிய தரையோ, பெரிய தரையோ, மண் தரையோ, கான்கிரீட் தரைகளோ எதுவாகினும் மிக அழகாகப் போட்டு விடலாம். மயில்கள், பூக்கள், கடவுள் உருவங்கள் மற்றும் மத்தளம் முதல் வீணை வரை விதவிதமான டிசைன்களை, விதவிதமாக நமது ரசனைக்கேற்ப போடுவது ரங்கோலி கோலங்களின் சிறப்பு. விதவிதமான பூக்களை வைத்துப் போடப்படும் கேரள அத்தப்பூ கோலங்களும் நமது பாரம்பரிய கோலமுறைகளில் ஒன்றே. பூக்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தர வல்லவை.

அக்காலம் முதல் இக்காலம் வரை கோலம் போடும் முறைகளில் ஏதேனும் மாற்றமிருக்கலாம். அதன் மகிழ்ச்சியில் மாற்றங்களேதுமில்லை. அப்போதைய காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கோல நோட்டொன்று கட்டாயம் இருக்கும். அது இல்லாத வீடுகளில்லை எனலாம். அது, தற்போது உருமாற்றம் பெற்று இணையங்களில் கோலங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நம் வேண்டும் விரல் நுனியில் விரும்பிய கோலங்களைப் பெற்று விடலாம். வாசலடைக்க கோலமிடுவதிலிருந்து சிறிய இடங்களில் அழகான வண்ணக் கோலங்கள் இடும் மாற்றத்தைப் பெற்றிருக்கிறது இப்பழக்கம்.

கோலங்கள், அதனைப் போடுபவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மனதில் மகிழ்ச்சியை பரப்ப வல்லவை. வண்ண வண்ணக் கோலங்கள் நமது வாழ்விலும் பல வண்ணங்களை வரவழைப்பவை. மயிலையின் நான்கு மாடவீதிகளில் இடப்படும் கோலங்களைக் காண கண்கோடி வேண்டும். கோலம் நமது பண்பாடு மற்றும் கலாசாரம் சார்ந்தவை. அவற்றை அடுத்தத் தலைமுறைக்கும் இட்டுச்செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கும் உண்டு.


மார்கழியில் பல்வேறு இடங்களில் கோலப் போட்டிகள் நடைபெறுவதும் உண்டு. அதில் இளைய தலைமுறையினர் பலரும் ஆர்வமாகக் கலந்துகொள்வது மிகச்சிறப்பான விஷயம். நமது பண்பாட்டையும் கலாசாரத்தையும் பரப்பும் மார்கழியைப் போற்றுவோம்! கோலக் கலைகளை வளர்த்தெடுப்போம்!

3 COMMENTS

  1. கட்டுரையும் , கோலங்களும் மனதை பரவசப்படுத்தின .கோலம் போடாதவர்களையும் போட வைக்கும்,

  2. கோலங்கள் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். நான் சிறு வயதில் இருக்கும் போது, திருவல்லிக்கேணியில் என் பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம். அங்கே, மார்கழி முழுவதும் தெருவில் வண்ணக்கோலம் தான். பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு போடுவதைப் பார்த்தால் ஆசையாக இருக்கும். உங்கள் கட்டுரையில் அந்த நாட்கள் கண்முன் வந்து சென்றது.

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...