0,00 INR

No products in the cart.

ஒரு கொலுசின் கதை… 

-சேலம் சுபா

ங்கையின் பாத கொலுசுகளும், மழலையின் கால் சதங்கைகளும் என்றுமே கவிஞர்களின் விருப்பத்துக்கு உரியது . குழந்தைகள் அணியும் கொலுசுகளின் ஒலி, அவர்களின் இருப்பை தாயின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது. இளம் பெண் அணியும் சலங்கை ஒலி அவள் வருவதை அவள் கணவன் அல்லது காதலனுக்கு அறிவித்து பரவசத்தை தருகிறது.

அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை இளம்பெண்களின் கவனத்தைக் கவரும் ஆபரணங்களில் வெள்ளி கொலுசுகளுக்கு தனி இடம் உள்ளது. சிறப்பு வாய்ந்த கொலுசுகள் உற்பத்தியில் இந்தியாவிலேயே முதலிடம் பெறுகிறது  தமிழ்நாட்டின் சேலம். இங்கு செய்யப்படும் வெள்ளிக் கொலுசுகளுக்கு உலகளாவிய நற்பெயர் உண்டு.

சேலத்தில் உள்ள சிவதாபுரம், செலத்தாம்பட்டி, சீலநாயக்கன் பட்டி, மெய்யனூர், திருவாக்கவுண்டனூர், மணியனூர், செவ்வாய்பேட்டை, இரும்பாலை, தாரமங்கலம் என சேலம் சுற்றி சுமார் நாற்பது கிலோமீட்டர் வரை உள்ள பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளிப்பட்டறைகள் இயங்கிவருகின்றன. இந்த வெள்ளித் தொழில் இங்கு லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு  வாழ்வாதாரமாக அமைகிறது என்றால் மிகையில்லை.

சேலத்திலிருந்து கொலுசுகள் ஆந்திரா கேரளா குஜராத் மும்பை பீகார் டெல்லி போன்ற இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கொலுசு உருவாகும் விதம் பற்றிக் கேட்கும்போது  மனம் பிரமிக்கிறது.

வெள்ளி பல வித ஸ்டேஜ்கள் தாண்டி நிபுணர்களின் கைகளில் நுண்ணிய வேலைப்பாடுகளைப்பெற்று  பல பேரின் அதீத கூட்டு முயற்சியுடன் அழகிய கொலுசாக  உருமாறி கடைகளுக்கு வந்து நம் கண்களுக்கு விருந்தாகி நாம் விரும்பும் வகையில் நம் கால்களில்  வந்தடைந்து மனதை மகிழ்விக்கிறது.

கொலுசுகளின் ஒலியிலும் அழகிலும் மனம் மயங்கும் நமக்கு  அந்தக் கொலுசுகள் உருவாகும் விதம் பற்றியும் தெரிய வேண்டாமா?

வெள்ளிக் கொலுசுகள் எப்படி செய்யப்படுகிறது என்பதை அறிய வெள்ளிப் பட்டறைகள் நிறைந்த சேலம் செவ்வாய்ப்பேட்டையை வலம் வந்தோம்.

இந்த தொழிலில் 50 வருடத்திற்கும் மேலான அனுபவம் பெற்ற குக்கல் உருக்குப் பட்டறையைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை முதலில் சந்தித்தோம்.  இவரின் பட்டறையில் நம் கண்ணேதிரே உருக்கிய நெருப்புடன் தகதகக்கும் வெள்ளிக் குழம்பை நீளமான மோல்டில் ஊற்றி பத்தே நிமிடத்தில் அவை இறுகி வெள்ளிக் கம்பிகளாக வெளிவந்தது.

மோகன்ராஜ்

“இந்த வெள்ளித் தொழிலில் ஐம்பது வருடத்திற்கும் மேலா இருக்கேன். இந்தியாவில் சேலம்தான் கொலுசுகளுக்கு புகழ்பெற்றது. இப்ப பல ஊர்களில் இந்தத் தொழில் விரிவாகி இருந்தாலும் அடிப்படை சேலம்தான். வெளிநாடுகளிலும் சேலம் கொலுசு என்றால் தனி மதிப்புதான். இந்தியா முழுக்க இங்கிருந்துதான் செல்கிறது.

கடை முதலாளிகளால் பழைய வெள்ளிப் பொருள்களை வெள்ளிக் கட்டியாக உருமாற்றி டச் எனப்படும் தர சதவீதத்துடன் எங்களிடம் தரப்படும்.அவற்றை நாங்கள் எங்கள் பட்டறையில் உருக்கி நான்கடி நீள வெள்ளிக் கம்பிகளாக மாற்றுவோம். இந்தக் கம்பிகள் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்குச்  சென்று மெலிதான கம்பிகள், ஜாலர்கள், ரசகுலா, ஜும்பா  வளையம், நட்டு சலங்கை கொத்து, பூக்கள், முத்துகள் என பல வடிவங்களைப் பெற்று இறுதியாக மெல்ட்டுக்கு சென்று அதன் பின் மெருகு மற்றும் தர பரிசோதனை போன்றவைகளுக்கு உட்பட்டு கடை முதலாளிகள் கைகளுக்கு அழகிய கொலுசாக செல்லும். அவர்கள் பரிசோதித்தபின் அதற்குத் தகுந்த மார்க்கட் விலையை நிர்ணயம் செய்து விற்பனைக்கு காட்சிப்படுத்துவார்கள். இதுதான் ஒரு கொலுசு உருவாகும் விதம். கிட்டத்தட்ட ஒரு கொலுசு உருவாக ஒன்பது முதல் பத்து  கட்டங்களையாவது தாண்ட வேண்டும், ” என்று அவரது பிசியான பணிக்கிடையில் சுருக்கமாக முடித்தார்.

’’அடேங்கப்பா ஒரு கொலுசு செய்ய இவ்வளவு கட்டங்களா ? என்ற வியப்புடன் அவருக்கு நன்றி சொல்லி அடுத்து நாம் சென்றது சேலத்தில் வெள்ளிக் கொலுசுகள் தயாரிப்புக்கு பெயர் போன அதே செவ்வாய்ப்பேட்டையின் பஜார் பகுதிக்கு’’.

ல பட்டறைகளில் உருவாகும் கொலுசுகளை பெற்று அவற்றை இறுதி சோதனைகளுக்கு உட்படுத்தி கடைகளில் கொண்டு சேர்க்கும் பணியில் உள்ள சண்முகம் நமக்கு வழிகாட்ட, குறுகலான சந்துகளில் இருந்த வெள்ளித்தொழில் செய்யும்  ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒரு குடும்பத்தினரிடம் நம்மை அறிமுகப்படுத்தி பேசினோம்.

கைகளும் கண்களும் சுறுசுறுப்பாக கொலுசின் முத்துகளை இணைக்கும் பணியில் மும்முரமாக இருந்தபடி பேசினார் அந்தக் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீதர்.

ஸ்ரீதர்

“ஒரு கார் உருவாகும் முறை போலதான் கொலுசு உருவாக்கமும். காரின் உதிரி பாகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு இடத்தில செய்யப்பட்டு இறுதியாக ஓரிடத்தில் முழுமையான காரின் வடிவம் பெறுவது போலவே வெள்ளி வெவ்வேறு பட்டறைகளில் பல வடிவங்களைப் பெற்று இறுதியாக கொலுசாக மாறுகிறது. நீங்க பார்த்த வெள்ளிக் கம்பிகள் வேறு பட்டறைக்குச் சென்று அங்கு தேவைப்படும் அளவிற்கு மெல்லிய கம்பிகளாகி பட்டிகளாக எங்கள் கைகளுக்கு வரும்.ஏற்கனவே கம்பிகளால் செய்த பூக்கள் முத்துகள் சலங்கைகள் போன்றவைகளை பொடி வைத்து ஊதி பட்டைகளில் ஓட்ட வைப்போம்.

இப்ப நீங்க பார்க்கறது குஷ்பு (ஆஹா நம்ம குஷ்பு பெயர். அப்ப அவங்க பேமஸ் என்பதால் ) அந்த மாடல் கொலுசு. இந்த மாடல் அதிகமாக சேலம் பனங்காட்டில் மட்டுமே உருவாகிறது. இதற்கு ஜால்ராகள் இணைத்து சலங்கைகள் கட்டி அடுத்த கட்டத்திற்கு அனுப்புவோம். முப்பது வருடம் முன் வந்த மாடல் இந்த குஷ்பு. அதற்கு முன் எஸ் மாடல் கொலுசுகள் மட்டுமே உபயோகத்தில் இருந்தன. தொண்ணுறு சதவீதம் முழுக்க கைகளினால் உருவாகும். அது தரமும் கெட்டித்தன்மையும் அதிகம் கொண்டது. அதில் குறிப்பிட்ட சில மாடல்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால் ஐம்பது சதவீதம் மெசின் கட்டிங்கில் உருவாகும்  இந்த குஷ்பு மாடல் வந்தபின் கொலுசு உருவாக்கும் கலைஞர்களின் கற்பனை விரிந்து இன்று பல வகையான டிசைன்களில் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப செய்து தர முடிகிறது.

பூபதி

அந்தக்கால எஸ் மாடல் எம்.ஜி.ஆர் னா இந்தக்கால குஷ்பு மாடல் ரஜினின்னு வெச்சுக்குங்க.”என்று உதாரணத்துடன் ஆரம்பித்து அதே உதாரணத்துடன் சுவாரசியமாக பேசி சிரித்த அண்ணனைத் தொடர்ந்தார் தம்பி பூபதி.

“எஸ் மாடல், லூஸ் செயின், மேனகா, சாவித்திரி, ஜிலேபி, என ஏகப்பட்ட கொலுசு ரகங்கள் உண்டு. இதில் கால்களில் போட்டதும் படியும், தளர்ந்த  லூஸ் ரக கொலுசுகள் வடநாடுகளில் அதிகம் விரும்புகின்றனர்.

மற்ற கொலுசுகள் புதிதாக இருக்கும்போது கால்களில் படிமானம் ஆக சில நாட்கள் பிடிக்கும். சிம்பிளா கேட்பவர்களுக்கு எடை குறைவாக ஒற்றை வரி பட்டியில் விலை குறைந்த மெசின் கட்டிங் கொலுசுகள் உள்ளது. கல்லூரி பயிலும் இளம் பெண்கள் அதிகம் இதை விரும்புகிறார்கள். குழந்தைகளுக்கு அதிக சலங்கைகள் கொண்ட கொலுசு முதல் சலங்கை அற்ற மெலிதான கொலுசு மற்றும் கலர் எனாமல் கற்கள் பதித்த கொலுசு வரை அனேக ரகங்களில் கொலுசுகள் தயாராகிறது.

எடைக்கேற்ப அன்றைய மார்க்கட் விலையை ஒவ்வொரு கொலுசுக்கும் நிர்ணயித்து விற்பனை செய்வார்கள். இதில் முக்கியமானது டச் எனப்படும் வெள்ளியின் தரம்.”

குட் டச் பேட் டச் கேள்விப்பட்டுள்ளோம்? அதென்ன கொலுசில் கூட டச்சா ?

ம் குழப்பத்தை தீர்த்து வைத்தார் ஸ்ரீதர். “என்ன யோசிக்கிறீங்க? தங்கத்துல 916 ஹால்மார்க் முத்திரை இருந்தால் மட்டுமே அது தூய தங்கம் என்று சொல்கிறோம். அதுபோல  வெள்ளியிலும் இருக்கு. தூய வெள்ளியில் செம்பு கச்சா போன்ற சில உலோகங்களைக் கலந்தே பொருள்களை உருவாக்க முடியும்.

தந்தை கிருஷ்ணமூர்த்தி

அந்த விகிதங்களின் சதவீதமே டச் என்று சொல்கிறோம். டச் பார்க்கவென்றே நிபுணர்கள் உள்ளனர் . எங்கள் தந்தை கிருஷ்ணமூர்த்தியும் தம்பி தனபாலும் தனிக்கடை வைத்து டச் பார்த்து தரும் பணியில் உள்ளனர்.

இந்த டச் ஒவ்வொரு ஊருக்கும் வேறுபடும். விலைகளில் மாற்றம் வராது . கடைகளில் நாங்கள் உருவாக்கும் கொலுசுகளை தரும்போது அதிலிருந்து ஒரு ஜதை எடுத்து அதை மெல்டிங் ஸ்கின் பரிசோதனை செய்து  அதன் டச் 82 83 என்று வந்தால் மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இல்லையென்றால் எங்களிடமே தந்துவிடுவார்கள். சில ஊர்களில் 75 வந்தாலும் சரி என்பார்கள். இதெல்லாம் அந்தந்த கடைகளின் வாடிக்கையாளர்களுக்கேற்ப மாறுபடும் .

நம்மை அழைத்து சென்ற சண்முகம் இப்போதுதான் பேசினார்...     “இவர்கள் சொன்னது போல் பல இடங்களில் உருவாகும் கொலுசுகளை ஒன்றிணைக்கும் பணியைத்தான் எங்களைப் போல் நடுவில் இருப்பவர்கள் செய்கிறோம். நாங்கள்  கடைகள் மற்றும் பட்டறைகள் என தொடர்புகளை விரிவாக்கி கடைகளில் தரும் வெள்ளியை இவர்களிடமும் இன்னும் பிற பட்டறைகளிடமும் தந்து இறுதியாய் கொலுசுகளை கடையில் கொண்டு போய்த் தருவதுதான் எங்கள் பணி.

ஒரு முக்கியமான விஷயம், பெரும்பாலும் வெள்ளி வேலை செய்பவர்களுக்குக் கூலியாக, கிலோவிற்கு இவ்வளவு என்று அதில் விழும் வேஸ்டேஜ் ஐ கணக்கிட்டு கிராம் கணக்கில் வெள்ளியாகத் தான் கிடைக்கும்,” என்கிறார்.

மீண்டும் ஸ்ரீதரிடம் திரும்பினோம் . உங்களைப் போன்ற இளைஞர்கள் இந்த வெள்ளித் தொழிலில் அதிக அளவில் உள்ளனரே, உங்கள் படிப்பு
போன்றவைகள்?

முன்பெல்லாம் பத்து வயதில் இருந்தே சிறுவர்களும் இதை கற்றுக் கொண்டனர். அப்போது கல்வியறிவற்ற காலத்தில், வறுமை போக்க சிறார்களை இதில் அமர்த்தி இருக்கலாம். ஆனால் இப்போது அப்படியில்லை. ஏன் நானும் என் தம்பிகளும் அப்பாவிடமிருந்தே சிறு வயதிலேயே கற்றுக்கொண்டோம். நான் பத்தாவது மட்டுமே படித்தேன்.  வெள்ளி வேலையில் நாட்டம் வந்து விட்டதால் படிப்பில் நாட்டமில்லாமல் போயிற்று.

ஆனால், என் தம்பிகள் டிகிரி முடித்துள்ளார்கள். இருந்தாலும் இதே  வேலைதான் செய்கின்றனர்.  இப்படி இன்றைய தலைமுறையினர் படித்திருந்தாலும் எங்கோ இருந்து சோற்றுக்கும் தங்கும் இடத்துக்கும் சிரமப்பட்டு ஏதோ ஒரு வேலையில் ஏதோ ஒரு ஊரில் கண்காணாமல் இருப்பதை விட இப்படி எங்கள் இடத்திலேயே எங்கள் பெற்றோரின் தொழிலை செய்வதைத்தான் விரும்புகிறோம். அதனால் படிப்பு இங்கு தடையாக இருப்பதில்லை. என்ன… இந்தத் தொழிலில் முன்னேற்றம் காண வேண்டுமென்றால் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். வரும் வருமானம் மிகச்சரியாக இருக்கும் . அதிலும் இந்தக் கொரானா காலத்தில் வேலையே இன்றி சிரமப்பட்டதை மறக்கவே முடியாது. இப்போதுதான் படிப்படியாக நிலைமை சரியாகி, எங்களுக்கு ஆர்டர்கள் வருகிறது .”

காஞ்சனா

இவர்கள் குடும்பம் முழுக்கவே  இந்த வெள்ளித் தொழிலில் பல வருட அனுபவம் மிக்கவர்களாக உள்ளனர். திரும்பி வரும்போது ஸ்ரீதரின் அம்மா காஞ்சனாவும் பேரனை கொஞ்சியபடியே கம்பியில் சலங்கைகளை மாட்டிக் கொண்டிருந்தார்.

என்ன பாக்கறீங்க ? எங்களைப் போல்தான் பலரும். குடும்பங்களாக இந்தத் தொழிலில் இருந்தால்தான் வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரம் கிடைக்கும். வீட்டுல சமையல் நேரம் போக சலங்கைகளை கோத்துத் தருவது போன்ற கொலுசுப் பணிகள் செய்வதை  என் போன்ற குடும்பத்தலைவிகளும் விரும்புவோம். வீட்டிலிருந்தே செய்வதால் பொழுதும் போகும், தொழிலுக்கு உதவினோம் என்ற நிறைவுடன் நாலு காசும் வருமே.” என்றபடி நிதானமாக சலங்கைகளை கம்பிகளில் கோர்த்தார்.

நாம் அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டுத் திரும்பும் வழியில் “வெள்ளி கொலுசு மணி வேகாத கண்ணு மணி’’ எனும் பாடல் காற்றின் வழியே நம் காதுகளை நிறைத்தது.

Related Articles

பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநர்!

1
-லதானந்த் பொள்ளாச்சி நகரவாசிகளுக்கு அது ஒரு புதுமையான காட்சி. நகராட்சிக்குச் சொந்தமான மோட்டார் வாகனம் ஒன்றை பொள்ளாச்சி நகரத் தெருக்களில், நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அனாயசியமாக இயக்கித் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருப்பதுதான் அந்தக்...

அழிந்து வரும் தொழில்! மீட்டெடுக்கும் வழி என்ன?

-சேலம் சுபா சேலத்தின் அதிமுக்கியமான பகுதி அது. ஒருபுறம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மறுபுறம் தீயணைப்புத்துறை அலுவலகம்,  அரசு மருத்துவமனை என்று மக்கள் அதிகமாக வந்து போகும் இடம். அங்கு நூறு வருடங்கள் பழமையான...

கோவையின் மின்சாரப்  பெண் ஹேமலதா அண்ணாமலை!

1
-லதானந்த் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக்கொண்டு வாகனங்களை இயக்குவதில் செலவு அதிகம்; சுற்றுச்சூழலும் பெருமளவு மாசடைகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில், கோவையில், படித்த பெண்மணி ஒருவர் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும்...

ஆட்டிஸம் எனும் விந்தை!

- மஞ்சுளா சுவாமிநாதன் பிரிட்டனை சேர்ந்த Stephen  Wiltshire, 47, ஒரு திறமையான ஓவியர். இவர் ஒரு முறை ஒரு நிலப்பரப்பைப் பார்த்து விட்டால், இம்மி பிசகாமல் அந்த இடத்தை தத்ரூபமாக வரைந்துவிடுவார். இவருக்கு மூன்று...

தத்ரூப ரங்கோலிகள் – இல்லத்தரசியின் சாதனை!

1
-சேலம் சுபா அந்தக் குழந்தையின் கண்களில் தெரியும் துள்ளலும் உதட்டு சிரிப்பும் பார்க்கும் யாரையும் இன்னும் சிறிது நேரம் பார்க்கும்படி தூண்டும். நீரில் மிதக்கும் அழகிய வாத்து, மரத்தில் தொங்கும் மாங்காய், கண்களில் காதலுடன்...