FB வாசகியர்களின் புகைப்படப் பதிவுகள்!
என் பிறந்த ஊரான திருவையாற்றில் (தஞ்சை பக்கத்தில் உள்ள கிராமம்) எங்கள் பழைய கால வீட்டின் மொட்டை மாடியில், பழைய கோபுரம் பின்னணியில், பிரம்புக் கூடை நாற்காலியில் உட்கார்ந்திருப்பது என் தம்பி, இடது புறம் நானும், வலது புறம் என் அண்ணனும் நின்று கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் எனக்கு அந்தப் பழங்கால வீட்டை (மின் வசதியில்லாத) நினைவுபடுத்தும் அரியப் புகைப்படம்.
– ராதிகா ரவீந்திரன், சென்னை
………………………………………………………..
ஒரு முறை என் மாமியாரின் பிறந்த ஊரான, குமிட்டிதிடல் என்ற கிராமத்திற்குச் சென்றபொழுது அங்கு பாட்டி விறகு அடுப்பில் சமைப்பதைப் பார்த்து அருகில் உட்கார்ந்து நானும் சமைக்கிறேன் என்று சொன்னவுடன், என் கணவர் இந்த புகைப்படத்தை எடுத்து விட்டு, அது கிராமத்து புகைப்படம் என்பதால் அதைக் கருப்பு வெள்ளையாக மாற்றி விட்டார். இப்போது நினைத்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அந்தத் தருணம்.
– உஷா முத்துராமன், திருநகர்.
………………………………………………………..
தினமும் மாலை வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றவுடன் எங்கள் ஊர் சாலையில் ஒரு ஐந்து கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று வருவேன். ஜில்லென்ற காற்று, ரம்மியமான பறவைகளின் குரல். தினமும் இப்படி சைக்கிளில் எங்கள் ஊர் கிராமத்து சாலையில் செல்வதால் மனசும் ரிலாக்ஸ் அடைகிறது. சுறுசுறுப்பும் அதிகரிக்கிறது. இதில் என்ன வேடிக்கை என்றால், இப்பொழுதெல்லாம் நகர்ப்புறங்களில் இருந்து கிராமத்தை நோக்கி மக்கள் சைக்கிளில் வரத் தொடங்கிவிட்டார்கள் ரிலாக்ஸாக!
– பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
………………………………………………………..
நான் 1972ல் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தளவாய்புரம் பள்ளியில் தாவணிகள் சூழ எடுத்த கிளாஸ் போட்டோ… கீழே உட்கார்ந்திருக்கும் மாணவிகளில் இடமிருந்து வலம் மூன்றாவது யார் தெரியுமா? நானேதான். கோமதி. தனி போட்டோ தளவாய்புரத்தில் உள்ளது. இதை மட்டும் திருமணமாகி வரும்போது அம்மா சீருடன் கொடுத்தாள். பத்திரப்படுத்தினேன். இன்று மங்கையர் மலரில் பகிரும் வாய்ப்பைக் கொடுத்தது மகிழ்வாய் இருக்கிறது.
– கோமதி சிவாயம், திருநெல்வேலி.
………………………………………………………..
இளமைக்கால போட்டோ… கிராமிய சூழல். ஏங்க, அப்ப என்ன எல்லார் கையிலயும் ஸ்மார்ட் போனா இருந்தது? கை கேமராவுல ஒன்றிரண்டு எடுத்திருந்தாலும் இப்ப அத எங்க போய் தேட… இரண்டு ஆண்டுக்கு முன் வேண்டுதலை நிறைவேற்ற திருச்செந்தூர் சென்று முடி காணிக்கை கொடுத்துவிட்டு, அப்படியே முக்கூடல் கிராமத்திலுள்ள மாமியார் வீட்டுக்குப் போனோம். அங்கு தவழ்ந்தோடும் தாமிரபரணி ஆற்றில் ஆசை தீர குளித்த பின், பக்கா கிராமிய சூழலில் கரையில் க்ளிக்கிய போட்டோ இது. இள வயது நிகழ்வானாலும் இரண்டாண்டு முந்தையதானாலும் ஞாபகம் ஒன்றுதானேங்க! சீனியரும் சிறுவயதுக்கு சமம்தானே!
– ஜெயகாந்தி மகாதேவன், சென்னை.
………………………………………………………..
இந்தப் புகைப்படம் எனது சிறு வயதில் எங்களது சொந்த ஊரில், உறவினர் திருமணத்தின்போது எடுத்தது. பட்டுப் பாவாடையுடன், சட்டையும் அணிந்து வலது புறத்தில் வித்தியாசமான தோற்றத்துடன் நான்! இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவரும் தற்போது பல்வேறு இடங்களில் இருந்தாலும், இந்தப் புகைப்படம் மட்டும் எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும்.
– லக்ஷ்மி சூர்யகுமார், மேடவாக்கம்.
………………………………………………………..
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது 1979ஆம் வருடம்
என்.எஸ்.எஸ். கேம்ப் என்று எங்களை ஒரு கிராமத்தில் கொண்டு விட்டது எங்கள் கல்லூரி நிர்வாகம். அங்குள்ள மக்களுக்கு நாங்கள் சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டை பற்றி பிரச்சாரம் செய்து, அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் எங்களிடம் பேசவே கூச்சப்பட்டார்கள். அவர்களை சகஜமாக்குவதற்கு ஆட்டம் பாட்டம் தேவைப்பட்டது. அப்போது பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை’ என்ற பாடலை நான் பாட, என் தோழிகள் டான்ஸ் ஆட, எல்லா மக்களும் கைத்தட்டி ரசித்து எங்களிடம் பேச ஆரம்பித்தார்கள். இப்போதென்றால் வீடியோவே எடுத்திருக்கலாம். அப்போது போட்டோ கூட எடுக்க வழியில்லை. ஆனால், 40 வருடங்களுக்குப் பிறகும் மனத்திரையில் ஓடும் படத்தை ரீவைண்ட் செய்ய மங்கையர் மலர் வாய்ப்பளித்து உள்ளது. நாங்கள் ஸ்டூடியோவுக்குப் போய் எடுத்த எங்கள் குரூப் போட்டோ மேலே கொடுத்துள்ளேன். அதைப் போடுங்களேன்.
– ஹேமலதா ஸ்ரீனிவாசன், பம்மல்.
………………………………………………………..
குழந்தைப் பருவ கிராமிய போட்டோ. எனக்கு 78வயதாகிறது. என் சின்ன வயதில் காமிராவே பார்த்ததில்லை. ஸ்டூடியோ போய்தான் எடுக்கணும். ஆகவே, எனது 14 வயது போட்டோவை அனுப்பியுள்ளேன்.
– ராஜலக்ஷ்மி கௌரிசங்கர், மதுரை.
………………………………………………………..
நாகர்கோவிலில் வடிவீஸ்வரத்தில் எங்கள் வீட்டு வாசலில் நானும் என் அண்ணனும். அண்ணன் பெயர் ஜோதி சொருபானந்தம்.
அடுத்த படம் ராஜபாளையம் அய்யனார் கோவில் ரோடு. வடக்கு சம்பந்தபுர அக்ரஹாரத்தில் தெரு அடைக்க நின்று நான்கு சகோதரிகளும் எடுத்துக்கொண்ட புகைப்படம் (ரீ ப்ரிண்ட் போடப்பட்டது).
இ.வலம் : சுப்புலட்சுமி, ரேவதி, அவருடைய மகள் சிறுமி சாரதா சுப்புலட்சுமி, லோகநாயகி, கடைசியில் நான் ஜானகி.
– ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்
அந்த நாள் ஞாபகம்…. ஒவ்வொரு வாசகரையும் அனுபவமும் சுவாரசியமாக இருந்தது. பழைய நினைவுகளை மறக்க முடியாத நிகழ்வுகளையும் அசைபோட வைத்துவிட்டது மங்கையர்மலர்.
‘அந்த நாள் ஞாபகம் ‘ வாசகர்கள் ஒவ்வொருவருடைய அனுபவமும் நன்றாக சுவாரஸ்யமாக இருந்தது.