0,00 INR

No products in the cart.

கந்து வட்டியிலிருந்து மீட்போம் பெண்களின் சுயம் காப்போம்!

-சேலம் சுபா 

தாங்கள் நடத்தும் என் ஜி ஓ மூலம் பெண்கள் சுயதொழில் செய்து பொருள் ஈட்டவும், தவறு செய்யும் கணவனை தட்டிக்கேட்டுத் திருத்தவும் தேவையானத் துணிவை பெண்களுக்கிடையே மூட்டி வருகின்றனர் கொடைக்கானலைச் சேர்ந்த டேவிட் தாமஸ் சுதா தாமஸ் தம்பதி.

இவர்கள் நடத்தும் இந்தியா நிர்மாண் சங்கத்தின் அங்கமாக செயல்படும் டெய்லரிங் யூனிட்டிலும் கார்பென்டரி யூனிட்டிலும் பயிற்சி பெற்று தங்கள் உழைப்பினால் யாரையும் சார்ந்திராத பொருளாதாரம் பெற்று மகிழும்   பெண்கள் நன்றிக் கண்ணீரில் நனைகின்றனர்.

வாருங்கள் இவர்களிடம் சற்றே உரையாடுவோம்

உங்களைப் பற்றியும் சங்கம் குறித்தும்?

ன் பெயர் டேவிட் பருன்குமார் தாமஸ். மனைவி சுதா. சொந்த ஊர் திருநெல்வேலி. இருவருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வெவ்வேறு பிரிவுகளில் பணி. பணிக்காக சென்னை பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து விட்டு யூரோப் சென்று விட்டோம். பன்னிரண்டு வருடங்கள் அங்கிருந்தோம். நாங்கள் பொருளாதார நிறைவுடன் வாழ்ந்தாலும் கார்பரேட் பணியில் திருப்தியின்றி சம்பாதித்த வரை போதும் நாம் இந்த சமூகத்திற்கு செய்யப் போகிறோம் எனும் கேள்வியுடன்  திரும்ப இந்தியா வந்த போது அடுத்து என்ன என்ற தேடல் இருந்தது. எங்களுக்கு குழந்தைகள் இல்லை.  எங்கள் கவனம் முழுவதும் சேவைகளில் சென்றது.

நாங்கள் அடிக்கடி சென்றது கொடைக்கானல். அந்த ஊரின் இதமான குளிர்ச்சியும் பசுமையான சூழலும் அமைதியும் எங்களுக்கு மிகவும் பிடித்துப்போய் இங்கேயே வந்து செட்டிலானோம். அந்த நேரம்தான் எங்கள் நட்புகள் பத்துபேருடன் இணைந்து இந்த என் ஜி ஓவைத் துவங்கினோம். இதை துவங்கி பதினெட்டு வருடங்கள் ஆயிற்று. எங்கள் வாழ்க்கை முழுவதையும் இங்குள்ள பெண்களின் மேம்பாட்டுக்காக அர்பணிப்பதை கடவுள் எங்களுக்கு இட்ட கடமையாக நினைத்து மகிழ்கிறோம்.

பெரும்பாலோருக்கு பணமும் மனமும் இருந்தாலும் சேவை செய்ய நேரம் இருக்காது. அவர்களைப் போன்றோர் தரும் உதவிகள் மற்றும் ஆதரவில் இந்த அமைப்பு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

இந்தியா நிர்மாண் சங்கப் (என் ஜி ஓ வின்) பணிகள்?

பொருளாதாரத்தில் நிறைவு பெறாத பெண்கள்தான் எங்கள் சேவையின் இலக்காக இருந்தது. காரணம் கொடைக்கானல் பொறுத்தவரை பணம் புழங்கும் சுற்றுலாதலம் என்றாலும் அங்கு பெரும்பாலும் ஆண்களே பணியில் இருந்தார்கள். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்கினார்கள் .சம்பாதிக்கும் ஆண்கள் சம்பாதிப்பதில் பெரும் பகுதியை குடிக்காக செலவிட்டு வீட்டு செலவுகளுக்காக பெண்களை அலைய விடுவதை நேரில் பார்த்துள்ளோம். அதுவும் கந்துவட்டிக்காக பணம் பெற்று அதை அடைப்பதற்குள் மீண்டும் மீண்டும் கடன் வாங்கி கஷ்டப்படும் பெண்கள் நிறைய பேர் இங்கு இருந்ததைப் பார்த்து இனி இந்தப் பெண்கள் கந்துவட்டியில் சிக்கக் கூடாது என்று அவர்களைத் தேடிப்போய் அவர்களுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன்களைப் பெற்றுத் தந்தோம். இதற்கு முழு முயற்சியில் இறங்கியது என் மனைவி சுதாதான்.

அதன் பின் வங்கிகளில் அவர்களுக்கான கடன் உதவிகளைப் பெற்றுத் தந்தோம். கடன்களைக் கட்ட அவர்கள் படும் பாட்டை பார்த்து அடுத்த கட்ட உதவியாக நபார்டு மற்றும் வங்கிக் கடனை அவர்கள் பெற்றுக்கொள்ள வழிகாட்டினோம். அது மட்டும் இன்றி அவர்கள் சுயமாக வருமானம் ஈட்டினால் மட்டுமே கடன் போன்றவைகளில் இருந்து விடுபடமுடியும் என்று ஆலோசித்து முதலில் ஒரு சானிடரி நாப்கின் தயாரிக்கும் யூனிட்டை துவங்கினோம்.

ஆனால் அது தொடர்ந்து இயங்கவில்லை. காரணம் பெண்களின் ஆர்வமின்மை. வெளியே வரத் தயங்கிய நிலை. திருமணம் பிள்ளைப்பேறு இப்படி பல காரணங்கள். அடுத்து தையல் பயிற்சியைத் தந்து தையல் மிசின் வாங்கித் தருவதன் மூலம் அவர்களுக்கு உதவலாம் என்று கொடைக்கானல் செல்லபுரத்தில் பத்து வருடங்கள் முன்பாக டெய்லரிங் யூனிட்டைத் துவங்கினோம். இதிலும் பல தடைகள். பயிற்சிக்கு வரும் பெண்கள் திடீரென்று கணவர் அனுப்பவில்லை எனும் காரணம் சொல்லி வரமாட்டார்கள். அவர்களுக்கு எடுத்து சொல்லிப் புரியவைப்பதும் உண்டு.

துவங்கி பத்து வருடங்கள் ஆனாலும் கடந்த ஐந்து வருடங்களாகத்தான் தொடர்ந்து இயங்கி தற்போது நான்காவது பேட்ச் பயிற்சி முடிந்துள்ளது இதில் பயிற்சி தருவதுடன்  இங்கேயே அவர்களுக்கு வேலையும்  தரப்படுகிறது எங்களிடம் பயிற்சி பெற்ற பெண்களே மற்ற பெண்களுக்கு பயிற்சியைத் தருவதுடன் யூனிட்டை வெற்றிகரமாக  நடத்தியும் வருகிறார்கள். இங்கு துணிப்பைகள், பேட்ச்வர்க் குவில்ட், பெட்ஷீட், சோபா கார்களுக்கான குஷன்ஸ். தலையணை உறைகள்  போன்ற பல தயாரிப்புகளுக்கு தற்சமயம் நல்ல ஆர்டர் வருகிறது.

அடுத்து நாயுடு புரத்தில் கார்பென்டரி யூனிட்டைத்துவங்கினோம். இதிலும் பல பெண்கள்  பயிற்சி பெற்று, வரும் ஆர்டர்களை செய்து கொடுத்து வருமானம் பெறுகிறார்கள். டேபிள் வார்ட்ரோப் நாற்காலிகள் புத்தக அலமாரிகள் போன்றவைகளை செய்து தருகிறோம். வெளியிலிருந்து பயிற்சியாளர்களை அழைத்து வந்து பயிற்சிகளைத் தருகிறோம்.

யூகலிப்டஸ் எண்ணெய் தயாரிக்கும் யூனிட்டும் உள்ளது. இங்கும் பல பெண்கள் பயன்பெறுகின்றனர். இந்த யூனிட்டுகளில் அனைவரும் பெண்களே.

கொடைக்கானலில் உள்ள பெண்களுக்கு குடும்பத்தை தாண்டி வெளியே வந்து சுயமாக சம்பாதிக்க இன்னும் கூட துணிவு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் எங்களிடம் வந்து இப்போது தனியே வண்டியில் செல்லும் பெண்களின் முகத்தில் தெரியும் தன்னம்பிக்கை இனி வரும் தலைமுறைகளுக்கு நிச்சயம் பயன்படும் எனும் திருப்தியே எங்கள் மகிழ்ச்சி. குடித்து விட்டு வரும் கணவர்களை எதிர்த்துக் கேள்விகள் கேட்கும் அளவுக்கு அவர்கள் தெளிவைப் பெற்றுள்ளது இன்னும் மகிழ்ச்சி.

மேலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் காந்தீய வழியை பின்பற்ற சொல்லி கற்றுத்ருகிறோம். இதற்கான காந்தி சென்டரையும் கொடைக் கானலில் இருந்து பழனி செல்லும் வழியில் இந்த அமைப்பின் மூலம் நிறுவியுள்ளோம். இங்கு காந்தியின் அகிம்சை வழிகள் லஞ்சம் தவிர்ப்பது போன்ற பலவற்றை கற்றுத் தருகிறோம். இதனால் இங்கு வருபவர்களிடையே சற்றே மாற்றம் தெரிகிறது.

அடுத்து உங்கள் இலக்கு?

ந்த அமைப்பு பழனியிலும் இருக்கிறது. அங்கும் கொடைக்கானலிலும் இந்த அமைப்பின் மூலம் பயன் பெற்ற பெண்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தை தாண்டும். ஆனாலும் இன்னும் உள்ள பழங்குடியினப் பெண்கள் முழுமையாக வெளியே வரத் தயங்குகிறார்கள். அவர்களுக்கும் அவர்கள் விரும்பும் பயிற்சிகளைத் தந்து சுயமாக வாழவைக்க வேண்டும்.

கந்து வட்டி மீட்டர் வட்டி இவற்றிலிருந்து பெண்களை மீட்டு கடனில்லாத வாழக்கையை அவர்களுக்குத் தர வேண்டும். கல்வியின் அவசியத்தைப் புரிய வைத்து அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழி செய்ய வேண்டும்.

நல்ல கல்வியும் நல்ல ஆசிரியரும் அமைந்து விட்டால் எந்தப் பிள்ளையும் பாதை தவறிப் போக மாட்டான் என்பதை அவர்களுக்கு உணர்த்தி வருகிறோம்.  தற்சமயம் எங்களிடம் வரும் பெண்களின் பிள்ளைகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் கல்வி செலவுக்கும் இந்த அமைப்பு உதவி வருகிறது. மேலும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த எங்கள் போர்டு மெம்பர்ஸ் ஆலோசித்து வருகிறோம்.”

தாமஸையும் சுதாவையும் அப்பகுதிப் பெண்கள் தங்கள் சொந்தப் பெற்றோராகவே நினைத்து மகிழ்வதில் ஆச்சர்யம் இல்லைதானே? உண்மையில் பொருத்தமே.

1 COMMENT

  1. தையல் தொழிலில் தொடர்ந்து ஈடுபாட்டுடன்
    செய்து வந்தால் பெண்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மனமும் ஒருமுகப்பட்டு கவலைகள் மறக்கபடும்.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!

வைகாசி விசாகம் சிறப்பு! -சேலம் சுபா    உலகின் மிக உயரமான முருகன் சிலை எங்குள்ளது எனக் கேட்டால் உடனே மலேசியா பத்துமலை என்று சொல்லியிருந்த நாம், இனி அதை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள நம் தமிழ்நாட்டில்...

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

MENSTRUAL  CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்) -ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

- ஆன்மிகம். காஞ்சி பெரியவரின் பத்து கட்டளைகள். காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய். அன்றைய தினம் நல்ல தினமாக இருக்க கடவுளை வேண்டிக்கொள். அடுத்து புண்ணிய நதிகள்,...

முற்பகல் செய்யின்…

ஒரு பக்கக் கதைகள். ஓவியம்: சேகர்                             சிலுக்குவார்பட்டியில், முதல் பட்டதாரி வினூஷ். பெண்களில் தாமரை. சென்னையில் ஒரே...

கவிதைத் தூறல்!

- லிடியா இம்மானுவேல், மயிலாடுதுறை   அங்கெல்லாம் இல்லை! விலங்குகள் வாழும் காட்டில் இல்லை! பறவைகள் வாழும் கூட்டில் இல்லை! மனிதர்கள் வாழும் நாட்டில் இருக்கின்றது முதியோர் இல்லங்கள்! ************************************ மனமுறிவு! தடாக வாழ்வில் தாவிய தவளையால் நிலவிற்கும்! அந்த குளத்திற்கும் உறவில் விரிசல் உண்டானது! ************************************ பாதை மாறிய பயணங்கள் அமைதியான ஓடை நீர் கடலில் கலந்ததும் பிரளயமானது! தீப்பந்த நெருப்பு தீபத்தில் ஏற்றியதும் அமைதியானது! ************************************ காணவில்லை... திருவிழாவில், காணாமல் போன அந்த...