0,00 INR

No products in the cart.

மயங்கினேன் உன்னைக்கண்டு

சிறுகதை

வேதா கோபாலன்                                                      ஓவியம் : தமிழ்

ர்ஷிதாவின் வீட்டின் மாடியறையில் சிரிப்பு கொடிகட்டிப் பறந்தபோது, பிற்பாடு ஏகப்பட்ட திருப்பங்கள் நிகழும் என்று யாரும் அறிந்திருக்கவில்லை.

கயிற்றின்மேல் நடக்கும் கழைக்கூத்தாடி மாதிரி  ஜெயந்திகா இரண்டு கையில் குளிர்பானங்களும் நொறுக்குத் தீனிகளும் எடுத்துக்கொண்டு நடந்து வர “எங்கே… கைதட்டு பார்ப்போம்…” என்று சிரித்தவாறு உசுப்பினாள் ஆவர்த்தினி.

“சொல்ல மாட்ட பின்ன…  பாவம்… ஹர்ஷிதாவோட மம்மி பக்கோடா போட்டுக்கிட்டிருக்காங்க… யாராவது போய் உதவி செய்ங்களேண்டீ…”  என்றாள் ஜெயந்திகா.

“நான் உதவிதான் செய்துக்கிட்டிருக்கேன்…” என்று மழலைபோல் சொல்லிச் சிரித்தாள் விநித்ரா.

“உக்கும்… இங்க ஹர்ஷிதாவின் டாடி ஐம்பதாயிரம் ரூபாய் போட்டு வாங்கின நவீன ரக மெத்தையில் ஸ்ரீ ரங்கநாதர் மாதிரிப் படுத்துக்கிட்டு  உதவியாம் உதவி… ஊம்?”

”நான் போய்த் தொந்தரவு செய்யாதது உதவிதானே…”

மீண்டும் சிரிப்பு உத்தரத்தைத் தொட்டது.

“அ…து…ச…ரி..” சிரித்த ஆவர்த்தினி திரும்பிப் பார்த்தாள்.

“ஆமாம்..இன்னிக்கு ஏன் சஞ்சனா மௌன விரதம் மாதிரி…?”

“நானும் கவனிச்சேன்… என்னாச்சு?”

சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தாள்  சஞ்சனா. ஆனால் இது மாதிரி விஷயங்களை சிநேகிதிகளிடம் சொல்லாத பெண்ணும் ஒரு பெண்ணா என்று மனசு கேள்விகேட்டது.

“தபாரு… மனசில் இருக்கு வெளியே வர மாட்டேங்குது… அப்டிதானே…  தொண்டையில் ஒரு குத்துவிடவா?” என்று கேட்ட விநி, அதைச் செய்தாலும் செய்துவிடுவாள் என்று பயமாய் இருந்தது சஞ்சனாவுக்கு.

“இர்றி… இர்றி… சொல்லிடறேன்… யேய். அந்தக் கதவைச் சாத்து…” என்று ஆவர்த்தினிக்கு ஆணை இட்டுச் சொல்ல ஆரம்பித்தாள்.

ஒரு சஸ்பென்ஸ் சினிமா பார்க்கும் ஆவலுடன்  அனைவரும் நடுவில் ஒரு தாமரை மொட்டுப்போல் குவிந்ததை யாரேனும் மேலேயிருந்து போட்டோ எடுத்திருந்தால் சர்வதேசப் போட்டிக்கே அனுப்பியிருக்கலாம். உடனே முகநூலில் கவிதைகள் தூள்பறந்திருக்கும்.

சட்டென்று வெட்கம் கவ்வியது ‘சஞ்சு’ என்கிற சஞ்சனாவுக்கு.

“ஆஹா தபார்றா… இந்தம்மாவுக்கு வெட்கம் நாணம்… அப்புறம் அதும் பேர் என்னடி?”

“பட்டியலைத் தப்பாச் சொல்ற…  அது… வெட்கம் நாணம் இல்லை. அச்சம் நாணம்… மடம் பயிர்ப்பு…” என்றாள் தமிழில் எப்போதும் தொண்ணூற்றொன்பது வாங்கும் குஜராத்திப் பெண் ஹர்ஷிதா. ”ஆனா இந்தப் பயிர்ப்புக்கு அருமையான அர்த்தம் உண்டு…”

“இப்ப அதுவா முக்கியம்? நேரத்தை வீணடிக்காதீங்கப்பா… அவளைப் பேசவிடுங்க… ” வம்பு நிபுணி விநித்ரா பரபரத்தாள்.

“அவன் பெயர் தெரியலைடீ… நிச்சயமா அவனுக்கு என்மேல் ஆர்வம் இருக்கு…”

வாழ்வில் முதல் முறையாக முகத்தில் வெட்கம் காட்டினாள்.

“அடப்பெயரா முக்கியம். நீ விஷயத்தைச் சொல்லு மச்சி…” இது  ஜெயந்திகா.

“தினமும் பார்க்கறேன்… அவர்… அவருக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு தோன்றுது..”

“ம்“ என்றன ஐந்து குரல்கள்.

“அது… காதல் மாதிரிதான் தோனுது…”

“மொத்தத்தில் அவர் என்னை கவனிக்கிறார்…”

“அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்கு…  அவருக்கு உன்மேல் ஆர்வம் இருக்கு… அவருக்கு உன்மேல் காதல் இருக்கு… அவருக்கு உன் மேல் அன்பு இருக்கு… ஒன்றேகால் நிமிஷத்தில் அவன் என்பது அவராக மாற்றும் சக்தி இருக்கு… சரி… சரீஈஈஈ.. இதையெல்லாம் புரிஞ்சுக்கும் சக்தி எங்க எல்லாருக்கும் இருக்கு… மேற்கொண்டு பேசும்மே…” என்றாள் ஐவரில் ஒருத்தி.

“ரொம்ப கம்பீரமாய் இருந்தார்… கண்ணியமாய்ப் பார்த்தார்.. நடை… உடை எல்லாமே அருமை. ரொம்ப கௌரவமான உத்யோகம்னு தோணுது. பைக் வெச்சிருக்கார். கார் வைச்சிருக்கார்.“

“ஷ்… ஷப்பா… மு…டி…ய…ல… இந்தத் தகுதியெல்லாம் இல்லைன்னா நீ அவனைப் பார்த்திருக்கவே மாட்டியே… எங்களுக்குத் தெரியாதா…”

“சொல்லு… சொல்லுன்னா நான் என்ன சொல்லுவேன்…? சொல்ல இவ்ளோதான் இருக்கு…” என்றாள் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு.

முகத்தைத்தான் அப்பாவியாய் வைத்துக்கொண்டாளே தவிர, உண்மையில் உள்ளுக்குள் அவள் அப்பாவி இல்லை.

அவன் பெயர் அவளுக்குத் தெரியும், ஆகாஷ். அவன் வேலை பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தின் பெயரும் அவனின் பதவியும்கூடத் தெரியும். அவனுக்குக் கல்யாணத்துக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியும்.

ஓர் இளம் பெண் மனது வைத்தால் இதையெல்லாம் தெரிந்து கொள்ளவா முடியாது?

னால் உண்மையில் அவளுக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கத்தான் செய்தது.

 

காஷ்.. என்னடா சொல்ற?”

“எனக்குக் கொஞ்சம் அவகாசம் குடும்மா…” அம்மாவிடம் பணிவுகாட்டிச் சொன்னான் ஆகாஷ்.

பணக்காரர்கள் வசிக்கும் போயஸ் தோட்டப்பகுதியில் அமைந்திருந்தது அவர்களின் பங்களா பாணி வீடு. பிதுரார்ஜித சொத்து அப்பா பக்கம் ஜெயித்ததில் வாழ்வு வளம்பெற்றது. ஒரே அக்காவைக் கல்யாணம் செய்து கொடுத்து இவனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

போட்டோக்கள்… ஜாதகங்கள்… என்று வீடு அமர்க்களமாக இருக்கிறது.

அதைப் பற்றித்தான் இதோ அவகாசம்  கேட்டிருக்கிறான்.

“சரிம்மா… நான் கிளம்பறேன்…” லட்ச ரூபாய் பெறுமானமுள்ள,  இந்தியாவின் மிக உயரமான அப்பாச்சி பைக்கில் ஏறிப் புறப்பட்டான்.

“கார் எடுத்துக்கிட்டுப்போகலையா?” அம்மா கேட்பதற்குள் தெருக்கோடி தாண்டியிருந்தான்.

அலுவலகத்துக்குத்தான் கார். இன்றைக்கு அவன் ஆபீஸ் போகவில்லை. நண்பனுடைய பிறந்தநாள் விழாவுக்குப் போகிறான்.

வழியில்…

அவன் எதிர்பார்த்ததுபோலவே இவன் வரவை எதிர்பார்த்து, சஞ்சனா நின்றிருந்தாள். மால் ஒன்றின் வாசலில் தன் ஜூபிடர் ஸ்கூட்டியுடன் போராடிக்கொண்டிருந்தாள். வாடாமல்லி நிற வண்டி.

சற்றே வேகத்தைக் குறைத்தான். கையை ஆட்டி இவனைக்கூப்பிட்டாள். எத்தனையோ பேர் நிற்கத் தன்னைக்கூப்பிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

“ஒரு நிமிஷம்… ப்ளீஸ்… வண்டி கிளம்பமாட்டேன்னு சண்டித்தனம் செய்யுது… கொஞ்சம் ஸ்டார்ட் செய்து கொடுங்களேன்…” எல்லாரையும் விட்டுவிட்டு இவனைக் கேட்டாள். சற்றுத் தள்ளி எங்கேயோ பார்ப்பதுபோல் நின்றிருந்த அந்தப் பெண் அவளின் சிநேகிதி என்று இவனுக்கு நன்றாய்த் தெரியும்.

அருகில் போய் வண்டியைக் கிளப்ப முயன்றபோது சட்டென்று வண்டியின்  கனம் தாளாமல் அப்படியே சாய்ந்து அவன்மேல் விழுந்துவிட்டாள்.

சற்றும் தயார் நிலையில் இல்லாத ஆகாஷ் அதிர்ந்துதான் போய்விட்டான். நிலைதடுமாறித் தன்னையறியாமல் விழுந்தாளா அல்லது…?

ஐயோ.. அவளைச் சட்டென்று விலக்கினான். மயக்கமோ? உலுக்கினான். இரண்டு முழு நிமிடங்களுக்குப் பிறகு மெல்லக் கண்விழித்தாள். அதற்குள் அந்த சிநேகிதியும் ஓடி வந்தாள்.

பட்டென்று விலகினான்.

சுற்றியுள்ள கண்கள் இவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன என்பதில் கவனமாய் இருந்தான்.

“வண்டி சரியாய்த்தான் இருக்கு… பத்திரமாய்  வீட்டுக்குப் போங்க…” என்று நிமிடத்தில் நகர்ந்தான்.

சஞ்சனாவுக்கு நாணம் வந்தது. வேண்டுமென்றேதான் நாடகமாடினாள். உக்கும்… பின்னே என்னவாம்? அவனாக முன்வந்து சொல்ல வேண்டியதுதானே?

 

இவளுக்கு எப்படி இருந்தாலும் தோழி ஆவர்த்தினியின் நடுக்கம் இன்னும் அடங்கவில்லை. மெல்ல “என்னடீ ஆச்சு? மயக்கம் வந்துச்சா? காலைல சாப்பிடலையா?” என்று அப்பாவித்தனமாய்க் கேட்டாள்.

எதையோ  சொல்லிச் சமாளித்தாள் சஞ்சனா.

சிநேகிதி சஞ்சனாவை வீட்டில் கொண்டு போய் பத்திரமாய் விட்டுவிட்டு வரும் வரை ஆவர்த்தினிக்குப் படபடப்பு அடங்கவில்லை.

“அம்மா என்னாச்சு தெரியுமா?’‘ என்று ஆரம்பித்தாள்.

“அட மொதல்ல நான் சொல்றதைக் கேளு.. என்னாச்சு தெரியுமா?” என்று அம்மா ஆரம்பிக்கவும் ஆவர்த்தினி குழம்பினாள்.

என்ன ஆகியிருக்கும்?

“இந்தப் பையனை உனக்குப் பிடிச்சிருக்கா பாரு…“

கல்லூரியில் கடைசி வருடம் படிப்பதால் இப்போதே ஜாதகம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆவர்த்தினியும் வெட்கம் மாதிரி ஒரு பாவம் காண்பித்து… பச்சைக்கொடி காட்டியிருந்தாள்.

முன்பெல்லாம் போட்டோ காண்பிப்பார்கள்.  இப்போதெல்லாம் சின்னதாக வீடியோ.

அந்த வீடியோவில், டென்னிஸ் ஆடிக்கொண்டும்… உடற்பயிற்சி செய்துகொண்டும்… அம்மா செய்யும் பூஜைக்குக் கைகூப்பிக்கொண்டும்… இருந்தவன்…

அந்த…

ஓ மை காட்…

“இவன் பெயர் என்னம்மா?” லேசான பதற்றம் மறைத்துக்கேட்டாள் ஆவர்த்தினி.

“சொல்றேன். முதல்ல உனக்குப் பிடிச்சிருக்கா சொல்லு… உன் வீடியோவையும் அவங்களுக்கு அனுப்பியாச்சு…”

அம்மா அத்தனை பெரிய அதிர்ச்சியை விசிறி அவள் மேல் வீசுவாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.

“ஆமாம்டீ… இவன் ஜாதகம் உன் ஜாதகத்தோடு பொருந்திச்சு… அவங்களுக்கும் சொல்லிட்டோம்… உன் வீடியோ பிடிச்சிருக்குபோல… அதனாலதான் அவங்க வீட்லேயிருந்து வீடியோ வந்திருக்கு.”

“கடவுளே… அம்மா… எ… என்ன…”

’சற்றுமுன்தான் வந்தாள். உடனே எங்கே கிளம்புகிறாள் ஆவர்த்தினி’ என்று அம்மாவும் அப்பாவும் குழம்பிக்கொண்டிருக்கையில் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு போய் சிநேகிதி வீட்டை அடைந்து சஞ்சனாவின் வீட்டுப் படியேறிக்கொண்டிருந்தாள்.

கனவில் மிதந்துகொண்டிருப்பாள். “இன்னிக்கு என்னை அவன் அணைச்சபோது எப்பிடித் தெரியுமா இருந்தது…“ என்று நாணமின்றிப் பேசுவாள்.

இப்போதே உண்மையைச் சொல்லிவிட வேண்டும். இல்லாவிட்டால் நட்புக்குச் செய்யும் துரோகமாகிவிடும்.

அவள் மாடி ஏறும்போதே சஞ்சனாவின் அம்மா இவளைத் தடுத்து நிறுத்தினாள் “இந்த  போட்டோவில் இருக்கறவனை அவளுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டுச் சொல்லும்மா… உன்னை மாதிரி ஃப்ரெண்ட்ஸ்தான் இதுக்கு சரி… நாங்கள்ளாம் கேட்டால் அவள் சரியாய்ச் சொல்ல மாட்டாள்.”

என்றாள்.

அந்த வீடியோவில்.. டென்னிஸ் ஆடிக்கொண்டும்.. உடற்பயிற்சி செய்துகொண்டும், அம்மா செய்யும் பூஜைக்குக் கைகூப்பிக்கொண்டும்..

இருந்தவன்…

அவனேதான்.

இவள் மாடிக்குப்போனாள். தோழியைக் கேட்டாள்.

னால்…

அதற்கான பதிலைத் தன்வீட்டில் சொல்லிக்கொண்டிருந்தான் ஆகாஷ்.

“என்னடா சொல்ற? இந்தப் பெண் போட்டோவைத்தான் எங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கு… ஆனா நீ என்னடான்னா. அந்த இன்னொருத்தியை ஒகே சொல்லிட்ட!!” வியந்தாள் அம்மா.

உண்மைதான். சஞ்சனாவின் ஜாதகமும் பொருந்தியது … ஆவர்த்தினியின் ஜாதகமும் பொருந்தியது. வீட்டில் எல்லோருக்குமே சஞ்சனாவைப் பிடித்திருந்தது. ஆனால் இவனுக்கு மட்டும் ஆவர்த்தினியைப் பிடித்திருக்கிறது என்கிறான்.

“ஒரு வாரம் அவகாசம் கேட்டதே இரண்டு பேரையும் பற்றிச் சரியாப் புரிஞ்சுக்கத்தான்மா.  நான் பார்த்ததுல…  இவளைவிட அவளைப் பிடிச்சிருக்கு விளக்கம் கேட்காதே.”

“ஓ.. நேர்லயே பார்த்துட்டியா? முகநூல் ஆராய்ச்சின்னு நினைச்சேன்” அம்மா சிரித்தாள்.

“அதுவும்தான்.”

அடுத்த நாள் காலையில் ஆவர்த்தினியின் அம்மாவுக்கு போன் செய்தாள்.

போனை எடுத்துப் பேசிய ஆவர்த்தினியின் அம்மா,   சற்றுத் தள்ளி வைத்துக்கொண்டு ‘என்னடீ சொல்லட்டும்?’ என்று ஜாடையில் கேட்டாள். நேற்றிலிருந்து இந்தப் பெண் பதில் ஏதும் சொல்லாமல் ஆட்டம் காட்டுகிறாளே.

அப்பா ஆவலுடன் பக்கத்தில் காத்திருந்தார்.

எதிர்பாராத வகையில் போனைப் பிடுங்கிப் பேசினாள் ஆவர்த்தினி “ஆன்ட்டி… ஸாரி… உங்க ஸன்னை எனக்குப் பிடிக்கலை. என்னை மன்னியுங்கள்…” என்று தடாலடியாய்ச் சொல்லிவிட்டாள்.

தன் சிநேகிதி காதலிக்கும் ஆணை எப்படி இவள் கல்யாணம் செய்துகொள்வாள்?

மறுபடியும் போன் அடித்தது.

மறுபடியும் அம்மாதான் எடுத்துப் பேசினாள். போனை அணைத்துவிட்டுச் சொன்னாள்.

“உனக்காக எத்தனை வருஷம் வேணும்னாலும் காத்திருப்பானாம். அவனுக்கு எதனாலயோ உன்னைத்தான் பிடிக்குதாம்.. ” என்றாள்.

இப்போது ஆவர்த்தினி குழம்ப ஆரம்பித்தாள். விரைவில் முடிவெடுப்பாள்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

மழை ராணி

0
  இடியும் மின்னலுமாய் பொழிந்து கொண்டிருந்தது பெருமழை. வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து பெய்யும் மழையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி. ரஞ்சனிக்கு அவளுடைய அப்பா சூட்டி இருக்கும் செல்லப் பெயர் மழை ராணி. அவள் பிறந்து பத்துப் பதினைந்து நாட்களுக்குள்...

சித்திரைப் பூக்கள்

2
  ராமன்                                            எட்டிப் பார்க்கும் லேசான...

பாதாளக் கரண்டி

  30 வருடத்துக்குப் பிறகு, சொந்த ஊர் செல்கிறேன். நான் வசித்த வீடு. எங்கள் முதலாளி முதலியார் வீடு  பார்க்க தயாரானேன். எங்கள் வீடு நாங்கள் விற்றவர் கையிலிருந்து இன்னொரு கை மாறியிருந்தது. என்னை...

வாஞ்சிநாதன்

1
  சாந்தி சந்திரசேகரன்                                        வைகறையிலேயே வானம் நட்சத்திரங்களற்று மேகமூட்டமாய் இருந்தது. இலைகள்...

தாத்தா கிளம்பி விட்டார்

1
 "அப்பாக்கு திடீர்னு மூச்சுத் திணறல் அதிகமா இருக்கு சாரதி ... இப்போ என்ன பண்றது?" அப்பா போனில் டாக்டர் சாரதி அங்கிளிடம் கூறியது காதில் விழ பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை சட்டென்று...