உங்களுக்கு இருக்கா ”பாஸிவ் வருமானம்”? அப்போ நீங்க புத்திசாலிதாங்க!

உங்களுக்கு இருக்கா ”பாஸிவ் வருமானம்”? அப்போ நீங்க புத்திசாலிதாங்க!

சமீபத்தில் ‘பாஸிவ் வருமானம்’ என்றொரு வகை வருமானம் பற்றி சில சஞ்சிகைகளில் அலசப்பட்டிருந்தது. இப்படி ஒரு வருமானம் இருக்கிறதா? என்று தேடினால், அந்த வார்த்தைதான் புதுசே தவிர அது விவரித்துக் கூறும் வருமானமுறை எல்லாம் நமக்குப் பழசு தான் என்று புரிந்தது. அதாவது பாஸிவ் வருமானம் (Passive income) என்பது, நமது முதலீடானது நாம் உழைக்காமல் இருக்கும் போதும் நமக்குத் தேவையான வருமானத்தைத் தொடர்ந்து ஈட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் அது தான் பாஸிவ் வருமானம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். அதற்கு பிரதான உதாரணமான அவர்கள் முன் வைப்பது ’வீட்டு உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வீட்டு வாடகை வருமானம்’ எனும் விஷயத்தை.

நாம் ஒரு உத்யோகத்தில் இருக்கிறோம் என்று வையுங்கள். அந்த வேலையைச் செய்து கொண்டே இருக்கும் வரையில் தான் அதன் மூலமாக நமக்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும். இடையில் நீங்கள் வேலையை விட்டு நின்றாலோ அல்லது நிர்வாகம் வேலையை விட்டு உங்களை நீக்கி விட்டாலோ அல்லது நீங்கள் அந்த வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டீர்கள் என்றாலோ அந்த வேலையின் மூலமாகக் கிடைக்கும் வருமானமும் சேர்ந்து நின்று விடும். வருமானம் தான் நின்று விடுமே தவிர நமது செலவுகளுக்கு மட்டும் எப்போதும் எண்டு கார்டே கிடையாது. அது அதன் பாட்டில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். ஆக இப்படியான சூழலைச் சமாளிக்க இரண்டாவதாக ஒரு வருமானத்திற்கு நாம் ஏற்பாடு செய்து கொண்டே ஆக வேண்டும் என நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகிறார்கள். அந்த இரண்டாம் வருமானத்திற்கான சாமர்த்தியமான வழிமுறைகளில் ஒன்று தான் இந்த பாஸிவ் வருமானம். (Passive income).

பாஸிவ் வருமானம் ஈட்ட வீட்டு வாடகை வருமானம் மட்டுமல்ல இன்னும் சில வழிமுறைகளும் உள்ளன. வங்கிகள் வலிந்து கடன் கொடுத்து மாதச்சம்பளதாரர்களை கடன்காரர்களாக எளிதில் மாற்றிக் கொண்டிருக்கும் இந்த அவசர யுகத்தில் அவற்றைப் பற்றி எல்லாம் விளக்கமாக நாம் தெரிந்து கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிக் கொண்டிருக்கிறது.

நாம் சம்பாதிக்கும் பணத்தை இப்படித் தெளிவான முறைகளில் எதிர்கால நன்மைக்கு உகந்த விஷயங்களில் முதலீடு செய்யத் தவறினால் பிறகு காலமெல்லாம் உழைத்துக் கொட்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான். கடைசியில் உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்தாலும் உழுபவனுக்குக் கழனி தான் மிச்சம் என்றாகி விடும்.

இந்த பாஸிவ் வருமானத்துக்கு இன்னும் சில முறைகளையும் நாம் பின்பற்றலாம். அவை முறையே

1. டிவிடெண்ட் வருமானம்,

2. வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டாக முதலீடு செய்வது அதன் மூலம் கிடைக்கும் வட்டியைக் கொண்டு சிக்கனமாகச் செலவழிப்பது.

3. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து அவற்றிலிருந்து சிஸ்டமேட்டிக் வித்டிராயல் முறையில் பணத்தை குறிப்பிட்ட இடைவெளிகளில் எடுத்துச் செலவு செய்வது. இதன் மூலமாக முதலீடு செய்த தொகை குறையாமல் காத்துக் கொள்ள முடிவதோடு வட்டி விகிதமும் ஆண்டுகள் கூடக் கூட அதிகரித்துக் கொண்டே செல்லும் நம்பகத் தன்மையும் கிடைக்கக் கூடும். இதில் துறை சார்ந்த ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு முதலீடு செய்தால் நிச்சயம் பாஸிவ் வருமானத்தில் ஆபத்தில்லாத முறையாக இதை ஏற்கலாம்.

4. இவை தவிர, இப்போது தடுக்கி விழும் இடமெல்லாம் டிஜிட்டல் கிரியேட்டர்கள் அதிகரித்துள்ள இந்தக் காலத்தில் யூ டியூபில் விடியோ வெளியிட்டு சம்பாதிக்கலாம். நீங்கள் வீடியோ போடப் போட அதைக் காண்போர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உங்களுக்கு அதன் மூலமாக ஒரு பக்கம் வருமானம் வந்து கொண்டே இருக்கும்.

5. இணையத்தில் புத்தகம் வெளியிடுவதும் கூட இப்போதெல்லாம் அவரவரே செய்து கொள்ளும் அளவுக்கு மிக எளிதாகி விட்டது. உங்களுக்குத் தேவை இணையப் பயன்பாட்டைப் பற்றிய ஒரு தெளிவான அணுகுமுறை. அத்துடன் உங்களுக்கு இலக்கியப் பரிச்சயம் இருப்பின் , நன்றாகத் தெளிவாக ஒரு விஷயத்தைப் பற்றி கதைகளாகவோ, கட்டுரைகளாகவோ, காணொளிகளாகவோ பதிவுகளை உருவாக்க முடியும் எனில் ஏராளமான இணையதளங்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கின்றன. யாரிடமும் வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைப்பவர்கள் நீங்களே ஒரு இணையதளத்தைத் தொடங்கி அதில் உங்களது படைப்புகளை முன் வைக்கலாம். பதிவுகளுக்கான பயனாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க உங்களுக்கு பண வரவும் ஆரம்பமாகி விடும். இணையத்தில் புத்தகங்களை வெளியிடும் போது அவற்றுக்கான வாசகர்களின் வரவேற்பைப் பொருத்து உங்களது படைப்புகளுக்கு ராயல்டி கிடைக்கும்.

இவையெல்லாமும் கூட பாஸிவ் வருமானங்களே என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

சரி இப்போது யோசியுங்கள். உங்களுக்கென்று பாஸிவ் வருமானம் பெற நீங்கள் என்ன விதமாக முயற்சி செய்திருக்கிறீர்கள்? இப்போது வரை அப்படி எதுவுமே இல்லை என்றால், இனிமேல் முயற்சி செய்யுங்கள். வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. முயன்றால் முடியாதது இல்லை, இளமையில் இப்படி ஏதேனும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டால் தான் முதுமையில் அவ்வளவு ஏன்? இப்போதெல்லாம் ரிஸசன் என்று திடீரென்று வேலையை இழக்க வேண்டிய நிலையாகி விடுகிறதே! அப்படியான இக்கட்டுகளில் இந்த பாஸிவ் வருமானம்

மிகப்பெரும் பலம். அதனால் இதைப் பற்றி யோசியுங்கள். அப்போது தான் நீங்கள் புத்திசாலி என்று நீங்களே கூட ஒப்புக் கொள்வீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com