தொடர் கொலை, கொள்ளைகளை ஊக்குவிக்கும் உல்லாச வாழ்க்கை மீதான மோகம்!

தொடர் கொலை, கொள்ளைகளை ஊக்குவிக்கும் உல்லாச வாழ்க்கை மீதான மோகம்!

சென்னை, அசோக்நகர் 62 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் 85 வயதான ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் மதுரகவி. இவர் தனது மனைவி சுந்தரவள்ளி என்பவருடன் தனது வீட்டின் கீழ்தளத்திலும், மகன். மருமகள் வீட்டின் மேல்தளத்திலும் வசித்து வருகின்றனர். மதுரகவியின் மருமகள் செஙகல்பட்டு மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். மதுரகவியின் மனைவி சுந்தரவள்ளிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில மாதங்களாக அவருக்கு வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வருகின்றனர். அதற்காக சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த அமுதா ஏஜென்ஸி மூலமாக செவிலியர்கள் மதுரகவியின் வீட்டுக்கு சுழற்சி முறையில் வந்து செல்வது உண்டு.

இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி தன் வீட்டு பீரோவைத் திறந்து பார்த்த மதுரகவி அதிர்ச்சியில் உறைந்தார் . அதில் வைக்கப்பட்டிருந்த 185 சவரன் நகைகள் மற்றும் ரூ50,000 ரொக்கப்பணம் இரண்டும் காணாமல் போயிருந்தது. இது குறித்து மதுரகவி குமரன் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் குமரன் நகர் காவல் ஆய்வாளர் மணிமாலா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மதுரகவியின் மனைவியைக் கவனித்துக் கொள்ள வந்த செவிலியர்களில் தேவி என்பவர் திடீரெனப் பணியில் இருந்து நின்றது தெரிய வந்திருக்கிறது. அது குறித்து விசாரிக்க பணியில் சேரும் போது தேவி, ஏஜென்ஸியில் கொடுத்திருந்த முகவரியைத் தேடிச் சென்றபோது அது போலி முகவரி என்பதும் தெரிய வந்தது. தேவியை அலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ள முயன்ற போது அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. முடிவாக தேவியின் அலைபேசி எண்ணெய் காவல்துறையினர் ஆராய்ந்த போது, அவருக்கு ஒரே நாளில் 50 முறைகளுக்கு மேல் ஸ்விக்கி பாய் ஜெகன்நாதன் என்பவரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்விக்கியில் பணியாற்றும் ஜெகன்நாதனிடன் அலைபேசி அழைப்புகளை காவல்துறையினர் பின் தொடர்ந்தனர். காவல்துறையினரின் தொடர் தேடுதல் வேட்டையில் விழுப்புரம் அருகே ஒரு லாட்ஜில் தனியே அறை எடுத்து தங்கியிருந்த தேவி மற்றும் ஜெகன்நாதன் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்.

மதுரகவியின் வீட்டில் அவரது மனைவியைப் பார்த்துக் கொள்ள சுழற்சி முறையில் செவிலியர்களைப் பணியில் அமர்த்தியதால் தன் மேல் சந்தேகம் வர வாய்ப்பில்லை என்று தான் எண்ணியதாக பிடிபட்ட தேவி தெரிவித்திருக்கிறார். தேவி, மதுரகவியின் வீட்டில் பணியில் சேர்ந்ததுமே சில நாட்களில் ஸ்விக்கி பாயாகப் பணிபுரிந்த தனது ஆண் நண்பர் ஜெகன்நாதனிடம், அந்த வீட்டிலிருக்கும் பீரோவில் ஏராளமாகப் பணமும், நகைகளும் புழங்குகின்றன என்று கூறி இருக்கிறார். அதன் பின், இருவருமாக இணைந்து அந்தப் பணத்தையும், நகைகளையும் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்.

அதன்படி கடந்த வாரத்தில் ஒருநாள் தேவி மதுரகவியின் வீட்டு பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகளைத் துணிந்து கொள்ளையடித்திருக்கிறார். பின்னர், தான் பணிபுரிந்த ஏஜென்ஸி வேலையில் இருந்து சொல்லாமல், கொள்ளாமல் விட்டு விட்டு ஸ்விக்கி பாய் ஜெகன்நாதனுடன் தப்பித்துச் சென்றுள்ளார். தேவியின் துரதிருஷ்டம் என்னவென்றால், மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்த பின்னும் ஸ்விக்கி பாய் உருவில் துரத்தி வந்து பிடிபடச் செய்த விதி தான்.

ஸ்விக்கி பாய் ஜெகன்நாதன் தங்கியிருக்கும் அவரது அடையாறு வீட்டைச் சோதித்த காவல்துறையினர் அதிர்ந்து போயினர். அங்கு தொ லைக்காட்சி ஸ்பீக்கர் ஒன்றைத்தட்டியதும் உள்ளிருந்து சுமார் 207 சவரன் நகைகளும் 30,000 ரூபாய் பணமும் கைப்பற்றப் பட்டிருக்கிறது. இதில் மதுரகவியின் 185 சவரன் நகைகளைத் தவிர மேலும் சிறிது நகைகள் இருந்ததால் அது யாரிடம் இருந்து திருடப்பட்டதோ என்பது குறித்து காவல்துறை மேலும் விசாரித்து வருகிறது .

எதற்காக இப்படி ஒரு கொள்ளையில் ஈடுபட்டீர்கள் என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில், “எவ்வளவு காலம் தான் ஸ்விக்கி பாயாகப் பணியாற்றுவது ? எவ்வளவு காலம் தான் நோயாளிகளையே பார்த்துக் கொண்டிருப்பது? நாங்களும் ஆடம்பரமாக உல்லாசமாக வாழ வேண்டாமா? அதனால் தான் இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டோம்.”

- என்று பதில் அளித்திருக்கிறார்கள் இருவரும்.

இது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்? உழைக்காமல் வந்த பணம் நிற்காது என்பார்கள் பெரியவர்கள். இதுவோ திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்ட பணம்.. இது மட்டும் நீடித்து நிலைத்து நின்று விடுமா என்ன? இதோ மாட்டிக் கொண்டார்கள்.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவர்களது மனநிலையை!

அடுத்த வேலை சாப்பாட்டு வழியில்லை, பசி, பட்டிணி, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அம்மாவைக் காப்பாற்ற வேண்டும், கடன் தொல்லை, விசித்திரமானதொரு வியாதி வந்து விட்டது அதற்காகத் தான் திருட்டில் ஈடுபட்டோம், கொள்ளையில் ஈடுபட்டோம் என்று முன்பு திருட்டில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டவர்கள் சொல்வார்கள். ஆனால், இப்போது மாட்டிக் கொள்வோரில் பலரும் சொல்லி வைத்தாற்போல் ஒரே பதிலைத்தான் சொல்கிறார்கள்.

ஆடம்பரமான உல்லாச வாழ்க்கை மீதான மோகமே அவர்களை இப்படியெல்லாம் செய்யத் தூண்டியிருக்கிறது. என அவர்களே தன்னியல்பாக வாக்குமூலம் கொடுக்கும் அளவுக்கு இந்த நாடு முன்னேறியிருக்கிறது.

கடந்த மாதம் நடிகர் ரஜினி காந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காவல் துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் அவரிடம் தொடர்ந்து 18 ஆண்டுகளாக உதவியாளராகப் பணிபுரிந்த ஈஸ்வரி என்ற பெண்ணும், கார்

ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த வெங்கடேசன் என்பவரும் கைது செய்யப்பட்டார்கள்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கடந்த மார்ச் மாதத்தில் தனது வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 3 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டதாகக் கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் , 18 ஆண்டுகளாக தன்னிடம் பணிபுரியும் பணிப்பெண் மற்றும் ஓட்டுநரை சந்தேகிப்பதாகவும் அந்தப் புகாரில் கூறி இருந்தார். அவரது புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடியது வீட்டு வேலை செய்பவர் மற்றும் ஓட்டுநர் எனக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்தனர்.

ஐஸ்வர்யாவிடம் இருந்து திருடிய நகைகளை சிறிது சிறிதாக விற்றுவிட்டு நகரின் வேறொரு பகுதியில் அடுக்குமாடி வீடு வாங்கியதாக வீட்டு உதவியாளர் ஈஸ்வரி வாக்குமூலம் அளித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

தனது முதலாளியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் திருட்டு நிகழ்த்துவதற்கான தைரியம் ஈஸ்வரிக்கு எப்படி வந்தது? எதனால் அந்தப் பெண் தூண்டப்பட்டார்? மாட்டிக் கொள்வோம் என்ற பயம் ஏன் இல்லாமல் போனது? ஒரு திருட்டு அல்லது கொள்ளையை நிகழ்த்தத் துணியும் விபரீதமான துணிவு எப்படி வந்தது?

அத்தனைக்கும் மூல காரணம் தம் கண்ணெதிரே காணக் கிடைக்கும் உல்லாச வாழ்க்கை மீதான மோகம் தான்.

இதையும் அவர்களே தான் தங்களது வாக்குமூலத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலாவது பணம் மற்றும் நகைகள் திருடு போனதோடு இழப்பு நின்றது. ஆனால், கடந்த ஆண்டு இதே நேரத்தில் சென்னை, மயிலாப்பூர் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு பெருங்கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் அநியாயமாக 2 முதிய உயிர்கள் பறிபோனதை எதைக் கொண்டும் நியாயப்படுத்தி விட முடியாது.

அவர்களது கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்திலும் குற்றவாளி அவர்களுக்கு மிக நன்றாக அறிமுகமான நபரே!

சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் தொழில் அதிபரான ஆடிட்டர் ஸ்ரீகாந்த் அவரது மனைவி அனுராதா இருவரும் அமெரிக்காவில் வசிக்கும் மகள் சுனந்தா மற்றும் மகன் சஸ்வத்தை பார்த்துவிட்டு 07.05.2022 அன்று அதிகாலை வீடு திரும்பினர். அதன் பிறகு அவர்களைப் பற்றிய தகவல் ஏதும் அறியமுடியவில்லை.

அதிர்ச்சி அடைந்த மகன் சஸ்வத் இதுகுறித்து சென்னை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி மயிலாப்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஸ்ரீகாந்த், அனுராதா இருவரும் பணம் மற்றும் கணக்கற்ற நகைகளுக்காக மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கொலை தொடர்பாக அவர்களது கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்த பத்மலால் கிருஷ்ணா, மற்றும் அவரது கூட்டாளியான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சேர்ந்த ரவி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், நகை, பணத்துக்காக ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை மைலாப்பூர் வீட்டில் வைத்து கொலை செய்து, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்ததையும், அவர்களது சடலங்களைக் காரில் ஏற்றிச் சென்று, ஆடிட்டர் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான மகாபலிபுரம் அருகில் உள்ள பண்ணை வீட்டில் புதைத்ததையும் ஒப்புக் கொண்டனர்.

அவர்களிடமிருந்து ஸ்ரீகாந்த் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 1,000 பவுன் நகைகள், 50 கிலோ வெள்ளிப் பொருட்கள், 2 செல்போன்கள் மற்றும் கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மயிலாப்பூர் போலீஸார் பரிந்துரைத்தனர். அதன்படி இருவரும் தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்.

இந்தக் கொடூரக் கொலையில் பலியானவர்களது தனிமை வாழ்வும் கூட துணிகரக் கொள்ளைச் சம்பவத்துக்கான ஒரு காரணமாக அப்போது கருதப்பட்டது. ஊரோடும், உறவோடும் ஒத்து வாழ் என்பார்கள். ஆனால், சமூகத்தில் அந்தஸ்துடன் வாழும் சில மூத்த குடிமக்கள் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டு பணம் சேரச்சேர ஒரு கட்டத்தில் தங்களுடன் தொடர்பிலிருக்கும் பலரையும் தூரத்தில் நிறுத்தி உறவைத் துண்டித்துக் கொண்டவர்களாகி விடுகிறார்கள்.

சமூகத்தின் பார்வையில் பலம் என்பது பணமும், ஆடம்பரமான வாழ்க்கையும் மட்டுமல்ல, சக மனிதர்களுடன் தொடர்பில் இருப்பதும் தான்.

மயிலாப்பூர் கொலைச் சம்பவத்தில் 1000 சவரன் நகைகளை வீட்டிற்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று ஏன் அவர்களுக்குத் தோன்றியது? அந்த விஷயம் வீட்டு வேலைக்காரர்கள் வரை ஏன் தெரிந்திருந்தது? கொலைகாரர்கள் எதனால் தூண்டப்பட்டார்கள்? என்றெல்லாம் யோசித்தால் அது கடைசியில் ஆடம்பரமான, உல்லாச வாழ்க்கை மீதான மோகம் என்பதில் தான் முடிகிறது.

ஆக, பாரபட்சமான வாழ்க்கைச் சூழ்நிலைகள் நிலவும் இந்த சமூகத்தில் பணம் படைத்தவர்கள் தங்களது படாடோபத்தை காட்டும் வேகத்தை சற்றுக் கட்டுப்படுத்திக் கொண்டால் தேவலாம் என்றே தோன்றுகிறது.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பார்கள், அதற்கேற்ப உங்களிடம் பணம் நிறையக் கொட்டிக் கிடந்தாலும் அதை இல்லாதவர்களின் கண் முன்னே அடிக்கடி பகட்டாகக் காட்டும் செயல்களில் ஈடுபட்டு உங்களை ஏமாற்றும், கொள்ளை அடிக்கும் சூழலை நீங்களே உருவாக்கிக் கொள்ளாதீர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com