சாகசமில்லை, புதிய தேடல்கள் இல்லை... நிம்மதியான உறக்கம்... அதுதாங்க ”தூக்கச் சுற்றுலா”! போகலாமா!

Mar 17 - World Sleep Day
சாகசமில்லை, புதிய தேடல்கள் இல்லை... நிம்மதியான உறக்கம்... அதுதாங்க ”தூக்கச் சுற்றுலா”! போகலாமா!

மார்ச் 17 - 'உலக தூக்க நாள்'

இது வளர்ந்து வரும் தூக்கச் சுற்றுலா பற்றியதொரு தேடல் மிகுந்த கட்டுரை. இன்றைக்கு டூரிஸத்தில் இது தான் ட்ரெண்ட் என்கிறார்கள். இது இந்தியாவில் இன்னும் பரவலாகவில்லை. ஆனால் சீக்கிரத்தில் ஆகி விடும். சுற்றுலா என்பதே சுற்றிச் சுற்றி இடங்களை ரசிப்பதும், தேடலும் தானே இதில் தூக்கத்துக்கு என்ன வேலை என்று நீங்கள் நினைக்கலாம்,

அது சரி, பயணம் என்பது சாகஸம், புதுப்புது அனுபவங்கள், ஆராய்ச்சிகள், புதிது புதிதாக கண்களுக்கு இனிமை தரும் இடங்களை கண்டடைதல், புதிய விஷயங்களை முயற்சிப்பது போன்றவற்றுடன் தொடர்புடையதாகவே இதுவரையிலும் இருந்து வந்தது. ஆனால், இப்போதெல்லாம் இந்த லிஸ்டில் புதிதாக ஒரு விஷயம் சேர்ந்திருக்கிறது. அது வேறொன்றுமில்லை... ஏகாந்தமான தூக்கம் தான்.

ஒரு நல்ல இரவு என்பது ஆழ்ந்த தூக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதே ஆரோக்யம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆனால், மாறி வரும் உலகில் மனிதர்களான நாம் முதலில் கை வைப்பதே நமது தூக்கத்தில் தான். ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் போவதற்கு ஆயிரத்தெட்டு காரணங்களை நாம் சொல்ல முடியும். அருமையாகத் தூங்குவதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூட இப்போது நம்மால் கண்டறிய முடியவில்லை என்பது தான் சோகத்திலும் பெரும் சோகம். வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை வளர்ப்பு, முதியோர் நலம் குறித்த அக்கறை, வேலைதளத்தில் போட்டிகளை சமாளித்தாக வேண்டிய நெருக்கடி, மேற்சொன்ன எல்லாப்பக்கங்களில் இருந்தும் வந்து குவிந்து நம்மை மூச்சுத் திணறச் செய்யும் வகையிலான டெட் லைன்கள், இப்படி இந்த போட்டி உலகில் எண்ணற்ற கமிட்மெண்ட்களுக்கு எப்போதுமே எந்தப் பஞ்சமும் இருப்பதில்லை.

தொழில்நுட்பம் வளர வளர மனிதனுக்கான வேலைப்பளு குறையும் என்றார்கள் ஒருகாலத்தில். இப்போது பாருங்கள் வேலைப்பளு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெருகித்தான் போயிருக்கிறதே தவிர குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

புதிய ஆய்வு முடிவு வலியுறுத்தும் 4 டேஸ் வொர்க், 3 டேஸ் ரெஸ்ட் பாலிஸி தான் இதற்கு தூண்டுகோளா?!

சர்வதேச அளவில் சில வாரங்களுக்கு முன்பு ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் பிரிட்டனில் வசிக்கும் மக்கள் சிலரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு மருத்துவர்கள் வாரத்திற்கு 4 நாட்கள் வேலைத்திட்டம் என்றொரு கான்செப்டில் அவர்களை ஆராய்ந்தார்கள். அதாவது வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

மீதமுள்ள 3 நாட்கள் உங்களுக்கே உங்களுக்கு என நீங்கள் சுதந்திரமாகச் செயல்படலாம். ஆடலாம், பாடலாம், தூங்கலாம் எப்படி வேண்டுமானாலும் அந்த 3 நாட்களை நீங்கள் செலவளிக்கலாம் என்பது தான் இந்த ஆராய்ச்சியின் அடிப்படை. இந்த ஆராய்ச்சி ஏன் மேற்கொள்ளப்பட்டது என்றால்? இந்த 3 நாட்கள் விடுமுறையானது அவர்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டது போன்ற புத்துணர்வை அளிக்கிறதா? இதன்மூலமாக மீதியுள்ள 4 நாட்களில் அவர்களின் வேலைத்திறன் அதிகரிக்கிறதா? அவர்கள் உற்சாகம் மீட்டெடுக்கப் படுகிறதா? என்பதை அறிந்து கொள்ளத்தான் இது நடத்தப்பட்டது. இதில் பிரிட்டன் தவிர பிற நாடுகள் அதிக அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

இந்த ஆராய்ச்சியின் முடிவு என்னவோ... 4 நாட்கள் வேலைத்திட்டம் 3 நாள் விடுமுறை என்பது ஆரோக்யமான வழிமுறை தான். இதைக் கையாண்டால் பொதுவில் ஊழியர்களின் வேலைதிறன் மேம்படுகிறது. வேலையில் அவர்களது அக்கறை அதிகரிக்கிறதூ, பொறுப்புணர்வைக் கூட்டுகிறது என்பதாகவே இருந்தது.

ஆயினும், பொதுவாக தெற்காசிய நாடுகளைப் பொருத்தவரை இந்த ஆராய்ச்சி முடிவை இங்கிருப்பவர்கள் சரியான வகையில் புரிந்து கொள்ளவில்லை என்றே கருத வேண்டியதாகிறது. இந்த ஆராய்ச்சிக்காக அணுகப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஓவர் டைம் வேலை நேரம், அதன் மூலமாகக் கிடைக்கும் அதிகப்படி வருமானம், அடுத்தவர்களின் வாய்ப்புகளையும் தமக்குரியதாக்கிக் கொள்ளுதல் என்று தான் பேசுகிறார்களே ஒழிய தங்களது ஆரோக்யம் குறித்து கவலைப்படுபவர்களாகத் தெரியவில்லை.

ஆகவே அப்படிப்பட்டவர்கள் கண்டறிந்தது தான் இந்த தூக்கச் சுற்றுலா என்றும் கூட நாம் கருத வாய்ப்பிருக்கிறது.

நம்மால் தூக்கத்தையும் இழக்க முடியாது, குடும்பம் முதல், தனிப்பட்ட மற்றும் வெளி உலக வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை வரையிலாக நிலவும் எந்த ஒரு கமிட்மெண்ட்டையும் குறைத்துக் கொள்ளவும் முடியாது என்றால் இரண்டையும் இணைக்கும் பொதுப்புள்ளியாக ஏதோ ஒரு விஷயம் இருந்தாக வேண்டியிருக்கிறது. அது தான் இந்த புது பாணியிலான சுற்றுலா.

தூங்குவதற்கென்றே விடுமுறை எடுத்துக் கொண்டு அதற்கென்றே சுற்றுலா செல்வது. அங்கே சென்று முழுமையாக நிச்சலனமாகத் தூங்கி எழுந்து ஆற அமர நிம்மதியாக உண்டு மகிழ்ந்து நேரத்தைக் கழிப்பது. இது தான் இந்தச் சுற்றுலாவின் நோக்கம்.

தூக்கச் சுற்றுலாவின் அவசியம் என்ன?

நாளுக்கு 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்கினால் தான் அது முழுமையான தூக்கமாகக் கருதப்படும். அதற்கு பங்கம் ஏற்பட்டால் நமது தூக்கம் தரமற்றது என்று அர்த்தம். ஆகவே தரமான தூக்கமின்மை மற்றும் தூக்கத்தை ஸ்பா அல்லது மசாஜ் போன்ற கேளிக்கை விருந்தாக மாற்ற விரும்பும் மனநிலை போன்ற

காரணங்களே மக்களைத் தூக்க சுற்றுலாவில் ஈடுபாடு கொள்வதற்கு வழிவகுத்தன. இதில் புத்துணர்ச்சியை மீட்டெடுக்கும் அடிப்படை வாக்குறுதி மற்றும் 'செல்ஃப் கேர்' எனும் விளம்பர வாசகங்கள் மக்களை எளிதில் ஈர்த்து விடுகின்றன.

2023 ல் சுற்றுலாவின் புது பரிமாணம் ஸ்லீப் டூரிஸம்...

2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ட்ரெண்டாக கருதப்படும் இந்த ஸ்லீப் டூரிஸம் அனைத்து துறைகளிலும் வேலைப்பளுவில் சிக்கித் தவிக்கும் பெருவாரியான மக்களை ஈர்த்து வருகிறது, ஹோட்டல் மற்றும் சுற்றுலா தொடர்பான இணையதளங்கள் மற்றும் பேக்கேஜ்களில் இது குறித்த விளம்பரங்கள் தான் தற்போது அதிகமும் காணக்கிடைக்கின்றன. இதையொட்டி தூக்கம் தொடர்பான பலவித சேவைகள் தோன்றியுள்ளதாக சுற்றுலாப் பயணத் துறை தெரிவித்துள்ளது.

கடந்து போன பாண்டமிக் தொற்றுநோய்க்குப் பிறகு மக்களிடையே ஸ்லீப் டூரிஸம் குறிந்த ஆர்வம் உயர்ந்துள்ளது, பல ஹைடெக் ஹோட்டல் குழுமங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தங்கள் கவனத்தை செலுத்தத் தொடங்கி இருக்கின்றன.

கடந்த 12 மாதங்களில், Park Hyatt New York, Bryte Restorative Sleep Suite, தூக்கத்தை மேம்படுத்தும் வசதிகள் நிறைந்த 900 சதுர அடி தொகுப்பைத் திறந்துள்ளது, அதே நேரத்தில் Rosewood Hotels & Resorts சமீபத்தில் அல்கெமி ஆஃப் ஸ்லீப் என்று அழைக்கப்படும் ஓய்வை ஊக்குவிக்கும் விதமான அறைகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தியது.

தூக்கத்தை மையமாகக் கொண்ட விடுதிகளில் லண்டனின் Zedwell தான் முதலடியை எடுத்து வைத்தது என்று சொல்லலாம், இது புதுமையான ஒலிப்புகாப்பு வசதியுடன் கூடிய அறைகளைக் கொண்டுள்ளது, இது 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்டது, அதற்கு ஒரு வருடம் கழித்து ஸ்வீடிஷ் படுக்கை உற்பத்தியாளரான ஹேஸ்டென்ஸ் நிறுவனம் உலகின் முதல் Hästens Sleep Spa Hotel எனும் பெயரில், 15 அறைகள் கொண்ட பொட்டிக் டைப் ஹோட்டலை போர்த்துகீசிய நகரமான Coimbra இல் நிறுவியது.

சுற்றுலா பயணத் துறைக்கு தூக்கம் ஏன் திடீரென ஒரு பெரிய மையமாக மாறியது?

டாக்டர். ரெபேக்கா ராபின்ஸ், தூக்க ஆராய்ச்சியாளரும், "ஸ்லீப் ஃபார் சக்சஸ்!" என்ற புத்தகத்தின் இணை ஆசிரியருமான இவர், குறிப்பாக ஹோட்டல்களைப் பொறுத்தவரை இந்த மாற்றம் நீண்ட காலமாக இருந்து வருகிறது என்று தான் நம்புகிறார். ஆரம்ப காலங்களில் நிஜமாகவே ஹோட்டல் தொழிலானது முதன்மையாக தூக்கத்தைக் கெடுக்கும் விஷயங்களிலேயே கவனம் செலுத்தியது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அதனால் தான் "மக்கள் அடிக்கடி தங்களது பயணத்தை நலிந்த உணவுகளுடன் தொடர்புபடுத்துகிறார்கள், படுக்கை நேரங்களை நீட்டிக்கிறார்கள், பயணம் செய்யும் போது செல்லும் இடங்கள் செய்யும் விஷயங்கள் அனைத்துமே உண்மையில் தூக்கத்தை விலை கொடுத்து வாங்குவது போலத்தான் ஆகிவிடுகிறது என்கிறார் அவர்.

தூக்கம் குறித்தான ஒரு தெளிவான புரிதல் வந்த பிறகு இப்போது தான் நமக்கு கூட்டு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இது ஆரோக்யம் மற்றும் நல்வாழ்வுக்கான முன்னுரிமை விஷயத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதாக நான் நினைக்கிறேன் என்கிறார் அவர்.

உலகளாவிய தொற்றுநோய் இதில் பெரும் பங்கு வகித்ததாகத் தெரிகிறது. ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஸ்லீப் மெடிஷினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பங்கேற்ற 2,500க்கும் மேற்பட்ட பெரியவர்களில் 40% பேர் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து அவர்களின் தூக்கத்தின் தரம் குறைந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.

"கோவிட்-19 காலத்தில் தூக்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, மேலும் பலர் தூக்கமின்மையால் போராடியிருக்கலாம்" என்று டாக்டர் ராபின்ஸ் கூறுகிறார்.

தூக்கத்திற்கு முன்னுரிமை...

ஹிப்னோதெரபிஸ்ட் மற்றும் தியானத்திற்கான முழுமையான பயிற்சியாளர் மால்மிந்தர் கில் ஸ்லீப் டூரிஸம் குறித்து என்ன சொல்கிறார் என்றால்,

இது மாதிரியான புதுமைகள்"எல்லாமே நீண்ட ஆயுளை நோக்கி நகர்வது போல் தெரிகிறது, அது தான் உண்மையில் விஷயங்களைத் தூண்டியது என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் அவர்.

"ஏனெனில், தூக்கம் நம் வாழ்வின் ஒரு முக்கிய அம்சம் என்பதில் ஆச்சரியமில்லை. தூக்கமின்மை உடல் மற்றும் உங்கள் மன ஆரோக்கியத்திற்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

என்று கூறும் கில், லண்டனில் உள்ள பெல்மண்ட் ஹோட்டலான கடோகனுடன் கூட்டு சேர்ந்து, உறக்கப் பிரச்சனை உள்ள விருந்தினர்களுக்கு ஸ்லீப் கான்சியர்ஜ் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு சேவையை உருவாக்கினார்.

இந்தச் சேவையில் தூக்கத்தைத் தூண்டும் தியானப் பதிவு, முதுகு அல்லது பக்கவாட்டில் தூங்க விரும்பும் விருந்தினர்களுக்குத் தேவையான விருப்பங்களைக் கொண்ட தலையணை மெனு, தனிநபர் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்யப்பட்ட எடையுள்ள போர்வை, சேவைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படுக்கை நேரத்து தேநீர் மற்றும் வாசனைத் தலையணை, மூடுபனி எஃபெக்ட் ஆகியவை அடங்கும்.

"வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விஷயங்கள் வொர்க் அவுட் ஆகின்றன" என்று சேவையில் வழங்கப்படும் பல்வேறு பொருட்களைப் பற்றிப் பேசும் போது கில் கூறுகிறார்.

தூக்கத்தைத் தூண்டும் நடைமுறைகள்...

தூக்கத்தை தூண்டும் நடைமுறைகளென நீங்கள் எவற்றைப் எல்லாம் பட்டியலிடுவீர்கள்?

· காலாற நடந்து விட்டு வந்து படுத்தால் தூக்கம் அசத்திக் கொண்டு வரும் என்பார்கள் சிலர்.

· சிலருக்கோ கடுமையான உழைப்பின் பின் நன்கு பசித்து உணவு உண்டாலே போதும் நன்றாகத் தூக்கம் வரும் என்பார்கள்.

· சிலருக்கு படுக்கைக்குச் செல்லுன் முன் வெதுவெதுப்பாக ஒரு டம்ளர் பால் அருந்தினாலே போதும். தூக்கம் நன்றாக வருன் என்கிறார்கள்.

· சிலருக்கு நாள் முழுவதும் எந்தப் பிரச்சனையும் இன்றி ஸ்மூத்தாகக் கழிந்தால் அந்த நாளில் நல்ல தூக்கம் உண்டு என்பார்கள்.

· சிலருக்கு உடல் அசதி இருந்தால் தங்களை அறியாமல் தூக்கம் வரும் என்கிறார்கள்.

· சிலருக்கு மனமொத்த தாம்பத்யம் கூட நல்ல தூக்கத்திற்கான காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது.

இப்படி தூக்கத்தைத் தூண்டும் நடைமுறைகள் ஒவ்வொருவருக்குமே மாறுபடும். இந்த நடைமுறைகளைத் தூண்டி அவற்றில் நவீன தொழில்நுட்ப வசதிகள் தரும் லக்ஸுரியையும் கலந்து புதியதொரு தூக்க உத்தியைக் கிரியேட் செய்வது தான் ஸ்லீப் டூரிஸம் என்று சொல்லப்படக்கூடிய தூக்க டூரிஸத்தின் அடிப்படை.

இந்தியாவில் ஸ்லீப் டூர் செல்வதற்கென அருமையான இடங்களுக்கான பட்டியல்...

v ஆலப்புழா, கேரளா... பேக் வாட்டர் ஸ்பாட்டான ஆலப்புழாவின் படகு வீடுகள் சிறந்த ஸ்லீப் டூரிங் ஸ்பாட்டுகளாகக் கருதப்படுகின்றன. மிதமான குளிரும், இதமான போட் அசைவும் தாலாட்டுப் பாடி தூங்க வைக்கும் பறவைகளின் ஓசையுமாக இந்த இடம் சுற்றுலாப் பயணிகளின் ஆல்டைம் ஃபாவரிட் ஸ்பாட்டாகவே கருதப்படுகிறது.

v நாகோ, ஹிமாச்சல் பிரதேஷ்... ஹிமாச்சல் பிரதேசத்தின் கின்னார் பிராந்தியத்தில் இருக்கும் இந்த டூர் ஸ்பாட்டில் நிலவும் அமைதியை பேரமைதி எனலாம். பனிக்கரடிகளைப் போல நீங்கள் நீண்ட நெடுங்காலம் தூங்கினால் கூட உங்களைத் தொந்தரவு செய்ய யாரும் வரப்போவதில்லை. அப்படியொரு அமைதியான இடமாம் இது. அதுசரி தூங்குவதற்கு அது தானே முக்கியம்.

v டோயர்ஸ், மேற்கு வங்காளம்.. மேற்கு வங்காளம் என்றதுமே சுற்றுலாவுக்கு நாம் வழக்கமாக டார்ஜிலிங்கைத்தான் டிக் செய்வோம்.

ஆனால், நீங்கள் செல்வது தூக்கச் சுற்றுலாவுக்கு என்றால் தயங்காமல் டோயர்ஸை டிக் செய்யுங்கள். இங்கு தேயிலைத் தோட்டங்களின் பின்னணியில் பனிமலைகள் தரும் சில்லிடும் குளிர்ச்சியில் தோய்ந்து ரஜாயைப் போர்த்திக் கொண்டு சும்மா படுத்தாலே போதும் தூக்கம் ஓடோடி வந்து நம் கண்களைத் தழுவுமே!

v பான்காங்க் ட்ஸோ, லடாக்.... பனிமலைகளுக்கு நடுவில் உள்ள லடாக்கின் அருமையான பள்ளத்தாக்கு பகுதிகள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காண மிகச்சிறந்த தேர்வுகள். சொர்க்கத்தில் மிதக்கும் உணர்வைத் தரக்கூடிய அனுபவம் அது. திரைப்படங்களில் அனேக சமயங்களில் லடாக்கின் மனம் குளிர வைக்கும் காட்சிகளைக் காணும் போதே நமக்கு அப்படி தோன்றுகிறதே, நேரில் சென்று அதை ரசிக்க முடிந்தால் அது தரும் இதமே ஆழமான தூக்கத்தைக் கொண்டு வரும் தானே!

v இவை தவிர மேகாலயாவின் சிரபுஞ்சி, நாகாலாந்தின் சுகோவ் வேலி, நம்மூர் பாண்டிச்சேரியின் நிலவு மிதக்கும் கடற்கரைகள், மகாபலிபுரத்தின் அமைதியான ரிசார்ட்டுகள் இப்படி அனைத்து இடங்களுமே தூக்கச் சுற்றுலாவுக்கெனவே வடிவமைக்கப்பட்டவை.

ஆக, மனித நடமாட்டம் குறைந்த இயற்கையின் வனப்பு மிகுந்த பாதுகாப்பு நிறைந்த அனைத்து இடங்களுமே தூக்கச் சுற்றுலாவுக்கு ஏற்றவை என்றே கூறலாம்.

நீங்களும் ஒருமுறை இந்த ட்ரெண்டியான சுற்றுலாவை முயற்சி செய்து பாருங்கள். அந்த அனுபவத்தை மறக்காமல் கல்கிஆன்லைன் இணையதளத்துடன் பகிருங்கள்.

அதன் மூலம் நாம் ஒன்றாக அந்த சுற்றுலா அனுபவத்தைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com