மின்சாரம் இல்லை, செல்ஃபோன் இல்லை… 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையுடன் வாழும் வேத கிராமம்!

மின்சாரம் இல்லை, செல்ஃபோன் இல்லை… 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையுடன் வாழும் வேத கிராமம்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தை அடுத்து அமைந்திருக்கிறது இந்த மிகச்சிறிய கிராமம். நகரத்தின் பெரும் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சின்னஞ்சிறு சாலை ’கர்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறு கிராமத்திற்கு இட்டுச் செல்கிறது.

நவீன உலகின் எச்சங்களைப் புறக்கணித்த கர்மா கிராமம்…

கிராமத்திற்குள் நுழையும் முன் நாம் அறிந்து கொண்டாக வேண்டிய அதிசயங்களில் ஒன்று இங்கு மின்சாரம் அறவே இல்லை. அத்துடன் செல்போனுக்கும் தடா! ஆகவே இங்கே செல்ல விரும்புகிறவர்கள் முன்கூட்டி இதை அறிந்து கொண்டே ஆக வேண்டும். ஏனென்றால், இங்கு வாழும் மக்கள் நவீன உலகின் எந்த மிச்சத்தையும் தங்களுக்கு வேண்டாம் என்று புறக்கணித்டு விட்டு இங்கு வந்து நிம்மதியாக வாழ்கிறார்கள்.

கிராமத்தின் ஸ்ட்ரிக்ட்டான விதிமுறைகள்…

ஊரின் சிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கே ஒருமுறை வந்து பார்க்க வேண்டும் அல்லது இந்த மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என யாரேனும் விரும்பினால் அவர்களுக்கு நிச்சயம் அனுமதி உண்டு. ஆனால், இந்த ஊரில் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்களே, அப்படியே வருபவர்களும் மின்சாரம் இன்றி, செல்போன் இன்றி சுயசார்பு வாழ்க்கையையே பின்பற்றியாக வேண்டும் என்பது இங்கு முதல் விதி.

இங்கு மக்களின் வாழ்வாதாரம்…

சரி, இனி கர்மா கிராமத்தில் மக்கள் எப்படி வாழ்ந்து வருகிறார்கள் எனத் தெரிந்து கொள்வோமா?

இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையைப் பார்த்தால் 300 ஆண்டுகளுக்கு முந்தைய வேத கிராமங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கக் கூடுமோ.. அப்படியாகத் தான் இதுவும் தோற்றமளிக்கிறது.

வேத கிராமம்…

அதிகாலையில் பிரும்ம முஹூர்த்தம் என்று சொல்லப்படக் கூடிய 4.30 மணிக்கு முன்பே இவர்கள் எழுந்து கொள்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே 3.30 மணிக்குள் எழுந்து விடுகிறார்கள். பிறகு ஸ்நானம் செய்த பின் கடவுள் வழிபாட்டை முடித்து விட்டு பெரியவர்கள் அவ்வரவர் வயல்களில் விவசாய வேலைகளைச் செய்யச் செல்கிறார்கள். சிறுவர், சிறுமியர்களுக்கென்று பாடசாலைகள் உண்டு. அந்தக் காலத்து முனிவர்களின் வேதபாடசாலைகள் போன்று தோற்றமளிக்கும் அந்தப் பாடசாலைகளில் மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் என்ன பாடம் கற்றார்கள் என ஏடுகளில் உண்டோ அதே விதமாக அவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்படுகிறதாம்.

மாலையில் பெரியவர்கள் வீடு திரும்பும் போது சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பாடல்களும் அவர்களை வரவேற்கின்றன. சிறுவர்கள் அவரவர் வீட்டுப் பசுக்களை வளர்க்கவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

மொத்தத்தில் கோபாலன் நாமம் சொல்லிக் கொண்டு பசுக்களை மேய்த்துக் கொண்டு பாடல்களைப் பாடிக் கொண்டு பிடித்த கல்வியைக் கற்றுக் கொண்டு என்று அங்கிருக்கும் சிறுவர்கள் ஆத்மார்த்தமாகத் தங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்கிறார்கள் அவர்களது பெற்றோர்…

’தன் கையே தனக்குதவி’ சுயசார்பு வாழ்க்கை…

இந்த மக்களின் முக்கியமான வாழ்வாதாரம் விவசாயமும், பசு வளர்த்தலும் மட்டுமே.

அவரவர் வீடுகளுக்குத் தேவையான காய்கறிகளை அவரவரே தங்களது நிலங்களில் பயிரிட்டுக் கொள்கிறார்கள். பால் பசுக்கள் மூலமாகக் கிடைத்து விடுகிறது.

வீடுகளைக் கூட சிமெண்டு வைத்து இவர்கள் கட்டுவதில்லை. கட்டுமானத்திற்கு சுட்ட களிமண் ஓடுகள் மற்றும் புற்கள், பனஓலைகளால் வேயப்பட்ட கூரைகளைத் தான் பயன்படுத்துகிறார்கள். இந்த ஊரில் வந்து வாழ விரும்பும் பிற மனிதர்களுக்கு இவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளில் ஒன்று, இங்கே வந்து இவர்களுடன் வாழ விரும்பினால் இதே போன்ற வீடுகளைத்தான் இங்கு கட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு கிராமத்தினர் அனைவரும் உதவுவார்கள். அதே போல இங்கே குடியேறுபவர்கள் தங்களது பாடுகளை மட்டுமே பார்த்துக் கொண்டு சுயநலமாக இங்கே வாழ முடியாது. இங்கு வந்து வாழ்பவர்கள் தங்களைப் போலவே இந்த வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்து வாழ விரும்பி புதிதாக வரக்கூடியவர்களுக்கும் வீடு கட்டுதல், விவசாயம், பசு வளர்த்தல் போன்ற அனைத்து விஷயங்களிலும் உதவ வேண்டும் என்கிறார்கள் இங்கிருப்பவர்கள்.

சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்த கிராமத்துக்குள் நுழைந்ததும் ஏதோ 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஒரு கிராமத்துக்குள் நுழைந்து விட்டோமோ என்று தான் தோன்றுகிறது.

கோவிந்த நாமத்தில் எழுந்து கோவிந்த நாமத்தில் துயிலச் செல்லும் அற்புத வாழ்க்கை முறை…

இன்றைய நமது கடைக்கோடி குக்கிராமத்தைக் கூட இந்தியாவின் தேசிய உடையான நைட்டி!!! ஆக்ரமித்து விட்டது. இளைஞர்கள் வேட்டியை மறந்து விட்டு டிராக் பேண்ட், த்ரீ ஃபோர்த் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அவற்றையெல்லாம் தவறு என்று இவர்கள் கருதவில்லை. இவர்களுக்கு அது ஒவ்வாதது எனக் கருதி ஒதுக்கி விட்டார்கள் அவ்வளவே!

இவர்களது வாழ்க்கை முறையானது ஒரு தவம் போலிருக்கிறது. மின்சாரம் பயன்பாட்டில் இல்லை என்பதால் இரவு 7.30 மணிக்கு எல்லாம் தூங்கச் சென்று விடுகிறார்கள். நிம்மதியான உறக்கத்துக்குப் பின் மறுபடியும் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து கொள்கிறார்கள்.

கோவிந்தா நாமத்துடன் விடிந்து கோவிந்தா நாமத்துடன் துயிலச் செல்லும் இந்த ஊரில் வசிப்பவர்கள் அனைவரும் ஏதோ விநோதப் பிறவிகள் என்று நினைத்து விடாதீர்கள்.

ஆச்சர்யம், ஆனால் உண்மை!

சொன்னால் ஆச்சர்யப் பட்டுக் கொள்ளாதீர்கள். இங்கே வந்து இப்படியான வாழ்க்கைக்குள் தங்களை இஷ்டப்பட்டு நுழைத்துக் கொண்ட்வர்கள் எல்லோருமே படித்துப் பட்டத்திற்கு மேல் பட்டம் பெற்று புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளில் அமர்ந்து லட்சம் லட்சமாகச் சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களே!

வாழ்வின் ஏதோ ஒரு நொடியில் அவர்களுக்கு அந்த வாழ்க்கையின் மீது சலிப்பு ஏற்பட்டிருக்கலாம். அல்லது வாழ்க்கை என்பது இது அல்ல. வாழ்தல் என்பது இதனினும் இனிதானதாக வேறு ஏதோ ஒன்று என்று ஐயம் திரிபர உணர்ந்து அதன் பிறகே இப்படி ஒரு வாழ்க்கையை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.

இந்த கர்மா கிராமத்திற்கு வெளிநாட்டினரும் வந்து சில நாட்கள் தங்கிச் செல்கிறார்கள். சிலர் அங்கேயே வீடு கட்டிக் கொண்டும் வாழ்கிறார்கள். ரஷ்யா, அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் வந்தவர்கள் அங்கு இப்போது உண்டு என்கிறார்கள்.

ஒருவகையில் இது முன்னோடி கிராமம் என்பதே சரி…

சுயசார்பு வாழ்க்கை வாழும் இந்த கிராமம் நமக்கெல்லாம் முன்னோடி கிராமம் என்று சொன்னால் மிகையில்லை. ஏனெனில், மின்சாரம், எரிபொருட்கள், உணவு தானியங்கள், என எல்லாவற்றிலுமே ஒருவித பற்றாக்குறை நிலவும் இந்த நூற்றாண்டில் மக்களுக்கு பஞ்சம் என்று ஒன்று வந்தால் கடைசியில் மிஞ்சுவது எலெக்ட்ரானிக் உபகரணங்களும், ஈ வேஸ்ட்டுகளும் மட்டுமேயாக இருக்கக் கூடும்.

அந்த வகையில் இனி வரும் சந்ததிக்கு இது ஒரு மாடல் கிராமம் என்று கூடச் சொல்லலாம்.

இந்தக் கிராமத்தைச் சுற்றி வெகு அருகில் இருக்கும் பிற அத்தனை கிராமங்களிலும் மின்சாரம் உண்டு, செல்போன் உண்டு நவீனமயமாக்கலின் இன்னபிற அத்தனை அடையாளங்களும் உண்டு. இவர்கள் அதை மறுத்து விட்டு

வாழ்ந்து பழகுவதை பழமை என்பதைக் காட்டிலும் புதுமை என்று என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com