ஆஸ்துமா நோயாளிகளுக்கு எமன்களாகும் புறாக்கள்!

சிறப்பு கட்டுரை
ஆஸ்துமா நோயாளிகளுக்கு எமன்களாகும் புறாக்கள்!

பறவைகள் வளர்ப்பதில் சிலருக்கு அதீத ஈடுபாடு உண்டு. சிலர் கிளிகளை வளர்ப்பார்கள். சிலர் மாக்காவ் என்று சொல்லப்படக்கூடிய பஞ்சவர்ணக் கிளிகளை வளர்ப்பார்கள். இவை விலை உயர்ந்தவை என்று கருதுபவர்கள் கூண்டுகளில் லவ் பேர்ட்ஸ் வளர்ப்பார்கள். இதெல்லாம் ஒரு ஹாபி. ஆனால், பறவை வளர்ப்பில் ஈடுபாடு கொண்டவர்கள் வெகு நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அது என்னவெனில், பறவை வளர்ப்பில் ஆசை கொள்ளும் முன்பு தங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறதா என்பதை ஒருமுறை சோதித்துக் கொள்வது நல்லது. ஏனெனில், பறவை எச்சங்கள் மற்றும் பறவைகளின் தூவிகள் போன்ற மிக மெல்லிய சிறகுகள் காற்றில் பறந்து வந்து நமது சுவாசமண்டலத்தை தாக்க வல்லவை என சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதற்கு நாமறிந்த உதாரணமாக நடிகை மீனாவின் கணவர் மரணத்தையே நாம் எடுத்துக் கொள்ளலாம். அவரது இறப்புக்கு காரணம் புறாக்களின் எச்சங்களால் பரவிய நுரையீரல் நோய்த்தொற்று என்கிறார்கள் மருத்துவர்கள்.

புறாக்களின் மலம் விஷமா?

ஆம் என்று தான் கூறுகின்றன மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்களின் முந்தைய மருத்துவ ஆய்வுகள். பார்வைக்கு பிடிக்காத புறா மலம் அமிலத் தன்மை கொண்டது, இதில் பூஞ்சை மற்றும் ஈஸ்ட் நோய்க்கிருமிகள் உள்ளன, அவை மனிதர்களுக்கு நச்சு மற்றும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வீட்டின் மாடிகளில் எஞ்சியிருக்கும் காய்ந்து போன புறா எச்சங்கள் வாயிலாக காற்றில் பரவும் இந்த தூசி துகள்களை சுவாசிப்பதா ஆர்னிதோசிஸ், நுரையீரல் வீக்கம் மற்றும் ஆஸ்துமா போன்ற பலவகை நோய்த்தொற்றுகள் ஏற்படும்.

உதாரணங்கள்...

இது 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரிட்டனில் பதிவான செய்தி...

குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் புறாவின் கழிவுகளால் ஏற்பட்ட பூஞ்சை தொற்று காரணமாக இரு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இது 2022 ஜூன் மாதம் தமிழகத்தில் பதிவான செய்தி...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், தனது வீட்டின் அருகில் அதிக எண்ணிக்கையில் இருந்த புறாக்களில் இருந்து வெளிப்பட்ட எச்சங்களால் நுரையீரல் தொற்று நோய்க்கு உள்ளாகி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்காமல் நோய் முற்றி இறந்தார்.

இந்தச் செய்தி 2016 ஆம் ஆண்டிலேயே பொதுமக்களை எச்சரிக்கவென்று வெளியானது...

கர்நாடக அரசின் கால்நடை நூண்ணுயிரிகள் துறை சார்ந்த ஆய்வாளர்கள் மற்றும் கர்நாடக கால்நடை, விலங்கு மற்றும் மீன் வளத்துறை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி புறா எச்சங்கள் மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் விதமாக கிட்டத்தட்ட 60 விதமான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்த வல்லவை, ஆகவே புறாக்களின் நடமாட்டம் அதிகமிருக்கக் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் உயர்ந்த கோபுரங்களுடன் கூடிய வீடுகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதனால் தான் பறவையியல் வல்லுநர்களும் மற்றும் நகர்ப்புற திட்டமிடுபவர்களும்ம் புறாக்களை "பூச்சிகள்" என்று குறிப்பிடுகின்றனர். தற்போது பெங்களூரு நகரில் புறாக்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விட அதிகரித்துக் கொண்டே இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என்கிறார்கள் அவர்கள். ஏனெனில், புறாக்கள் அபிரிமிதமாகப் பெருகும் போது நகரம் அதன் பல்லுயிர் பெருக்கத்தின் சமநிலையை இழந்து ஏதோவொன்றின் ஆதிக்கத்தில் மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளி அதன் காரணமாக மனிதர்களை புதுப்புது நோய்மைகளை அனுபவிக்க வைத்து விடுகிறது. அந்த வகையில் தற்போது பெங்களூரு நகரம் ‘ஆஸ்துமா தலைநகரம்’ என்று மாறினாலும் அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்கிறார்கள்.

பெருகி வரும் புறாக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நமது மக்கள்தொகையுடன் ஒப்பிடும் போது, அந்தப் பறவைகளுடன் தொடர்புடைய சுகாதார கவலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புறாக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அந்தப் பகுதிகளில் வாழ்பவர்களில் அனேகம் பேருக்கு, ஹைப்பர் சென்சிட்டிவ் நிமோனிட்டிஸ்(HP) மற்றும் பிற நுரையீரல் தொற்று போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மூன்று நிலைகளில் மனிதர்களைத் தாக்கும் HP…

இந்த HP நோய்த்தொற்றில் மூன்று நிலைகள் இருக்கின்றன. அதில் அக்யூட் மற்றும் சப் அக்யூட் என்று சொல்லப்படக்கூடிய முதல் இரண்டுமே சரியான விதத்தில் சிகிச்சை அளித்தால் மீண்டு வந்து விடக்கூடியவை. இவை மைல்டானவை, ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த நிலையில் குணமடைந்து விட முடியும். ஆனால் க்ரோனிக் என்று சொல்லப்படக் கூடிய 3 வது நிலை இருக்கிறதே அது மிகவும் ஆபத்தானது. இது நுரையீரலை மிகக் கடுமையாக பாதித்து நோயாளிகளை நிலைகுலையச் செய்து விடும். இந்த நிலையில் நோயாளிகளைக் காப்பாற்றுவது என்பது முடியாத காரியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நுரையீரல் நோய்த்தொற்றுகள் மற்றும் HP வழக்குகளை ஆராயும் நுரையீரல் நிபுணர்கள் தெரிவிப்பது என்னவென்றால்? “HP காரணமாக 20 க்கும் மேற்பட்ட இறப்புகளைக் கண்ட மும்பையுடன் ஒப்பிடும்போது, பெங்களூரு மோசமாக பாதிக்கப்படவில்லை என்றாலும் இந்நகரில் புறாக்களுக்கு உணவளித்து வளர்க்கும் கலாச்சாரம் அதிகரித்து வருவதால் இது கவலைக்குரிய விஷயமாகவே கருதப்படுகிறது என்கிறார் மும்பையைச் சேர்ந்த நுரையீரல் ஆலோசகர் டாக்டர் சந்தீப்.

பொதுமக்களிடையே HP குறித்த தெளிவான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒன்றே இப்போது இந்த நோய்த்தொற்றை தவிர்ப்பதற்கான ஒரே மார்க்கம் என்கிறார் அவர். எங்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் HP நோய்த்தொற்று பாதிப்புடையவர்களில் 3 ல் 2 வழக்குகளில் பெரும்பாலானோர் ஒன்று புறா வளர்பபாளர்களாக இருக்கிறார்கள் அல்லது புறாக்களுக்கு அருகாமையில் வாழ்ந்து கொண்டு அதற்கு தினமும் உணவிடக்கூடிய வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் இப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டியதாயிருக்கிறது என்கிறார் டாக்டர் சந்தீப்.

அதற்காக புறாக்களை மனித குலத்திற்கு எதிரிகள் போல கருத வேண்டியதில்லை. நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு புறாவுமே நமக்கான நோய்த்தொற்றை கொண்டு வந்து விடுவதில்லை. ஏதோ ஓரிருமுறை புறா எச்சம் நம் மீது படுவதாலோ, அல்லது அதை எங்கேனும் நாம் எதிர்கொள்வதாலோ இந்த தொற்று பரவாது. உங்களுக்குத் தினந்தோறும் புறாக்களுக்கு உணவிடும் பழக்கம் இருப்பின் அவை தினமும் உங்களைத் தேடி உங்கள் வீடுகளுக்கு வரக்கூடும். அப்போது அவற்றின் எச்சங்கள் உங்கள் வீட்டுக் கூரைகளை நிறைக்கும். அதன் மூலமாக நோய்த்தொற்று நிச்சயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே புறாக்களுக்கு உணவிடுவதைத் தவிர்ப்பதும், அவற்றின் எச்சங்கள் மலிந்த இடங்களில் நடமாடுவதைத் தவிர்ப்பதுமே இந்த நோயைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி என்கிறார் டாக்டர்.

புறாக்களைக் கையாளுவதற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட விதிகள் எதுவும் இல்லை, ஆனாலும் நாட்டின் பல இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்கும் கலாச்சாரம் நிலவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண்ட்டி மைக்ரோபியல் ரெசிஸ்டண்ட்ஸ் பிரிவைச் சார்ந்த இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) நிலைக்குழு மருத்துவர்கள், இதுவரை புகாரளிக்கப்பட்ட வழக்குகள் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர். அத்துடன் குடிமக்கள் தங்களைச் சுற்றி அதிக எண்ணிக்கையிலான புறாக்கள் இருக்கும் நிலை வந்தால் அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், புறாக்கள் தங்கள் எச்சங்களை விட்டுச் செல்லும்ன் இடங்களில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வலுயுறுத்துகின்றனர்.

மணிப்பால் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் டாக்டர் சத்யநாராயண் எம், புறாக்களால் பரவும் HP மட்டுமல்ல, கிளிகளின் எச்சங்களால் ஏற்படும் சைட்டாகோசிஸ் வழக்குகளும் கூட தற்போது பதிவாகி வருகின்றன என்றார்.

ஆனால் பெங்களூருவில் உள்ள புறாவுக்கு உணவளிக்கும் குழுக்கள் இந்த கூற்றுகளை வெற்றுப் பிரச்சாரம் என்று மறுத்துவிட்டன. ஸ்ரீ சங்கேஷ்வர பார்ஷ்வநாத் ஜெயின் கபூதா தான சேவா சமிதியின் அறங்காவலர் வசந்தராஜ் ஆர் கூறுகையில், புறாக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன, அவற்றின் கழிவுகளால் மக்கள் பாதிக்கப்படலாம், எனவே சுகாதாரத்தை நன்கு பராமரிக்க வேண்டும். - என்பதோடு முடித்துக் கொண்டார்.

பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவிடும் பழக்கம் மறுமையில் நம்மைக் காக்கும் என்பதே இந்து தர்மம். ஆனால், மனித குலத்தை தொற்றில் இருந்து காக்க வேண்டுமென்றால் மருத்துவர்கள் சொல்வதற்கும் காது கொடுத்துத் தான் ஆக வேண்டும். அதே சமயம் ஜெயின் சங்க நிர்வாகி கூறும் கருத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. புறாக்கள், கிளிகள், மயில்கள் மட்டுமல்ல வேறு எந்த வகைப் பறவைகளையுமே நட்புணர்வோடு பேணுவதைக் காட்டிலும் மிக முக்கியமானது அவை வாழும் இடங்களைத் துப்புரவாக வைத்துக் கொள்வது என்பது. இதையும் சேர்த்துப் பின்பற்ற முடிந்தால் மட்டுமே இனி நீங்கள் பறவை வளர்ப்பில் ஈடுபடலாம் என்று ஸ்டிரிக்ட்டாக முடிவெடுங்கள். இல்லையேல் குறைந்த படம் அவற்றிடம் இருந்து விலகி இருப்பதுடன் நோயிடம் இருந்தும் விலகி இருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com