கழுகுகளின் உயிருக்கு எமனாகும் நச்சு ரசாயன மருந்துகள்! அரசு நடவடிக்கை என்ன?

கழுகுகளின் உயிருக்கு எமனாகும் நச்சு ரசாயன மருந்துகள்! அரசு நடவடிக்கை என்ன?

சுற்றுச்சூழல் அமைப்புக்கு கழுகுகள் மிக முக்கியமானவை, ஏனெனில் அவை தொற்றுநோய்கள் வெடிப்பதைத் தடுக்கின்றன. சமீப காலங்களில் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், காட்டு நாய்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருவது கவலைக்கிடமான வகையில் மனிதர்களைப் பாதித்து வருகிறது. ஏனென்றால், காட்டு நாய்கள் மனிதர்கள், வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளை பாதிக்கும் பல வகை நோய்களின் கேரியர்களாக மாறி வருகின்றன என்கிறது அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள சர்வே ஒன்று.

சூழலியலில் கழுகுகளின் எண்ணிக்கை குறைவதற்கான முதன்மைக் காரணம் ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளே (NSAID) என்கிறார்கள் மருத்துவர்கள். இறந்த பசுக்கள் அல்லது கால்நடைகள் வழியாக அதை உட்கொள்ளும் கழுகுகளின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்கிறார்கள்.

பராமரிப்புக்கான நிதி பற்றாக்குறை மற்றும் நச்சு இரசாயனங்கள் மற்றும் மருந்துகளின் பரவலான பயன்பாடு காரணமாக நாடு முழுவதும் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த முப்பதாண்டுகளுக்கு முன்பு 4 கோடியாக இருந்த கழுகுகளின் மொத்த எண்ணிக்கையானது தற்போது வெறும் 19000 மாக அதல பாதாளத்திற்கு இறங்கி இருக்கிறது. இது சூழல் பாதுகாப்பில் மிகப்பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் கழுகுகள் இயற்கை சுகாதாரப் பணியாளர்களாகச் செயல்படக்கூடியவை என்பதால் அவற்றின் எண்ணிக்கை குறைவு என்பது சூழலியல் ஆர்வலர்களால் கவலைக்குரிய விதத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதலில் கழுகுகளின் உயிருக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடிய நச்சு மருந்துகள் மற்றும் ரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். ஆனால் அதற்கு அரசாங்கம் என்ன விதமான நடவடிக்கை எடுக்கவிருக்கிறது என்ற கேள்விக்கு இதுவரை உரிய பதிலே இல்லை.

ஏனெனில் மத்திய அரசு தடை செய்த மருந்துகளை மீண்டும் புழக்கத்துக்கு கொண்டு வருவதில் கார்ப்பரேட்டுகள் திறமையாகக் காய் நகர்த்துகிறார்கள். சிலவகை மருந்துகள் தடை செய்யப்பட்ட பின்பும் கூட மேல் முறையீட்டில் வென்று தடை நீங்கப்பெற்று மீண்டும் புழக்கத்துக்கு வந்து விடுகின்றன. இந்த மருந்துகளால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்றாலும் கூட நீண்டகாலப் பயன்பாட்டில் அவற்றால் கேடான விளைவுகளே அதிகம் உண்டு என்று முற்றாகத் தெரிந்திருந்த போதும் அவற்றைத் தடுக்க முடியாத நிலை நீடிப்பதால் அவற்றுக்கான மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து மத்திய அரசு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ் பிஞ்சூரில் உள்ள கழுகு பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையத்திற்குச் சென்றபோது, விரைவில் வளர்ச்சி அடைந்த கழுகுகளை காடுகளில் விடுவிக்க இருப்பதாக அறிவித்தார். ஆனால், கழுகுகளை காடுகளில் விடுவிப்பது என்று முடிவெடுத்து விட்டால் அவற்றின் வாழ்விடத்தைச் சுற்றி சுமார் 100 கி மீ தொலைவுக்கு நச்சு மருந்துகளின் தாக்கம் இருக்கக் கூடாது. இதில் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையினர் கவனமான வரையறைகளைக் கையாள வேண்டும். ஆயினும் அது குறித்த கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பதில் அளிக்காமல் மெளனமாகவே இருந்தார். கழுகுகள் விடுவிக்கப்படும் காட்டுச் சரகங்களில் ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளைக் (NSAID) கொட்டும் வழக்கம் அதிகமிருக்கிறதே என்பது குறித்து அவர் விளக்கம் ஒன்றும் அளிக்கவில்லை.

கழுகுகள் விடுவிக்கப்பட்டவுடன், அவை 100 கிமீ தொலைவில் தங்கள் உணவைக் கண்டுபிடித்து தேடலில் இறங்கும் போது அவற்றுக்கான இரைகளில் பரவியிருக்கும் நச்சுகள் மூலமாக NSAID க்கு இரையாகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில், நிபுணர்கள் குழு ஒன்று பிஞ்சூர் மையத்திலிருந்து 100 கி.மீ பரப்பை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அங்கு கிடைத்த சடல மாதிரிகளை ஆராயத் தொடங்கியது. இன்னும் பகிரங்கப்படுத்தப்படாத அந்தக் கணக்கெடுப்பு அறிக்கையின் படி அப்பகுதிகளில், NSAIDயின் பெரிய அளவிலான பயன்பாடு இருப்பது கண்டறியப்பட்டது.

2004 ஆம் ஆண்டில், அமெரிக்க விஞ்ஞானி லிண்ட்சே ஓக்ஸ், டிக்லோஃபெனாக் எனும் மருந்து NSAID வகையைச் சார்ந்தது, அது கழுகுகளின் எண்ணிக்கை பரவலாகக் குறைவதற்குக் காரணம் என்று கண்டுபிடித்தார். அது மட்டுமல்ல இந்த மருந்து , உடல் உள் உறுப்புகளில், குறிப்பாக சிறுநீரகங்களில் யூரிக் அமில படிகங்கள் குவிவதற்கு காரணமாகிறது என்று கண்டறியப்பட்ட பின்பு 2008 ஆம் ஆண்டில் அரசாங்கமே டிக்ளோஃபெனாக்கை தடை செய்தது.

ஆனால், அரசாங்கம் தடை விதித்த பின்னரும் கூட பொதுமக்களிடையே சட்ட விரோதமாக இந்த மருந்தின் பயன்பாடு தொடர்ந்து நீடித்துக் கொண்டு தான் இருந்தது என்பது பின்னர் தெரிய வந்தது. எனவே இதை சீரியஸாகக் கண்காணிக்கத் தொடங்கிய அரசு "2015 ஆம் ஆண்டில், மீண்டும், டிக்ளோஃபெனாக் மருந்தின் 5 முதல் 50 மிலி வரையிலான பெரிய குப்பிகளை தடைசெய்து விட்டு 2-3 மில்லி குப்பிகளை மட்டுமே மனித பயன்பாட்டிற்கு அனுமதித்தது, இதற்கு மருந்து நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திற்கு சென்றது. இதில் டெல்லி உயர்நீதிமன்றம் மருந்துக்கான தடையை ரத்து செய்து, அதைத் தொடரலாம் என்று அறிவித்து விட்டது" - என்றார் ரானடே.

இதைத் தொடர்ந்து இந்த மருந்துகளால் மட்டும் அல்லாமல், அசெக்லோஃபெனாக், நிம்சுலைட் மற்றும் கெட்டோப்ரோஃபென் என பல நச்சு மருந்துகளை NSAID யின் கீழ் அடையாளம் கண்டு வகைப்படுத்தினர். இவை அனைத்துமே கழுகுகளின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடியவை என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். செப்டம்பர் 2022 இல், டெல்லியைச் சேர்ந்த

வழக்கறிஞரும் ஆர்டிஐ ஆர்வலருமான கௌரவ் பன்சால், மூன்று NSAID களுக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பன்சால் கூறுகையில், பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி (பிஎன்ஹெச்எஸ்) மற்றும் முக்கிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) போன்ற நிறுவனங்களிடம் நீதிமன்றம் ஆலோசனை கேட்டது. NSAID மீதான தடையை BNHS ஆதரித்தது. ஆனால், "CDSCO நிலைப்பாடு தெளிவாக இல்லை" என்று பன்சால் கூறினார்.

இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் கழுகுகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய இந்த நச்சு மருந்துகளுக்கான மாற்று மருந்துகளை அரசு கண்டு பிடித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அது சூழலியலில் பெரும் மாற்றங்களை விளைவித்து மோசமான பின்விளைவுகளைத் தரும் என சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com