பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்; என் வீட்டின் 5 தலைமுறை அனுபவம்!

-ரேவதி பாலு.

 தீபாவளி சமயத்தில் யாரைப் பார்த்தாலும் ‘கங்கா ஸ்னாநம் ஆச்சா?” என்று கேட்பது மாதிரி, இப்போது ஒருவரையொருவர் சந்தித்தாலே, "பொன்னியின் செல்வன்' படம் பார்த்தாச்சா?" என்பதுதான் பேச்சு. என் தாத்தா காலத்தில் வெளியானதுதான் 'பொன்னியின் செல்வன்' நாவல். அந்த வகையில் என் பேத்தி திரு கல்கிக்கு ஐந்தாவது தலைமுறையாகிறாள். நானெல்லாம் வீட்டில் கல்கியிலிருந்து பிரித்து எடுத்து 'பைண்ட்' செய்த பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகங்கள் சிறுவயதிலேயே படித்தவள். திரும்ப எப்போதெல்லாம் கல்கியில் அந்த நாவல் தொடராக வெளியிடப்பட்டதோ அப்போதெல்லாம் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் விடாமல் தொடர்ந்து படித்திருக்கிறோம்.

 நான் சொல்லி என் மகள் அதை பத்து வருடங்களுக்கு முன் படித்தாள்.  திரைப்படம் வரப்போகிறது என்றவுடன் திரும்பவும் ஒரு முறை ஐந்து பாகங்களையும் படித்ததோடு இல்லாமல் அவள் தன் எட்டு வயது மகளுக்கு அதை சுருக்கி கதையாகச் சொன்னாள். அதில் வரும் 20-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களின் பெயர்களை 'கட கட'வென்று ஒப்பிக்கிறாள்  என் பேத்தி தேஜஸ்வினி. இப்போது வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசித்துப் பார்த்தவள்,"நான் கொஞ்சம் பெரியவளானதும் நிச்சயம் இந்த நாவலைப் படிப்பேன்" என்கிறாள்.

 தமிழ்ப் புத்தகங்கள் படித்து பழக்கம் இல்லாத என் சகோதரி மகன் தேடித் தேடி 'பொன்னியின் செல்வன்' ஐந்து பாகங்களையும் படித்து விட்டான்.  அதுவும் எப்போது? திரைப்படம் பார்த்து விட்டு வந்த பின்பு! "பெரியம்மா! நீங்க, அம்மா எல்லாம் படிச்ச கல்கி பைண்டிங் 'பொன்னியின் செல்வன்' இப்போ இருக்கா? ஒரிஜினல் ஓவியங்களோடு இருக்கிற அந்த ஐந்து பாகங்கள் படிக்கக் கிடைக்குமா?" என்று கேட்கிறான்.

பொன்னியின் செல்வன் கதை நடந்த இடங்களுக்குப் போகும் இளைய தலைமுறை அங்கே உள்ள கல்வெட்டுகளில் இந்த கதை சம்பந்தப்பட்ட விஷயங்களை தேடிக் கண்டுபிடித்து உற்சாகமாக படம் பிடித்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஒரு எழுத்தாளருக்கு, அவர் எழுதிய கற்பனை கலந்த வரலாற்றுப் புதினம், எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும் தேடித் தேடி இளைய தலைமுறையால் படிக்கப் படுகிறது, மதிக்கப் படுகிறது என்றால் அது அவருக்கு எவ்வளவு பெரிய கௌரவம்!  அவர் நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டதால்தானே இன்றைய தலைமுறியினருக்கு தெரிய வந்துள்ளது?

மஹா பிரம்மாண்டமான வரலாற்று புதினத்தை  கச்சிதமாக எல்லோரும் ரசிக்கக் கூடிய ஒரு திரைப்படமாக எடுத்ததற்காகவே மணிரத்னத்தை பாராட்டலாம். கதையை மிக நன்றாக உள்வாங்கி கதாபாத்திரங்களுக்கு நடிகர் நடிகையரை மிகச் சரியாக தேர்வு செய்து படமாக்கி இருப்பதால், இதில் நடிப்பவர்கள் யாரும் வெறும் நடிகர்களாக நம் கண்ணுக்குத் தெரியவில்லை,  நாவல் கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் பார்க்க வரும் கும்பலில் கணிசமானவர்கள்  முதியவர்கள், பொன்னியின் செல்வன் வெளிவந்த காலத்தை ஒட்டி பிறந்திருக்கக் கூடியவர்கள்.  சமீப காலங்களில் தியேட்டருக்கு வந்து பார்க்கும்படியாக அவர்களது ரசனைக்குத் தகுந்த திரைப்படங்கள் எதுவும் வெளியானதாக தெரியவில்லை. அந்த வகையில் தியேட்டரில் பல முதியவர்களைப் பார்க்க முடிகிறது.  

ரொம்ப சந்தோஷமாக கையில் இடைவேளையில் சாப்பிட வீட்டிலிருந்து கொண்டு வந்த  தின்பண்டங்களோடு வயதானவர்கள், "அதோ பார்! ஆழ்வார்க்கடியான் வந்துட்டான்!" என்றும் "ஊமைராணி பார்த்தியா?" என்றும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு படு உற்சாகமாக வேறு எந்தப் படத்தை தியேட்டருக்குப் போய் பார்த்திருக்கப் போகிறார்கள்? 

நாவலையும் திரைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து குற்றம் குறை காண வேண்டியதில்லை. நாவல் தனி.  அது பக்கம் பக்கமாக எழுதப்படும் அச்சு ஊடகம். அதுவே திரைப்படமாகும்போது வசனமே சில இடங்களில் தேவைப்படாமல் படக் காட்சி மூலம்  விளங்க வைக்கும் ஒளி ஊடகமாகி விடுகிறது,  அதற்கு தகுந்த மாற்றங்கள் கதையில் இருக்கத் தான் செய்யும் என்பதை உணர்ந்து புரிந்து கொண்டு படம் பார்க்கச் சென்றால் நாவலை ரசித்தவர்களால், நிச்சயம் திரைப்படத்தையும் ரசிக்க முடியும் என்றே தோன்றுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com