அந்த 3 நாட்கள்; ஊருக்கு வெளியே தங்கும் பள்ளிச் சிறுமிகள்!

பெண் பிள்ளைகள்
பெண் பிள்ளைகள்

-நேரடி விசிட்: காயத்ரி.

 திருச்சி, பெரம்பலூர் அருகே காவல் தெய்வத்திற்கு பயந்து பெண்பிள்ளைகளை மாதவிடாய் காலத்தில் கிராமத்திற்கு வெளியே தனி அறையில் தங்க  வைக்கும் அவலம் இப்போதும் நீடித்து வருகிறது..

 பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகேயுள்ளது இனாம் அகரம் என்ற கிராமம். இக்கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்களது குடும்பத்திலுள்ள பெண்பிள்ளைகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களை வீட்டில் தங்கவிடாமல் மூன்று நாட்களுக்கு கிராம எல்லையிலுள்ள ஒரு தனி அறையில் தங்கவைக்கும் நடைமுறையை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.

 பெரம்பலூர் மாவட்டத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் பணிகாலத்தில் (கடந்த 15 ஆண்டுகளாக)  நடவடிக்கை மேற்கொண்டும் இந்த சர்ச்சைக்கு தீர்வு காண முடியவில்லை.

பெண்கள் மாதவிடாய் சமயத்தில் உடலளவில் சோர்வுற்று இருப்பதாலும் அவர்களின் சுகாதாரம் கருதியும் அவர்களை எந்த வேலையும் செய்ய விடாமல் தனிமையில் ஓய்வெடுக்க செய்தனர். ஆனால், அதையே கட்டுப்பாடாக்கி ஊருக்கு வெளியே பெண் குழந்தைகளை அந்த 3 நாட்களுக்கு ஒதுக்கி வைக்கும் அவலம் ஏன்?

 கல்கி ஆன்லைனுக்காக இதுகுறித்து அந்த கிராம மக்களிடம் நாம் நேரில் சென்று விசாரித்தோம்.. அந்த கிராம மக்கள் கூறிய பதில் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. பார்வதி என்ற பெண்மணி பேசினார்..

பார்வதி
பார்வதி

 ‘’ எங்கள் சமூகத்தில் குல தெய்வமாக வழிபடும் காவல் தெய்வம் ஒரு துஷ்ட தேவதை. வீட்டுக்குள் சுத்தபத்தமாதில்லாவிட்டால் தண்டித்து விடும்.   தீட்டு சமயத்தில் பெண்பிள்ளைகள் வீட்டில் இருந்தால் தெய்வம் தண்டித்துவிடும். அதானல்தான் அந்த 3 நாட்களில் தனியாக தங்க வைக்கிறோம்..’’ என்ற அந்த பெண்மணி தொடர்ந்தார்..

 ‘’இப்போ பரவாயில்லையே.. எங்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக அரசு கட்டடங்களில் தங்க விக்கிறோம்.. எங்கள் காலத்திலெல்லாம் இப்படி இல்லே.. சுற்றிலும் புதர்மண்டிய காட்டுக்கு நடுவே சோள தட்டையால் மறைவிடம் அமைத்து,  மழை தடுப்பு கூரை அமைத்து அதில் தங்கி இருப்போம்.  மேலும் குழந்தை பிறந்திருந்தாலோ அல்லது பெண்பிள்ளை வயதுக்கு வந்தாலோ  30 நாட்கள் அங்குதான் இருப்போம்.’’ என்றவர்,

 ‘’கோயில் திருவிழா சமயங்களில் தண்டோரா போட்டு அது போன்றவர்களை திருவிழா முடியும்வரை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்போம்’’  என்று கூறி அதிர்ச்சியை கூட்டினார் பார்வதியம்மா.

ஊர் மக்கள்
ஊர் மக்கள்

அந்த ஊர் கோயில் எட்டுடையான் பெரியசாமி கோயில் பூசாரி காசி ராஜாவிடம் இது பற்றி விசாரித்தோம்..

 ‘’இந்த  காவல் தெய்வம் கொஞ்சம் உக்கிரமானதுதான்.. அதற்கு உதாரணமாக பல சம்பவங்களைச் சொல்லலாம். அதற்கு பயந்துதான் பெண்பிள்ளிகள் அந்த சமயத்தில் தாங்களே ஒதுங்கி இருக்கின்றனர். யாரும் கட்டாயபடுத்துவதில்லை’’  என்றார்.

 தற்போது பள்ளி மாணவிகள் மாதவிடாய் காலத்தில் ஊருக்கு சற்று வெளியேயுள்ள நியாய விலைக் கடை கட்டிடத்தில் வந்து தங்கி கொள்கிறார்களாம். ஆனாலும் அருகிலுள்ள புதர்கள், குளம், குட்டை  போன்றவற்றிலிருந்து படையெடுக்கும் விஷப் பூச்சிகள், ஊர்வன போன்றவற்றால் பாதிக்கப் படுவதும் நிகழ்கிற்து. இதற்கு பயந்து சில பெண்கள் அந்த நாட்களில் அருகிலுள்ள தங்கள் உறவினர்கள் வசிக்கும் வேறு கிராமத்திற்கு சென்று விடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

சிறுமிகள்
சிறுமிகள்

இதனிடையே இனாம் அகரம் கிராமத்தில் எழுந்துள்ள இந்த சர்ச்சையையடுத்து அங்கு வருவாய்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ‘’ஒரு கிராம பஞ்சாயத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் கடைபிடிக்கும் இந்த நடைமுறையை அரசு நினைத்தால் மட்டும் தடுத்துவிட முடியாது’’ என்பது பொதுவான கருத்து.

 ‘’அறியாமையில் உள்ள இந்த கிராம மக்கள், மாணவிகள், மற்றும் பெற்றோர்களுக்கு அந்த ஊர் பள்ளி ஆசிரியைகள் தொடக்க பள்ளியிலிருந்தே இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தான் இப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வுகாண இயலும்’’ என பெண்விடுதலை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com