தென்காசி எஸ்தானியா போல செழிக்கும்! ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பேட்டி!

ஸ்ரீதர் வேம்பு. தஞ்சை மண்ணில் அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் பள்ளிப்படிப்பு. அதன் பின் சென்னை ஐ.ஐ.டி.யில் இஞ்சினியரிங். பிறகு அமெரிக்காவில் மேற்படிப்பு. 1996ல் அங்கேயே ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியை ஆரம்பித்து, அது பின்னர் ZOHO என்று பரிணாம வளர்ச்சி பெற்று, உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
2010ல் அமெரிக்காவில் சிலிக்கான் பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த அதன் கிளை தமிழ்நாட்டில் தென்காசியை அடுத்த மத்தளம்பாறை கிராமத்தில் துவக்கப்பட்டது. அந்த ஆலமரத்தின் ஒரு விழுதான ஜோஹோ பள்ளிகள் தென் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் ஓர் அமைதிப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறன. கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதர் வேம்புவின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது. தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் ஸ்ரீதர் வேம்புவை சந்தித்தோம்.

“ZOHOவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு, தென்காசி ஒப்பிடுங்கள்”
“அமெரிக்காவில் சிலிக்கான் பள்ளத்தாக்காக இருந்தாலும் சரி, இந்தியாவில் தென்காசியாக இருந்தாலும் சரி, திறமையைப் பொறுத்தவரை ஒரு வித்தியாசமும் இல்லை. நம் ஊரில் திறமை கொட்டிக் கிடக்கிறது. ஆனால், இங்கே திறமையானவர்களுக்கெல்லாம் சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த வாய்ப்புகளை நாம் உருவாக்கிக் கொடுத்தோம் என்றால், உலகத் தரத்தில் சாஃப்ட்வேர் பொருட்களை இவர்கள் இங்கே உட்கார்ந்துகொண்டே உருவாக்குவார்கள்.

"இந்தியாவைப் பொறுத்தவரை, கிராமத்து இளைய தலைமுறையினருக்குத் தேவையான பயிற்சி கொடுத்து, வேலைக்கு அவர்களைத் தயார் செய்வது, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பது என்ற இரண்டு விஷயங்களிலும் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த இரு விஷயங்களுமே எனக்கு முழு திருப்தியை அளிக்கின்றன. நம் நாட்டிலேயே இது ஒரு புது முயற்சி என்று சொல்லலாம்.
இந்த வெற்றிகரமான திட்டத்தை, தென்காசியில் மட்டுமில்லாமல், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, திருப்பூர் என்று தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமில்லை. அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டுக்கு வெளியே உத்தரப் பிரதேசத்தில் செயல்படுத்தப்போகிறோம்!”
ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பாக, இந்தியர்களின் கனவு தேசமாக இருந்தது அமெரிக்கா. வேலை வாய்ப்புக்கு கனவுக் களமாக இருந்தது சிலிக்கான் பள்ளத்தாக்கு. ஆனால், நீங்கள் அங்கிருந்து புறப்பட்டு, தென்காசிக்கு வந்து குக்கிராமமான மத்தளம்பாறையில் கிளை துவக்கி சாஃப்ட்வேர் உலகத்தின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்த்திருக்கிறீர்கள்! இந்த மேஜிக் சாதனை எப்படி சாத்தியமானது?"
"என்னைப் பொறுத்தவரை, சிலிக்கான் பள்ளத்தாக்கு என்பதை பூகோள ரீதியாக அமெரிக்காவில் இருக்கும் மிகப்பிரபலமான ஒரு இடமாகப் பார்க்கவில்லை. அங்கே இருக்கக் கூடிய தொழில் முனைவோர்களின் மனோபாவத்தை த்தான் (மைண்ட் செட்) பார்க்கிறேன். அந்த மைண்ட் செட்தான் எனக்கு முக்கியம். அங்கிருந்து அதை எடுத்துக் கொண்டுவந்து இங்கே தென்காசியில் அதற்கு செயல்வடிவம் கொடுக்கிறேன். சொந்தக் காலில் நிற்பது, இந்த சமூகத்துக்கு உருப்படியாக ஏதாவது செய்வது என்று வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி, எதிர்வரும் சவால்களை, சிக்கல்களை சமாளித்து, தடுக்கி விழுந்தால், மீண்டும் சுதாரித்துக் கொண்டு எழுந்து, ஜெயிக்கவேண்டும் என்ற அணுகுமுறை ரொம்ப முக்கியம். நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும், தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை, தடைகளைப் புறந்தள்ளி, ஒருங்கிணைந்து உழைக்கும் ஸ்பிரிட்டைத்தான் நான் சிலிக்கன் பள்ளத்தாக்கிலிருந்து எடுத்துக் கொண்டு வந்தேன். அது உலகத்தின் எல்லா இடங்களுக்கும் பொருத்தமான ஒரு அணுகுமுறை. கூடுவாஞ்சேரியிலும் சரி, மத்தளம்பாறையிலும் சரி அதுதான் ஜெயித்திருக்கிறது.

"Small Office - Home Office என்ற தத்துவத்தின் அடிப்படையில் உருவானதுதான் ZOHO என்று சொல்லி இருக்கிறீர்கள். உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா தொற்றுக் காலத்தில் சாஃப்ட்வேர் கம்பெனிகள் மட்டுமில்லாமல் பல்வேறு நிறுவனங்களுமே "ஒர்க் ஃப்ரம் ஹோம்" முறையை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த அடிப்படையிலேயே ஒரு நிறுவனத்தை உருவாக்கும் எண்ணம் பல வருடங்களுக்கு முன்னதாகவே உங்களுக்கு வந்துள்ளது. எப்படி வந்தது இந்த தீர்க்க தரிசனம்?"
"2005லேயே "Work online" என்பதுதான் எங்கள் நிறுவனத்தின் tag line ஆக இருந்தது. நீங்கள் உங்கள் அலுவலகத்துக்குப் போய்தான் உங்கள் வேலையைச் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், எங்கே இருக்கிறீர்களோ, அங்கிருந்தபடியே, அலுவலகம் சென்றால் என்ன செய்வீர்களோ அந்த வேலையை செய்ய முடியும் என்பதைத்தான் வலியுறுத்தி, அதற்கான சாஃப்ட்வேர் தயாரிப்பில் ஈடுபட்டோம். அதுவே எங்கள் கனவாக இருந்தது. இன்று காலத்தின் கட்டாயமாக எல்லோரும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். எங்களுடைய கனவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நீண்டகாலத் திட்டம் அவசியம்; அதை உறுதிப் பிடிப்புடன் செயல்படுத்தவேண்டும். அதில் எதிர்கொண்ட பல்வேறு வகையான சவால்களுக்கும், வெற்றிகரமாக தீர்வு கண்டு, இன்று பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.
"சாஃப்ட்வேர் உலகில், சர்வதேச அளவில் மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய ராட்சச நிறுவனங்களோடு போட்டி போடுவதற்கு ஆரம்பத்தில் நீங்கள் பயப்பட்டீர்களா?"
"பயப்பட்டால் ஒரு வேலையும் செய்ய முடியாது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு பயந்துகொண்டிருந்தால் சுதந்திரப் போராட்டத்தையே நாம் நடத்தி இருக்க முடியாது; சுந்திரம் பெற்றிருக்க முடியாது. அது போலத்தான் பிசினசிலும், பயந்துகொண்டிருக்கக் கூடாது. துணிச்சலாக முடிவுகள் எடுத்து, செயல்படுத்த வேண்டும்; பிரச்னைகள் வந்தால் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதிக பட்சமாக பிசினஸில் நஷ்டம் வந்தால், அதை மூடிவிட்டு, வேறு இடத்தில் வேலைக்குப் போகப்போகிறோம். அவ்வளவுதான். ஆகவே, வீணாக பயப்படவேண்டிய அவசியமே இல்லை.
மற்ற சாஃப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம், பிரபலமான இஞ்சினியரிங் கல்லூரிகளிலிருந்து மாணவர்களை கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் மூலம் வேலைக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் உள்ளூர் இஞ்சினியரிங் கல்லூரிகள் தவிர கலை – அறிவியல் கல்லூரிகள், தென்காசி பகுதியில் பிளஸ் 2 படித்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வேலைக்கு எடுத்துக் கொள்கிறீர்களே? இந்த தைரியம் உங்களுக்கு எப்படி வந்தது?
"உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. சிவில், மெக்கானிகல், மெட்டலர்ஜி என எந்த இஞ்சினியரிங் பிரிவில் படித்திருந்தாலும் பரவாயில்லை என்று தேர்ந்தெடுத்துக்கொண்டு போய், அவர்களுக்கு பயிற்சி கொடுத்து சாஃப்ட்வேர் துறையில் பயன்படுத்திக் கொள்ள முடியுமானால், ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் கல்லூரி மற்றும் பிளஸ் 2 படித்த புத்திசாலி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, சாஃப்ட்வேர் துறையில் ஏன் பயன்படுத்திக் கொள்ள முடியாது? மாணவர்கள் படித்த படிப்புக்கும், அவர்கள் பார்க்கும் வேலைக்கும் சம்மந்தமில்லை என்றால், எதற்காக அவர்கள் நாலு வருட காலத்தை வீணாக்க வேண்டும்? இப்படித்தான் முயற்சி செய்து பார்க்கலாமே என்று நினைத்தோம். இந்த சிந்தனைக்கு கொடுக்கப்பட்ட செயல் வடிவம்தான் ZOHO பள்ளிகள். அதற்கு நல்ல பலன் கிடைக்கிறது.
“Zoho போன்ற சர்வதேச நிறுவனம், கிராமப்புற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் இந்தத் திட்டத்தில் நீங்கள் சந்திக்கும் முக்கியமான சவால் என்ன?”
“ கிராமப்புற மாணவர்களுக்குத் திறமை இருந்தாலும், அவர்களுக்கு, வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும்போது, அவர்களின் தன்னம்பிக்கை போதிய அளவில் இல்லை என்பதை கவனிக்கிறோம். எனவே, அவர்களுக்கு, முதல் படியாக தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறோம். அதன் பின் அவர்கள் தங்கள் திறமையை அபாரமாக வெளிப்படுத்துகிறார்கள். சாஃப்ட்வேர் துறையின் சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப அவர்களால் பணிசெய்ய முடிகிறது! “
“உங்களது “ஹப் அண்டு ஸ்போக்ஸ் மாடல்” அலுவலகம் பற்றி விளக்குங்களேன்!”
“எங்களுடைய மாடல் “ஹப் அண்டு ஸ்போக்ஸ் மாடல்”! அதாவது இந்தியாவின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் நாங்கள் “ஹப்” அலுவலகத்தை அமைக்கிறோம். அங்கே 500 , 800 பேர்கள் வரை பணிபுரிவார்கள். அவர்களில் இருந்து 20, 25 பேர் கொண்ட ஒரு சிறு குழு இன்னும் சுமார் 25, 30 கிமீ. தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிறிய “ஸ்போக்ஸ்” அலுவலகம் அமைத்துப் பணிபுரியலாம். அது, அந்த கிராம மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும். அந்த கிராமம், உலக சாஃப்ட்வேர் வரைபடத்தில் இடம்பெறும். இப்படியாக தற்போது இந்தியாவில் சுமார் அரை டஜன் “ஹப் அலுவலகங்களும்”, முப்பது “ஸ்போக்ஸ் அலுவலகங்களும்” செயல்பட்டுவருகின்றன.
கிராமங்கள் மற்றும் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ZOHO வின் அலுவலகங்களில் இருந்து கிட்டத்தட்ட 2000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் சுமார் ஆயிரம் ஊழியர்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
“சாட் ஜிபிடியை (ChatGPT), செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற சமீபத்திய விஷயங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”
இத்தகைய தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது. இதனை தவிர்க்கவே முடியாது.
இது அணுசக்தி தொழில்நுட்பம் போன்றது. இதை வைத்து மனிதர்களுக்கு நன்மை செய்வதும் தீமை செய்வதும் நம் கையில்தான் உள்ளது. அணு சக்தியை வைத்து மின்சாரத்தையும் தயாரிக்க முடியும், அணுகுண்டையும் வீச முடியும். எனவே செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் குறித்த கொள்கை விவாதம் வேண்டும்.
மென்பொறியாளர்கள் எல்லாம் நெசவாளர்கள் கையால் துணி நெய்வதை போன்றே கையால் ’கோடிங்’ எழுதுகிறார்கள். சாட்ஜிபிடி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும் ’கோடிங்’ எழுத முடியும். இதனால் 10 மடங்கு உள்ள உற்பத்தி திறன் 100 மடங்காக அதிகரிக்கும். விசைத்தறி வந்த பிறகு, கைத்தறி நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஸ்மார்ட் போன் வருகையால் லேண்ட் லைன் போன்கள் காணாமல் போய்விட்டன. ஆன்லைன் பேங்கிங் வந்ததால் பலர் வங்கிகளுக்கு செல்வதில்லை. தங்கள் ஸ்மார்ட்போன் மூலமே அத்தனை வங்கி வேலைகலையும் முடித்துக் கொள்கிறார்கள். அது போல, இதுவும் மென்பொருள் துறையில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும். இதனை எதிர்கொள்ள நம்மை எப்படி நாம் மாற்றிக்கொள்வது என்பது பற்றி இப்போதே சிந்திக்க வேண்டும். உடனே பிரச்னை இல்லை என்றாலும் கூட சில ஆண்டுகள் கழித்து பிரச்னைகள் வரலாம்.
“இன்னும் ஒரு பத்தாண்டுகள் கழித்து தென்காசி எப்படி இருக்கும்? அதில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருக்கும்? என்று சொல்ல முடியுமா?”
“எஸ்தானியா ரஷ்யாவிடமிருந்து விடுதலை பெற்ற ஒரு ஐரோப்பிய நாடு. அபாரமான பொருளாதார வளர்ச்சி, மிக உயர்ந்த வாழ்க்கைத் தரம், கல்வி, தனி நபர் வருவாய் என பல்வேறு அளவீடுகளிலும் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. தென்காசியின் மக்கள் தொகையும், எஸ்தானியா அளவுதான். தென்காசியையும் அதே போல பொருளாதார வளர்ச்சி பெறச்செய்யவேண்டும்; இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கவேண்டும் என்பது என் லட்சியம். அடுத்த பத்தாண்டுகளில் அது சாத்தியமே!
நீங்கள் அநியாயத்துக்கு எளிமையான மனிதராக இருக்கிறீர்களே?
"நான் பணமும், பெயரும், புகழும் சம்பாதிப்பதற்கு முன்பு எப்படி இருந்தேனோ, இப்போதும் அப்படியே இருக்கிறேன். அதை மாற்றிக் கொள்வதுதான் எனக்குக் கஷ்டம். அது செயற்கையானது என்றும் நினைக்கிறேன். முன்னாலேயும் டீக்கடைக்குப் போய் டீ சாப்பிடுவேன். இப்போதும் அதைச் செய்கிறேன். அது எனக்கு பிடித்திருக்கிறது. அப்போது அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள். இப்போது, "அட! எவ்வளவு எளிமையான மனிதர்!" என்று நினைக்கிறார்கள்.