உச்சத்தைத் தொட்ட வாழை ஏற்றுமதி: வளர்ந்து வரும் இந்தியா!

உச்சத்தைத் தொட்ட வாழை ஏற்றுமதி: வளர்ந்து வரும் இந்தியா!

லக அளவில் வாழை உற்பத்தியில் இந்தியா மிக முக்கியமான நாடாகத் திகழ்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஐந்து மடங்கு கூடுதலாக வாழையை ஏற்றுமதி செய்து உலகின் மிக முக்கிய ஏற்றுமதி சந்தையாக இந்தியா மாறி இருக்கிறது.

அந்த வகையில், உலக வாழை உற்பத்தியில் இந்தியா 21 சதவீதம் சாகுபடி செய்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளுக்கு அதிக அளவில் வாழை ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. உலக சந்தை மதிப்பில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு வாழை விற்பனை நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக, 40 ஆயிரம் கோடி ஏற்றுமதி சந்தை ஆகும்.

இந்த நிலையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வாழை கடந்த ஐந்து ஆண்களில் மட்டும் 5 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 - 2023 நிதி ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வாழையின் மதிப்பு 1,300 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 55 ஆயிரம் டன் வாழை ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 3.50 லட்சம் டன் வாழை ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அதிலும் குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஐந்து மடங்கு ஏற்றுமதி அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை 25 மாநிலங்களில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் வாழை உற்பத்தியில் முக்கியப் பங்களிப்பை செய்கின்றன. இவ்வாறு நாடு முழுவதும் 8.84 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்படுகிறது. இதிலிருந்து 30.81 மெட்ரிக் டன் அறுவடை செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 0.96 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இதிலிருந்து 4.30 மில்லியன் டன் வாழை அறுவடை செய்யப்படுகின்றன. இப்படி தமிழ்நாட்டில் இருந்து பூவன், நேந்திரம், கற்பூரவள்ளி, ரஸ்தாலி, நெய்பூவன், செவ்வாழை, பச்சை நாடன், நாடு, மொந்தன், திருப்பாச்சி, சிறுமலை உள்ளிட்ட 15 வகைகள் அதிகம் அறுவடை செய்யப்படும் வாழை வகைகளாக உள்ளன.

இப்படி உலக சந்தை மதிப்பில் இந்தியாவின் வாழை சாகுபடி மிக முக்கிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் வாழை விவசாயத்தில் ஈடுபட்டவர்கள் கணிசமான வளர்ச்சியை கண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com