
நடப்பாண்டில் குறைந்த அளவில் பெய்த மழை மற்றும் கடுமையாக சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீதாப்பழம் மகசூல் மிகப் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போது சீத்தாப்பழம் சீசன் தொடங்கி இருக்கிறது. ஆனால் நடப்பு ஆண்டில் மகசூல் மிகக்குறைவாக இருப்பதால் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் விற்பனையாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீத்தாப்பழம் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதிலும் 5143 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட விளைபரப்பில், 2024 சதுர கிலோமீட்டர் வன பரப்பாகும். அங்கு அதிகமான அளவில் சீத்தாப்பழ மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன.அதில் இருந்து கிடைக்கும் சீத்தாப்பழங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
இந்த நிலையில் நடப்பாண்டு சீசன் தொடங்கிய நிலையிலும் மகசூல் மிக குறைவாக இருப்பதாக விவசாயிகளும், வியாபாரிகளும் வருமான இழப்பை சந்தித்து உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மகசூல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதற்கான காரணமாக கூறப்படுவது, நடப்பாண்டில் போதிய அளவு மழை பெய்யாததாலும், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாலும் மகசூல் குறைந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் சீத்தாப்பழத்தின் மகசூலை கொண்டு தான் இதை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. இவ்வாறு சீசனுக்கு கிடைக்கும் மகசூலை கொண்டு ஆண்டு முழுவதும் பயன்பெறுவர். ஆனால் நடப்பாண்டில் மகசூல் பெருமளவில் குறைந்து இருப்பதால் 15 கிலோ சீதாப்பழம் 600 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனையில் போதிய அளவு வருவாய் கிடைக்கவில்லை என்று விற்பனையாளர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.