கரப்பான் பூச்சிகளை விரட்ட நல்லதா நான்கு வழி!

கரப்பான் பூச்சிகளை விரட்ட நல்லதா நான்கு வழி!

‘என்னைப்போல் தைரியசாலி யார்?’ என சவால் விடும் ஆண்களும் பெண்களும் கூட ஒரு கரப்பான் பூச்சியைக் கண்டால் காத தூரத்துக்கு அலறியடித்து ஓடுவதைப் பார்த்திருக்கிறோம். அதுமட்டுமின்றி, சிறு சிறு உணவுத் துகள்களைத் தேடிவரும் இந்தக் கரப்பான் பூச்சிகள் தனது எச்சத்தின் மூலம் உடலுக்குப் பல்வேறு வியாதிகளை பரப்புவதாகவும் கூறப்படுகிறது. சமையலறையில் பாத்திரம் தேய்க்கும் சிங்க்கில் ஒளிந்து கொண்டு பெண்களை பயமுறுத்தும் கரப்பான் பூச்சிகளை வீட்டிலிருக்கும் சில பொருட்களைக் கொண்டே விரட்டியடிக்கலாம். வீட்டில் உள்ள அனைவரையும் கலவரப்படுத்தும் இந்த கரப்பான் பூச்சிகளை விரட்ட சில எளிய வழிகளைக் காண்போம்.

சின்ன வெங்காயம் பத்து, பூண்டு பல் ஐந்து ஆகியவற்றை தோலுரித்து மைய அரைத்து அந்த விழுதை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைக்கவும். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்தக் கரைசலை ஊற்றி கரப்பான் பூச்சிகளை நடமாடும் பகுதிகளில் தெளிக்க, கரப்பான் பூச்சிகளின் நடமாட்டத்தை தடுக்கலாம்.

ஒரு கைப்பிடி வேப்ப இலைகளை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் அதைக் கலந்து, திரவத்தை வடிகட்டி மற்றொரு பாட்டிலுக்கு மாற்றவும். இதை கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் ஆங்கங்கே ஸ்ப்ரே செய்து விட்டால் கரப்பான்கள் ஓடி விடும். சிறிதளவு வேப்ப எண்ணெயை தண்ணீருடன் சேர்த்தும் தெளிக்கலாம்.

சில பிரியாணி இலைகளைப் பொடித்து கரப்பான் பூச்சிகள் நடமாட்டம் உள்ள இடங்களில் தூவி விட்டால் அந்த இலைகளில் வாசத்துக்கு கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

பேக்கிங் சோடா ஒரு ஸ்பூன், வெள்ளை வினிகர் ஒரு ஸ்பூன், ஷாம்பூ சில துளிகள் சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கலக்கி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக்கொண்டு இரவில் ஸ்ப்ரே செய்து விட்டால், காலையில் கரப்பான்கள் இறந்து கிடப்பதைக் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com