தோழிகளே! உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்

தோழிகளே! உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்

“என் அம்மாவோட / மனைவியோட கைப்பக்குவம் மாதிரி யாருக்கும் வராது" என்ற ஒற்றை வார்த்தை சப்பைக் கட்டுத்தான் பெரும்பான்மையான பெண்களைச் சமையல் அறையிலேயே முடக்கிப் போட்டுவிடுகிறது.

ஆண்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரிவதே கிடையாது. ஆனால், சற்று உற்றுக் கவனித்தால் மிகப்பெரிய மனித உரிமை மீறலை... மனித உழைப்பை நமது இல்லங்களில் சந்தேகமே இல்லாமல் அவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நேர சமையல்… இருநாட்கள் சாப்பாடு என்பதெல்லாம் நம்ம ஊர்ல நடக்கவே நடக்காது. காலையில் டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என எந்நேரமும் சமையல் அறைதான்.

சமையல் மட்டுமில்லாமல் சமையல் செய்தபிறகு அந்த இடத்தைச் சுத்தம் செய்வது. அந்தப் பாத்திரங்களைக் கழுவி வைப்பதில் ஆரம்பித்து சிந்திய சாத பருக்கைகளைத் துடைத்து... என அவர்களின் பணி ரெயில் பெட்டி மாதிரி நீண்டுக்கொண்டே செல்லும். அப்புறம் ஞாயிற்றுக்கிழமை. விடுமுறையை மகிழ்ச்சியாக அனுபவிக்க படைக்கப்பட்டவை.

பண்டிகைகள்_ ஒரேமாதிரியான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு உற்சாகமடைய உருவாக்கப்பட்டவை... ஆனால், இது ஆண்களுக்கு மட்டுமே. இந்த இரண்டு தினங்களும் பெண்களுக்கு வழக்கத்தை விடவும் அதிக நேரம் சமையல் அறையில்…

சரிதானே நட்பூக்களே! நான் சொல்றது?

தாரணத்துக்கு அலுவலக நாட்களில் பொங்கலுக்கு சட்னி மட்டுமே என்றால் விடுமுறை நாட்களில் வடை + சாம்பாரும் சேர்த்து அல்லவா கேட்கிறது. இப்படி சமையலை பெண்களோடு பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது நமது சமூகம் என்றால் மிகையில்லை இன்னும் சிலரோ இப்படி சொன்னால் பெண்கள் ரசித்துத்தான் இதை செய்கிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள் பல தலைமுறைகளாகப் பழக்கப்படுத்தி வைத்ததால் வேறுவழியில்லாமல் போலியாக ரசிக்கக் கற்றுக்கொண்டு விட்டனர் என்பதுதான் எதார்த்தமான உண்மை. ஆண்களும் சமையலறையில் பாதி வேலையைப் பகிர்ந்துகொள்ளும்பொழுது அது பெண்களின் வேலைப்பளுவைக் குறைக்கும். இப்பொழுது வளரும் இளம் தலைமுறையினர் வீட்டு வேலையைப் பகிர்ந்துகொள்கிறார்கள் நகர்புறப் பகுதிகளில் இந்த மாற்றம் வேகமாக நடந்துதான் வருகிறது ஆனால், கிராமப்புறங்களில் இல்லவே இல்லை என்றே சொல்லலாம்.

சமையலறை பெண்களுக்கு மட்டுமானது என்ற பொதுப்புத்தி உடைத்து எறிய வேண்டியது அவசிய மாகிறது. பெண்களும் தங்களை தாங்களே கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தங்கள் பிள்ளைகளுக்குச் சமையல் முதல் பிற வேலைகள் வரை கற்றுத்தர வேண்டியது அவசியம். நாளை அவன் திருமணமானவுடன் தன் மனைவியை சக மனுஷியாக உற்றத் தோழியாக பார்த்து வேலைகளை அவன்… அவளுடன் பகிர்ந்துகொள்ளும்பொழுது வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com