அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் செய்த ஆய்வின்படி, Watercress என்ற ஒரு வகைக் காய்கறி உடலில் சேதமடைந்த செல்களை சரிசெய்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்களை அழிக்கிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது புற்றுநோயைத் தடுப்பதிலும் உதவுகிறதாம்.
Watercress என்பது ஒரு பிரபலமான, சாண்ட்விச்களில் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படும் தனித்துவமான கார சுவை கொண்ட, கீரை போல தோற்றமளிக்கும் காய்கறி வகையாகும். சமீபத்தில் அமெரிக்க நோய்த்தடுப்பு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான CDC, உலகிலேயே ஆரோக்கியமான காய்கறி என்ற பட்டத்தை இதற்குக் கொடுத்துள்ளது.
இந்தக் காய்கறியில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள் காரணமாக, மற்ற எல்லாக் காய்கறிகளையும் விட ஆரோக்கியமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உண்பதால் பல நோய்கள் குணப்படும் மற்றும் பல்வேறு விதமான நோய்களிலிருந்து விரைவில் குணமடைய உதவும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்க உணவு நிறுவனமான B&W-வின் கூற்றுப்படி, உடற்பயிற்சியால் ஏற்படும் காயங்களை விரைவில் குணப்படுத்த இந்த காய்கறி உலகெங்கிலும் உள்ள பல்வேறு விதமான விளையாட்டு வீரர்களுக்கும் அளிக்கப்படுகிறது. இதனால் கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது தசைகளில் ஏற்படும் பாதிப்பு விரைவாக குணமடைகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
காய்கறிகளின் தரவரிசைப் பட்டியலில் Watercress நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளது. இதில் பீட்ரூட் மற்றும் கீரைகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளது. CDC-ன் அறிக்கையின் படி, இந்த காய்கறி பூமியிலுள்ள எல்லா காய்கறிகளையும் விட ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இதில் அமினோ அமிலம் இருப்பதால் புரதத்தை விரைவாக ஜீரணிக்க உதவும் என்கின்றனர். இது மிகக் குறைந்த கலோரிகளுடன், அதிகப்படியான ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் வழங்கும் குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
உடற்பயிற்சி செய்வதற்கு ஓரிரு மணி நேரத்திற்கு முன்பு இதை உட்கொள்பவர்களுக்கு தசை வலி சுத்தமாக இருக்காதாம். இதில் அதிக அளவு பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் வைட்டமின் K உள்ளதால், மூளை செல்கள் சேதமடைவதையும் தடுக்கிறது.