இலக்கியத்தை படமாக எடுப்பேன்: ரிஷிகா சர்மா!

நேர்காணல்
ரிஷிகா சர்மா
ரிஷிகா சர்மா

கர்நாடகவில் உள்ள மிக பெரிய தொழில் நிறுவனமான விஜயானந்த் ரோட் லைன் (VRL) நிறுவனர் விஜய் சங்கேஷ்வர் பற்றி biopic (சுயசரிதை) படம் கர்நாடகா மட்டுமின்றி, தமிழ் உட்பட பல்வேறு மொழி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

இந்த படத்தின் இயக்குனர் ரிஷிகா சர்மா. இனி பெண் இயக்குனர்கள் என்று நாம் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லாமல் பல்வேறு சமீபத்திய ஆண் இயக்குனர்கள் இயக்கும் படங்களை விட சிறந்த படமாக விஜயானந்த் படத்தை தந்துள்ளார் ரிஷிகா.

ஆதி சங்கரா, ராமானுஜசாரியா உட்பட பல்வேறு படங்களை இயக்கிய ஜி.வி.அய்யர், ரிஷிகாவிற்கு தாத்தா முறை வேண்டும்.இந்த அய்யர்த்தான் இந்தியாவில் சமஸ்கிரத மொழியில் படங்கள் இயக்கிய ஒரே டைரக்டர். பாரம்பரிய சினிமா குடும்பத்தில் இருந்து வந்துள்ள ரிஷிகா நமது கல்கி ஆன்லைன் இதழுக்காக அளித்த பேட்டி....

ரிஷிகா சர்மா
ரிஷிகா சர்மா

1.உங்களுக்கு ஆரம்பம் முதல் டைரக்ஷன் மீதுதான் விருப்பமா?

ரிஷிகா: டைரக்டர் ஆக வேண்டும் என்பது எனது கனவு. சினிமாவில் உள்ள பல்வேறு விஷயங்கள் எனக்கு பிடிக்கும்.இதற்கு முன்பு சினிமா, டிவி தொடர்கள், திரைக்கதை எழுதுவது என பல்வேறு வேலைகளை செய்துள்ளேன்.

2.டைரக்டர் ஆனது எப்படி?

ரிஷிகா: 2018 ல் 'டிரங்க்' என்ற திரைப்படம் இயக்கினேன். இப்படம் சில லட்சங்கள் செலவு செய்து எடுக்கப்பட்ட படம். ஆனால் சில கோடிகள் வசூல் செய்தது. இந்த வெற்றி என்னை அடுத்த படம் எடுக்க தூண்டுதலாக அமைந்தது.

3.ஒரு சுய சரிதை எடுக்க தூண்டுதலாக அமைந்த விஷயம் எது?

ரிஷிகா: எனக்கு பிடித்த இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்னம் சார். மணி சார் இயக்கிய குரு படம் பார்த்த பின் இதைப் போன்ற ஒரு பயோபிக் படம் எடுக்க முடிவு செய்தேன் அப்போது கண்ட கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது.

4. விஜயசங்கேஷ்வர் பற்றி குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் உண்டா?

ரிஷிகா: ஒன்றல்ல. பல காரணங்கள் உள்ளன. விஜய சங்கேஷ்வரின் அப்பா சங்கேஷ்வர் காலத்திலிருந்து இன்று வரை சங்கேஷ்வர் குடும்பம் மீது கர்நாடக மக்கள் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். சங்கேஷ்வர் பதிப்பு துறையில் மிக முக்கியமானவர். கர்நாடகாவில் முதலில் பாக்கெட் அகராதியை வெளியிட்டவர்.

மகன் விஜய் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஒரே ஒரு லாரி உடன் டிரான்ஸ்போர்ட் தொழில் ஆரம்பித்து இன்று VRL என்ற பெயரில் ஆயிரக்கணக்கான லாரிகளுடன் பெரும் தொழில் அதிபராக இருக்கிறார்.முன்னூறுக்கும் மேற்பட்ட பேருந்துகள் VRL பெயரில் இயங்குகின்றன. மீடியா நிறுவனத் தையும் நடத்தி வருகிறார். இது போதாதா இன்ஸ்பயர் ஆக.

விஜய் சங்கேஷ்வர்
விஜய் சங்கேஷ்வர்

5. உங்கள் ஐடியாவை சொன்னவுடன் விஜய சங்கேஷ்வர் ரியாக்ஷன் எப்படி இருந்தது?

ரிஷிகா: அய்யாவின் வாழ்க்கையை படமாக எடுக்கிறேன் என்றவுடன் சுமார் 150 மணிநேரங்கள் செலவு செய்து என்னிடம் அவரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு விஷயங்களையும், போராட்டங்களையும் பகிர்ந்து கொண்டார்.அவர் சொன்ன விஷயங்களை அப்படியே படத்தில் பதிவு செய்துள்ளேன். மகன் ஆனந்த் சங்கேஷ்வர் விஜயானந்த் படத்தை தயாரிக்க முன் வந்தார்.

6. படத்தில் வரும் ராமா ராவ் கேரக்டர் உருவாக்கியது ஏன்?

ரிஷிகா: நான் உருவாக்க வில்லை. அன்றைய நாளில் பிரபலமான செய்தி தாள் ஒன்றில் பிரபல எடிட்டர் ஒருவர் இருந்தார். அவர் எழுதும் கட்டுரைகள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தன. பிரதமர் கூட கர்நாடக வந்தால் இந்த ஆசிரியரை பார்க்க வருவார். ராமா ராவ் என்ற பெயர் மட்டும் தான் கற்பனை. மற்றபடி இந்த காதபாத்திரம் உண்மை.

7. பெரிய ஹீரோகளை வைத்து இந்த படத்தை எடுக்காதது ஏன்?

ரிஷிகா: பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்தால் பெரிய ஹீரோ படமாகத்தான் இருக்கும். ரியல் ஹீரோ விஜய சங்கேஷ்வர் படமாக இருக்காது. மேலும் இந்த படத்தின் ஹீரோ நிகால் சங்கேஷ்வர் இருக்கும் அதே ஹூப்ளி மாவட்ட ஊரை சேர்ந்தவர். சங்கேஷ்வர் குடும்பத்தை பற்றி சிறு வயது முதல் பார்த்து அறிந்து உள்ளதால் சுலபமாக நடித்தார்.

விஜய் சங்கேஷ்வர்
விஜய் சங்கேஷ்வர்

8. இது பான் இந்திய படமாக எடுத்தது திட்டமிடலா?

ரிஷிகா: திட்டமிடல் இல்லை. இந்த படத்தின் பட பிடிப்பின் போது பார்த்த சிலர் இந்த கதை இந்தியா முழுவதும் பொருந்தும். இந்திய படமாக எடுங்கள் என்று சொன்னார்கள். அதன் பின்பு ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்த படத்தை வெளியிட்டோம்.

9.உங்கள் அடுத்த படம் பற்றி...... ?

ரிஷிகா: இன்னமும் திட்டமிடவில்லை. விரைவில் அறிவிப்பேன்.

10.கிரிஷ் கர்னாட் போன்ற மிக சிறந்த இலக்கிய ஆளுமைகள் நிறைந்த கன்னட சினிமாவில் மீண்டும் இலக்கிய படைப்புகள் வருமா?

ரிஷிகா: இதற்கான காலம் இப்போது வந்திருப்பதாக நினைக்கிறேன். இப்போது இருப்பது கன்னட சினிமாவின் பொற்காலம். சரியான கதைகள் கிடைக்கும் போது இலக்கியத்தை படமாக தருவேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com