"சொன்னதை விட வலி அதிகம்" - அயோத்தி டைரக்டர் மந்திர மூர்த்தியின் நேர்காணல்!

"சொன்னதை விட வலி அதிகம்" - அயோத்தி டைரக்டர் மந்திர மூர்த்தியின் நேர்காணல்!

kalki
kalki

’அயோத்தி’ என்ற பெயரை தன் பட  டைட்டிலாக வைத்து மதத்தை சொல்லாமல் மனிதத்தை சொல்லி வெற்றி பெற்று இருக்கிறார் அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி. தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லாத இறந்த உடலை விமானத்தில் கொண்டு செல்லும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை இயக்குனர் பேசியுள்ளார். மதுரை பின்னணியில் வந்துள்ள அயோத்தி திரைப்படம் பல்வேறு தரப்பினரால் பாராட்டுகளை பெற்று வருகிறது. பலரின் வாழ்த்துக்களோடு நம் கல்கி ஆன்லைனுக்கு பேட்டி அளிக்கிறார் டைரக்டர் மந்திர மூர்த்தி.

1. ஒரு எதிர்பாராத மரணத்திற்கு பின்னால் நடக்கும் விஷயத்தை சொல்லும் எண்ணம் எப்படி வந்தது? 

மந்திர மூர்த்தி: நான் இந்த வெற்றியை மறைந்த என் குரு நாதர் பாலாஜி யாதவ் அவர்களுக்கு சமர்பிக்கிறேன். பாலாஜி அய்யாவுடன் இணைந்து தொடர்களில் பணி செய்துள்ளேன். நம் வாழ்க்கை எமோஷனல்களால் ஆனது. நான் எமோஷனல் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருப்பதை உணர்ந்து இந்த கதையை தேர்வு செய்தேன்.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எதிரில் நேதாஜி ஹரிகிருஷ்ணன் என்பவரை சந்தித்தேன்.இந்த நபர் மதுரை மருத்துவமனையில் உள்ள சுமார் ஐயாயிரம் அனாதை பிணங்களை சேவை எண்ணத்துடன் அடக்கம் செய்துள்ளார். இவரிடம் பேசும் போதே இதற்கான கதை கிடைத்துவிட்டதாக கருதினேன். நேதாஜியுடன்  இணைந்து ஆறு மாதம் பயணம் செய்தேன். வட இந்தியாவில் இருந்து மதுரை, ராமேஸ்வரம் கோவில்களுக்கு ஆண்டு தோறும் பலர் வருகிறார்கள். இவர்களில் சிலர் விபத்தில் சிக்கி மரணம் அடைகிறார்கள். மதுரை மருத்துவமனை மார்ச்சுவரியில் இது போன்று விபத்தில் சிக்கும் வட இந்தியர்களை அடிக்கடி காண முடியும். இது போன்று ஒரு  வட இந்திய குடும்பத்தை மனதில் வைத்துதான் அயோத்தி படத்தை உருவாக்கினேன்.

2. மார்ச்சுவரி தந்த அனுபவம் எப்படி இருந்தது?

மந்திர மூர்த்தி: டிரைவர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் போன்றவர்கள்  தீபாவளியை கொண்டாடுவது இல்லை என நாம் சொல்வோம். இவர்களுடன் மார்ச்சுவரியில் வேலை செய்பவர்களுக்கும் தீபாவளி கிடையாது. மதுரை மருத்துவமனையில் மார்ச்சுவரியில் டூட்டி பார்த்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் நான் மூணு வருஷ தீபாவளியும் மார்ச்சுவரியில் தான் இருக்கேன். வீட்டுக்கு போகலை. என்றார். அப்பா தீபாவளிக்கு புது துணி வாங்கி தரவில்லை என்ற காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட ஒன்பது வயது சிறுவனையும் பார்த்தேன். இதை படத்திலும் சொல்லி இருக்கிறேன்.           

3. விமானத்தில் இறந்த உடலை எடுத்து செல்ல பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக காட்டி உள்ளீர்களே  உங்கள் கற்பனையா?

மந்திர மூர்த்தி: இல்லை உண்மைதான். பயணத்தின் போது எதிர்பாராமல் இறப்பவர்களின் சடலத்தை அழுகாமல் கொண்டு செல்ல பலர் விமானத்தை நாடுகிறார்கள்.இது போன்று எதிர் பாராமல் இறப்பவர்களின் உடலை விமானத்தில் அனுப்ப உதவி செய்யும் ஏஜென்டுகள் பலர் மதுரை மார்ச்சுவரியை சுற்றி இருக்கிறார்கள்.

4. வட இந்தியாவில் எத்தனையோ நகரங்கள் இருக்க அயோத்தி என ஏன் பெயர் வைத்தீர்கள்?  சென்சிட்டிவ் காரணம் தானே?           

மந்திர மூர்த்தி: சரயு நதிக் கரையில் அமைந்துள்ள  சிறிய நகரம் அயோத்தி. இங்கே நூறு வீடுகள்  இருந்தால் ஐம்பது கோவில்கள் இருக்கும். எப்போதும் வழிபாட்டின் ஓசையை கேட்கலாம்.பெரும்பான்மையான மக்கள் காவி உடை அணிகிறார்கள். நம் ஊரில் காலையில் டீ கடை திறப்பது போல அயோத்தியில் பாக்கு கடையை காலை ஐந்து மணிக்கு திறக்கிறார்கள். வித்தியாசமான அழகான நகரம் அயோத்தி. ராமர் பிறந்த இடம் அயோத்தி, ராமர் கோவில் கட்டி சிவனை வழிபட்ட இடம் ராமேஸ்வரம். அயோத்தி மக்கள் ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசிக்க வந்துகொண்டே இருக்கிறார்கள்.     அயோத்தியில் ராமேஸ்வரம் என்ற ஹோட்டல் உள்ளது. வடக்கையும், தெற்கையும் இணைக்கும் பெயராக அயோத்தியை உணர்ந்ததால் இந்த பெயரை வைத்தேன்.

5. காவி நிறத்தையும் மதத்தையும் ஆணாதிக்க சிந்தனையின் அடையாளமாக காட்டி உள்ளீர்களே?

மந்திர மூர்த்தி: நீங்கள் ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மதம், கலாசாரம் என்ற பெயரில் ஆணாதிக்க சிந்தனையை செயல் படுத்தும்  யாரையாவது ஒருவரையாவது சந்தித்து இருப்பீர்கள். ஆணாதிக்கத்திற்கு எந்த நிறமும் கிடையாது. சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் இந்த நாளிலும் பெண்ணடிமை தனம் இருந்து கொண்டுதான் உள்ளது. படத்தில் நான் சொன்னதை விட வலி அதிகம் இங்கே இருக்கிறது.

6. படத்தில் காட்டுவது போல உடற்கூறாய்வு (போஸ்ட் மார்ட்டம்) செய்வதை ஏற்று கொள்ளாதவர்கள் இருக்கிறார்களா? 

மந்திர மூர்த்தி: நான் வட இந்தியாவில் பார்த்த சிலர் சனாதன தர்மத்தை பின் பற்றுகிறார்கள். இந்த தர்மத்தின் படி இறந்த உடலை அறுக்கவோ வெட்டவோ கூடாது. இவர்கள் போஸ்ட் மார்டம் என்ற விஷயத்திற்கு எதிரானவர்கள்.

7. சசிகுமார் இந்த கதைக்குள் எப்படி வந்தார்?

மந்திர மூர்த்தி: இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்கள் ஏற்கனவே சசி சாரை வைத்து படம் தயாரித்து இருப்பதால் சசி அவர்களை பரிந்துரை செய்தார். சசிகுமார் ஒரு இயக்குனராகவும் இருப்பதால் சரியான கதை என்பதை உணர்ந்து நடிக்க வந்து விட்டார்.

8. நடிப்பு ராட்சஷன் யஸ்பால் சர்மாவை எப்படி வேலை வாங்கினீர்கள்?

மந்திர மூர்த்தி: லகான், ரவுடி ரத்தோர் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் யஷ். பல மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் இருப்பதால் சுலபமாக உணர்ந்து நடித்தார்.                       

9. அழகும் அற்புதமான நடிப்பும் கொண்ட ப்ரீத்தி அஷ் ராணியை எங்கே சந்தித்தீர்கள்?

மந்திர மூர்த்தி: சூட்டிங் தொடங்க ஒரு வாரம் முன்பு வரை ஹீரோயின் செலக்ட்  செய்யவில்லை. தயாரிப்பாளர் திட்ட ஆரம்பித்து விட்டார். படத்தில் ஹீரோயின் ஹிந்தி பேசினாலும் பார்ப்பவர்களுக்கு மதுரை பொண்ணு போல உணர்வு வரணும். ஆடிஷன் செய்த எந்த பெண்ணும் நான் எதிர் பார்த்தபடி இல்லை. வேறு வழி இல்லாமல் ஒரு பெண்ணை தேர்வு செய்தேன். அதன் பிறகுதான் ப்ரீத்தியை சந்தித்தேன். ஒரு சில  சீன் கொடுத்து நடிக்க சொன்னேன். நான் எதிர் பார்த்த பெண் இவர்தான் என்று தெரிந்தது. ஏற்கனவே தேர்ந்தெடுத்த பெண்ணைவீட்டுக்கு அனுப்பிவிட்டேன்.

10. ஒரு டைரக்டருக்கு இரண்டாவது படம் தான் உண்மையான வெற்றி படம் என்பார்கள். உங்கள் அடுத்த படம் என்னவாக இருக்கும்?

மந்திர மூர்த்தி: என்னவாகயிருந்தாலும் எமோஷனல் கதைக் களம் கொண்ட படமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com