
உங்களுக்கு ‘சிக்’கென்ற உடல் தோற்றம் வேண்டுமா? வாழ்நாளில் நோய் இல்லாமல் வாழ விரும்புகிறீர்களா? அப்படியானால் ஊற வைத்த ஆளி விதைத் தண்ணீரை தினசரி பருகுவதால் உங்கள் உடலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
ஆளி விதைகளை மிக்ஸியில் போட்டு பொடியாக்கி தண்ணீரில் ஊற வைத்தால் அது ஜெல்லியைப் போல மாறிவிடும். அதை கண் இமைகளில் வைத்துக் கட்டி வர, கண் சிவப்பு மறைந்துவிடும் என சொல்வதுண்டு. இந்த ஆளி விதைகள் மருத்துவத்துக்காக காலகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தண்ணீரில் ஊற வைத்து உண்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
குறிப்பாக, உடல் எடையைக் குறைப்பதற்கு ஆளி விதைகளைப் பயன்படுத்தலாம். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் தினசரி இவற்றை எடுத்துக்கொண்டால் பசியை கட்டுப்படுத்தலாம். இதனால் உங்கள் உடலின் எடை கணிசமாகப் பராமரிக்கப்பட்டு குறையும். இதில் புரத சத்து இருப்பதால், உடல் எடை குறையும்போது உங்கள் தசையின் அளவில் இழப்பு ஏற்படாமல் இருக்கும். மேலும், அதிகமாக துரித உணவு சாப்பிடுபவர்கள் அதனால் ஏற்படும் தீங்குகளை குறைக்க, நார்ச்சத்து அதிகம் உள்ள ஆளி விதையை நீரில் ஊறவைத்து சாப்பிடலாம். இதனால் உடலில் கொழுப்பு சேர்வது குறையும்.
இப்போதெல்லாம் இளம் வயதிலேயே பலருக்கு இதய நோய் வர ஆரம்பித்துவிட்டது. இதய நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆளி விதைகளை சாப்பிடலாம். மேலும், பக்கவாதம் ஏற்படாமல் இருக்க இளைஞர்கள் ஆளி விதையில் டீ போட்டுக் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளலாம்.
ஆளி விதையில் ஆண்டி ஆக்சிடென்ட் தன்மை அதிகமாக உள்ளது. இவை நம் உடல் செல்களின் செயல்பாட்டை அதிகரித்து தேவையில்லாத கொழுப்புகளை எரிக்கிறது. இதில் மாவுச்சத்து, கார்போஹைட்ரேட், சர்க்கரை குறைந்த அளவில் இருப்பதால், அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை கூடாது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு புரதச்சத்து முக்கியமாகும். அசைவ உணவிலேயே புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆனால், சைவ உணவு மட்டுமே உண்பவர்கள் உங்களின் புரதச்சத்து தேவையை ஆளி விதையைப் பயன்படுத்தி பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள ஆளி விதை, நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.
இப்படி, அதிக நன்மைகள் கொடுக்கும் ஆளி விதையை தண்ணீரில் ஊற வைத்து பயன்படுத்துவது அதிக நன்மைகளைத் தரும். அதேசமயம், இந்த ஆளி விதையை உண்ணும்போது அதிகப்படியான தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதாகும்.