யூவி ப்ளு கார்ட் கண்ணாடிகளால் எந்தப் பயனும் இல்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
கண்களைப் பாதுகாத்துக்கொள்ள பலரும் பயன்படுத்தும் BLUE LIGHT LENSE உண்மையில் நன்றாக செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. மொபைல் போன், கம்ப்யூட்டர் போன்றவற்றை பார்க்கையில், Blue Light Glasses எனப்படும் நீல ஒளி தடுப்பு கண்ணாடிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த நீல ஒளி கண்ணாடிகள் நம்மை ஸ்கீரின் reflectionகளில் இருந்து காக்கின்றனவா? என்று நாம் எப்போதும் சிந்தித்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். மருத்துவர்கள் கூறும் அறிவுரைக்கு ஏற்ப அதை வாங்கி பலரும் பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால், அத்தகைய நீல ஒளி கண்ணாடிகளால் பெரிய பலன் எதுவும் இல்லை என்கிறது சமீபத்திய ஆய்வு. இது தொடர்பாக லண்டன் ஆய்வு நிறுவனம் மற்றும் மோனாஷ் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மெல்போர்ன் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், ‘எலக்ட்ரானிக் திரைகளைப் பார்ப்பவர்கள், நீல நிற ஒளி தடுப்பு கண்ணாடியைப் பயன்படுத்துவதால் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூத்த ஆய்வாளர் லாரா டவுனி தனது அறிக்கையில், “எலட்ரானிக் ஸ்கிரீன்களைப் பார்க்க, நீல ஒளி கண்ணாடிகளை பயன்படுத்துவதால் குறுகிய காலத்தில் எந்த நன்மையும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இந்த வகை லென்ஸ்கள் பார்வையின் தரத்தை பாதிக்கிறதா அல்லது தூக்கத்தை பாதிக்கிறதா என்பது பற்றி தெளிவான முடிவை எட்ட முடியவில்லை’ என்றும், ‘நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதால் விழித்திரையில் இது பாதிப்பை ஏற்படுத்துமா என்பதைக் கண்டறிய முடியவில்லை’ எனவும் தொிவித்துள்ளாா். மேலும், ‘இந்த வகை கண்ணாடி வாங்கும்போது மக்கள் இந்த ஆய்வை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்’ என்றும் விளக்கியுள்ளார்.
ஓஹையோவில் உள்ள கார்னியா நிபுணரான கண் மருத்துவர் கிரேக் தரப்பில், ‘நீல ஒளி கண்ணாடிகள் கண்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படுத்துவதில்லை’ என்று தெரிவித்துள்ளார். ‘நீல ஒளி கண்ணாடிகள் தீங்கு விளைவிக்கக்கூடியவை அல்ல. ஆனால், அவை செலவுமிக்க பொருளாகவே உள்ளது. எதிர்பார்க்கும் அளவுக்கு அவை கண்களை ஸ்கீரின்களில் இருந்து பாதுகாக்குமா என்பது கேள்விக்குறிதான்’ என்றும் தொிவித்துள்ளாா். ஆய்வின்படி 10 முதல் 25 சதவீதம் மட்டுமே நீல ஒளி கண்ணாடிகள் கண்களை ஸ்கிரீன்களில் இருந்து பாதுகாக்கின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்தாலும், பணத்தை அள்ளிக் கொடுத்து கண்களைப் பாதுகாக்க நீல ஒளிக் கண்ணாடிகளை வாங்கும் மக்களுக்கு, அதன் பயன் முழுவதுமாக கிடைக்கவில்லை என்பது சற்று அதிர்ச்சியளிக்கும் செய்தியாகத்தான் உள்ளது.