
ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் என்றால் விலை உயர்வாகத்தான் இருக்கவேண்டும் என்பதல்ல. கிடைப்பதற்கு எளிதாகவும், விலை குறைவாகவும் உள்ள உணவுப் பொருட்களிலும் ஆரோக்கியம் நிறைந்தவை ஏராளம் உள்ளன. உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் சில எளிய உணவுப்பொருட்களை இந்தப் பதிவில் காண்போம்.
பருப்பு வகைகள்: பல்வேறு நிறங்களில் பருப்பு வகைகள் உள்ளன. அவை பார்ப்பதற்கு வண்ணமயமாக இருப்பதுடன், ஊட்டச்சத்துகளும் நிறைந்தவையாகத் திகழ்கின்றன. நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை பருப்பு வகைகளில் அதிகம். இந்த இரு சத்துகளும் உடலின் செரிமான மண்டலத்துக்கு நன்மை செய்கின்றன. வைட்டமின்கள் ஏ, பி, சி, இ மற்றும் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் (ஸிங்க்) ஆகிய தாதுக்களும் இவற்றில் உள்ளன. துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, பச்சை பயிறு, மைசூர் பருப்பு, கொண்டைக் கடலை, கடலைப் பருப்பு, சிவப்பு காராமணி, தட்டைப் பயிறு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
சிறு தானியங்கள்: அரிசி மற்றும் கோதுமைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் மற்ற தானியங்களுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், சிறு தானியங்களே உடலுக்கு அதிக ஆரோக்கியம் தருபவையாகும். கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு ஆகியவை சிறு தானியங்களாகும். கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இவற்றில் அதிகம் காணப்படுகின்றன. செரிமான மண்டலத்திலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு இவை உதவுகின்றன. இவை மலச்சிக்கல், பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கின்றன.
மசாலா பொருட்கள்: மஞ்சள், இலவங்கப் பட்டை, வெந்தயம், கறுப்பு மிளகு போன்ற மசாலா பொருள்களும் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்பவையே. இவை அழற்சிக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டவை. பாக்டீரியாக்களுக்கு எதிராகவும் இவை செயல்படுகின்றன. ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களும் இவற்றில் உள்ளன. இவை உடலில் அழற்சியை குறைப்பதோடு, காயங்களையும் விரைவில் ஆற்றுகின்றன.
வெள்ளைப் பூண்டு: வெள்ளைப் பூண்டு நெடி மிக்கதாக இருந்தாலும், நல்ல சுவையும் கொண்டது. எந்த உணவுக்கும் இது சுவையூட்டக்கூடியது. மருத்துவ குணங்களும் நிறைந்தது. உயர் மற்றும் குறை இரத்த அழுத்த பாதிப்புகளை இது சீராக்குகிறது. உடலில் அதிக கொலஸ்ட்ராலை குறைத்து, இதய பாதிப்பு ஆபத்துக்களைத் தடுக்கிறது. பெண்களுக்கு கர்ப்பப்பையில் நார் திசுக் கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிறது. இதிலுள்ள கந்தகம் (சல்பர்) நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
தயிர்: தயிரில் அதிக புரதச் சத்து உள்ளது. வயிற்றில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு தயிர் உதவுகிறது. கால்சியம் (சுண்ணாம்புச் சத்து), வைட்டமின்கள் பி2, பி12, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய சத்துகள் தயிரில் அடங்கியுள்ளன. செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை காப்பதுடன், மன அழுத்தத்தைக் குறைத்து நோய்கள் அண்டாமல் உடலைக் காக்கிறது.