Rohit Sharma's story
Rohit Sharma's story

பல அவமானங்களுக்கு மத்தியில் சாதித்துக் காட்டிய ரோகித் சர்மாவின் வரலாறு!

ற்போது நடைப்பெற்று வரும் ஆசியக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்து சாதனை புரிந்துள்ளார். இதை தற்போது அனைவரும் கொண்டாடி வந்தாலும், அவருடைய தொடக்க காலம் அவ்வளவு எளிதானதல்ல. இந்திய அணியில் இடம்பெற்றும்  சில ஆண்டுகள் அவர் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை வீரராகவே இருந்தார். ஆனால் தற்போது, ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீரர்கள் பட்டியலில் அவர் பிடித்து இருக்கும் இடம் இரண்டாவது. ஆனால் அவரது முதல் 2000 ரன்கள் எத்தனை போட்டிகளில் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? 

தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில், 2007 ஜூன் 23 அன்று, ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். ஆனால் அந்த போட்டியில் அவருக்கு பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த ஆண்டு வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடிய ரோகித் 8 ரங்கள் மட்டுமே எடுத்தார். 2008 ஆம் ஆண்டு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அவர் மிடில் ஆர்டரில் ஆடியதால் பல போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தார். இருப்பினும் தோனி அவர் மீது நம்பிக்கை இழக்காமல் 2011 உலகக்கோப்பைக்கு  முன்புவரை அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். உலக கோப்பைக்கு முன்பு அவருடைய பார்ம் மோசமாக இருந்ததால், உலகக் கோப்பை அணியில் அவர் இடம்பெறவில்லை. இதனால் மனம் நொந்துப்போன ரோகித், உள்ளூர் போட்டிகளில் தன் திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றார். 

ஒரு நாள் போட்டிகளில் தனது முதல் 2000 ரன்களை எட்ட அவருக்கு 82 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. முதல் 2000 ரகளை எட்டிய வீரர்கள் பட்டியலில் முதல் 100 இடங்களில் கூட அவர் இடம் பெறவில்லை. அச்சமயங்களில் விராட் கோலி அசுரத்தனமாக ரன்களை குவித்து வந்ததால், உலகமே அவரை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது ரோகித் சர்மா இந்திய அணியில் ஒரு சாதாரண வீரராகவே இருந்தார். 

2013ம் ஆண்டு முதல்தான், ரோகித் சர்மாவை இந்திய அணி தொடக்க வீரராக ஆடவைக்க  முடிவு செய்தது. இது ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. விரேந்தர சேவாக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதும், யாரை தொடக்க வீரராக ஆட வைக்கலாம் என்ற தேடல் இந்திய அணியில் இருந்தது. அப்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ரகானே தொடக்க வீரராக களம் இறக்கினார்கள். அப்போது அவர் ஒற்றை இலக்கங்களிலேயே ஆட்டமிழந்ததால், நான்காவது போட்டியில் ரோகித் சர்மாவுக்கு துவக்க வீரராக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. 

அந்த போட்டியில் 93 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அவர் நம்பிக்கை கொடுத்தார். அதன் பின்னர் 2013ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 209 ரன்கள் குவித்து தனது முதல் இரட்டை சதத்தை உறுதி செய்ததுடன், இந்திய அணியில் துவக்க வீரருக்கான இடமும் அவருக்குக் கிடைத்தது. பல சமயங்களில் இவருடைய உடல் தகுதி சரியில்லை, பருமனாக இருக்கிறார் என பல கேளிக்கை பேச்சுகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த போதிலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியை வெற்றி நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். 

தனது முதல் 2000 ரன்கள் சேர்ப்பதற்கு 82 இன்னிங்ஸ் எடுத்துக்கொண்ட ரோகித் சர்மா, அடுத்த 8000 ரன்களை சேர்ப்பதற்கு 159 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டார். தொடக்கத்தில் சுமார் ஆறு ஆண்டுகள் இந்திய அணியில் நாம் விளையாடுவோமா மாட்டோமா என நிலையில்லாத வீரராக இருந்த ரோகித் சர்மா, தன் கடின உழைப்பால் தற்போது துவக்க வீரராக மட்டுமின்றி சிறந்த கேப்டனாகவும் தன்னை உருமாற்றியுள்ளது மிகப்பெரிய சாதனைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com