
உங்கள் கற்பனை குதிரையை கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள். நான் தற்போது சொல்லும் அனைத்தையும் மனதில் கற்பனை செய்யுங்கள். நீங்கள் யார் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் கவனச் சிதறல்களால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் நானும் அப்படி தான் செய்வேன். உண்மையில் உலகில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். குறிப்பாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அனைவருமே அப்படித்தான்.
தொழில்நுட்பம் என்பது ஒரு வகையில் வரம், மற்றொரு வகையில் சாபம். ஆனால் இதைப் பற்றி நீங்கள் சரியாக புரிந்து கொள்ளாதபோது உங்கள் பொன்னான நேரத்தை இது முற்றிலுமாக வீணடிக்கிறது. இது உங்களுக்கும், எனக்கும் அனைவருக்குமே பொருந்தும். இந்தப் பதிவை படித்த பிறகு நீங்கள் உத்வேகம் அடைய வேண்டும் என நான் விரும்புகிறேன்.
1. 10000 மணிநேரம் விதி: முதன்முதலாக இந்த 10000 மணி நேரம் விதியைப் பற்றி எழுத்தாளர் 'மால்கம் கிளாட் வெல்லாஸ்' என்பவர் கூறியுள்ளார். அதாவது ஒருவர் எந்த ஒரு துறையிலும் தேர்ச்சி பெற, 10000 மணி நேரம் தீவிர கவனத்துடன் அதை செய்தால்போதும் என அவர் கூறுகிறார். இது முற்றிலும் சரியானது என நான் நினைக்கிறேன். எனவே பத்தாயிரம் மணி நேரம் என்பது நாள் கணக்கில் பிரித்தால் தோராயமாக 417 நாட்கள் வரும். 60 வாரங்கள் அல்லது 14 மாதங்கள். வேறு மாதிரி கூற வேண்டுமென்றால் ஒரு வருடத்திற்கு மேலாகும் எனலாம்.
ஆனால் எந்த ஒரு செயலையும் நாம் 24 மணி நேரமும் செய்யப்போவதில்லை. தூங்குவதற்கு, சாப்பிட, ஓய்வு எடுக்க என நமக்கு நேரம் தேவைப்படும். ஆனால் தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒரு குறிப்பிட்ட திறமையை வளர்ப்பதற்கோ அல்லது புதிய விஷயங்களைக் கற்பதற்கோ நிர்ணயம் செய்து மிகுந்த கவனத்துடன் முயற்சித்தால், எந்த விஷயத்திலும் கைதேர்ந்தவராக மாறலாம். ஆனால் இதன் ஆற்றலைப் பற்றி பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. அதேநேரம் நீங்கள் வளர்த்துக்கொள்ளும் திறமை பணத்தை உங்களுக்குக் கொடுப்பதாக இருக்க வேண்டும். ஏனென்றால் வெறும் பிடித்த விஷயங்கள் செய்து மட்டுமே இந்த உலகில் வாழ்ந்துவிட முடியாது, அத்துடன் பணத்தை சம்பாதிக்கும் திறமையும் அவசியம்.
2. கவனச்சிதறல்கள்: நாம் அதிகப்படியான கவனச் சித்திரவர்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும், செல்போன் செயலிகளும், சமூக வலைதளங்களும் உங்கள் கவனத்தை பணையமாக வைத்து பணம் ஈட்டுகிறார்கள். ஒவ்வொரு இணையதளமும் நீங்கள் அந்த தளங்களை அடிக்கடி பார்க்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகும்படியே அதை உருவாக்குகிறார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே உங்களை அடிமையாக வைத்திருக்க விரும்புகிறது. ஆனால் இதில் நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நீங்கள் எப்படியெல்லாம் அடிமையாக இருக்கிறீர்கள் என்பது பற்றிய தெளிவு உண்டாகப் போகிறது.
எனவே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், நீங்கள் அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைவிட, அந்த ஒரு விஷயம் உங்களை எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், இதுபோன்ற நேரத்தை வீணடிக்கும் அடிமைத்தனங்களிலிருந்து நீங்கள் விடுபடலாம். முதலில் கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களை நீக்கத் தொடங்குங்கள். இரவில் மொபைல் போனை பயன்படுத்துவதை நிறுத்துவதிலிருந்து இதைத் தொடங்கலாம்.
அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த, உங்கள் அறையில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை பொதுவான அறையில் வைத்துவிடலாம். நான் சொல்வதை ஒரு அறிவுரை போல எடுத்துக்கொள்ளாமல், உங்கள் வாழ்க்கையின் முக்கியத்துவம் அறிந்து நீங்கள் இதை செயல்படுத்தினால், பல மணி நேரங்களை வீணடிப்பவர்களில் ஒருவராக நீங்கள் இருக்க மாட்டீர்கள்
நிகழ்காலத்தில் உங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் செய்யும் எல்லா மோசமான விஷயங்களையும் நிறுத்திவிட்டு, எதிர்காலத்தை சிறப்பாக அமைப்பனவற்றை நோக்கி பயணிக்கத் தொடங்குங்கள். நல்ல வேளை இந்த தெளிவு எனக்கு 30 வயதிற்குள்ளாகவே வந்துவிட்டது. எவ்வளவு மதிப்பு மிக்க விஷயங்களை நான் தற்போது அறிந்திருக்கிறேன் என்பதை எல்லாம் நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது நான் அறிந்த விஷயங்களை இந்த பதிவு மூலமாக பிறரிடம் பகிர்வது எனக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையை ஒரே நேர்கோட்டில் பயணித்து வீணடித்து விடாதீர்கள். வாழ்க்கையின் உண்மையான சுவாரசியங்கள் நீங்கள் புதிதாக முயற்சிக்கும் பாதையிலேயே அடங்கியுள்ளது.