
சுய முன்னேற்றம் மற்றும் சுய உந்துதல் துறையில் அனைவராலும் அறியப்படும் பெயர்தான் டோனி ராபின்ஸ். இவருடைய கதை வெற்றியின் கதை மட்டுமல்ல விடாமுயற்சி, தொடர் உழைப்பு மற்றும் ஒருவருடைய ஆற்றலின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் சான்றாக அது உள்ளது. வறுமை நிலையில் தொடங்கி, சுய முன்னேற்றத்திற்கான உலகளாவிய அங்கீகாரம் பெற்றது முதல் இவரது பயணம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய ஒரு குறிப்பிட்ட கதையாகும்.
டோனி ராபின்சின் ஆரம்ப கால வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு மோசமான சூழலில் பிறந்த அவர் வறுமை மற்றும் வாழ்க்கையில் பல நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்டார். இந்த நிலை யாராக இருந்தாலும் அவர்கள் விரும்பிய விஷயத்தை தொடங்க எளிதாகத் தடுக்கும். இருப்பினும் ராபின்ஸ் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்தார். 'வறுமை வாழ்க்கையின் ஒரு நிலை தானே தவிர அது எதற்கும் தடை இல்லை' என்பதை அவர் உணர்ந்தார். இந்தப் புரிதல் அவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான வேட்கையைத் தூண்டியது. பல விஷயங்களைத் தேடிப் படித்து தன்னை சுய முன்னேற்றத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்.
இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, தான் சேகரித்த நுண்ணறிவுகளை அவர் தனது சொந்த வாழ்க்கையில் பயன்படுத்ததத் தொடங்கியதுதான். தன்னுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி அவரது மனநிலையை சிறப்பாக மாற்றினர். இதனால் அவருடைய மனவலிமை அதிகரித்தது. மற்றவர்கள் தங்களின் தனிப்பட்ட திறன்களை வெளிக்கொணர உதவும் பணியை டோனி ராபின்ஸ் தொடங்கினார். அவருடைய கருத்தரங்கங்கள் பிறரின் வாழ்க்கை மாற்றத்திற்கான ஒரு தளமாக மாறியது. அதில் தனி மனிதர்கள் தங்களின் பயங்களை சமாளிக்கவும், சவால்களை எதிர்த்துப் போராடவும், வெற்றிக்கான பாதையை உருவாக்கவும் கற்றுக்கொண்டனர்.
ராபின்சின் பேச்சில் உள்ள நம்பகத்தன்மை, ஆற்றல் மற்றும் அவரது பார்வையாளர்கள் மீது அவர் கொண்ட உண்மையான அக்கறை ஆகியவை, அவரை தனித்துவப்படுத்தி அவரது நிகழ்வுகள் எண்ணற்ற நபர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக மாறியது. அவர் வெறும் வெற்றியைப் பற்றி மட்டுமே பிறருக்கு கற்றுக் கொடுக்காமல், தான் சொல்வது போலவே வாழ்ந்து காட்டினார். வெற்றிகரமான வணிகங்களை உருவாக்குவது முதல், அதிகம் விற்பனையாகும் புத்தகங்களை எழுதுவது வரை, அவர் கற்றுத் தருவது வெறும் வாய் வார்த்தையால் அல்ல நிரூபிக்கப்பட்ட யுக்திகள் என அவர் நிரூபித்தார்.
டோனி ராபின்ஸின் கதை, நம்பிக்கை மட்டும் உத்வேகத்தின் மறு உருவமாகும். இது வறுமையில் இருந்து வெற்றி பெறுவதற்கான பாதையை விளக்குகிறது. அவரது பயணம் மனித ஆற்றலின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியது. "நம்முடைய சூழ்நிலைகள் நம்மை வரையறுக்கவில்லை. நம்முடைய செயல்களே" என்பதை நினைவூட்டுகிறது. டோனி ராபின்ஸ் சொல்வதுபோல, நமது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் நம்மை வடிவமைக்கவில்லை. ஆனால் அந்த நிகழ்வுகளை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதுதான் நமது வாழ்க்கையை வடிவமைக்கிறது.
சரியான நம்பிக்கை மற்றும் செயல்கள் மூலமாக, டோனி ராபின்ஸ் போலவே நாம் அனைவரும் நம்முடைய சொந்த வெற்றிக் கதைகளை எழுதுவோம்.