அரி நெல்லிக்காய் ஊறுகாய்!

அரி நெல்லிக்காய் ஊறுகாய்!

சின்ன நெல்லிக்காய் 1/4கிலோ  

கல் உப்பு 

மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்

கடுகு 1 ஸ்பூன்

வெந்தயம் 1/2 ஸ்பூன்

வெல்லம் 50 கிராம்

மிளகாய் தூள் 2 ஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

நல்லெண்ணெய் 1/4 கப்

      சின்ன நெல்லிக்காய், பெரிய நெல்லிக்காய் இரண்டையுமே உப்பு போட்டு ஊற விட்டு சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும். ஊறுகாய் செய்து வைத்துக் கொண்டால் ஒரு வருடமானாலும் கெடாது. நன்கு ஊறியதும் பிரிட்ஜில் ஸ்டோர் செய்யலாம். வெளியில் வைத்தால் தினமும் கிளறி விட வேண்டும். ருசியான சின்ன நெல்லிக்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

      நெல்லிக்காயை நீரில் நன்கு கழுவி சுத்தமான உலர்ந்த துணியில் நன்கு காய விடவும். ஈரம் போக காய்ந்ததும் கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு பாத்திரத்தில் அல்லது ஜாடியில் போட்டு மூடி வைக்கவும். இரண்டு நாட்கள் தினம் இருமுறை குலுக்கி விட நன்கு நீர் விட்டுக் கொள்ளும். பிறகு அந்த உப்பு நீரை விட்டு தனியே எடுத்து நெல்லிக்காய்களை மட்டும் வெயிலில் ஒரு நாள் முழுவதும் நன்கு காய விடவும். 

      கடுகையும், வெந்தயத்தையும் வெறும் வாணலியில் வறுத்து ஆறியதும் பொடிக்கவும். வெல்லத்தை தூளாக்கி வைத்துக் கொண்டு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்ததும் நெல்லிக்காய், காரப்பொடி, மஞ்சள் தூள் ,பொடித்த வெல்லம், பெருங்காயத்தூள், பொடித்த கடுகு வெந்தயத்தூள் சேர்த்து அடுப்பை நிதானமான தீயில் வைத்து கிளற வெல்லம் கரைந்து வரும். நன்கு சுருள் கிளறி இறக்கவும். ஆறியதும் ஜாடி அல்லது பாட்டிலில் போட்டு ஈரம் படாமல் இரண்டு நாட்கள் வைத்திருக்க நன்கு ஊறிவிடும். புளிப்பு, இனிப்பு, காரம் என அட்டகாசமான சுவையில் ஊறுகாய் தயார். இதனை  தயிர் சாதம், சப்பாத்தி ,பூரி ஆகியோற்றுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும். 

     நெல்லிக்காயில் விட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நார்சத்து போன்றவை நிறைந்து  இருப்பதால் செரிமானத்திற்கும், மலச்சிக்கலை போக்கவும்,  குடல் சுத்திகரிப்புக்கும் ஏற்றது . தோல் ஆரோக்கியத்தில் விட்டமின் சி முக்கிய பங்கு வைப்பதால் இதனைக் கொண்டு கலந்த சாதம், நெல்லி ஜூஸ், உப்பு நெல்லிக்காய் என சாப்பிட நம் தோல் சுத்தமாகவும் மென்மையாகவும் பளிச்சிடும். இதனை அடிக்கடி சாப்பிடும்போது நாக்கில் அமிலத்தின் சுவையால் செரிமானம் துரிதப்படுத்தப்படும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com