சுவையும் சத்தும் நிறைந்த ராகி கஞ்சி தயாரிப்பது எப்படி?
சத்தான கேழ்வரகு கஞ்சி தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். இதனை செய்வது மிகவும் எளிது. உடலுக்கு ஊட்டமும் சக்தியும் கொடுக்கக்கூடிய இந்த சத்துமிக்க பானத்தை நாம் வீடுகளில் செய்து நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
கஞ்சி தயாரிக்க தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு ஒரு கப்
பச்சரிசி கால் கப்
தண்ணீர் 4 கப்
தயிர் ஒரு கப்
சின்ன வெங்காயம்
பொடியாக நறுக்கியது 15
பச்சை மிளகாய் இரண்டு
உப்பு தேவையான அளவு
இந்த அளவிற்கு ஐந்து பேர் பருகலாம். ஒரு அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் கேழ்வரகு மாவை சேர்த்து தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். கால் கப் அரிசியை மிக்ஸியில் போட்டு நைஸ் ரவையாக அரைத்து இரண்டு கப் நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும். சிலர் அரிசியை நன்கு மாவாகக் கூட அரைத்து கொதிக்க விடுவார்கள். நன்கு வெந்து கஞ்சி பதத்தில் வந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவை கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து கட்டி தட்டாமல், அடிப்பிடிக்காமல் நிதானமாகக் கிளறவும். நன்கு வெந்து வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து சரியான குடிக்கும் பதத்தில் இறக்கி ஆற விடவும். பிறகு தயிர் கலந்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து விட அருமையான, சத்தான கஞ்சி தயார்.
மோருடன் கலந்து குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும் . உடலுக்கு வலுவை தரக்கூடிய கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த உணவு. ரத்த சோகையை குணப்படுத்தும்.