தஞ்சாவூர் மோர் மிளகாய் போடுவது எப்படி?

தஞ்சாவூர் மோர் மிளகாய் போடுவது எப்படி?

மோர் மிளகாய் போட தேவையான பொருட்கள்:

தஞ்சாவூர் குண்டு மிளகாய் 1 kg.

தயிர். 3/4 லிட்டர், வெந்தயம் 50 கிராம்

உப்பு தேவையான அளவு

குட்டியாக குண்டாக இருக்கும் மிளகாய் வாங்கினால் காரம் அதிகம் இருக்காது. சுவையும் அதிகம் இருக்கும். பெரிதாக இருப்பின் சிறிது காரம் இருக்கும். மிளகாயை வாங்கி நன்கு அலம்பி ஈரம் போக காட்டன் துணியில் உலர்த்தி ஈரம் இல்லாத பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். மிளகாயை ஊசியால் நான்கைந்து இடத்தில் குத்தி விட உப்பு , புளிப்பு இறங்கி சுவையாக இருக்கும். எல்லா மிளகாயையும் இப்படி ஊசியால் குத்திக் கொள்ளலாம் . கத்தியால் கீறினால் விதைகள் எல்லாம் மோரில் ஊறும் போது வெளியேறிவிடும் .எனவே ஊசியால் குத்துவது தான் சிறந்தது.

50 கிராம் வெந்தயத்தை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். தயிரை நன்கு கடைந்து கெட்டிமோராக ஆக்கவும் . இப்பொழுது ஒரு பாத்திரத்தில் மிளகாய், தேவையான உப்பு, கெட்டி மோர், அரைத்த வெந்தயம், சிறிது மஞ்சள் தூள், 2 ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்க மோர் மிளகாய் வற்றல் காய்ந்ததும் கறுத்து போகாமல் இருக்கும். இரண்டு நாட்கள் மோரில் நன்கு ஊற விடவும். தினம் இரண்டு வேளையும் குலுக்கி விடவும்.

இரண்டு நாட்கள் கழித்து பகலில் நன்கு வெயில் படும் இடத்தில் பிளாஸ்டிக் சீட்டை விரித்து மிளகாயை மட்டும் எடுத்து வெயிலில் காய விடவும். சாயங்காலம் அதே மோரில் போட்டு இரவு முழுவதும் திரும்பவும் ஊற விடவும். இப்படி மோர் முழுவதும் வற்றும் வரை காய விட்டு நன்கு மொறுமொறுப்பாக காய்ந்ததும் எடுத்து பத்திரப் படுத்தவும்.

தேவைப்படும்போது நல்லெண்ணையில் மோர் மிளகாயை பொரித்து தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஜோராக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com