மராட்டிய மாநில ஸ்பெஷல் பன்லூ!

மராட்டிய மாநில ஸ்பெஷல் பன்லூ!

னிப்பும் புளிப்பும் கலந்த இந்த ‘பன்லூ’ சர்பத் செய்வது எளிது. சூடாகவும் அருந்தலாம். குளிர்பதனப் பெட்டியில் சற்று நேரம் வைத்து கூலாகவும் அருந்தலாம்.

தேவை: தண்ணீர் – 10 கிண்ணம், பொடி உப்பு – தேவையானது, மிளகாய்ப் பொடி – ¼ டீஸ்பூன், புளி – ஒரு எலுமிச்சை அளவு வெந்நீரில் ஊறவைத்துக் கரைத்துக்கொள்ளவும், வெல்லம் – 1 கிண்ணம் (பொடி செய்தது), கடுகு – ¼ டீஸ்பூன், பெருங்காயப் பொடி – ¼ டீஸ்பூன், ரீஃபைன்டு ஆயில் – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன், கருவேப்பிலை – கொஞ்சம்.

செய்முறை: முதலில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். இதில் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, வெல்லம், புளித் தண்ணீர், தேவையான உப்பு போட்டு சுமார் அரை மணி நேரம் கொதிக்க விடவும்.

எண்ணெயைக் காயவிட்டு கடுகைப் போட்டு வெடித்ததும், பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை போட்டு லேசாக பிரட்டி கொதிக்கும் நீரில் போட்டு கலக்கவும். பின்னர் இறக்கி வைத்துச் சூடாகப் பருகலாம் அல்லது ஃபிரிட்ஜில் வைத்து எடுத்தும் பருகலாம்.

தேவைப்பட்டால் சிறிது மாங்காய் துருவலை அதில் போட்டுக் கொள்ளலாம். டேஸ்ட் சற்று மாறுதலாக இருப்பினும், சூப்பராக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே தயாரிக்க இயலும்.

டேஸ்ட்டி மேங்கோ தால்!

தேவை: நல்ல மாங்காய் – 2, துவரம் பருப்பு – 200 கிராம், வெங்காயம் 1,  பச்சை மிளகாய்  3, இஞ்சி (சிறு துண்டு), பூண்டு 4 பருப்பு – இவைகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும், மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 3, நெய் – 1½  டேபிள் ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – கொஞ்சம், உப்பு – தேவையானது.

செய்முறை: முதலில் துவரம் பருப்பை நன்கு அலம்பி சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மஞ்சள் பொடி சேர்த்து மலர வேகவிட்டு, உப்பு சேர்க்கவும்.

மாங்காயைத் தோல் சீவி சிறு துண்டுகளாக சற்றே நீளவாக்கில் அரிந்து, பருப்பு வேகையில் போட்டு விடவும். இரண்டும் சேர்ந்து கமகமவென வாசம் வரும்.

நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய் வற்றல் ஆகியவைகளை நெய்யில் வதக்கியெடுத்து பருப்பில் போடவும்.

இதேபோல் கடுகையும் வெடிக்கவிட்டு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, மாங்காய் – பருப்பு கலவையில் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். இது கெட்டியாக வேண்டுமென்றால், கெட்டியான பின் இறக்கவும். சற்று நீர்க்க இருக்க வேண்டுமெனில், ஒன்று அல்லது ஒன்றரை கிண்ணம் தண்ணீர் சேர்க்கலாம்.

சப்பாத்தி மற்றும் சூடான சாதத்துடன் இந்த ‘டேஸ்ட்டி மேங்கோ தால்’ ஐச் சேர்த்துச் சாப்பிட, கமகமவென்ற மணத்துடன் கொண்டு வா! கொண்டு வா! என மேலும் கேட்க வைக்கும்.

(இதுவும் மராட்டிய மாநில ஸ்பெஷல்தான்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com