ஊறுகாய்கள் மூன்று ரொம்ப ரொம்ப ஜோரு!

ஊறுகாய்கள் மூன்று ரொம்ப ரொம்ப ஜோரு!

அத்தை செய்யும் வித்தியாசமான வெங்காய ஊறுகாய்.

தேவை: பெரிய வெங்காயம் - ஒரு கிலோ,  புளி - 150 கிராம் , மிளகாய்த்தூள் - ஒரு கப்,  மஞ்சள் தூள் - மூன்று டீஸ்பூன், கடுகு தூள் – அரை கப், வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - மூன்று டீஸ்பூன்,  பெருங்காயம் - ஒரு டீஸ்பூன், புளி கரைசல்  - ஒரு டேபிள் ஸ்பூன்,  நல்லெண்ணெய்  - இரண்டு கப்,  உப்பு - தேவையான அளவு, பூண்டு - தேவைப்பட்டால் 50 கிராம்,

செய்முறை: வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துப் பிசறி, பத்து நிமிடம் வைக்கவும். பூண்டை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணையைக் காயவைத்து, பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, பிறகு வெங்காயம் சேர்த்து நிறம் மாறும்வரை வதக்கி, புளிக்கரைசலை ஊற்றவும். கலவை கொதித்து எண்ணெய் மேலே கசிந்து வந்ததும் அதனுடன் வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி, கடுகு தூள், மிளகாய்த்தூள், மஞ்சத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்கவும். சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, இந்த வெங்காய ஊறுகாய் போட்டு, பிசறி சாப்பிட அமிர்தம் கெட்டது போங்கள்.

அம்மா செய்யும் மாகாளி கிழங்கு ஊறுகாய்.

தேவை: இளசான மாகாளி கிழங்கு - அரை கிலோ, சற்று புளித்த தயிர் - இரண்டு கப், கடுகு - இரண்டு டீஸ்பூன்,  விரலி மஞ்சள் துண்டு - 2 (நுணுக்கி கொள்ளவும்), உப்பு - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 15.

செய்முறை: மாகாளிக் கிழங்கை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, கழுவித் துடைத்து, தோலை நீக்கிவிட்டு, மீண்டும் நன்கு துடைத்து இரண்டாக (நீளமாக) நறுக்கவும். அதன் நடுவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாய், கடுகு, விரலி மஞ்சள், தேவையான உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைத்து, தயிரில் கலக்கவும் (அம்மா உரலில் இடித்துச் சேர்ப்பார்கள்). அத்துடன் கிழங்கையும் கலந்து ஒரு பீங்கான் ஜாடியில் போட்டு ஒரு வாரம் ஊற விடவும். (அவ்வப்போது குலுக்கி மட்டும் விடவும்) பிறகு உபயோகிக்க சுவையில் அசத்தும் இந்த மாகாளி கிழங்கு ஊறுகாய். தண்ணி சாம்பாருக்குத் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஊறுகாய். மசாலா பொரி செய்து, அதன் மேல் இந்த ஊறுகாயைச் சேர்த்து கலந்தும் உபயோகிக்கலாம்.

சித்தி செய்யும் கிடாரங்காய் ஊறுகாய்:

தேவை: கிடாரங்காய் - ஆறு, மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன், தனி மிளகாய் தூள் - அரை கப்,  கெட்டியாக கரைத்த புளி கரைசல் - கால் கப், கடுகு, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி - தலா இரண்டு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு  தேவையான அளவு,  வெல்லம் - ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை: கிடாரங்காயை மஞ்சள் தூள் சேர்த்து, இரண்டு கப் நீர் சேர்த்து, ஐந்து நிமிடம் வேக விட்டு இறக்கவும். ஆறியதும் சின்னசின்னத் துண்டுகளாக நறுக்கி, விதைகளை நீக்கவும். புளியைக் கெட்டியாக கரைத்து வடிகட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து கிடாரங்காயைச் சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்கி, புளி கரைசல், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி கெட்டியானதும் வெல்லம் சேர்த்து, மேலும் ஐந்து நிமிடம் கிளறி இறக்கி, வெந்தயத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து ஆறியதும் பீங்கான் ஜாடியில் போட்டு வைக்கவும். (இது உடனே உபயோகிக்கவும் சிறந்தது) நொய் கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். எந்த ஊறுகாயாக இருந்தாலும் அளவோடு எடுத்துக்கொள்ள உடல் ஆரோக்கியமாக இருக்கும். மனம் தெம்பாக இருக்கும். அது மட்டுமல்ல... சீசனில் கிடைக்கும் காய்கறிகளைக்கொண்டு இப்படி விதவிதமாய் ஊறுகாய் தயாரித்து வைத்துக்கொண்டால் நம்முடைய உறவு மற்றும் நட்பு  வீட்டுக்குச் செல்லும்போது இதை அழகாக பேக்செய்து எடுத்துச் செல்ல உறவு வலுப்படும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com