மணக்க மணக்க காரசாரமான தோசைக்காய் சாம்பார்!

மணக்க மணக்க காரசாரமான தோசைக்காய் சாம்பார்!

சூப்பர் மார்க்கெட்டுகளில் மஞ்சள் நிறத்தில் உருண்டையாக வெள்ளரிப் பழம் போன்றே தக்காளியைக் காட்டிலும் சற்றே பெரிய சைஸில் ஒரு காய்கறி கிடைக்கும். அதன் பெயர் தோசைக்காய். நம்மூரில் பெரிதாக இதைப் பயன்படுத்தி கிரேவி, சாம்பார் என பலரும் வைப்பதில்லை. ஆனால், ஆந்திராவில் இது வெகு பிரசித்தி. இதில் மணக்க மணக்க சாம்பார் வைத்துக் காரசாரமாகச் சாப்பிடுகிறார்கள் அவர்கள். அதையே கொஞ்சம் கெட்டியாக பருப்பு சேர்க்காமல் சமைத்தால் சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அருமையான சுவை என்பதோடு உடலுக்கு நல்ல குளிர்ச்சியும் தருகிறது . மிகச்சிறந்த மலமிழக்கியும் கூட. சரி அதை எப்படிச் சமைப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

· தோசைக்காய் - 1( பெரியது தோல் உரித்து, நறுக்கியது)

· துவரம் பருப்பு - 1/2 கப்

· சின்ன வெங்காயம் - 15 (தோல் நீக்கி, நீளவாக்கில் நறுக்கியது)

· தக்காளி - 4 (நீளவாக்கில் நறுக்கியது)

· பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கியது)

· மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

· கொத்தமல்லித் தூள் - 1 டீஸ்பூன்

· புளி தண்ணீர் - 1/2 கப் (1 எலுமிச்சை அளவு ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்)

· பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

· மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

· கடுகு - 1/4 டீஸ்பூன்

· உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்

· கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)

· கறிவேப்பிலை - 1 கைப்பிடி

· தண்ணீர் - 2 கப்

· உப்பு- தேவையான அளவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை 1 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். பருப்பு வெந்த வாசம் வந்ததும் ஸ்டவ்வை நிறுத்தி, குக்கரை வெளியில் எடுத்து ஆவி வெளியேறியதும், பிரஷர் குக்கர் பாத்திரத்தைத் திறந்து பருப்பைத் தனியே ஒரு பாத்திரத்தில் கொட்டி வைக்கவும்.

தோசைக்காய் சாம்பார் செய்வதற்கான வழிமுறைகள்:

பிரஷர் குக்கரில் எண்ணெயை சூடாக்கி, கடுகு மற்றும் உளுத்தம்பருப்பை தாளித்து, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய தோசைக்காய் / தோசைக்காய் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி மிளகாய்த் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கி விட்டு இறுதியாக சமைத்த பருப்பு,புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கரண்டியால் கலந்து குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.

குக்கரில் ஆவி வெளியேறியதும், மூடியைத் திறந்து, நன்றாகக் கிளறி விட்டுப் பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com