பெண்ணைச் சுமப்பவன் மண்ணைச் சுமந்த நன்னாள்!

பெண்ணைச் சுமப்பவன் மண்ணைச் சுமந்த நன்னாள்!

‘தூங்கா நகரம்’ என்று அழைக்கப்படும் மதுரையில் மாதங்களின் பெயரால் தெருக்கள் உள்ளன. ஆடி வீதி, சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி மூல வீதி எனப்படுகின்றன. ஆவணி தெரு பெயரில் மட்டும் மூல நட்சத்திரத்தைச் சேர்த்துள்ளதன் காரணத்திலிருந்தே இந்த நாளின் முக்கியத்துவத்தை உணரலாம். ஆவணி மூலம் என்பது ஆவணி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் சிவபெருமானை போற்றி எடுக்கப்படும் விழாவாகும்.

சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் செம்மனைச் செல்வி, ஏழை வந்தி எனப்படும் சிவ பக்தைக்காக சொக்கநாதர் மண் சுமந்ததும்,  மாணிக்கவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கியதும் இந்த ஆவணி மூல நன்னாளில்தான்.

ரிமர்த்தன பாண்டிய மன்னனின் மந்திரியாகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர். பணி என்னவோ பாண்டியனிடம்தான் என்றாலும், மனமெல்லாம் அந்த சுந்தரேஸ்வரனிடம்தான் இருந்தது. அதனால்தால் குதிரைகள் வாங்குவதற்காக மன்னன் கொடுத்த பணத்தைக் கொண்டு, பரிகளை (குதிரைகளை) வாங்காமல், அந்தப் பணத்தில், சிவனுக்காக கோயில் கட்டிவிட்டார் மாணிக்கவாசகர். இதனைக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னன், மாணிக்கவாசகருக்கு தண்டனை அளித்தார். அவரை விடுவிப்பதற்காக, சொக்கநாதரே குதிரை வியாபாரியாக வந்து காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கி அரசரிடம் காண்பித்து, மாணிக்கவாசகரை சிறையிலிருந்து மீட்டது ஆவணி மாத மூல நட்சத்திரத்தில்தான்.

யாத பெருமழை பெய்து வைகை நதி பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் கரைகளைச் சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும் வீட்டுக்கு ஒருவர் பணி செய்ய வர வேண்டும் என்று மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னரால் கட்டளை இடப்பட்டது. மன்னரின் கட்டளைப்படி கடமைகள் ஊர் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

வந்தி என்னும் பிட்டு விற்கும் ஏழை மூதாட்டி, தினமும் பிட்டு சமைத்து முதல் பிட்டை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு, பிறகு ஒரு சிவனடியார்க்கு கொடுத்துவிட்டு, அதன்பின்னர் பிட்டை விற்று சம்பாதித்து, அதில் ஜீவனம் செய்து வந்தாள். அவளுக்கு வைகை ஆற்றின் கரையில் ஒரு சிறு பகுதியை பலப்படுத்தும் வேலை ஒப்படைக்கப்பட்டது. முதுமை காரணமாக அவளால், அவளுக்கு இடப்பட்ட பகுதியின் வேலையைச் செய்ய முடியவில்லை. ஏழை மூதாட்டி பிறரின் உதவியை நாடினாள். தனது இயலாமையை முக்கண்ணனிடம் முறையிட்டாள்.

வந்திக்கு உதவ திருவுள்ளம் கொண்ட ஈசன்,  மண் சுமக்கும் கூலியாள் போல் வேடமிட்டு, கையில் மண்வெட்டியோடு திருமுடியில் கூடையைச் சுமந்துகொண்டு பிட்டு விற்றுக்கொண்டிருக்கும் வஞ்சியின் இடத்தினை அடைந்தார். வந்தியின் பங்கான கரையை அடைக்கும் வேலையை தான் செய்வதாகக் கூறி கூலியைக் கேட்டார். மூதாட்டி, தான் விற்கும் பிட்டையே கூலியாகக் கொடுப்பதாகக் கூறினாள்.

குறிப்பிட்ட தினத்தில் சமைத்த அனைத்துப் பிட்டுகளும் உதிர்ந்துபோக, வந்தி அவற்றை தனது வேலையாளுக்குக் கொடுத்தாள். சிவபெருமானோ, பிட்டைச் சாப்பிட்டுவிட்டு மரத்தடியில் படுத்து சுகமாகத் தூங்கிவிட்டார். மன்னன் வந்து பார்க்கையில், வைகையின் மற்றவர் பங்குகள் எல்லாம் அடைபட்டிருக்க, வந்தியின் பகுதி மட்டும் உடைந்தே கிடந்தது. கோபம் கொண்ட அரசன், கூலியாளைப் பிரம்பால் அடித்தான். வந்தியின் கூலி ஆளின் மேல் விழுந்த அடி, உலக ஜீவராசிகள் அனைவரின் மேலும் விழுந்தது. கூலியாளோ, ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, உடனே உடைந்த பகுதி சரியானது; வைகையின் வெள்ளப் பெருக்கும் நின்றது; கூலியாளும் மறைந்துபோனான்.

அப்பொழுது அசரீரி ஒலித்தது. நரிகளைப் பரிகளாக்கி லீலை நிகழ்த்தியதும், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதும் தானே என்று சொக்கநாதர் உணர்த்தினார். மன்னர், வாதவூரரை மன்னித்து விடுதலை செய்தார். இந்த இரண்டு லீலைகளும் நிகழ்ந்தது ஆவணி மாத மூல நட்சத்திரத்தில்தான் என்பதால், இந்நன்னாள் மிகவும் விமரிசையாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு பிட்டு சமைத்து, நைவேத்தியம் செய்து ஆராதித்தால் வேண்டிய வரங்கள் யாவும் கிட்டும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com